ஆ.இரா.வேங்கடாசலபதி, சாகித்ய அக்காதமி விவாதம்

ஆ.இரா.வேங்கடாசலபதி – தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

.இரா.வேங்கடாசலபதியின் சாகித்ய அக்காதமி விருதுபெற்ற நூல் 1987இல் வெளியானது என்றும் அதன் மறுபதிப்பே 2022 ல் வெளியாகியது என்றும் அதற்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டது சாகித்ய அக்காதமி விதிகளின்படி முரண்பாடானது என்றும் ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? எம்.டி.வாசுதேவன் நாயரின் நிமிர்வு பற்றி எழுதியிருந்தீர்கள். வேங்கடாசலபதி விருது கிடைத்ததும் நேராக முதல்வரைச் சென்று பார்த்து ஆசி பெற்றுக்கொண்டதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?

கிருஷ்ணா மாதவ்

 

அன்புள்ள கிருஷ்ணா,

நான் இரண்டு நூல்களையும் வாசித்திருக்கிறேன். அவை வெளியானபோதே. .இரா.வேங்கடாசலபதியின் முதல்நூல் அவர் இளைஞராக இருக்கையில் வ..சி.பற்றிய மூல ஆவணங்களுக்குள் அவர் நுழைந்த தொடக்க காலகட்டத்தில் எழுதப்பட்டது. அதிலிருப்பது ஓர் அடிப்படைத்தேடல் மட்டுமே. அந்த நூலில் உள்ள தேடல் வளர்ந்து விரிவாக்கம் அடைந்ததே அவருடைய இரண்டாவது நூலான ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908′

எந்த ஆய்வும் அந்தரத்தில் தொடங்காது. ஆய்வாளரின் அகத்தில் அதற்கு ஒரு முன்தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வாளர்களைக் கவனித்தால் ஒன்று தெரியும்அவர்கள் வெவ்வேறு களங்களில் ஆய்வுகளைச் செய்வதில்லை. ஒரே ஒரு களத்திலேயே ஆழ்ந்து சென்றுகொண்டிருப்பார்கள். அதுதான் சாத்தியம். ஆகவே அவர்களின் எல்லா நூல்களும் ஒரே நூலின் தொடர்ச்சிகளாக, அல்லது தொடர்விரிவாக்கங்களாக தோன்றும். நம்மவர் பொதுவாக ஆய்வுகளையே வாசிப்பதில்லை, சாகித்ய அக்காதமி விருது பெற்றமையால் புரட்டிப்பார்க்கிறார்கள். ஆகவே இந்தவகையான பிழையான புரிதலை அடைகிறார்கள்.

சரி, ஒரு நூலை மறுபதிப்பு என்று சொல்லாமல் புதியநூல் என்று எப்படி வரையறை செய்யலாம்? அந்த புதிய நூலில் மேலும் புதிய வினாக்களும், புதிய கண்டடைதல்களும், அவற்றுக்கான புதிய ஆதாரங்களும் இருக்குமென்றால் அது புதிய ஆய்வுநூல்தான். அவ்வகையில் பார்த்தால் ஆ.இரா.வேங்கடாசலபதியின் முதல்நூல் நூறு பக்கங்கள் கொண்ட ஓர் எளிய ஆய்வுக்குறிப்புதான். அல்லது பின்னர் அவர் செய்யவிருக்கும் ஆய்வுக்கான முன்வரைவு என்று மட்டுமே அதைச் சொல்லமுடியும். 2022ல் வெளியான அவருடைய நூல் விரிவான ஆய்வுநூல். முதல்நூலில் இல்லாத விரிவான ஒரு சித்தரிப்பு இரண்டாம்நூலில் உள்ளது. ஆனால் அதன் ஆங்கில வடிவம் Swadeshi Steam இன்னும் சிறந்தது.

