மேலே திறந்து கிடக்கிறது – கடிதம்
அன்பு ஜெ,
”மேலே திறந்து கிடக்கிறது” வாசித்தேன். இரண்டு நாட்களாக பரவசமாக இருந்தேன். சுற்றி இருக்கும் யாவும் பொருளிழந்து சிறியதாகி என்னையும் இலகுவாக்கி உற்சாகமாக்கியது. அதன்பின் மனம் பலவற்றை கோர்த்துக் கொள்ள ஆரம்பித்தது. சென்ற வருடம் நீங்கள் எழுதிய தொலைவில் எங்கோ, அழைப்பு, மேலும் இந்த வாள் நாடகம் வழியாக மீண்டும் வாள் சிறுகதை. ஈராறு கால் கொண்டெழும் புரவி, இறைவன், மாயப்பொன், குருவி ஆகிய சிறுகதைகள். இன்னும் நான் அறியாமல் கோர்த்துக் கொண்ட உங்கள் சிந்தனைகளும் சேர்ந்து ஒரு சிறிய வலைபின்னல் மண்டைக்குள் பின்னிக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மனம் நிசப்தமாக இருக்கிறது. மனம் கொந்தளிப்புடன் இருக்கையில் இந்த நிசப்தம் அச்சமூட்டுகிறது. எழுதிவிட்டால் சற்று தொகுத்துக் கொண்டு கடந்து விடலாம் என்றும் தோன்றுகிறது.
முதலில் “அறிதலுக்கு அப்பால்” என்ற சிந்தனை என்னில் எத்தனை தூரம் பயணித்து வந்திருக்கிறது என்று பார்க்கிறேன். முதல் முறையாக இந்த வார்த்தையை விஷ்ணுபுரத்தில் சந்தித்தபோது தான் உங்களைக் கண்டடைந்தேன் என இன்று தோன்றுகிறது. நான் இது நாள் வரை தேடி அலைக்கழிந்து கொண்டிருந்த வார்த்தை அது தான் என்று தோன்றியது. அந்த இடத்தில் கண்ணீர் உகுத்து இதே போன்ற பிரமையுடன் உங்களுக்கு கடிதம் எழுதிய நினைவு இப்போது வருகிறது. ஆனால் நான் அதை உணர்ந்திருக்கவில்லை. வெறும் பிதற்றல்கள்.
“அறிந்தவை, அறிபவை அறியப்படப் போகிறவை என காலம் மூன்றெனில், அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்கக் காலம் ஒடுங்குமா? அறிதல் என்பது என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது எது?”
இந்த வரிகள் தான் என்னை உங்களை நோக்கி விசையுடன் இழுத்து வந்தவை என இன்று உணர்கிறேன். இன்று மேலும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமானால் “அறிதலுக்கு அப்பால்” என்ற சொல் என அதைச் சொல்வேன். ஏன் அது அப்படி உலுக்கியது. ஏனெனில் என் அறிவில், நான் அறிந்து கொண்டவை வைத்து சிந்தித்து கட்டமைத்துக் கொண்டிருந்த உலகத்தை அது உடைத்துப் போட்டது. ஆணவத்தை அழிக்கும் சொல் அது.
”மேலே திறந்து கிடக்கிறது” என்ற இக்கதை “அறிதலுக்கு அப்பால்” என்ற சிந்தனை உச்சமாக வெளிப்பட்ட புனைவு. முதலில் மேலே திறந்து கிடக்கிறது என்ற அந்த படிமம் தரும் திகைப்பு. உண்மையில் இதுவரை அறிவியல்பூர்வமாக பல்வகை அடுக்குகளால் பாதுகாப்பாக நம்மைக் காக்கும் உயிர்க்கோளம் என நம்பி வந்திருக்கும் சிந்தனைக்கு எதிர்த்திசையே இந்தப்படிமம். ‘கதவற்ற வீட்டில் வாழும் பாதுகாப்பற்றவர்கள் நாம்’ என்று சொல்பவர் எந்த அறிவுத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் கலைஞர் தான் என்று தோன்றுகிறது. இதையே ஒரு வேற்றுகிரகவாசி ”அழகிய கோளம்” என நம்மைப் பார்த்து பரிதாபப்பட்ட வண்ணம் அழிக்கத்தயாராகும் நிலையை உணர்ந்தபோது உயிர்க்கோளம் சார்ந்து, மானுட நோக்கம் சார்ந்து அதுவரை பேசப்பட்ட அத்தனை அறிவுஜீவித்தனமான தர்க்கங்களும் பொருளற்று போகிறது. ஒட்டுமொத்த சிந்தனை, தத்துவம், அறிவுமரபின் மேல் ஒரு ஏளனப் புன்னகை ஒன்றை நாம் கற்பனை செய்து கொள்ளும்படியான கதையாக இது ஆனது.
