ஐந்து முகங்கள் – கடிதம்

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

 அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம்.

உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான  வெண்முரசுபிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது

வெண்முரசு தாங்கள் எழுத தொடங்கியது கிறிஸ்துமஸ் நாளில் என அறிந்துள்ளேன். 2023 கிறிஸ்துமஸ் அன்று ஒரு வரி கூட வாசிக்காது இன்று(2024 கிறிஸ்துமஸ் ) பிரயாகை வரை வந்துள்ளேன் எளிய வாசகனாய்

எனது பார்வையில் சிறிய கதைச் சுருக்கம் மற்றும் இன்று இந்நூலை வாசிக்க வேண்டியதன் தேவை என்ன தொகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையில் இருந்து தொடங்குகிறது இந்த நாவல். ஒருவன் தன கீழ்மைகளை எங்கு காண்பிப்பான் , எங்கு மறைத்து மண் வீழ்வான் என்பதற்கு உத்தானபாதனின் செயல்களே உதாரணம் .அவனின் மனைவி மகனென அரண்மனையில் வாழ்ந்தாலும் எங்கும் மதிப்பிழந்து உமிழப்படும் சிற்றுயிர்களாய் சுநீதியும் அவள் மகன் துருவனும். அவனின் எழுச்சியும் தேடலும் அவமானங்களை அடித்தளமாய் கொண்டு வளர்கிறது. உடலால் ருசி தேடி இன்னொரு மனைவி சுருசியிடம் தஞ்சம் அடைந்து வந்தாலும் அவள் ஒரு எளிய பெண் அவ்வளவே அவளின் உயரம் என்பதை உத்தானபாதன் உணராமல் இல்லை. ‘கொடியென எண்ணுகையில் பாம்பெனச்சீறி பாம்பென அணுகுகையில் கொடியெனச் சுருளும் வித்தை மட்டுமறிந்த விஷமற்ற பச்சைப்பாம்பு.’ என்று அவளை மனதில் மதிப்புரைத்துக்கொள்கிறான். நீதியும்(சுநீதி ) அங்கு தான் அவனருகிலேயே உள்ளது ஆனால் அது எப்போதும் தாமதமாகவே கண்டுகொள்ளப் படுகிறது .

இப்புவியிலுள்ள அனைத்துமே மானுடர் அடையக்கூடுவதுதான். அதன்பொருட்டே அவை இங்கு உள்ளன. ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஒருபோதும் அடையமுடியாத ஒன்று உண்டு என நான் உணர்கிறேன்இந்த வரிகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய என்ற தொனியில் மனிதனின் பெரும்பாலான அடைதல்களை சொல்லி விடுகிறான். ஆனால் அதையும் அடையாதவர்களை அவன் பொருட்டெனவே கொள்ளவில்லை . ஆனால் அதற்கும் மேலாக மனிதன் அடையவே முடியாத ஒன்றென்று தனது தேடலின் உச்சமென துருவன் உணர்வதுநிலைபெயராமை‘. அதன் பொருட்டு தன்னை திகழ்த்தி கடும்தவத்தின் பயனாய் விண்ணில் விஷ்ணுபதத்தில் விண் மீனாய் அமைகிறான். அங்கிருந்தே வானியல் ஞானம் தொடங்குகிறது என்று ஒரு அறிவியல் பார்வையையும் அளிக்கிறது.

குருகுலக்கல்வி முடிந்து ஆசிரியரின் குரு தட்சணைக்காக பாஞ்சால மன்னன் துருபதனை போரில் வென்று தனது தேர்க்காலில் கட்டி இழுத்து வருகிறார்கள் இரு அர்ஜுனர்கள். ஒருவன் வெறி கொண்டு குருவின் சொல்லே வேதமென முன் செல்ல மற்றொருவன் அவன் அகத்தமர்ந்து பார்த்துக்கொண்டே அந்த செயலின் நியாயம் என்ன என்று கேட்பது போல பின்தொடர்கிறான். வெற்றியும் வெறுமையும் உடன் வர துருபதனை துரோணரின் காலடியில் சமர்ப்பிக்கிறான் அர்ஜுனன். பாண்டவர்கள் அந்த போரில் காத்திருந்து வியூகம் அமைத்து களம் இறங்க அதன் முன்பே கர்ணனின் பலத்துடன் களமிறங்குகிறது கௌரவப் படை. துரோணரின் பரிசு அவர்களின் தேர்க்காலுக்கு செல்லவில்லை ஆனால்  மலை முகடென எழுந்து நின்றது கர்ணனின் திறன் அவனை எதிர்கொண்ட துருபதனின் ஆற்றலுடன் மோதும்போது.