சலபதியின் தமிழ்நடை தமிழில் எழுதப்படும் சிறந்த உரைநடைகளில் ஒன்று. நான் முப்பதாண்டுகளாகவே இதைச் சொல்லி வருகிறேன். தனித்தமிழ் நடையை நவீனத்தன்மையுடன் கையாளத்தெரிந்த மிகச்சில எழுத்தாளர்களில் ஒருவர் ஆ.இராவேங்கடாசலபதி. மெல்லிய நகைச்சுவை, செறிவான சொற்றொடரமைப்பு, தேய்வழக்குகளின்மை ஆகியவையும் அறிஞர்களுக்குரிய ஒருவகையான கருத்துப்பூசல்தன்மையும் அவற்றை சுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டவை ஆக்குகின்றன. சலபதியின் ஆங்கில நடை வழக்கமான இந்திய அறிஞர்களுக்குரிய தேய்வழக்குகள் கொண்டதாக இருந்தது. ஆனால் Swadeshi Steam நூலின் ஆங்கில நடையில் அவர் ஒரு பெரிய பாய்ச்சலைச் செய்திருக்கிறார். ஒரு அபாரமான இலக்கியப்படைப்பை வாசிப்பதுபோல அந்நூலை நாம் வாசிக்கமுடியும். 

சில ஆய்வு நூல்களுக்கு அவற்றின் வரலாற்றுப்புலம் காரணமாகவே ஒரு காவியத்தன்மை அமைந்துவிடும். வி.ராமமூர்த்தி எழுதிய காந்திஜியின் கடைசி 200 நாட்கள் நூல் அத்தகைய ஒரு மகத்தான ஆக்கம். அதன் காவியநாயகன் காந்தி. படிப்படியான அவருடைய ஆன்மநெருக்கடியை, அதை வென்று அவர் எழுவதன் பரிணாமத்தைக் காட்டும் படைப்பு அது. அதைப்போன்ற ஒரு காவியத்தன்மை ஆ.இரா.வேங்கடாசலபதியின் இந்நூலிலும் உள்ளது. குறிப்பாக எனக்கு அதன் ஆங்கில வடிவம் ஒரு காவியமென்றே தோன்றிக்கொண்டிருந்தது. அதை வாசித்த அன்றே, இரவிலேயே, சலபதிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

அந்தக் காவியத்தன்மையை அதற்கு அளிப்பது அதன் காவியநாயகனாகிய வ..சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைதான். அவருடைய வீழ்ச்சி ஒரு காவிய அவலமாகவே உண்மையில் நிகழ்ந்தது. பெருங்காவியங்களில் ஓர் அபத்த அம்சம் உண்டு. அந்த அபத்தம் முற்றிலும் சம்பந்தமற்ற இரு எல்லைகள் ஒன்றையொன்று கண்டடைந்து திகைப்படைகையில் உருவாவது. வ.உ.சியின் கதையில் மகத்தான இலட்சியவாதம் வரலாற்றின் அன்றாடத்தன்மையை சந்தித்து பிரமித்துச் செயலிழந்து நிற்கிறது.

ஓர் இலட்சியம் மிகமிகத் தீவிரமாக இருக்கையில் அது எல்லா நடைமுறை யதார்த்தங்களையும் மீறிச்செல்கிறது. இயல்பாக அபத்தத்தன்மையை அடைந்துவிடுகிறது. சுதேசி கப்பல் கம்பெனி என்ற வ..சியின் கனவு அத்தகையது. வணிகத்தை அடிப்படையாகக்கொண்ட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, பிரிட்டிஷ் அரசின் குடிமகனாக இருந்துகொண்டு, ஒரு போட்டி வணிகத்தை தொடங்குவதென்பது இன்று எண்ணினால் வேடிக்கையாக இருக்கிறது. சட்டபூர்வமாக பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிடுவதுதான் அது. அது ஒருவகை சுதந்திரப்போராட்டம். ஆகவேதான் அதற்கு அத்தனை இலட்சியவாதிகளும் ஆதரித்தனர்.

