விழா 2024, சுடரிலிருந்து சுடர்.

விஷ்ணுபுரம் விருதுவிழா இம்முறை எனக்கு ஒருநாள் முன்னராகவே தொடங்கி வழக்கம்போல் ஒரு நாள் கழித்தும் நீண்டது. நானும் அருண்மொழியும் சைதன்யாவும் நண்பர் ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் கிருபாலட்சுமியும் அவர்களின் குழந்தை மானசாவுடன் 19 அன்று மாலை கோவை எக்ஸ்பிரஸில் கிளம்பி 20 காலை கோயம்புத்தூர் சென்று இறங்கினோம்.

காலை எட்டுமணிக்கு ஃபார்ச்சூன் சூட்ஸில் அறைக்குள் நுழைந்தோம். கோவை வரும்போதெல்லாம் அந்த விடுதிதான். ராஜ்ஸ்தான் பவனுக்கு அண்மையிலுள்ளது. சென்ற பிப்ரவரியில் அஜிதனின் திருமணப்பேச்சுவார்த்தைகளும் பின் திருமணமும் எல்லாம் அங்கேதான். அதுவே ஒரு மனநிலையை உருவாக்கியது

ஒன்பதரை மணிக்கு தில்லை செந்தில்பிரபு புதியதாகத் தொடங்கியிருக்கும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் புதிய மையம் திறப்புவிழா. நண்பர்கள் அரங்கசாமி உட்பட பலர் அதன்பொருட்டே வந்திருந்தார்கள்.

தில்லை செந்தில்பிரபு நீண்டகாலமாக தியானப்பயிற்சியாளராக இருந்தவர். அதற்கு முன் அவர் ஒரு தொழில்நுட்பநிபுணர். இப்போது மீண்டும் தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார். அவரை மீண்டும் தியானப்பயிற்சியாளராக ஆகவேண்டும் என்று நான் வற்புறுத்தி முழுமையறிவு அமைப்பில் பயிற்சிகள் அளிக்கச் செய்தேன். அது அவருடைய இரண்டாவது தொடக்கம்.

மந்திரமூர்த்தி அழகு மற்றும் வாசகசாலை கார்த்திகேயனை மு.இளங்கோவன் கௌரவிக்கிறார்

எனக்கு அவர் அளிக்கும் பயிற்சிகள் மீது மட்டுமல்லாமல் அவருடைய ஆளுமைமேலும் நம்பிக்கை உண்டு. யோக- தியான பயிற்சிகள் உண்மையில் பயிற்சிகள் மட்டுமல்ல, அந்த ஆசிரியர் பயிற்சிபெறுபவரின் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் திகழவேண்டும். குரு.சௌந்தர், அமலன் ஸ்டேன்லி ஆகியோருக்கும் அத்தகுதியையே முதன்மையாகக் கருதுகிறேன்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக தில்லை செந்தில் பிரபு  நடத்தும் தியானப்பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. பலநூறுபேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை அவை. குறிப்பாக இந்நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலான கவனக்குவிப்புச் சிக்கல்கள், துயில்சிக்கல்கள் போன்றவற்றுக்கான தீர்வாக அமைந்துள்ளன அவை.

மந்திரமூர்த்தி அழகு, வாசகசாலை கார்த்திகேயன் அமர்வு. சந்திப்பு நரேன். புகைப்படம் ஆனந்த்குமார்

ஆனந்தசைதன்யா அறக்கட்டளை சார்பில் தில்லை மூன்றுவகை பணிகளை முன்னெடுக்கிறார். கல்விக்கூடங்களில் கல்வி உதவித்தொகை வழங்குவது, வாசிப்புப்பயிற்சிகள் அளிப்பது ஒரு பணி. கல்லூரிமாணவர்களுக்கான தொழில்நுட்பத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிவகுப்புகள் இரண்டாவது. மூன்றாவதாக தியானப்பயிற்சி. அதன்பொருட்டே ஒரு கட்டிடத்தை கட்டி அமைப்பின் மைய அலுவலகம் மற்றும் பயிற்சிமையமாக ஆக்கியிருக்கிறார். (ஆனந்த சைதன்யா மையம்)

