படங்கள் மோகன் தனிஷ்க்
அன்புள்ள ஜெ…
வருடத்தில் இரண்டு நாட்கள். அதற்கென வருடம் முழுவதும் காத்திருப்பு. நாட்கள் வந்தே விட்டன. எங்கும் எதிலும் இலக்கியத் தலைகள். அவை தளைகளற்றவை. தமிழிலக்கிய உலகில் காணவியலாத பெருங்கூட்டம், இலக்கியத் திறனாளர்களை அணுகி அறியும் களம், பெறுவதிலும் அளிப்பதிலும் காணப்படும் ஒழுங்கு, பிறிதொன்றின்றி திறன் மட்டுமே அளவுக்கோல் என்ற ஒழுக்கு, உணவும் இருப்பிடமும் நல் இலக்கியமும் ஒருங்கே நிகழும் சாத்தியப்பாடு என அனைத்தையும் திரள்வென கொண்டதே விஷ்ணுபுரம் விருதுவிழா மற்றும் அமர்வுகள். இலக்கியத்திலிருந்து இலக்கியத்தை அள்ளி எடுத்தும் இலக்கியமே மிஞ்சுகிறது, குறைவின்றி – எஞ்சும் காலத்தை நோக்கி.
அனைத்திற்கும் நன்றி.
கலைச்செல்வி.
வணக்கம் ஜெயமோகன் ,
.
விஷ்ணுபுரம் விழா மிக நிறைவாக நடைப்பெற்றதை அறிந்து மகிழ்கிறேன்..அன்றைய தினங்கள் முழுவதும் வீட்டில் நான் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாலும் எனது நினைவு முழுவதும் விழாவையே எண்ணிக்கொண்டிருந்தது.அடுத்த முறை எப்படியாவது எனது குடும்பசூழலை சாக்குச்சொல்லாமல் விழாவில் கலந்துக்கொள்ள இயற்கை எனக்கு துணைபுரியவேண்டும்..அனைத்து புகைப்படங்களையும் அத்தனை ஆர்வத்தோடு பார்த்து ரசித்தேன்.. மிகுந்த மகிழ்ச்சி.
எனக்கு தெரிந்தவரை இலக்கியத்திற்காக இங்கு நடக்கும் மிகப்பெரிய முக்கியமான விழா இது..உங்கள் வாசகியாக இதில் எனக்கு மிகவும் பெருமையும் மகிழ்வும்.. நீங்கள் பேசிய காணொளிக்கண்டேன்.. மிகுந்த உற்சாகம் கொண்டேன்.எவ்வளவு பெரிய கனவுகள் உங்களுடையது.. எவ்வளவு மேம்பட்டது.. மிகவும் சிறப்பு.அவைகள் நிறைவேற இறை துணைப்புரியட்டும்.முருகன் அய்யாவைப்பற்றி அவர்கள் எழுதிய நகைச்சுவைகள் பற்றி ரசித்து பேசியது மனதை தொட்டது..விழாவில் நான் பங்கேற்றுக்கொண்ட மனநிம்மதி தந்தது .. மகிழ்ச்சி..என்றும் உங்கள் வாசகி..
தேவி லிங்கம்
வேதாரண்யம்.