ஒரு கோணத்தில் வ..சிக்கு பிரிட்டிஷார் மீதிருந்த நம்பிக்கையையே அது காட்டுகிறது. அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள், நேர்மையானவர்கள் என்னும் நம்பிக்கையே அந்த கப்பல் நிறுவனத்தை தொடங்கச் செய்திருக்கிறது. மேலோட்டமான நேர்மை, சட்டபூர்வத்தன்மை என்னும் பாவனைக்கு அடியில் பிரிட்டிஷார் வெறும் சுரண்டல்காரர்களே என்னும் அப்பட்டமே வ..சியின் மண்டையில் அறைந்திருக்கிறது. அந்த நம்பிக்கையின் உடைவே அவர் அடைந்த வீழ்ச்சி. 

அடுத்தஇரும்பாலானயதார்த்தம் என்பது மக்களின் மனநிலை. ..சியை கிளர்ச்சிக்காலத்தில் தலைவர் என கொண்டாடிய எளிய மக்கள் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையைக் கண்டதும் அப்படியே அஞ்சிக் கைவிட்டனர். அதன்பின் நெல்லையில் கிட்டத்தட்ட சுதந்திரப்போராட்டம் என்பதே இல்லை என ஆகிவிட்டது. ..சி சிறையில் இருந்த காலகட்டத்தில் மக்களின் கவனம் திசைதிரும்பி அவர் அப்படியே மறக்கப்பட்டார். 

இந்த யதார்த்தத்தை இன்று தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்கள் என்றுமே அப்படித்தானே என்று கொஞ்சம் யோசிக்கும் எவரும் சொல்லிவிடமுடியும். சுதந்திரப்போராட்ட தியாகிகள், இடதுசாரி இயக்க முன்னோடிகள் அனைவருமே சென்றமைந்த வெறுமையின் சிம்மாசனத்தை அனைவருமே நேரில் கண்டிருப்போம்ன். ஆனால் இந்திய தேசிய இலட்சியவாதம் தோன்றிக்கொண்டிருந்த அக்காலகட்டத்தில் அது ஒரு புதிய தெய்வமாக இருந்தது. அதை ஐயப்படுவதே பிழை என்னும் சூழல் இருந்தது. அதன் முன் தங்கள் தலையை வெட்டி வைக்க பல்லாயிரம் இளைஞர்கள் துணிந்திருந்தனர். அந்த தெய்வம் வ..சியை கைவிட்டது. வழக்கம்போல, உலகமெங்கும் நிகழ்வதுபோல, எல்லா இலட்சியக்கிறுக்கர்களுக்கும் அமைவதுபோல, வரலாற்றின் மறதி அவரைச் சூழ்ந்தது. தனிமையும் வெறுமையும். வரலாற்றின் அந்த தவிர்க்கமுடியாத தன்மையே அவருடைய வாழ்க்கையை காவிய அவலம் கொண்டதாக ஆக்குகிறது.

.இரா.வேங்கடாசலபதி ஓர் ஆய்வை அந்நூலில் முன்வைக்கவில்லை. அவர் உருவாக்கியிருப்பது ஓர் இலக்கியப்பிரதி. ஒரு text. வெறும் தரவுகளும் வாதங்களும் அல்ல அந்நூல். அது நிகழ்வுகளை கோப்பதன் வழியாக, ஒத்திசைவான வரலாற்றுப்பின்புலத்தை அளிப்பதன் வழியாக ஒரு பெரிய சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறது. அதை எளிய ஆய்வாளன் செய்யமுடியாது. வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுக்கு கூடுதல் தரவுகளை அளிக்கிறார்கள். அவர்களுடையது ஆய்வு விரிவாக்கம் (Supplementary research) என்று சொல்லத்தக்கது. வரலாற்றெழுத்தாளன் ஒரு வரலாற்றுத்தன்மையை (Historicity) உருவாக்குகிறான். அதையே நாம் முதன்மை ஆய்வு (Primary research) என்கிறோம்.