20 காலை 9 30 மணிக்கு நான் அருண்மொழியுடன் கோவை ஆனந்தசைதன்யா மையத்திற்குச் சென்றேன். விளக்கேற்றி ஒரு சிற்றுரை ஆற்றி மையத்தைத் திறந்துவைத்தேன். மதிப்புக்குரிய நண்பரும், முழுமையறிவு அமைப்பில் மரபிலக்கியம் மற்றும் சைவ இலக்கியம் பயிற்றுவிப்பவருமான பேச்சாளர் மரபின்மைந்தன் முத்தையா வந்து ஒரு சிற்றுரை ஆற்றினார்.

லாவண்யா சுந்தரராஜன் அரங்கு. நடத்துநர் சரண்யா. புகைப்படம் ஆனந்த்குமார்

தில்லை அவர்களின் வழிகாட்டியான திருநாவுக்கரசு,நான், மரபின்மைந்தன் ஆகியோர் வெவ்வேறு அரங்குகளைத் திறந்துவைத்தோம். வகுப்புகளுக்கான அறைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பெயர் போடப்பட்டிருந்தன. தில்லையுடன் பல திறன்மிக்க பயிற்றுநர்கள் உள்ளனர். விஷ்ணுபுரம் நண்பர்கள் அரங்கில் நிறைந்திருந்தார்கள்.

அன்று மாலையே நான் கோவை ராஜஸ்தானி சங் மண்டபத்திற்குச் சென்றுவிட்டேன். நண்பர்கள் மாலையில் இருந்தே வரத்தொடங்கினர். தேவதேவன் முதலில் வந்தார். இரா. முருகன் வந்தார். நண்பர்களுடன் இரா முருகன் தங்கியிருந்த அன்னபூர்ணா விடுதியின் அறைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்துவிட்டு வந்தேன்.

தென்றல் அரங்கு. நடத்துநர் சிபி

இரா.முருகன் பார்கின்ஸன் நோயால் அவதிப்படுகிறார். அவருடைய துணைவியார் மறைந்தபின் உருவான உள அழுத்தத்தால் அந்நோய் சற்று தீவிரமடைந்தது. உடல் நன்றாகவே நலிந்திருக்கிறது. நான் பழகிய இரா முருகனை அந்தச் சிரிப்பினூடாக மட்டுமே காணமுடிந்தது. அண்மையில் விழுந்து மருத்துவமனையிலும் இருந்தார். சென்னையில் ஓர் உதவியாளருடன் தனித்து வாழ்கிறார். இலக்கியம் மட்டுமே அவருக்கு இன்று உறுதுணையாக உள்ளது.

அவருக்கு இன்று உறுதுணை அவருடைய அணுக்கநண்பரான கமல்ஹாசன்தான். கமல் தன் நண்பர்கள் எவரையும் விட்டு விலகுவதே இல்லை, அவருடைய நண்பர்கள் பலர் ஐம்பதாண்டுக்கால நீடித்த தொடர்புகொண்டவர்கள் என்பதைக் கவனித்திருக்கிறேன். கமல் அவருக்குத்தேவையான அனைத்தையும் செய்வதுடன் தொடர்பிலும் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் கொஞ்சமேனும் எழுதுங்கள், எழுதுவதை எனக்கு அனுப்புங்கள், அது உளறலானாலும் சரி என்று கமல் சொன்னதாகச் சொன்னார்.

கயல் அரங்கு. நடத்துநர் கலை.

இரவு முழுக்க நண்பர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தார்கள்.  ராஜஸ்தானிசங் அரங்கில் மெய்க்களம் நாடகக்குழு திரையுடனும் ஒளியமைப்புடனும் தங்கள் இறுதி ஒத்திகையை இரவு ஒருமணிக்குத் தொடங்கி நடத்தும் ஓசை. நடுநடுவே நண்பர்களுடன் சென்று குடித்த காபி. நான் தூங்க பின்னிரவு மூன்றுமணி ஆகிவிட்டது. ஆறரை மணிக்கே எழவேண்டியிருந்தது. குளித்து கீழே வந்தால் மண்டபம் விழாக்கோலம் கொண்டிருந்தது. எங்குபார்த்தாலும் எழுத்தாளர்கள், வாசகர்களின் முகங்கள்.

