உங்களை துதிபாடி எழுதப்பட்ட ஒரு நூல் வெளிவந்துள்ளது. ‘ஜெயமோகம்’ என்று பெயர். இணைப்பை அனுப்பியுள்ளேன். ஓர் எழுத்தாளராக அவ்வகையான நூல்களை எப்படி அனுமதிக்கிறீர்கள்?
சாம்ஸ்
அன்புள்ள சாம்ஸ்
நான் ‘அனுமதித்து’ இந்நூல்கள் வெளிவரவேண்டும் என்பதில்லை. இதற்கு அனுமதியெல்லாம் தேவையில்லை.
என் நண்பர் ஒருவர் ஒருமுறை ஒரு மாதகாலம் இணையவெளியில் என்னைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் தேடித் தொகுத்தார். என் படைப்புகளை வாசித்து, பாராட்டி எழுதப்பட்ட குறிப்புகள் இருபது. வசைகள், ஏளனங்கள், கண்டனங்கள் நாற்பத்திரண்டு. ஆம், இரு மடங்குக்கும் மேல். நீங்களே இதைச் சோதனை செய்து பார்க்கலாம்.
இத்தகைய சூழலில் பொதுவாக என் வாசகர்கள், என்னை மதிக்கும் எழுத்தாளர்கள் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஏனென்றால் இந்த விவாதங்கள் இலக்கியம் சார்ந்தவை அல்ல. பெரும்பாலும் அரசியல், சாதி, சமயக் காழ்ப்புகள் மட்டுமே. ஆனால் தருணம் அமைகையில் என்னைப் பற்றிய தங்கள் மதிப்பீட்டை அவர்கள் தொகுத்து அளிக்கிறார்கள்.
என் 60 ஆவது பிறந்தநாளை ஒட்டி 2022ல் சியமந்தகம் என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. சியமந்தகம் என்ற பேரில் ஓர் இணையதளம் தொடங்கப்பட்டு அதில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. (சியமந்தகம் இணையதளம்) அக்கட்டுரைகள் எனக்கே திகைப்பூட்டுவனவாக இருந்தன. என்னைப்பற்றி இப்படி ஒரு நல்லெண்ணம் இங்கே இருப்பதை நான் அப்போதுதான் அறிந்தேன்.
தொடர்ச்சியாக வந்து குவியும் வசைகள், அவதூறுகளுக்கு நான் பொதுவாக எதிர்வினை ஆற்றுவதில்லை. அவற்றைப் பற்றிய பேச்சில் இலக்கியவாசகன் அறிந்துகொள்ளவேண்டிய ஏதேனும் இருந்தால் மட்டுமே எழுதுகிறேன். யமுனா ராஜேந்திரன் தொகுத்த ஜெயமோகன், இந்து ஃபாசிசத்தின் இலக்கிய முகம் என்னும் ஒரு நூல் வெளிவந்துள்ளது. முற்றிலுமே திரித்தல், அவதூறு, வசைகள். அந்நூலின் அட்டை கோபால்பல்பொடி நிறத்தில் இருந்திருக்க வேண்டாம் என்பதைத் தவிர எனக்கு கருத்துக்கள் ஏதுமில்லை. அதைப்போலவே இந்த பாராட்டும் நூல்கள் பற்றியும் விலக்கம்தான்.
இப்போது சி.சரவணக் கார்த்திகேயனின் நூல் வெளிவந்துள்ளது. அதன் முகப்புரையை மட்டுமே பார்த்தேன். அதில் துதிபாடல் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வசை இல்லையென்றாலே அது துதிதான் என நீங்கள் எண்ணினால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
டிசம்பரில் புத்தகக் காட்சிக்கென படைப்புகளை நூல்களாகத் தொகுக்கும் போது நமக்கே வியப்பான, விசித்திரமான நம் புது முகம் ஒன்றைக் கண்டுகொள்வோம்.
‘ரைட்டர்’ கட்டுரைத் தொகுப்புக்கென என் எழுத்துக்களைத் துழாவிய போதுதான் உணர்ந்தேன், கடந்த பதினைந்து வருடங்களில் எழுத்தாள முன்னோடிகள் பற்றி ஏராளம் எழுதியிருக்கிறேன் என. அவை வழமையான புத்தக அறிமுகக் குறிப்புகள் அல்ல; பெரும்பாலும் நமது படைப்பாளிகளின் சொற்களுக்கோ செயல்களுக்கோ எதிர்வினையாக எழுதியவை. எனவே அந்த எழுத்தாளர்கள் குறித்த குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அளிப்பவை. அதனால் தொகுக்கத் தகுதியானவை எனத் தோன்றியது.