அதை உருவாக்குவதற்கு ஆய்வுக்களமான வாழ்க்கைக்குள், அந்த வரலாற்றுக்குள் ஊடுருவி அங்கே வாழவேண்டியிருக்கிறது. அதற்குத்தான் நீடித்த ஆய்வுக்காலம் தேவையாகிறது. பல சிறு சிறு நூல்கள் வழியாகவே பொதுவாக ஆய்வாளார்கள் அங்கே வந்து சேர்கிறார்கள். சலபதி எழுதிய பல நூல்கள் இந்த ஒரே ஆய்வுக்களத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதைக் காணலாம். (ஆஷ் அடிச்சுவட்டில், பின்னி ஆலை வேலைநிறுத்தம், வ.உ.சியும் காந்தியும்) ஒர் இலக்கிய ஆசிரியனுக்கு நிகரான அகவாழ்க்கைதான் அது.

சாகித்ய அக்காதமி முன்னரும் ஆய்வுநூல்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அக்காதமி விருது மிகத்தவறான நபர்களுக்கு அளிக்கப்பட்ட வரலாறு அதன் தொடக்ககாலம் முதல் உண்டு. ராஜாஜி கோஷ்டி ஒரு காலகட்டத்தில் அக்காதமி விருதுகளை கைப்பற்றிக்கொண்டிருந்தது. பின்னர் அகிலன் தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டி. அதன்பின் முற்போக்கு அணி விருதுகளை ஆக்ரமித்தது. எப்போதும் அது அப்படித்தான். முதல் அணியில் ரா.பி.சேதுப்பிள்ளை  (தமிழகம் ஊரும்பேரும்) இரண்டாம் அணியில் எழில்முதல்வன் (புதிய உரைநடை),  மூன்றாம் அணியில் ரகுநாதன் (பாரதி காலமும் கருத்தும்) போன்ற நூல்கள் மிகச்சாதாரணமானவை. .இரா.வேங்கடாசலபதியின் நூல் ஒரு பெரும் இலக்கிய ஆக்கம்.

சலபதியை முன்னுதாரணமாகக்காட்டி நம்முடைய பேராசிரியர்கள் விருதுகளுக்காக முண்டியடிக்க வாய்ப்புகள் மிகுதி. குறிப்பாக சாகித்ய அக்காதமி விருதுடன் தமிழக அரசு அளிக்கும் வீடு உள்ளது, அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி என்னும்போது ஐம்பது லட்சம் வரை நம்மவர் கையிலிருந்தும் செலவழிக்கத் தயங்கமாட்டார்கள். தமிழ்ப்பேராசிரியர்கள் விருதுகளுக்காக எல்லா வகையான ஊழல்களையும் தயக்கமில்லாமல் செய்பவர்கள், தமிழகத்தின் மிக ஊழல் மலிந்த துறை கல்வித்துறையே. ஆகவே சாகித்ய அக்காதமி விருதுகள் மொத்தமாகவேகடத்தப்படுவதற்கானவாய்ப்புகள் மிகுதி என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதன்பொருட்டு ஆ.இரா.வேங்கடாசலபதியின் இந்த சாதனைநூல் விருதுபெறுவதை மறுக்கவேண்டியதில்லை.

.இரா.வேங்கடாசலபதி நானறிந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக உறுதியான திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர். அதில் அவர் எந்த ரகசியமும் பேணியவர் அல்ல. ஆனால் அவருடைய ஆய்வுகளில் அவருடைய கட்சிச்சார்பு வெளிப்பட்டதில்லை. ஆய்வாளனுக்குரிய நடுநிலைமையும் புறவயமான தரவுகளைச் சார்ந்தே பேசும் நேர்மையும் அவரிடம் எப்போதும் உண்டு.  பழ.அதியமான் போல கட்சிப் பிரச்சாரத்துக்காக அரையுண்மைகளை கோத்து போலி ஆய்வுகளை அவர் உருவாக்கியதில்லை. அதிகாரத்தின் துணையுடன் தன் நூலை கொண்டு செல்லவுமில்லை. ஆகவேதான் சலபதியின் நூல்கள் கட்சி ஆதரவாளர்களால் தூக்கிப்பிடிக்கப்பட்டதில்லை. திராவிட இயக்க ஆதரவாளர் என்னும் நிலையில் அவர் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றது இயல்பானதுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைகோயிலொழுகு
அடுத்த கட்டுரைஇரா.முருகன் ஆவணப்படம்