அதன்பின் தொடர்ச்சியாக விழாவுக்குள்ளேயே இருந்தேன். நண்பர் சோமு பாடிய பாடலுடன் அமர்வுகள் தொடங்கின. இம்முறையும் ராஜஸ்தானி சங்க் அரங்கு முதல் அமர்வுக்கே இறுதிவரை நிரம்பி பின்பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். இன்று ஓர் இலக்கியவாதிக்கு பார்க்கக்கிடைக்கும் மிகப்பெரிய அரங்கு. வெறும்கூட்டம் அல்ல, பெரும்பாலும் அனைவருமே அவரை வாசித்துவிட்டு வந்தவர்களாகவே இருப்பார்கள்.

தமிழ்ப்பிரபா அரங்கு. நடத்துர் கிருஷ்ணன் ஈரோடு . புகைப்படம் ஆனந்த்குமார்

எழுத்தாளர் -வாசகர் சந்திப்புகளில் ஐநூறுபேர் அமர்ந்திருப்பது என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. இந்தியாவில் எந்த அரங்கிலும் இந்நிலை இன்றில்லை.  பின்வரிசையிலிருந்து கேள்விகேட்பவரின் முகம் எழுத்தாளருக்குத் தெரியாது. மேடையிலிருக்கும் எழுத்தாளரின் முகமும் பின்னிரை வாசகர்களுக்கு தெளிவாகத் தெரியாது. மைக் கொண்டுகொடுப்பதில் இருந்த ஒழுங்கால் நிகழ்வு தடையின்றி நடைபெற்றது.

அமர்வுகளை இரண்டாகப் பிரிக்கலாமா என்றெல்லாம் யோசனைகள் ஓடுகின்றன. ஆனால் வருபவர்கள் சில அரங்குகளை தவறவிடவேண்டியிருக்கும். கேள்வி கேட்ட்பவர்களையும் பேசுபாவ்ர்களையும் பெரிய திரையில் காட்டலாமா என்னும் எண்ணம் வந்தது. ஆனால் எங்கள் அரங்குகள் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதே ஒரு பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது. பலர் தீவிரமான அரசியல்கருத்துக்களையும் சொல்கிறார்கள்.

சு.வேணுகோபால் மயிலன் சின்னப்பனைக் கௌரவிக்கிறார்

21 ஆம் தேதி முதல் அமர்வு இலக்கியச் செயல்பாட்டாளர்கள் மந்திரமூர்த்தி அழகு, வாசகசாலை கார்த்திகேயன். தொடர்ந்து மயிலன் சின்னப்பன், லாவண்யா சுந்தரராஜன், கயல், தென்றல், சித்ரன், தமிழ்ப்பிரபா ஆகியோரின் உரையாடல் அரங்குகள். நிகழ்வை ராஜகோபாலன் புன்னகை கலையாத முகத்துடன், அனைத்தையும் மென்மையாக்கும் நகைச்சுவையுடன் நடத்தினார்.

வழக்கம்போல வாசகர்களின் வினாக்களுக்கு ஆசிரியர்கள் மறுமொழி சொல்லும் முறை. ஓர் ஆசிரியரை அணுகியறிவதும் அவர் கோணத்தில் அவரை அறிந்துகொள்வதுமே உலகமெங்கும் நிகழும் இவ்வகை அரங்குகளின் நோக்கம். இம்முறை நான் எந்த அரங்கிலும் எக்கேள்வியும் கேட்கவேண்டம என்றிருந்தேன். ஏனென்றால் சென்ற சில ஆண்டுகளாகவே நிகழ்வுகள் முழுமையாக அடுத்த தலைமுறையினரின் கைகளுக்குச் சென்றுவிட்டன. உண்மையில் கேள்வி கேட்பவர்களில் நாற்பது வயதுக்குக் மேற்பட்டவர்கள் சிலரே.

கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு. நடத்துநர் விக்னேஷ் ஹரிஹரன்.

இருந்தாலும் நான் இரண்டு கேள்விகள் கேட்க நேர்ந்தது. அந்த விஷயங்கள் விடுபடுகின்றனவா என்னும் எண்ணத்தால். கீரனூர் ஜாகீர்ராஜாவின் அமர்வில் அவரிடமிருக்கும் பஷீர் செல்வாக்கு பற்றி கேட்டேன். தமிழ்ப்பிரபா அரங்கில் அவர் எழுதும் நிலப்பகுதிக்குரிய தனித்த இசைமரபு பற்றி ஒரு கேள்வி கேட்டேன்.

இத்தகைய அமர்வுகளில் உருவாகும் பதில்கள் பலவகை. சிலசமயம் ’சரியான’ பதில்கள். சிலசமயம் அக்கேள்வியை அப்போதுதான் எதிர்கொண்டமையால் உருவாகும் உடனடியான எதிர்வினைகள். சிலசமயம் அறிவார்ந்த பதில்கள். ஆனால் என்னைப்பொறுத்தவரை எந்தப் பதிலும் அக்கேள்வியிலிருந்து வளர்ந்துசென்றால்தான் அது முதன்மை இலக்கியத்தகுதி பெறுகிறது. அது வாசகர்களை எழுத்தாளர் சந்திக்கும் கணம். அப்போது எழுத்தாளர் மலர்ந்து விரியவேண்டும்.

இரா முருகனை சென்னை சில்க்ஸ் சந்திரன் கௌரவிக்கிறார்

கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு மறுநாள் 22 அன்று காலையில். சிறப்பு அழைப்பாளராகிய கே.சச்சிதானந்தன் வரவில்லை. அவர் சென்ற ஓராண்டாகவே கொஞ்சம் உடல்நலம் குன்றியிருந்தார். இப்போது உடல்நிலை மேலும் மோசமாகி சிலநாட்கள் மருத்துவமனையில் இருந்து மீண்டிருக்கிறார். பயணங்கள், பொறுப்புகள் அனைத்திலிருந்தும் முழுமையாக விலகியிருக்கிறார்.

பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான அழகியல் பார்வையும், தங்களுக்கான அரசியலும் கொண்டவர்கள். அவற்றை அவர்கள் தீவிரமாக முன்வைத்தனர். அந்த உரையாடல் பங்கேற்கும் வாசகர்களுடன் மட்டுமே நிகழவேண்டும் என்பதனால் நிகழ்வுகளை நாங்கள் பதிவுசெய்வதில்லை. அரங்குகள் அனைத்துக்கும் நடத்துநர் உண்டு, அவர்கள் பெரும்பாலும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இலக்கியத்துள் வந்தவர்களாக இருப்பதே வழக்கம்.

இரா முருகன் அரங்கு. நடத்துநர் காளிப்பிரசாத்.

இவ்வரங்குகளில் வாசகர்களின் இடம் எழுத்தாளர்களின் அழகியலையும் அரசியலையும் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதுதான். அரங்கில் விவாதிப்பதற்கு இடமில்லை- ஐநூறுபேர் ஒருவருடன் விவாதிக்கமுடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்து விவாதிக்கலாம். அந்த விவாதங்கள் அரங்கைச்சுற்றி எங்கு பார்த்தாலும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

நான் அந்த விவாதங்களை அடிக்கடிக் கடந்துசென்றுகொண்டே இருந்தேன். இலக்கியத்திலேயே இருந்துகொண்டிருப்பவன் என்பதனால் ஒரு விவாதத்தின் ஒரு வரி காதில் விழுந்தாலே என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. நாலைந்து முறை யுவபுரஸ்கார் என்னும் வரி செவிகளில் விழுந்தது. இணைய இதழ்கள் நின்றுவிடுவதைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

பாவண்ணன் சித்ரனை கௌரவிக்கிறார்

இந்த அரட்டைகள் இலக்கிய அறிமுகத்திற்கு இன்றியமையாதவை. ஆனால் இளம்வாசகர்கள் தங்கள் தயக்கத்தைக் கடந்து இலக்கியவாதிகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். முறையாக அவ்வறிமுகத்தை நடத்தலாமா என்னும் விவாதம் எங்களுக்குள் நிகழ்ந்ததுண்டு. ஆனால் இந்த பெருந்திரளில் அது இயல்வதே அல்ல.

