(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன், துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ என்ற நூலை முன்வைத்து ஒரு உரையாற்றினார்.
அதன் பின் அந்நூலைச் சார்ந்து மாணவ்ர்கள் கேட்ட வினாக்களுக்கு ஜெயமோகன் விடையளித்தார். மைய அமைப்பாளர் பர்னாட் சந்திரா நன்றி கூறினார். )
நண்பர்களே
சில வருடங்களுக்கு முன்னர் ஈராக் அதிபர் சதாம் உசேன் குவைத்தை ஆக்ரமித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்போது குவைத்துக்கு உதவிசெய்வதற்காக அமெரிக்க படைகள்ச் அவூதி அரேபியா நாட்டில் வந்திறங்கின. அமெரிக்க வீரர்களுக்கு பிடித்தமான உணவாகிய பன்றிகள் கப்பல் கப்பலாக கொண்டுவந்து இறக்கப்பட்டன. புனிதமான இஸ்லாமிய மண்ணில் எப்படி பன்றிகள் வரலாம் என மதகுருக்கள் கொதித்து எழுந்தார்கள். அப்போதைய அமெரிக்க தளபதி ஷ்வார்ஸ்கா·ப் வேடிக்கையாக ‘அவை பன்றிகளல்ல நச்சுப்புகை முகமூடிகளிட்ட ஆடுகள் தான் ”என்று சொன்னதாகக் கேள்வி.
இருவகை மனநிலைகளை இதுகாட்டுகின்றது. அராபிய இஸ்லாமியர்களுக்கு பன்றி இழிவான அருவருப்பான மிருகம். அதை தீண்டுவதும் பாவம். அதைப்பற்றி நினைப்பதே ஹராம். கேரளத்தில் சென்ற காலங்களில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய தொடக்கப்பள்ளிகளில் பாடநூல்களில் பன்றி என்ற சொல்லே இருக்காது. இந்த மனநிலை கிறிஸ்தவ அமெரிகக்ர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதே அம்ரிக்கர்கள் 13 என்ற எண்ணைக்கண்டால் பயந்து சாவார்கள்.
நாம் இருவரையும் பார்த்து சிரிக்கிறோம்.ஆனால் நமக்கு பசு புனிதமானது. பசு அன்னையைப்போல. அன்னைக்குமேல். 1930களில் இருதேசம் என்ற அக்ருத்தை முன்வைத்த முகமது அலி ஜின்னா சொன்னார், ”நாங்கள் பசுவை தின்பவர்கள், அவர்கள் பசுவை கும்பிடுபவரகள், எப்படி நாங்கள் ஒருதேசமாக இருக்க இயலும்?” என. தேசமே பசு தின்பதன் அடிபப்டையில் பிளவுபடுவதை எண்ணி ஆங்கிலேயர் சிரித்திருப்பார்கள்.
இந்நம்பிக்கைகள் நம்மை இனங்களாக குழுக்களாக பிரிக்கின்றன. ஒரு முறை நான் டெல்லியில் ரயில்வே தலைமையகத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு மாபெரும் கூடம். அங்கே ஏராளமானவர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஒலியே இல்லை. காரணம் அவர்கள் சிறிசிறு கண்ணாடி சதுர அறைகளுக்குள்தான் இருந்தார்கள் என ஒருசில கணங்கள் கழித்துத்தான் புரிந்தது. இந்திய சமூகத்தில் நாம் அப்படித்தான் வாழ்கிறோம்.
சிறுவயதில் இந்துவாகிய நான் இஸ்லாமியர் தூய்மையற்றவர்கள் என்று சொல்லி வளர்க்கப்பட்டேன். நெருக்கமாக இஸ்லாமியரைக் கண்டதில்லை. எங்களூரில் இஸ்லாமியரே இல்லை. 1985ல் நான் கேரளத்தில் இஸ்லாமியர் நிறைந்த காஸர்கோட்டில் இருந்த நாட்களில் அப்துல் ரசாக் [ரசாக் குற்றிக்ககம் என்ற பேரில் கதைகள் எழுதுவார்] என்ற நண்பருடன் நெருக்கமாக இருந்தேன். அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தபோது அவரது முதிர்ந்த பாட்டி என்னிடம் ”நீ காபிராக இருந்தாலும் நல்ல சுத்தமாக இருக்கிறாய்”என்று பாராட்டினார். கண்ணாடிச்சுவருக்கு அப்பாலும் அதே மனச்சித்திரம்தான்.