அப்படிச் சிதறிக் கிடந்தவற்றிலிருந்து சேகரித்தவை இப்புத்தகமாக உருப்பெறுகிறது.
30 கட்டுரைகளின் கதம்பமான இந்த நூலை இலக்கியம் மற்றும் இன்ன பிற ரசனைக் கட்டுரைகள் என்று அடையாளப்படுத்தலாம். ப்ரம்மாக்களின் தேசத்தில் ஓர் உலா!
ஜெயமோகம் என்றால் வெற்றி மீதான பெருவிருப்பு எனப் பொருள் வருகிறது. நல்ல vibe கொண்ட தலைப்புதான் அல்லவா! அதுவும் இலக்கியத்துக்கு நேர் எதிரான தலைப்பு!
*
இப்புத்தகத்தை மூன்று பகுதிகளாக வகுந்திருக்கிறேன். முதற்பகுதி பிரியத்துக்கும் மதிப்புக்கும் உரிய ஜெயமோகன் குறித்து எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுப்பு.
முன்பொரு முறை அதியசங்கள் என எழுவரை ஃபேஸ்புக்கில் வரிசைப்படுத்தினேன்: 1) மஹாத்மா காந்தி 2) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 3) இளையராஜா 4) ஜெயமோகன் 5) கலைஞர் 6) கமல் ஹாசன் மற்றும் 7) ப்ரியங்கா மோகன். ஜெயமோகனை அவ்வளவு பிடிக்கும்.
ஜெயமோகன் என் வாழ்நாள் ஆதர்சம். எழுத்திலும் வாழ்விலும். இது வரை படைப்பில் என்னை ஏமாற்றாத ஒரே எழுத்தாளுமை அவர்தான். அவரைப் பற்றி எழுதித் தீராது.
பிரபலங்கள் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வெகுஜனப் பொதுப்புத்தியின் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வருகிறது. அதற்கு சொறிந்து கொடுக்கும் பிரபலங்கள் (உதா: ரஹ்மான், தனுஷ்) அவர்களின் அசல் தகுதிக்கு மீறிக் கொண்டாடப்படுவர். அதற்கு நடுவிரல் காட்டும் பிரபலங்கள் (உதா: இளையராஜா, ஜெயமோகன்) தகுதி இருந்தாலும் தூற்றப்படுவர் – அது மறைமுக அங்கீகாரம்தான்!
16 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வலைதளங்களில் புழங்குகிறேன். நானறிந்த வரை ஜெயமோகனுக்கு எதிராக உருப்படியாக ஒரு கருத்தும் வைக்கப்பட்டதில்லை. ஒன்று சங்கி என்பார்கள் அல்லது புளித்த மாவு என்பார்கள். அதிகபட்சமாக அவர் எங்கோ புனைவிலோ கட்டுரையிலோ எழுதிய ஒரு வரியைப் பிடிவாதமாய்ப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். அதைத் தாண்டி அவரை விரிவாக வாசித்து மறுக்கும் / விமர்சிக்கும் / நிராகரிக்கும் ஒருவரைக் கண்டதே இல்லை. அவரை அணுகுவதில் ஒருவிதப் பதற்றம் நிறைந்த தாழ்வு மனப்பான்மையே நம் ஆட்களிடம் இருக்கிறது எனத் தோன்றுகிறது.
பிரம்மாண்டங்களின் மீதான நமது ஒவ்வாமை அது. பூனை கண் மூடி உலகை இருளச் செய்வது போல் அவர் மீது வசையோ கேலியோ பொழிவதன் மூலமே அவரது நிகரற்ற சாதனைகளை இல்லாமலாக்கி விடலாம் எனக் குழந்தைத்தனமாக நம்புகிறார்கள். நிஜமாகவே இவர்களை எண்ணினால் பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது!
ஜெயமோகன் படைப்பூக்கத்தில் எப்படி இளையராஜாவைப் போன்றவரோ, அதே போல் அர்த்தமின்றி வெறுக்கப்படுவதிலும் அவரைப் போல் பெருங்கூட்டம் இவருக்கும் உண்டு. அதைச் சகியாது அவர் தரப்பில் நின்று வாதக் கேடயந்தாங்கி அந்த வன்ம அம்புகளை எதிர்கொள்வதை அவ்வப்போது சமூக வலைதள வெளியில் செய்து வந்திருக்கிறேன்.