இந்தக் கதையில் நம்மை நோக்கி பரிதாபப்படும் அந்த வேற்று கிரக வாசிகளுக்கு மேலும் அப்படி ஒரு புன்னகை நின்று கொண்டிருப்பதையும் கற்பனை செய்து பார்த்தேன். நான் இளைய யாதவனின் மாயப் புன்னகையையும், புத்தரின் இள நகையையும் கற்பனை செய்து கொண்டேன். முன்பு அதை தொலைவிலிருந்து நோக்கும் புன்னகையாக, அனைத்தும் அறிந்து கடந்த புன்னகையாக கற்பனை செய்திருந்தேன். இந்தக் கதையிலேயே நீங்கள் அதை யோகிகள், சித்த புருஷர்கள் தங்கள் அறியாமையையும், அறியமுடியாமையையும் அறிந்தவர்களாகக் கொள்ளும் உணர்வாகச் சொல்லியிருந்தீர்கள். திகைப்பும், வெறிப்பும் கடந்து சிரிப்பு என அடுக்கியிருந்தீர்கள். அதை ஒரு கணம் ஏளனமாக மாற்றிப் பார்த்த போது திகைப்பாக இருந்தது. நான் இதுவரை இவ்வுலகில் கண்ட பல்வேறு சிற்பங்களிலிருந்து வெளிப்பட்ட பல வகையான உணர்வுகள் எண்ணத்தில் வந்து முட்டி நின்றது. எத்தனை வகையான உணர்வுகள். எல்லாவற்றிலும் இனி ஏளனத்தை என்னால் தொட்டு எடுத்துவிட இயலும் என்று தோன்றியது.
இயற்கை, தொல்லியல் எச்சங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கோயில்கள் என மானுடமும், மானுடமல்லாதவையும் நம்மைச் சுற்றி எச்சமாக விட்டுச் செல்லும் யாவற்றையும் படிமமாக பார்க்கும் நோக்கு ஒன்று உள்ளது எனக்கு. இந்தப் படிமங்களை ஒட்டுமொத்தமாக எதையோ சொல்ல முற்படும் அல்லது தொடர்புறுத்த முற்படும் ஒன்றாக காணும் நோக்கும் உள்ளது. ஒரு தவிப்பு போல அது வந்து “என்னைப் புரிகிறதா?” என தொற்றிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இன்று அவையாவும் அறிதலுக்கு அப்பால் உள்ள ஒன்றை நமக்கு அறிவுறுத்தும் பொருட்டு நின்றிருப்பவை என்று தோன்றுகிறது. கடவுள்/சாத்தான் என்ற எண்ணமும் அதன் பொருட்டே நமக்கு சொல்லப்பட்டுக் கொண்டே வந்திருப்பதாக இன்று உணர்கிறேன். அறிவுக்கு அப்பால், அறிதலுக்கு அப்பால், அறியமுடியாமையை நோக்கி மானுடம் செல்லும் பொருட்டு நம்மை நோக்கி எய்தப்பட்டவை அவை.
நாத்திகர்களை, அறிவில் திழைப்பவர்களை ஒரு கணம் ஏளனத்துடன் நினைத்துப் பார்த்தேன். ஆனால் அது அப்படியுமில்லை. அறிவின் உச்சியில் செல்லச் செல்லவே அறியமுடியாமை மேலும் மேலும் விரிந்து பிரம்மாணடமாகிறது. அதை அறிவதற்குத் தேவையான ஞானம் அதன் வழியாகவே நம்மை வந்து அடைகிறது. சிலர் அறிகிறார்கள், சிலர் பிடிவாதமாக நின்று விடுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. மிக இளமையில் அறிதலுக்கு அப்பால் செல்ல விடாமல் தடுக்கும் சிந்தனைகளே அந்தத் தேக்க நிலையை அருள்கிறது. மிகச்சிலரே அக்கட்டுகளிலிருந்து விடுபடுகிறார்கள். எல்லோருக்கும் அது அருளப்பட வேண்டும் எனப்துமில்லை தான்.