இந்த மனத்தடைகள் நம்பிக்கைகள் எப்படி உருவாகின்றன? மொத்தமாக இவற்றை மூடநம்பிக்கைகள் என்று சொல்லிப் புறந்தள்ள திராவிட இயக்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது. இந்த மூடநம்பிக்கைகளை ஒரு சாரார் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி மூடநம்பிக்கைகளை உருவாக்கிவிட இயலுமா என்ன? அவை காலம் காலமாக நிலை நிற்குமா?
இக்கேள்வியை மேலைநாட்டு மானுடவியல் நோக்கில் விரிவாக ஆராயும் நூல்தான் மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் பற்றிய கலாச்சாரப் புதிர்கள்’. துக்காராம் கோபால்ராவ் இரு பகுதிகளாக மொழிபெயர்த்துள்ள இந்நூலை எனி இண்டியன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மிக முக்கியமான நூல் இது. அதேசமயம் ஆய்வுநூலுக்குரிய சம்பிரதாய நடை இல்லாமல் துப்பறியும் நாவல்போல படிக்கக் கூடியதாக உள்ளது.
இஸ்லாமியர் ஏன் பன்றிகளை சாப்பிடுவதில்லை? அந்தத் தடை இஸ்லாம் உருவாவதற்கு முன்னரே அமுலில் இருந்தது. காரணங்கள் பல. பன்றிகள் மனிதர் சாப்பிடக்கூடிய உணவையே உண்பவை. பலமடங்கு உணவை கொடுத்து சிறிய அளவு பன்றி இறைச்சியை உருவாக்குவது பாலைவனப் பொருளியலுக்கு பொருந்தாது. மேலும் குளிர்ச்சியான சூழலில் வெகுதூரம் நடந்து சென்று சாணியிட்டு உடலையும் சூழலையும் தூய்மையாக வைத்திருக்கும் பன்றிகள் வெப்பச்சூழலில் தங்கள் மலத்திலேயே புரண்டு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
இந்துக்களின் பசு வழிபாடும் பொருளியல் சார்ந்ததுதான். பஞ்சங்கள் ஆட்டிப்படைத்த இந்தியாவில் பசுக்களை கொன்று தின்னும் வழக்கம் இருந்தால் ஒரு பஞ்சத்திற்குப்பின்னர் பசுக்களே இல்லாமலாகி அடுத்த பஞ்சம் உருவாகியிருக்கும். மேலும் சோளம் கம்பு போன்ற பயிர்களுக்கு மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்தும் இந்தியச் சூழலில் உணவுக்காக கன்றுவளர்ப்பதும் லாபகரமானதல்ல. கழிவுகளை உண்டு குறைந்த அளவுக்குப் பால்கறக்கும் பசுக்கள் இந்தியப்பொருளியலுக்கு மிக இன்றியமையாதவை
இவ்வாறு மார்வின் ஹாரீஸின் ஆய்வுகள் விரிகின்றன. நான் சுருக்கிச் சொல்லியிருக்கிறேன். மிகவிரிவாக படிப்படியாக ஆதாரபூர்வமான தகவல்களுடன் விரிந்துசெல்லும் ஆய்வுமுறை அவருடையது. இதை அவர் ‘கலாச்சார மானுடவியல்’ என்கிறார்.
இந்நூலில் மார்வின் ஹாரீஸ் சூனியக்காரிகளைப்பற்றிச் சொல்லும் இடம் மிக முக்கியமானது. கிறித்தவ கத்தோலிக்க அமைப்பு 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் சாத்தானுக்குச் சேவை புரிந்த சூனியக்காரிகளை ‘கண்டுபிடித்து’ சித்திரவதை செய்து கொன்றது. இது புனித மதக்கடமையாகச் செய்யபப்ட்டது. ஒரு சூனியக்காரியை சித்திரவதை செய்து நான்குபேரை அடையாளம் காட்டும்படிச்சொல்வார்கள். இவ்வாறு தொடர்ந்து படுகொலை நடைபெற்றது.