ஆகவேதான் இரண்டாம்நாள் மதிய அரங்குக்குப் பின் இரண்டு மணிநேரம் இடைவெளி விடுகிறோம். அது வாசகர்களை எழுத்தாளர்கள் சந்திக்க, வாசகர்கள் நூல்களை வாங்க உதவும் நேரம். அண்மையிலுள்ள டீக்கடைகளில் எல்லாம் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். டீக்கடைக்காரர்கள் பிறநாட்களில் எங்களிடம் விழா எப்போது என்று கேட்குமளவுக்கு அதற்குப் பழகிவிட்டிருக்கிறார்கள்.

விவேக் ஷான்பேக் அரங்கு. நடத்துநர் மொழிபெயர்ப்பாளர் சுனீல்கிருஷ்ணன். புகைப்படம் ஆனந்த்குமார்

எந்த ஒரு அரங்கும் இயல்பான கொண்டாட்டமாக நிகழமுடியும். உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலாக நிகழலாகும். அப்படித்தான் நான் அறிந்தவரை 90கள் வரைக்கும் தமிழகமெங்கும் இலக்கியக்கூடுகைகள் நடைபெற்றன. முற்றிலும் எதிரெதிர் திசைகளைச் சேர்ந்தவர்களாக இருந்த படைப்பாளிகளுடனெல்லாம் நட்பும் உரையாடலும் நிகழ்ந்தது. பின்னர் அதை இல்லாமலாக்கியவை இரண்டு, ஒன்று குடி. இலக்கியக்கூடுகையில் குடிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் வெறும்குடிகாரர்கள் அரங்குகளைக் கைப்பற்றினர்.

இரண்டு கட்சியரசியல். இலக்கியத்தில் கொள்கையரசியல் என்றும் உண்டு. ஆனால் எளிய கட்சியரசியல் இலக்கியத்திற்கு நேர் எதிரானது. அது காழ்ப்புகளை வளர்க்கும். விளைவாக தமிழகத்தில் இன்று இலக்கிய உரையாடல்களுக்கான அரங்குகளே இல்லை – விஷ்ணுபுரம் அரங்கு தவிர. எங்கள் நெறிகள் தான் இந்த அரங்கை வெற்றிகரமாக நிகழ்த்துகின்றன. இங்கே குடிக்கேளிக்கை, சில்லறை கட்சியரசியலுக்கான இடமில்லை. இலக்கியம் மட்டுமே பேசுபொருள். இலக்கியம் சென்று தொடும் எல்லாமே பேசுபொருட்களே.

கலைச்செல்வி தென்றலை கௌரவிக்கிறார்

இரவுணவுக்குப் பின் கோவை மெய்க்களம் அமைப்பின் நண்பர்கள் நடத்திய இரண்டு சிறுநாடகங்கள். வாள் இருபதுநிமிட நாடகம். கழுமாடன் நாற்பது நிமிட நாடகம். ஒப்பனை, அரங்க அமைப்பு இல்லாத புதியவகை நாடகங்கள் இவை. பொதுவான ரசிகர்களுக்குரியவை அல்ல. இலக்கியரசனையுள்ள வாசகர்களுக்காக, இலக்கியத்தின் நாடகவடிவமாக உருவாக்கப்பட்டவை. ஆகவே தீவிரமும் நுட்பமும் கொண்டவை.