Painting By: Asha Anand

போரில், அதிகார வெறியில் என பல இடங்களில் பல தானும் தனது வித்தையும் அலைக்கழிக்கப்பட அதன் மூலம் பல அகக் கேள்விகளால் அல்லலுற அதற்கெல்லாம் தனது எளிய அதே நேரத்தில் நடைமுறை ஞானத்துடன் பதிலளித்து அவனின் உளச்சோர்வைப் போக்கி முன்னகர்த்தி செல்கிறான் பீமன். அத்தகைய ஒரு தருணத்தில் மனித சிறுமைகளைக் குறித்து பார்த்தன் கேள்வி எழுப்ப அதற்கான பதிலாக உச்சமென பீமன் சொல்லும் வரிகள்

நீ கேட்பதற்கு ஒரே பதில்தான். புழுக்கள் ஏன் நெளிகின்றன, ஏன் அவை பறப்பதில்லை?பறக்கமுடியாததனால்தான் அவை சிறகுகளைப்பற்றி கனவு காண்கின்றன. சிறகுகளை கலையாகவும் தத்துவமாகவும் ஆன்மீகமாகவும் சமைத்து வைத்திருக்கின்றன.’

தன் குடிகள் முன்பே கைதியாய் இழுத்து செல்லப்பட்டு புறத்திலும் அகத்திலும் புண்பட்ட துருபதன் மீண்டு வருவது காவியத்தில் உள் அமைந்த மற்றோர் காவியம். துர்வாசர் சொல்படி பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையில் தனது பாவங்களை கழுவி வர புறப்பட்டுச் செல்லும் துருபதன் அதை செய்ய முடியாமல் சென்று சேர்வது அதர்வ வேத ஞானிகளான யாஜர்களிடம். அவர்களின் துணை கொண்டு செய்த வேள்வியின் பயனாய் அவன் பெறுவது அழகிலும் ஆற்றலிலும் ஒப்பிலா மகவாய் பாரதவர்ஷத்தின் சக்கரவத்தினி அவள் என்று நிமித்தக் குரல்கள் ஒலித்த திரௌபதியை.

மறுபுறத்தில், மருகன் துரியன் முடிசூடும் வழி அடைக்கப்பட தன் காந்தார வழி தேடி செல்லும் சகுனி ஓநாய் ஞானம் பெற்று மீண்டும் அஸ்தினபுரி வந்து பகடையாட்டத்தை தொடர்கிறார் கணிகருடன். அந்த பயணத்தில் பாலையும் ஓநாயும் அவருக்கு சொல்கிறது அல்லது மீண்டும் நினைவூட்டுகிறது வாழ்க்கைப் பாடங்களை , தோல்வியில் துவண்டுவிடா துணிவைக் கொள்ளும் சூத்திரங்கள் பலவற்றை.

பாஞ்சாலத்தில் தனது தந்தைக்கு அரசியல் சூழ்மதியுரைக்கும் இளவரசியாய் உடன் நின்று ஆட்சிபுரிகிறாள் அகத்திலும் புறத்திலும் சமநிலை பேணும் கிருஷ்ணை(திரௌபதி). சகுனி, கணிகரின் வழிகாட்டுதல்கள் பின்நிற்க கௌரவர்களால் அரச மரியாதையுடன் நாடுகடத்தப்பட்டு , விதுரரின் மந்தணச் சொற்கள் மூலம் வாரணவதம் தப்பி இடும்பவனம் கண்டு மீள்பிறப்பு கொள்கிறார்கள் குந்தியும் மைந்தர்களும். இடும்பவனம்

தாயாய் மகனாய் இயற்கையுடன் ஒரு அழகிய வாழ்வையும் , இடும்பி கடோதகஜன் போன்ற இன்னுயிர்களையும் அங்கு அவர்கள் கண்டுகொண்டாலும் குந்தியின் முடிவேட்கை காடேகிய அவர்களை மீண்டும் நாடேக சொல்கிறது.