தூய அறிவு ஜீவிகளால் தான் அறிதலுக்கு அப்பாலான ஒன்றை எண்ணிப் பார்க்கவே இயலாது என்று தோன்றுகிறது. உண்மையில் அதைப் பார்க்கவே மிகவும் கூரிய உள்ளம் தேவை. கூர்மை மழுங்கினால் பிறழச் சாத்தியம் இல்லாதவர்கள் அல்லது இயற்கையின் விரிசல் வழியாக எழுந்து பொங்கும் கலை/அழகு / உக்கிரம் ஆகியவற்றை தாங்கவியலாவதவர்களுக்கு அது பற்றிய சிந்தனை அருளப்படுவதேயில்லை என இன்று தோன்றுகிறது.
“அறிதலுக்கு அப்பால்” என்ற சொல் ஒரு கூரிய வாள் போன்றது. அது தான் ஏளனத்தின் புன்னகையாக முன் நிற்கிறது. ஆனால் அது சோர்வாக்குவதில்லை. மேலும் மேலும் விசையுடன் அறிவை பற்றச் செய்கிறது. கண்ணோட்டத்தை மேலும் விரிவாக்கச் சொல்லி தூண்டுகிறது. அதன் உச்சத்தில் தான் அறிதலுக்கு அப்பால் என்ற ஒன்றின் தரிசனத்தை இன்னும் காண முடியும் என்று தோன்றுகிறது. இந்த முறை எவ்வளவு இயலுமோ அத்தனை தெளிவாக அதைக் காணவே வந்துள்ளோம் என்று தோன்றுகிறது.
அறிதலுக்கு அப்பால் என்ற சிந்தனையின் வளர்ச்சி நம் இருப்பை சிறியதாக்குகிறது. இருப்பு சிறியதாகிறது என்பதாலேயே நாம் பிரச்சனைகள் என இந்த உலகத்தில் நினைக்கும் யாவும் சுருங்கிவிடுகிறது. நோக்கு விசாலமாகிறது. அப்படியே அறுத்துக் கொண்டு சென்று விடாமல் இருக்கத் தேவையான உலகியல் நோக்கையும் ஏற்கனவே அளித்து வைத்திருப்பதற்காக நன்றி.
“அப்பால்… அப்பால்…” என யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அறிவுக்கு அப்பால், காலத்துக்கு அப்பால், இடத்துக்கு அப்பால், யாவற்றுக்கும் அப்பால்…
வெண்முரசின் வரிகள் நினைவுக்கு வந்தது.
அனைத்தையும் மண்ணில் கால்நட்டு நின்று அறிவது விலங்கு நோக்கு. தன் மூதாதையர் தோள்மேல் காலூன்றி ஏறி நின்று பார்ப்பது மானுட நோக்கு. அனைத்தையும் விண்ணிலிருந்து குனிந்து காண்பது தேவர்நோக்கு. விலங்குநோக்கு காலஇடத்தில் மட்டுமே அமைவது. நேற்றும் நாளையும் அதற்கில்லை. மானுடநோக்கு கொண்டவன் தன் தந்தையர் அறிந்த அனைத்தையும் தான்பெற்று தன்னுடையதையும் சேர்த்து மைந்தனுக்கு அளித்துச் செல்கிறான். பல்லாயிரம் கண்களும் செவிகளும் கொண்ட பேருருவனே கற்கும் மானுடன் என்கிறார்கள். தன்னைத் தான் அடுக்கியபடி பெருகிச்செல்லும் முடிவிலாக் காலமும் முடிவிலா வெளியும் கொண்டது அவன் அறிதல். ஆனால் தேவர்நோக்கு என்பது அதற்கும் மேம்பட்டது. அதுவும் காலமும் இடமும் அற்றது. ஒட்டுமொத்தத்தையும் சாரத்தையும் அறியும் ஆற்றல்கொண்டது
தொலைவில் எங்கோ, அழைப்பு, மேலே திறந்து கிடக்கிறது, ஈராறு கால் கொண்டெழும் புரவி ஆகியவை அத்தகைய சாரத்தை அறியும் தேவர்நோக்கு கொண்டவை. அல்லது அதற்கும் அப்பாலானவை.
ரம்யா.