இன்று தமிழகத்திலுள்ள வணிகக்கேளிக்கை அரங்கு, நாடக உத்திகளை மட்டுமே சோதனைசெய்யும் செயற்கைநாடக அரங்கு ஆகிய இரண்டுக்கும் அப்பால் இலக்கியச்சூழலுக்கான நாடகங்கள் ஏராளமாக உருவாகவேண்டும் என நினைக்கிறேன். கோவை போலவே வேறு ஊர்களிலுமுள்ள இலக்கிய நண்பர்கள் இத்தகைய நாடகநிகழ்த்துதல்களை முயன்றுபார்க்கலாம். மிக எளிமையான இவ்வடிவம் செலவின்றிச் செய்ய ஏற்றது.

சிவா சக்திவேல் லாவண்யா சுந்தரராஜனை கௌரவிக்கிறார்

இத்தகைய நாடகமுயற்சிகளின் மிகப்பெரிய மகிழ்ச்சி என்பது இரண்டு. ஒன்று, நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒன்றை செய்வது. அதிலுள்ள நட்புச்சூழல். இரண்டு ஒரு கலைவடிவம் மெல்லமெல்ல திரண்டு வருவதன் மகிழ்ச்சி. நாடகங்களின் மிகச்சிற்ந்த பகுதி என்பதே நாடக ஒத்திகைகள்தான்.

இந்நாடகத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள், ஒளி-ஒலி அமைத்தவர்கள் அனைவருமே புதியவர்கள். அரங்கின் திரையமைப்பைக்கூட அவர்கள் தாங்களேதான் உருவாக்கிக்கொண்டார்கள். ஆகவே ஒரு பதற்றம் இருந்துகொண்டிருந்தது. சிறு நடைமுறைச் சிக்கல்கள். ஒலிக்கருவிகளில் ஒன்று சிறுபழுதை அடைந்தமையால் மூன்று நிமிடத் தாமதம் உருவானது. இத்தனை கூட்டம் இருக்கும் என்று தெரியாததனால் மேடை போதிய அளவுக்கு உயரமாக அமைக்கப்படவில்லை.

மெய்க்களம் குழுவினர்

ஆனால் அவற்றைக் கடந்து மிகத்தீவிரமான பாதிப்பை பார்வையாளர்கள் மேல் செலுத்தியது. நாடகம் முடிந்தபின்னர் அரங்கிலும் தனிப்பட்டமுறையிலும் உணர்ச்சிகரமான எதிர்வினைகள் வந்தபடியே இருந்தன. அது நாடகம் என்னும் கலைவடிவின் சாத்தியக்கூறு. அது அந்த மேடையில் தீவிரமாகவே நிகழ்ந்தது. நடத்தியவர்களும் பார்த்தவர்களும் ஒருங்கே சென்றமைந்த உச்சநிலை அது.

நான் எப்போதுமே சொல்லிவருவதுதான். நாடகம் என்னும் கலைவடிவின் முதன்மையான அடிப்படையே ‘கதைமாந்தர் கண்ணெதிரே வந்து நிற்பது’தான். ஆகவே வலுவான கதாபாத்திரமும் இயல்பான நடிப்பும் இல்லாமல் ஒரு நல்ல நாடகம் உருவாகவே முடியாது – எத்தனை மகத்தான அரங்க அமைப்பும் காட்சியனுபவமும் இருந்தாலும்.

ஜா.தீபா கயலை கௌரவிக்கிறார்

இரண்டாவதாக, நல்ல நாடகம் வலுவான நாடகப்பிரதியால் மட்டுமே உருவாக்கப்பட முடியும். அது இலக்கியத்தில் இருந்து மட்டுமே வரமுடியும். இலக்கியப்பிரதியாகவும் நிலைகொள்ளும் நாடகம் மட்டுமே அரங்கில் மெய்யான தீவிரத்தைக் கொண்டிருக்கும் . அதை இலக்கியவாதி மட்டுமே எழுதமுடியும். இலக்கியமில்லா நாடகம் வெறும் பயிற்சி மட்டுமே. உலகத்தின் மிகச்சிறந்த நாடகங்களைச் சென்று கண்டவன் என்னும் முறையில் என் அனுபவம் இது.

