சைவ தத்துவத்தின் அவசியம் என்ன?

நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகமெங்கும் ஒரு சைவ மறுமலர்ச்சி உருவாகியது என்று சொன்னால் பலர் இன்று நம்ப மாட்டார்கள். சைவநூல்கள் மீண்டும் அச்சேறின. சைவ நூல்களுக்கு விளக்கங்கள் ஏராளமாக எழுதப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் சைவப்பேருரைகள் நிகழ்ந்தன. மாபெரும் பேச்சாளர்கள் இருந்தனர். இன்றும் ஊர்கள் தோறும் உள்ள சைவப்பெருமன்றங்கள் அதன் விளைவுகள்.

அந்த அலை மெல்ல மெல்ல அடங்கலாயிற்று. இன்று அறவே இல்லாமலாகியுள்ளது. சைவபக்தி உள்ளது, அது பெரும்பாலும் சோதிடர்களின் ஆலோசனைக்கேற்ப ஆலயம் தொழுதலாக உள்ளது. அதிகம்போனால் சைவத் திருமுறைகள் ஓதுதல் என்ற அளவில் எஞ்சியுள்ளது. ஆனால் சைவத்தின் சாரம் என்பது சித்தாந்த சைவம். சைவத்தின் தத்துவம் அதுவே. அது மிகமிக அரிதாகவே கற்கப்படுகிறது. அதுவும் மரபார்ந்த வகையில், ஆசாரங்களுடனும் வழிபாடுகளுடனும் பலவகையான சம்பிரதாயங்களுடனும் இணைத்து அது கற்பிக்கப்படுகிறது. கடுஞ்சைவர்கள் அன்றி எவரும் அதை கற்கும் உளநிலைக்குச் செல்லமுடியாத நிலை உள்ளது.

தத்துவத்தை ஆசாரங்களுடன் இணைத்துக் கற்பிக்கையில் அதன் சாரம் நழுவிச்சென்றுவிடுகிறது. தத்துவம் தத்துவமாக மட்டுமே கற்பிக்கப்படவேண்டும். நவீன்ச்சிந்தனைகளுடன் இணைத்துக் கற்பிக்கப்படவேண்டும். அத்துடன் இன்று எல்லா தரப்பினரும் அதைக் கற்பதற்கான அவை அமையவேண்டும்.

அதன்பொருட்டே சைவ தத்துவ அறிமுகக் கல்வியை நிகழ்த்தி வருகிறோம். ஒரு தலைமுறைக்காலம் இடைவெளி விழுந்தால்கூட தத்துவக்கல்வியின் தொடர்ச்சி முழுமையாகவே அறுபட்டுவிடும் என்னும் அச்சமே இவற்றை தொடர்ச்சியாக நிகழ்த்தச் செய்கிறது.

முந்தைய கட்டுரைஎன்னை ஆட்கொண்டவள்.
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்றவை