அந்தணர்களாய் அரைவேடமிட்டு பாஞ்சால நாட்டின் காம்பில்யத்தில் மணத்தன்னேற்பு நிகழ்வில் பாண்டவர்கள் உள்நுழைந்து,  நம்பிக்கையும் ஐயமும் ஒரு சேரக் கொண்டு, பார்த்தனின் நண்பனும் குந்தியின் மருகனும் மாற்று அரசு மற்றும் அரசியலை முன்வைக்கும் இளைய யாதவனனின் வியூகங்கள் மற்றும் சூர்ய புத்திரன் கர்ணனின் முயற்சிகள் பாடங்கள் சில கொடுக்க , பீமனின் சிரிக்க வைக்கும் சித்து விளையாட்டுகள் சில முடிச்சுகளை அவிழ்க்க .. அர்ஜுனன் கிந்தூரத்தை கைக்கொண்டு வில் இலக்கை மட்டுமே மனம் கொண்டு மாயக்கிளிகள்

ஐந்தையும் வீழ்த்தி மணம் கொள்கிறான் பாஞ்சாலியை.மணநிகழ்வில் குந்திக்கு அருகிருந்து அஸ்தினபுரியை அரச முறைப்படி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் விதுரர்.குந்தி, துர்வாசர், துருபதன் இவர்களின் வழி வரலாறு தன்னை நிகழ்த்திக் கொள்ள.. துர்வாசர் தலைமையில் சிகண்டியின் விதுரரின் முன்னிலையில் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாகிறாள் பாஞ்சாலி. அவள் தன்னுள் உள்ள அதிகார வேட்கையை முன் நிறுத்தி , காதலை , சராசரி பெண் நிலையை பின் நிறுத்தி இது பண்டைய பாஞ்சால மரபுதான் என சுய நியாயம் சொல்லிக்கொண்டாள் ! மண நிகழ்வில் காபாலிகர் மண்டையோடு நீட்டி கையேந்த தன் குழல் சூடிய.. தழலும் தானும் வெவ்வேறல்ல என்றிருக்கும் செங்காந்தள் மலர் எடுத்துக் கொடுத்தாள்அன்னையே வாழ்கஎன்ற வாழ்த்தொலி முழங்க.

அலைக்கழிப்பில் சிதறுண்டு நிலைபெயராமையில் தன்னை அமைத்துக் கொண்ட துருவனின் கதையில் தொடங்கி மானிடரின் அலகிலா அற்ப மாயைகளை முடிவிலா ஆற்றலுடன் விண்ணிருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கும் வகையிலேயே முடிவுறுகிறது பிரயாகை.

தமிழ் வாசகன் இந்த நாவலால் அடைவது என்ன?

மொழி மற்றும் கதைகளினூடாக நம்மை வரலாற்றுக் கதாப்பாத்திரங்களுடன் வாழ செய்து கீழ்க்கண்ட வாழ்க்கை தரிசனங்களை அளிக்கிறது .

* அரசக் குருதியோ அதிகாரக்குருதியோ தம்முள் ஓடினாலும் தனது அணுக்கச் சேவகர்கள் மற்றும் தோழிகளுடன் அவர்கள் கொள்ளும் நட்பு மற்றும் உரையாடல்கள் மூலம் ஞானத் திறப்புகள் அளித்து நமது அன்றாட செயல்பாடுகளை மறுசீராய்வுக்கு ஆட்படுத்தும். அவர்களுக்கு இடையே  மெல்லிய கோடு ஒன்றுண்டு ஆனாலும் அது அழகானது. சகுனிக்கு ஜடரை மற்றும் கிருதர், துருபதனுக்கு பத்ரர் , விதுரருக்கு கனகன் , பாஞ்சாலிக்கு மாயை, அணுக்கச் சேவகன் அல்ல.. ஆனாலும் பீமன் அர்ஜுனனை தேடி செல்லும்போது தாசியர் தெருவில்

அவன் சந்திக்கும் மனிதர் என பொன்முகங்கள் பல.