அத்துடன் ‘அனைவருக்குமான’ நாடகம் இருக்க முடியாது. அனைவருக்குமான எந்தக் கலையும் இருக்கமுடியாது. பார்வையாளரின் இயல்பும் ரசனையும் முக்கியம். அவ்வகையில் நவீன இலக்கிய வாசகர்களுக்கான நாடகங்கள் உருவாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இலக்கியவாசகர்களுக்கான சினிமாக்களும் தேவை. இந்த நாடகமுயற்சி பெற்ற பெருவெற்றி இதையே சினிமாவிலும் செய்தாலென்ன என்னும் எண்ணத்தை உருவாக்கியது.

மதார் தமிழ்ப்பிரபாவை கௌரவிக்கிறார்

இரவில் என் அறையில் வழக்கபோல கூடி பன்னிரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். வெவ்வேறு மண்டபங்களிலாக நாநூறுபேர் வரை கூட்டாகத் தங்கியிருந்தனர். அங்கெல்லாம் இரவெல்லாம் பல குழுக்களாக, பல அமர்வுகளாக இலக்கிய அரட்டைகள் நிகழ்ந்துகொண்டிருப்பது வழக்கம். இந்நிகழ்வின் முதன்மையான கொண்டாட்டமே இந்த இலக்கிய உரையாடல்கள்தான் என்று சொல்லலாம். காலையில் பல நண்பர்கள் ஒரு நிமிடம்கூட தூங்கவில்லை என்று சிவந்த கண்களுடன் சொன்னார்கள்.

இந்த நிகழ்வுகளில் ஒரு வேடிக்கை உண்டு.கொஞ்சம் வயதானவர்களுக்கு தனியறைகளையும் இளைஞர்களுக்கு கூடத்தையும் ஏற்பாடு செய்வோம். ஆனால் பெரும்பாலான வயதானவர்கள் கூடங்களுக்குச் செல்வதையே விரும்புவார்கள். இலக்கிய அரட்டைக்காகவே வருகிறோம் என்பார்கள். இம்முறையும் அறைகளில் சில காலியாகவே இருந்தன.

தேவதேவன் ஜாகீர்ராஜாவை கௌரவிக்கிறார்

22 டிசம்பர் காலையில் நான் எழுந்தபோது எனக்கு இரண்டுநாள் தூக்கச்சிக்கல். காபியாலா அல்லது நாடகத்தாலா தெரியவில்லை. உள்ளம் கொப்பளித்துக்கொண்டே இருந்தமையால் நான் பின்னிரவு மூன்றுமணிக்குத்தான் தூங்கினேன். காலை ஆறரைக்கு விழித்துக்கொண்டேன். ஆனால் பகலில் களைப்பே தெரியவில்லை. முழுமையாகவே அரங்க நிகழ்வுகளில் திளைத்தேன்.

காலைமுதல் கீரனூர் ஜாகீர்ராஜா, விவேக் ஷான்பேக் மற்றும் இரா முருகன் அமர்வுகள்.இரா.முருகன் உடல்நிலை குன்றியிருந்தாலும் ஊடாக வெட்டிச்செல்லும் கூர்மையும் வெளிப்பட்டபடியே இருந்தது. அரங்கிலிருந்து சிரிப்பொலிகள் எழுந்தபடியே இருந்தன. எங்களுக்கு அவர் அரங்கை எப்படி எதிர்கொள்வார் என்னும் ஐயம் இருந்தது. அமர்வுகளிலேயே அது சிறப்பாக இருந்தது என்றார்கள்.

சித்ரன் அரங்கு – நடத்துநர் நவீன் சங்கு

விஷ்ணுபுரம் அரங்கைப்பற்றி வந்த விருந்தினர்கள் அனைவருமே சொன்னது, வெவ்வேறு இடங்களில் பதிவுசெய்தது அதைப்போன்ற இன்னொரு நிகழ்வு இந்தியாவில் இன்றில்லை என்பதே. இது ‘இலக்கியவிழாக்களின் அன்னை’ என்றுகூட ஒருவர் எழுதியிருந்தார். இந்திய அளவில் இலக்கியவிழாக்களுக்குச் சென்றவர்கள் அந்த வேறுபாட்டை அறிவார்கள். இலக்கிய விழாக்களில் ