2024 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் வெள்ளிமலை வகுப்புகளுக்கு வாருங்கள் என்ற உங்கள் வார்த்தைகளுடன் ஆரம்பித்த இந்த வருடம்.
நவீன மருத்துவம் ,விபாசனா தியான வகுப்பு, இந்திய தத்துவம் ,மேலை தத்துவம் இத்தனை வகுப்புகளோடு தொடர்ந்தேன். குறிப்பாக இந்திய தத்துவம்,வகுப்புக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் கற்றலின் இன்பமே. ஆசிரியருடன் அருகிருந்து கற்ற அனுபவம். குறிப்பாக அனைத்து செயல்களிலும் தங்களிடம் இருக்கும் நேர்த்தி, நேரம் தவறாமை இவற்றை இயன்ற அளவு நானும் கடைப்பிடிக்கிறேன் .
அடுத்து தங்களின் சென்னை வருகையின் போதெல்லாம் உங்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது ஓர் உந்து சக்தியாகவே எனக்கு அமைந்தது.
வகுப்புகள் மூலமாக கிடைத்த நட்புச் சுற்றம் ,சிறுகதை வாசிப்பு குழுவில் இணைந்தது என் வாசிப்பின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
வகுப்பிற்கு வந்த நண்பர்கள் இணைந்து வெண்முரசு கூட்டுவாசிப்பு குழுவை தொடங்கி இப்போது நீலம் நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறோம். குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குடும்ப உறவுகள் அளவிற்கு நெருங்கினாலும் கூடுமானவரை குடும்ப கதை தவிர்த்து இலக்கியம் மட்டும் பேசுவது என்று ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியாகவே வகுப்பில் இணைந்து குழுவாக கூடி விஷ்ணுபுரம் விருது விழாவிற்கும் இணைந்தே வந்தோம் சென்னையிலிருந்து. ஆடம்பரமான அறை, அட்டகாசமான உணவு விருந்து என்றுதான் சொல்ல வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக வாசிப்பு மட்டுமேயான ஒரு பெருந்திரள். அதில் நானும் ஒருத்தியாய்.
பள்ளி ஆண்டு விழாக்களில் ஒப்பனை அறை திரையை விலக்கிப் பார்த்தால் உள்ளே சிவன் முருகன் அம்மன் பிள்ளையார் விஷ்ணு காந்தி நேரு சுபாஷ் சந்திர போஸ் இப்படியாக ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் சிரிக்கும் அசாதாரணமானவர்கள் சாமானியர்களுக்கு இடையே இருப்பதை கண்கொள்ளாமல் பூரிப்புடன் பார்ப்பேன்.
இப்படியாகவே இருந்தது இத்தனை எழுத்தாளுமைகள், தீவிர வாசகர்கள் இவர்களுக்கு மத்தியில் இந்த இரண்டு நாட்கள் .நீங்கள் கூறுவது போலவே அன்றாடத்திலிருந்து மேலதிகமாய் எதையாவது செய்வதில் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரஸ்யம் . சுவாரசியமான இந்த வருடத்தை அளித்தமைக்காக ஆசிரியருக்கு நன்றி.
நிர்மலா
குன்றத்தூர்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. நான் கோவையில் இருக்கிறேன். ஆனால் இதுவரை இந்த விழாவுக்கு வந்ததே இல்லை. பல மனத்தடைகள். அவையெல்லாம் கோவையிலுள்ள இலக்கியவாதிகள் உருவாக்கியவை. ஆண்டு முழுக்க இந்த விழாவைப்பற்றி எதிர்மறையாகவே பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவை இங்கே பெரும்பாலானவர்களின் மனநிலையை பாதிக்கின்றன. அவர்கள் எவருமே விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்குச் சென்றவர்கள் அல்ல. அரசியலும் தனிப்பட்ட காழ்ப்புகளும்தான் அவர்களின் மனநிலையை தீர்மானிக்கின்றன.
நான் வேறொரு நண்பரின் அழைப்பால் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வந்தேன். அங்கே நிகழ்ந்த சுதந்திரமான விவாதங்கள் எனக்கு பெரிய திறப்புகளை அளித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசினார்கள். தமிழ்ப்பிரபா பேசிய தலித் அரசியலும், கீரனூர் ஜாகீர்ராஜா பேசிய இடதுசாரி அரசியலும், கயல் பேசிய பெண்ணிய அரசியலும் எல்லாம் ஒரே மேடையில் நிகழ்வது ஓர் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எங்குமே சில்லறை விவாதங்கள் இல்லாமல் காத்திரமான கருத்துப்பரிமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்தன.
நான் ஆச்சரியப்பட்டது அங்கிருந்த இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்துத்தான். 20 வயதுக்கு குறைவானவர்களே ஏராளமானவர்கள் இருந்தனர். அவர்களில் பலர் நன்கு வாசிப்பு கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆச்சரியமாக இருந்தது. இத்தனை இளைஞர்கள் வாசிப்பதும் இவ்வளவு நூல்களை வாங்குவதும் ஓர் அற்புதம். கோவையின் இலக்கிய நிகழ்வுகளுக்கு இது ஒரு மகுடம். கோவையின் முகம் என்று இந்த விழாவைத்தான் சொல்லவேண்டும். இந்தியாவில் எங்குமிருந்து அறிஞர்கள் கோவைக்கு வருகிறார்கள். ஆனால் ஒப்புநோக்க கோவையின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். காரணம் மனம்குறுகியவர்கள் உருவாக்கும் காழ்ப்புதான் என்று தோன்றுகிறது.
அத்தனை இலக்கியவாசகர்கள் பேசிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். இலக்கியவாதிகளைச் சூழ்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டார்கள். கேள்விகள் கேட்டார்கள். நான் கொஞ்சம் பின் தங்கியவனாக உணர்ந்தேன். இலக்கியம் என்றால் எளிமையான கட்சியரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு அகக்கொண்டாட்டம் என்று தெரிந்துகொண்டேன்.
சிவக்குமார் சு