ஆக, இக்கட்டுரைகள் அவரது இலக்கியப் பங்களிப்பைச் சொல்வதோடு அவர் மீதான அவதூறுகளுக்கும் பதிலிறுக்கின்றன. ஆனால் அது ஒரு கண்மூடித்தன ஆதரவாக அல்லாமல் ஆய்ந்து அவர் தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றன. வெறுமனே அவரை விதந்தோதுவதாக அல்லாமல், அவசியமான இடங்களில் மறுத்தும் எதிர்த்தும் எழுதி இருக்கிறேன். அதை மீறி ஒரு விசிலடிக்கும் ரசிகன் தென்பட்டால் அது அவர் ஆகிருதி!
இதில் இருப்பவை போக, ஜெயமோகன் குறித்து நான் எழுதிய மூன்று முக்கியமான நெடுங்கட்டுரைகள் என் முந்தைய கட்டுரை நூல்களில் இருக்கின்றன: 1) ஒரு புளித்த மாவின் கதை (அநீதிக் கதைகள் தொகுப்பு), 2) ஜெயமோகன் எனும் ஞானபீடம் (ஜோல்னா பை தொகுப்பு) மற்றும் 3) வானும் மண்ணும் (பெண் + கள் + ஊர் மின்னூல்). இது போக மேற்சொன்ன ‘ரைட்டர்’ கட்டுரை நூலில் ஜெயமோகன் பற்றி நிறையப் பகிர்வுகள் உண்டு. அவர் சதா சுராவை இழுப்பது போல் நான் அவரை இழுக்கிறேன்!
ஜெயமோகனைப் பாராட்டுவோர் அனைவரும் தவறாமல் சேர்க்கும் முன்னொட்டு – ‘ஆயிரம் முரண்கள் இருந்தாலும்…’. உதாரணமாக, “நான் பொறுக்கியாக, வஞ்சகனாக, காம வெறியனாக எவனாக இருந்தாலும் என் எழுத்தில் ஆழ்மனம் வெளிப்பட்டிருந்தால் நான் கலைஞன், நான் இலக்கியத்தில் வாழ்வேன்.” என்கிறார் ஜெயமோகன். இதுதான் இலக்கியம் பற்றிய அவரது அளவுகோல். கறாராக அறத்தைப் போற்றும் ஒரு மனதுக்கு இக்கருத்து தொந்தரவூட்டும். இதைச் சாக்கிட்டு பலர் குற்றம் செய்து தப்பித்துக் கொள்ள முடியுமே என அங்கலாய்ப்பு எழும். ஆனால் அதே சமயம் அவர் சொல்லும் விஷயத்தை முழுக்க நிராகரிக்க முடியாதே என்றும் தோன்றும். அதுதான் ஜெயமோகன்! அகலாது அணுகாதுதான் எழுத்து வேந்தனிடம் தீக்காய முடியும்! அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஜெயமோகனுக்கு நான் தீர்க்க வேண்டிய கடன் ஒன்று பாக்கி இருக்கிறது. அவருடைய சரிதத்தை எழுதும் பெரும்பொறுப்புக்கு அவரிடம் அனுமதி பெற்றிருந்தேன். (அதற்குக் கூட தலைப்பு ப்ரம்மா என்றுதான் யோசித்திருக்கிறேன்.) அந்தப் புத்தகத்தின் பொருட்டு அவரது நேரத்தைக் கணிசமாகக் களவாடவும் செய்திருந்தேன். ஆனால் இது வரை அதை எழுத முடியவில்லை. மூன்றாண்டுகள் முன் ஆரம்பித்தது. இன்னும் அப்புத்தகம் ஆரம்ப நிலையிலேயே நிற்கிறது. ஏதோ ஒன்று வந்து கெடுவாய்ப்பாய் அமைந்து தாமதப்பட்டுக் கொண்டே போகிறது. அதன் நிமித்தம் ஒரு குற்றவுணர்ச்சி ஒவ்வொரு நூலை எழுதும் போதும் உண்டாகிறது. பார்ப்போம் – எப்போது அப்பணிக்கு நேரம் கூடி வருகிறது என.
*
இரண்டாம் பகுதி இலக்கியம், மொழியியல் தொடர்பான கட்டுரைகள். படைப்புகள், ஆளுமைகள், மதிப்பீடுகள், விமர்சனங்கள், அக்கப்போர்கள் என்று கலந்து கட்டியவை. பெரும்பாலும் நிதானமான தர்க்கத்தால் கட்டப்பட்டவை; நியாயமான தரவுகள் மேவி அலங்கரிக்கப்பட்டவை. எனவே பதற்றமில்லாத ஒரு கூறாய்வுத்தன்மை கொண்டவை. போக, நூல் முன்னுரை, நேர்காணல் கேள்விகள் ஆகியனவும் இதில் இடம் பெற்றுள்ளன.
இறுதிப் பகுதியான ‘இன்ன பிற’ பெரும்பாலும் சமீப ஆண்டுகளில் எழுதிய ரசனைக் கட்டுரைகளின் தொகுதியாக அமைந்துள்ளது. விளையாட்டான தலைப்புக்களாகத் தோன்றினாலும் கனமாக வேலை வாங்கிய இரண்டு நெடுங்கட்டுரைகளும் இவற்றில் அடக்கம். சில பழைய பதிவுகளையும் பொருத்தங்கருதி இதில் இணைத்திருக்கிறேன்.
நூலிலுள்ள மூன்று கட்டுரைகள் மெட்ராஸ் பேப்பர் இணையதளத்தில் வெளியாகின – பா.ராகவனுக்கு நன்றி. ஒரு கட்டுரை குமுதம் தீராநதியில் வந்தது – ஒருங்கிணைத்த முத்துராமலிங்கத்துக்கு நன்றி. மீதம் என் வலைதளத்திலும் ஃபேஸ்புக்கிலும் வந்தன.
*
இலக்கிய உலகில் என் நண்பர் எனச் சொல்லத் தக்கோர் அரிது. என் கூச்ச சுபாவம், திமிர்த்தனம் சம அளவில் காரணம். கோகுல் பிரசாத் அக்குறும்பட்டியலில் வருபவர்.
அறிவும் நேர்மையும் ஒன்றிணையும் புள்ளிகள் அதிகம் நிகழ்வதில்லை – அதுவும் இலக்கிய உலகில் அவையிரண்டும் எதிர்த் துருவங்கள். கோகுல் அப்படியான ஓர் அரிய நிகழ்வு. அடிப்படையில் தேர்ந்த ரசனைக்காரர். இதழாசிரியர், தீவிர வாசகர், தீவிர சினிமா ரசிகர், எழுத்தாளர் என நான்கு அடிப்படைகளில் அவர் மீது மரியாதை உண்டு. அவர் வயதில் பங்களிப்பில் அவரளவுக்கு உயரங்கள் தொட்ட இன்னொருவரை தமிழ்ச் சூழலில் நான் அறியவில்லை. அதை நீட்டித்தால் இன்றைய அவரது பங்களிப்புக்கு, இனி அவர் செல்லப் போகும் தூரம் பற்றிய பிரமிப்பு கூர்ந்து கவனிக்கும் எவர்க்கும் எழவே செய்யும். அதற்குக் காரணிகள் அவரது அர்ப்பணிப்பும் நேர்மையுமே. அவர் போல் கூரான பார்வையும் சமரசமற்ற பிடிவாதமும் கொண்ட விமர்சகர்கள் தமிழ் இலக்கிய உலகில் அரிது என்றே சொல்வேன். இலக்கியமோ சினிமாவோ அவரது அளவுகோல்கள் மிகக் கறாரானவை. நட்பிற்கோ, மரியாதைக்கோ வளையாதவை. அதனால் அவரது கருத்துக்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதில் வியப்பில்லை. என் நாவல்களையும் சிறுகதைகளையும் அவர் சராசரி என்ற இடத்தில்தான் வைத்திருக்கிறார் என்பது தாண்டி அதைத் தயக்கமின்றி முகத்துக்கு நேராகச் சொல்லவோ எழுதவோ முடிந்த நிலையில்தான் எம் நட்பிருக்கிறது. அவருக்கு இந்நூலைச் சமர்ப்பிப்பது பொருத்தம்.
என் புத்தகங்களின் உள்ளும் உருவும் செம்மையாக்கம் செய்ய உதவும் சௌம்யாவுக்கு அன்பு. ஸீரோ டிகிரி வழி பதிப்பிக்கும் ராம்ஜீ நரசிம்மனுக்கும் ஆர். காயத்ரிக்கும் நன்றி!
சி.சரவணகார்த்திகேயன்
ஓஷோ பிறந்த நாள், 2024
(சென்னை புத்தகக் காட்சியில் ஸீரோ டிகிரி ஸ்டால் 540 & 541ல் கிடைக்கும். CommonFolks தளத்தில் வாங்க லிங்க் முதல் கமெண்ட்டில்.)