* பாரதம் பற்றிய ஒரு ஒட்டுமொத்த புரிதல்களை அளித்து , அதை நிறுவன மயமாக்கும் அல்லது நிறுவன மதமாக்கும் புனிதர்களின் செயல்களை கேள்விக்குள்ளாக்கி சிந்திக்க வைக்க இந்த வரிகள் போதும் ..

பாரதவர்ஷத்தின் மக்கள்திரள் கங்கை . ஆம், கங்கைதான். நூற்றுக்கணக்கான மலைகளில் இருந்து வழிந்தோடி ஒன்றாகிச்சேர்ந்த நதி அது. எக்கணமும் கரையுடைத்து மீண்டும் கிளைகளாகப்பிரியத் துடிப்பது. பல்லாயிரமாண்டு காலமாக பல்லாயிரம் தொல்குடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான பெருந்திரள் இது. இப்பெருந்திரளுக்குள் ஒவ்வொரு குலமும் தன் அடையாளத்துடன் தனித்திருக்கவும் செய்கிறது. பிறரை ஐயத்துடன் நோக்கிக்கொண்டிருக்கிறது

* மேன்மைகள் முரண்களின் மூலமே மேலெழுந்து வருகிறது என்பதை நமக்கு உணர்த்துவது இந்த செயல்கள்.

தன்னின் பிறப்பை இழிவு செய்த அல்லது அதற்கு துணை நின்ற துரோணருக்காக அதை நினைக்காமல் அவரையும் தனது ஆசிரியர் என்றே கொண்டு தனது நண்பன் துரியோதனனுக்காக துருபதனை வெல்ல கர்ணனும் செல்வது.

தனது இந்த நிலைக்கு காரணம் துரோணர் ஆனால் அவர் மகனையும் துருபதன் தன மகனாய் உணர்ந்து ஆசிர்வதிப்பது.

தனது இடைப்பட்ட வீழ்ச்சிக்கு காரணமாய் அமைந்த பாண்டவர்களை மருமகன்களாய் ஏற்கும் துருபதன். அது பெருந்தன்மையினால் மட்டுமே ஆன செயல் அல்ல அதன் பின் உள்ளுறைவது.. ஆழத்தில் கிடப்பது வஞ்சம் தான் என்றாலும்.

தம்பி மகன்களை கோபமும் அன்புமாய் எப்போதும் திருதராஷ்டிரர் அரவணைப்பது.

தாயை எதிர்த்து தனது பெரிய தந்தையையும் கல்லாய் நிறுவி இடும்ப வனத்தில் பீமன் திருமணத்தை தர்மன் நடத்துவது.

கௌரவர்களின் செயல்களை வெளிக்காட்டமல் எந்தையே என்று பெரிய தந்தைக்கு தர்மன் ஓலை அனுப்புவது.

* மரபார்ந்த அதிகார அரசுகளின் யுகம் முடிவுற்று அடக்கப்பட்டவர்களின் குரலாய் முன்னெழுந்து சாமானியர்களின் அரசுகள் அமைய கிருஷ்ணன் அடித்தளம் அமைத்த வரலாற்றை அழகுடன் நமக்களிக்கும். இன்றைய பாரத வர்ஷத்தை ஆளும் மரபு ..இல்லை இல்லை திரிபு மன்னர்களை திசை மாற்றுவது எங்ஙனம் என யோசிக்கவும் வைக்கும்.

* ஒற்றை இலக்கைக் கொண்டவன் எவர் முன்னும் தலைகுனியும் நிலையோ தாழ்ந்து செல்லும் நிலையோ தேவையல்ல என்கிறார்நான் இப்படித்தான்என துர்வாசரின் அழைப்பின் பேரில் நிமிர்வுடன் மண அவையில் வந்து நிற்கும் சிகண்டி  .