இதன் காரணம் என்ன என விரிவாக ஆராயும் மார்வின் ஹாரீஸ் மெல்ல ஒரு முடிவை நெருங்குகிறார். அன்றைய மத,.ஆட்சி, சமூக அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருந்த பிரபுவர்க்கம் அன்றைய சக சீர்கேடுகளுக்கும் வறுமைக்கும் காரணம் இச்சூனியக்காரிகளே என்று அடையாளம்காட்டி சமூகத்தின் கோபத்தை திசை திருப்பியது.
இதைத்தான் யூத வெறுப்பை உருவாக்கிய ஹிட்லரும்செய்தார். நமது இன்றைய அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். ஓயாது அவர்கள் எதிரிகளை ‘சூனியக்காரிகளை’ நம்மிடம் அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
நம் நாட்டில் இன்னும் முழு ஜனநாயகம் இல்லை. ஆனால் ஜனநாயகம் இங்கே அழிவதுமில்லை. ஏன்? நமது சாமானியர்கள் எப்போதும் பிறரது கருத்தை மதிப்பவர்கள் ‘அவனுக்குத் தோணினத அவன் சொல்லட்டுமே ” என்பார்கள். நம் மக்கள் மனதில் உள்ள இந்த சுமுகத்தன்மையே இங்கே ஜனநாயகமாக திகழ்கிறது.
அதேசமயம் நம் மக்கள் இன்னும் கூட்டமாகவே சிந்திக்கிறார்கள். கூட்டமனநிலையையே எங்கும் காட்டுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு தடையானது. நீ யார் என்று கேட்டால் ‘நான் தேவர் நான் நாடார் நான் முஸ்லீம் நான் இந்து ” என்றே பதில் சொல்வார்கள். சாதிமதம் உருவாக்கிய பதில்களையே எங்கும் முன்வைப்பார்கள்
உணர்ச்சிபூர்வமான சிந்தனைகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை. எங்கும் எதிலும் தனிமனித பிரக்ஞை விழிப்புடன் தர்க்கபூர்வமாக செயல்படுவதே இன்று ஜனநாயகத்தை முழுமைசெய்வதற்கு அவசியம். அத்தகைய மனநிலையை உருவாக்கக் கூடிய முக்கியமான நூல் இது.
ஒரு சமூகத்தை மொத்தமாக குடிமைச் சமூகம் [சிவில் சொசைட்டி] என வகுக்கிறார் மார்க்ஸிய அறிஞரான அண்டோனியோ கிராம்ஷி. அதற்குள் சமூகத்தை பற்றிய பிரக்ஞயோடு அதை நோக்கிச் செயல்படக்கூடிய சிறுபான்மையினரான உயிர்நிலை அறிவாளர் [ஆர்கானிக் இன்டலக்சுவல்ஸ்] உள்ளனர். இவர்கள் எழுத்தாளர் கலைஞர் இதழாளர் நடிகர் ஆசிரியர் அரசியலாளர் சமூகப்பணியாளர் என பலவை. இவர்கள் சமூகத்தின் ஏற்கனவே நிலைபெற்றுள்ள கருத்தை முன்னிறுத்தும் மரபு அறிவாளர் [டிரெடிஷனல் இண்டெலக்சுவல்ஸ்] களிடம் ஓயாது மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பெறும் வெற்றிமூலமே சமூகம் முன்னகர்கிறது
இந்த உயிர்நிலை அறிவாளரின் முதல்தகுதியே தாங்கள் செயல்படும் சமூகத்தை ஆய்வுசெய்து தர்க்கபூர்வமாக புரிந்துகொள்வதுதான். அதற்குரிய கருவிகளை அளிப்பது இந்நூல். சமீபகாலத்தில் தமிழில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று இது. இதன் பாணியில் நம்மைச்சூழந்துள்ள பல சிக்கல்களை, உதாரணமாக வரதட்சிணை, தீண்டாமை போன்றவற்றை, விரிவாக நாமே ஆய்வுசெய்வது நம்மை சிந்தனையாளர்கள் ஆக்கும். இங்கே கூடியுள்ளவர்களில் பலர் நாளைய உயிர்நிலை அறிவாளர் ஆவர் என்பதனால் இது முக்கியமானதாகும். இதையொட்டி நம் விவாதத்தை துவக்குவோம்.[ மறுபிரசுரம் ]