அன்புள்ள ஜெ
ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் ஓர் அற்புதமான கதை. முதலில் அந்தக்கதையை என்னால் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. தீவிரமான ஒரு வாழ்க்கைச்சித்திரமாகவே போய்க்கொண்டிருந்தது. எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை. ஆனால் ஈர்ப்பாகவும் இருந்தது. இளையராஜா ஒரு அற்புதநிகழ்வாகக் கதைக்குள் வந்தபோது கதை வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது. ஆனால் அப்போதும்கூட அந்த வாழ்க்கைச் சித்திரத்துக்கும் ராஜா சாருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இருந்தது. கதை முடிந்தபோது ஓர் உச்சம் உணரமுடிந்தது. ஆனால் இரண்டு களங்களும் இணையாமலிருந்தது. ஒரு நாள் கழித்துத்தான் சட்டென்று அந்த இணைப்பு தோன்றியது. ராஜா சார் எதைக் கைவிடுகிறார் என்பதைத்தான் அந்த முதல்பகுதி சொல்கிறது. மீட்பு தரும் கடவுள் போன்ற ஒன்றை அவர் கைவிடுகிறார். அதையும் துறந்து செல்கிறார். அருமையான கதை.
மதன்குமார் ஆர்.
அன்புள்ள ஜெ,
வடகரை இலக்கிய விழாவில் சந்தித்தபோது அஜிதனின் மைத்ரி நாவலை நீங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்போவதாகச் சொன்னீர்கள். ஆச்சரியமாக இருந்தது. உங்கள் மகன் எழுதிய நாவலை நீங்களே மொழிபெயர்ப்பது என்பதைப் பற்றி நானும் சரவணனும் பேசிக்கொண்டோம். இன்றைக்குத்தான் மருபூமி நாவலை வாசித்தேன். பஷீருக்கு மிகப்பெரிய டிரிபியூட். அற்புதமான ஒரு ஸ்பிரிச்சுவல் அனுபவமாக இருந்தது.
ஶ்ரீதர்