* சமநிலை பேணுவது எப்படி என்பதை திரௌபதியின் செயல்கள் மூலம் சொல்வதுதன்னை பிழையின்றி வைத்துக்கொள்ள அவள் எதுவும் செய்வதுமில்லை. எதைச்செய்கிறாளோ அதிலேயே முழுமையாக இருக்கிறாள்

பார்க்கவேண்டியதில்லை என்பது மட்டும் அல்ல, பார்க்கவேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இன்றுவரை அவர் எப்பொருளையும் பிழையாக வைத்து நான் அறிந்ததில்லை. அவர்களை மையமாகக் கொண்டு பொருள்வய உலகம் தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றும். அவர்களின் அகம் அந்தச் சமநிலையை இயல்பாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுடர் ஒளியை நிகழ்த்துவதுபோல!

* அரசு மற்றும் அரசன் எப்படி இருக்க வேண்டும் அதன் சரிகள் பிழைகள் எவை எவை என்பதற்கு கணிகர் உரைக்கும் பேருரைகள் . அதில் நாம் கொள்ளுவன கொள்ளலாம்.

* தாசித்தெருவில் பீமனின் இந்த உரையாடல் நமது பகட்டுகளை வீண் ஆடம்பரங்களை சாட்டையாலடிக்கிறது

 அவன் ஏதோ செடியோ மரமோ இல்லாத ஊரின் மனிதன் போலத் தெரிந்தான். பூக்களையும் கொடிகளையும் இலைகளையும் உலோகத்தில் செய்து உடலெங்கும் கட்டி வைத்திருந்தான். அவை சருகு நிறத்தில் இருந்தன. சேற்றில் விழுந்து சருகில் புரண்டு எழுந்தவன் போல ஒரு தோற்றம்மடையன்என்றான் அவன். பீமன் சிரித்துஇதையே நானும் நினைத்தேன்ஆகவேதான் நான் எந்த அணிகளையும் அணிவதில்லைஎன்றான்.

* துரோகத்திற்கு உடன் நின்றாலும்எரிமாளிகை அமைப்பதும் வஞ்சமேஎன உள் ஒன்று வைத்து புறமொன்று பேசாமல் உள்ளதை உள்ளபடி கர்ணன் துரியோதனனிடம் சொல்வது. இன்றைய அரசியல் கூழைக்கும்பிடுகள் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்

*வைதிகர்களோ யாதவர்களோ அரக்கர்களோ சிறுபான்மையினரின் குரலாய் குரலாய் ஒருவன் எழுந்துவருவதை அத்தனை அடக்கப் பட்ட பிரிவினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் . அதற்கு தர்மன் நகர் நீங்கும்போது உடன் வரும் யாதவ குடிகளாகட்டும் . அர்ஜுனன் வென்ற போது இந்த வரிகளை உணர்வாய்க் கொள்ளும் வைதிகர்களாகட்டும் அனைவருக்கும் பொருந்தும் (எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை கொண்ட அனைவரையும் வென்றுவிட்டான் என்பது. என்றும் அவர்களின் அகம் காத்திருந்த தொன்மம். அப்படி வெல்பவன் பெரும் வில்திறன் கொண்டவன், எளியோன் அல்ல என்பதை அவர்களின் அகம் அறிந்திருந்தாலும் அகமே அதை ஏற்க விழையவில்லை )

*பீமன் கடோதகஜனிடன் உணர்வதும் அதை மறைக்காவண்ணம் பேசுவதும் .’என்னைவிடவலிமைகொண்டவன் ஒருவன் இவ்வுலகில் உள்ளான் என்ற எண்ணத்தை என் அகத்தால் தாளமுடியவில்லை. அது உண்மை. அதன்மேல் எத்தனை சொற்களைக் கொட்டினாலும் அதுவே உண்மை.’

