வாசிப்பின் இடம் பற்றி எனக்கு மிக நன்றாகவே தெரியும். நான் பணியாற்றும் துறையிலேயே பரந்துபட்ட வாசிப்பும், சொந்தமான சிந்தனையும் உடையவர்கள் முன்னால் சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்னால் வாசிக்கமுடியவில்லை. வாசிப்புப் பழக்கம் எனக்கு உருவாகவே இல்லை.
நான் படித்தது இந்தியாவின் முதன்மையான கல்விநிலையங்களில்தான். முதல் மாணவனாகவும் இருந்தேன். ஆனால் நான் படித்த கல்வி எல்லாமே மனப்பாடம் செய்வதுதான். அதில் நான் நிபுணனாக இருந்தேன். ஒரு கட்டத்திற்குமேல் கணிதம்தான் எனக்கு பாடமாக இருந்தது. நான் ஒரு படித்த அறிவுஜீவி என்று நம்பிக்கொண்டிருந்தேன்.
இன்று நான் வெளிநாட்டிலிருக்கிறேன். என் துறையிலுள்ள ஐரோப்பியர் புனைகதைகளையே ஏராளமாகப் படிக்கிறார்கள். உலகநாடுகளில் இருந்து வரும் புனைகதைகளை படிப்பதனால் அவர்களுக்கு உலகின் எந்த நாட்டின் பண்பாடு பற்றியும் ஒரு சித்திரம் உள்ளது. நான் அவர்கள் நடுவே முட்டாளாக உணார்கிறேன். அவர்களிடமும் அந்த பரிவான பார்வை உள்ளது.
நான் பலமுறை வாசிக்க முயன்றேன். ஆனால் வாசிக்கமுடியவில்லை. ஒரு நூலை எடுத்து அரைமணிநேரம் கூட வாசிக்கமுடியவில்லை. எனக்கு ஏராளமாக நேரம் உள்ளது. நான் சமூகவலைத்தளங்களிலும் யூடியூபிலும் ஓடிடியிலும் செலவழிக்கிறேன். நிறையநேரம் யூடியூபில் ரீல்ஸ் பார்ப்பதிலேயே செலவாகிவிடுகிறது.
பல சமயம் பலமணி நேரங்கள் ரீல்ஸிலேயே சென்றுவிடுகிறது. முகநூலில் உலவ ஆரம்பித்தால் பல்வேறு குறிப்புகள், அவற்றுக்கெதிரான சர்ச்சைகள் என்று தொட்டுத்தொட்டு வாசிப்பு நடக்கிறது. பலமணிநேரம் அதிலேயே போய்விடும். தூக்கம்கூட தள்ளிப்போய்விடும். ஆனால் ஒரு வரிகூட மனதில் நிற்காது. ஒரு வாரம் முன்பு பேசப்பட்ட விஷயங்களைகூட நினைவில் நிறுத்த முடியவில்லை. இப்படியே வாழ்க்கை போய்விடுமா என்ற பயம் வந்துவிட்டது.
படிக்கும் பழக்கத்தை இனிமேல் உருவாக்கிக்கொள்ள முடியுமா? அதற்கான பயிற்சிகள் எங்காவது அளிக்கப்படுகின்றனவா? இன்று உலகிலேயே மிகப்பெரிய சிக்கல் என்பது படிக்கமுடியாமல் ஆவதுதான். ஒரு நோய் போல இது பரவி வருகிறது. இந்த நோய்க்கு ஏதாவது சிகிச்சைகள் இருக்கின்றனவா?
சபா செல்வரத்தினம்
அன்புள்ள சபா,
உங்கள் கடிதத்தை சுருக்கி மொழியாக்கம் செய்திருக்கிறேன். இந்தச் சுருக்கமே உங்கள் பிரச்சினை என்ன, உங்களுக்கு ஏன் வாசிப்புதேவை என்பதைக் காட்டும். நீங்கள் எழுதியிருக்கும் கடிதம் மிகப்பலவீனமான கலவை மொழியில், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்லியிருக்கிறது. வாசிப்பின்மையில் விளைவு இது. இதை இந்த தலைமுறையின் படித்த இளைஞர்கள் பலரிடம் காணமுடிகிறது
வாசிப்பு அகமொழியை செம்மையாக்கும். அகமொழியில்தான் நாம் சிந்திக்கமுடியும். வாசிப்பின்மை நம்மை சிந்தனையற்றவர்களாக, நுணுக்கத்திறன் மற்றும் பயிற்சி (deft and training) மட்டுமே கொண்டவர்களாக ஆக்குகிறது. நுணுக்கத்திறன் மற்றும் பயிற்சியால் பெரும்பாலான தொழில்களைச் செய்துவிடமுடியும். உலகவாழ்க்கையை வெல்லமுடியும். ஆனால் எங்கே சிந்தனை தேவைப்படுமோ அங்கே தோல்வியடைய நேரிடும்.
நம் கல்விமுறை நடைமுறையில் வாசிப்புக்கு எதிரானது. வாசி வாசி என மாணவர்களிடம் சில ஆசிரியர்கள் சொல்லலாம். ஆனால் வாசிக்கும் மாணவனுக்கு வாசிப்பால் வரும் கூடுதல் தகுதி என எதுவும் நம் கல்வியில் இல்லை. வாசிக்காமல் மனப்பாடம் செய்து எழுதுபவன் மிக எளிதாக வாசிப்பவர்களை வென்று கடந்துசெல்லமுடியும் என்பதே நிலைமை.
ஆகவே இந்தியக் கல்விநிலையங்களில் வாசிப்பு இன்று அறவே இல்லை என்பதே உண்மையான சூழல்.வாசிப்பை மிக இளம்வயதிலேயே உருவாக்கவேண்டும். ஐந்தாறு வயதிலேயே வாசிப்பு தொடங்கிவிட்டால் நல்லது. சைக்கிள் விடுவது, நீச்சலடிப்பதுபோல ஒரு அனிச்சையான பழக்கமாக வாசிப்பின் நடைமுறை மாறவேண்டும். நான் பலமுறை சொன்னதுதான். வாசிப்பு என்பது மூன்று படிநிலைகள் கொண்ட செயல். அச்சிடப்பட்ட எழுத்துக்களை கண்ணால் பார்த்து அவற்றை மொழியென ஆக்கிக்கொள்வது. மொழி சொல்லும் பொருளை புரிந்துகொள்வது. அந்த பொருளை கற்பனையால் விரித்து அதை அகத்தே வாழ்வது.
’புலி மெல்ல நடந்து சென்றது’ என்னும் நான்கு சொற்களை கண்ணால் பார்த்ததுமே புலியை கற்பனைக் கண்ணால் பார்த்துவிடுபவனே வாசகன். மூன்று படிகளும் ஒரே கணத்தில் நிகழ்கின்றன அப்போது. நல்ல வாசகர்கள் வாசிப்பதில்லை- அவர்கள் எழுத்துக்களை கண்ணால் பார்த்துக்கொண்டே கற்பனையில் வாழ்கிறார்கள். அவர்களே நிறைய வாசிக்கமுடியும்.
அந்தப் பயிற்சி இளமையிலேயே அமையவேண்டும். அப்பயிற்சி இல்லாதவர்கள் மூன்று செயலையும் தனித்தனியாக நிகழ்த்துவார்கள். மொழிவடிவை வாசிப்பார்கள். பொருளை புரிந்துகொள்வார்கள். அப்பொருளை கற்பனை செய்வார்கள். அது மூளையை சலிப்படையவைக்கும் செயல்பாடு. ஆகவேதான் எரிச்சலடைந்து வாசிப்பை விட்டுவிடுகிறார்கள்.
வாசிப்பு என்பது ஒரு தனித்திறன், எல்லாராலும் வாசிக்கமுடியாது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். சினிமா பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது, பேச்சுகளைக் கேட்பதுபோன்றது அல்ல அது. அவை காரில் செல்வதுபோல. நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. வாசிப்பு சைக்கிளில் செல்வதுபோல. நமக்கு அதற்கான பயிற்சி இருந்தாகவேண்டும்.
வாசிக்கமுடியவில்லை என்ற புகாரைச் சொல்பவர்கள் பொதுவாக யார்? இளமையில் அப்பயிற்சியை அடையாதவர்கள் கொஞ்சம் முதிர்ந்தபின் முயன்று சலிப்புற்று சொல்கிறார்கள். நீச்சல், சைக்கிள் விடுதல் போன்றவற்றை கொஞ்சம் முதிர்ந்தபின் செய்ய ஆரம்பித்தாலும் இதே சிக்கல் இருக்கிறது. மனமும் உடலும் எளிதில் பழகாது. சொல்லப்போனால் கொஞ்சம் வயதானபின் எந்த அன்றாடப்பழக்கத்தையும் தொடங்கி சீராகக் கொண்டுசெல்லமுடியாது. உடற்பயிற்சி, யோகா எதுவானாலும்.
அதற்கு ஒரே வழி, முயன்று உள்ளே நுழைந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே. இயல்பாக நம்மால் அதில் தொடரமுடியாது என உணர்ந்து கூடுதலான முயற்சியை அளிப்பதே. வாசிப்பை ஒரு நோன்பாகச் செய்தாலொழிய ஓர் அகவைக்கு மேல் வாசிக்க முடியாது. இது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வாசிப்பை நிறுத்திவிட்டவர்களுக்கும் பொருந்தும்.
வாசிப்பை தொடங்கி முன்னெடுப்பதற்கான சில வழிமுறைகளைச் சொல்கிறேன்.
அ. வாசித்தேயாகவேண்டும், அது ஒரு நோன்பு என உறுதிகொள்ளுதல். இசைக்கருவிகளைப் பயில்வது, யோகம் செய்வது போன்றவற்றுக்கும் இந்த உறுதி தேவை. எது எப்படியானாலும், கொஞ்சம்கூட மகிழ்ச்சியோ நிறைவோ இல்லை என்றாலும், எதுவுமே பிடிபடவில்லை என்றாலும் நான் 250 மணிநேரம் வாசிப்பேன் என்று முடிவெடுத்து அதை முடித்துவிடவும்.
ஆ. வாசிப்பை அன்றாடமாக ஆக்கிக்கொள்ளவும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இவ்வளவு நேரம் வாசிக்கவேண்டும் என்னும் உறுதி தேவை. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வாசிப்பது இன்னும் நல்லது.
இ. வெற்றுநேரங்களை முடிந்தவரை தவிர்க்கவும். அதாவது சமூகவலைத்தளங்களில் உலவுதல், ரீல்ஸ் பார்த்தல் ஆகியவற்றை பிடிவாதமாக தவிர்க்கவும். நம் வாழ்க்கையில் கணிசமானபொழுது வெற்றுநேரங்களில் வீணாகிறது. அது பொழுதுவீணடிப்பு மட்டும் அல்ல. அந்த மேலோட்டமான மனநிலை பழகிப்போய் நம்மால் எதையும் தீவிரமாகச் செய்யமுடியாமலாகும். இந்த நூற்றாண்டில் ஒருவருக்கு சமூகவலைத்தளம் சலிப்பூட்டவில்லை என்றால் அவர் அறிவார்ந்த வெற்றிடமொன்றைக் கொண்டவர்.
ஈ. அச்சுநூல்களை வாசிக்கவும். இணையநூல்களை, மின்நூல்களைத் தவிர்க்கவும். உலகமெங்கும் இப்போது இதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இணையநூல்கள், மின்னூல்கள் தொடர்ச்சியான கவனக்குவிப்பை உருவாக்குவதில்லை. கண் சலிப்புறுகிறது. ஆகவே நாம் பார்வையை விலக்கி வேறெதையாவது சிலநிமிடங்கள் செய்ய ஆரம்பிக்கிறோம். பலவகையான கவனச்சிதறல்கள் நிகழ்கின்றன.
உ. வாசிக்கத்தக்க நூல் எப்போதுமே கையில் இருக்கவேண்டும். நாம் செல்பேசியை அதிகம் பயன்படுத்துவது அது கையிலேயே இருப்பதனால்தான். நான் அமெரிக்காவில் பலருடைய பையிலேயே நூல்கள் இருப்பதைக் காண்கிறேன். நூல்களை கையிலேயே வைத்திருப்பவரே இன்று வாசிக்கமுடியும் என என் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னார்.
ஊ. அமரும் இடங்களில் எல்லாம் நூல்கள் இருக்கவேண்டும். எங்கே கொஞ்சம் சாதாரணமாக அமர்ந்தாலும் அங்கே ஒரு நூல் இருக்கவேண்டும். நூல்கள் கண்ணுக்குப் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கு நூல்களை வாங்குவதே ஒரே வழி.
எ. நூல் வாசிப்பில் ஒரு சரிவிகிதம் இருக்கட்டும். எளிமையாக, வேகமாக வாசிக்கத்தக்க நூல் 80 சதவீதம் இருக்கவேண்டும். ஏனென்றால் ஒரு நூலை வாசித்து முடித்தால் வரும் நிறைவும் நம்பிக்கையும் அடுத்த நூலை வாசிக்கச் செய்யும். 20 சதவீதம் சவாலான நூலை வாசிக்கலாம். அது வாசிப்பில் பயிற்சியை அளித்து நம்மை மேலெடுக்கும்.ஒரே சமயம் இரண்டு வகைநூல்களையும் வாசித்துக்கொண்டிருப்பது தொடக்கநிலையில் நல்லது. தொடக்கநிலையில் ஒருபோதும் சவாலான நூல்களை மட்டும் வாசிக்கலாகாது. அந்த வாசிப்பு தடைபட்டுவிட்டால் நாம் வாசிப்பையே கொஞ்சகாலம் நிறுத்திவிடுவோம்.
ஏ. வாசித்தவற்றைப் பற்றி குறிப்புகள் எடுக்கலாம். அல்லது பேசிப்பதிவுசெய்யலாம். வாசித்தவற்றைப் பற்றி யோசித்தால், பேசினால், விவாதித்தால் அவை மறப்பதில்லை. மேலும் ஆர்வத்தை உருவாக்கி மேலும் வாசிக்கச் செய்யும்.
நான் தொடர்ச்சியாக வாசிப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன். அவற்றில் பெருவாரியாக மக்கள் பங்கேற்பதில்லை. ஆயினும் நடத்தவேண்டும் என்னும் எண்ணமுள்ளது, அது தேவை என்பதனால். 10 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்காக ஒரு வகுப்பை நடத்தலாமா என்னும் எண்ணமும் உள்ளது. நானறிந்து இன்று எங்கும் இத்தகைய வகுப்புகள் நிகழவில்லை.
ஜெ