*’உள்ளத்தால்  அவர் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டார் ஆனால் என் மூத்தவர் பீமன் உடலால் என்னை ஏற்கவில்லைஎன்று கௌரவ இளவரசர் குண்டாசி விதுரரிடம் உரைக்கும் தருணத்தை வாசித்த அந்த நொடி உடலில் சிறு உதறல் ஒன்றுடன் உள்ளபடியே கண்ணீர் துளித்தது

*வேள்விச் சடங்கோ , மண நிகழ்வோ , எருமை மாடுரிக்கும் இடும்பர் விழவோ எதுவாக இருப்பினும் அதன் விவரணைகளும் நுண்ணிய சித்தரிப்புகளும் அந்த மக்களின் வாழ்வியல் முறைகளை அழகியலுடன் நமக்கு சொல்கிறது. அவை ஒவ்வொன்றிலும் நேர்த்தியே பிரதானம்.

* ஒரு வாசகன் கவிதையென , பற்றுக்கோலென பிடித்துக் கொள்ள கீழ்க்கண்ட வரிகள் பயனளிக்கும் என்பது என்னெண்ணம்.

விழைவதெல்லாம் இப்புவியில் பருப்பொருளாகவே காணப்பெற்றவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்!. அவர்களுக்கு சஞ்சலங்களே இல்லை.

பேசும்போது குரல் எழுகிறது. அது துணையாக ஒருவர் அருகே நின்றிருக்கும் உணர்வை அளிக்கிறது. தன்குரலைக் கேட்கவே மானுடர் பேசுகிறார்கள்.

மக்கள்அவர்களை ஆள்பவன் வெல்கிறான். ஆட்படுபவன் அதனால் அவமதிக்கப்பட்டு அழிகிறான்என்றார் சகுனி. “அவர்களை வெறுப்பவன் அவர்களை வதைக்கத்தொடங்குவான். அவர்களை வழிபடுபவன் அவர்களால் ஆட்டிப்படைக்கப்படுவான். அவர்களை புரிந்துகொள். அவர்களிடமிருந்து விலகியே இரு.

ஒருவர் தன்னுள் எழும் வீண் எண்ணங்களை வெல்வதே பாலையை எதிர்கொள்வதற்கான முதல்பயிற்சி

வெற்றிகரமாக அனைத்தும் நிகழவேண்டுமே என்ற கவலையில் வெற்றிகரமாக நிகழும் என்ற பொய்நம்பிக்கையை மனிதர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.

விலங்காக ஆவதற்கும் மனிதர்களுக்கு நூல்கள் தேவையாகின்றன.

வாசித்தபோது  நான் செய்த பிழை:

கால ஓட்டத்தில்  அவசரப்பட்டு சில அத்தியாயங்களை வாசித்துள்ளதாய் இப்போது உணர முடிகிறது .ஆகவே வாசிப்பின் போது நாம் சிப்பியா நீர்ப்பூச்சியா என கேட்டுக்கொள்வது அவசியம்.

வாசிக்க , எழுத விரும்பும் ஒரு வாசகனுக்கு நாவல் முழுக்க வரிக்கு வரி வைரங்களை பதித்து வைத்துள்ளது இந்நாவல். ‘சொல் ஒரு இடத்தை ஒளிகொள்ளச் செய்ய முடியும். பூக்களைப்போல‘.  இந்த வரிகளுக்கு மாற்றாக நான் என்ன சொல்லி விட முடியும். இருந்தும் பொன் வைத்த இடத்தைப் பார்த்து ஒரு பூவெடுத்து வைக்க முயன்றுள்ளேன்.

பேராசான் தங்களுக்கு நன்றி கலந்த பணிவான வணக்கம் , உடன் வாசிக்கும்வாசிப்பை நேசிப்போம்நண்பர்களுக்கு அன்பும் நன்றியும் .

கே.எம்.ஆர். விக்னேஸ்

 

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

 

 

இந்திரநீலம் வாசிப்பு- கடிதம்

முந்தைய கட்டுரைஒரு கனவும் ஒரு தொடர்வும்
அடுத்த கட்டுரைகாதலின் மூச்சு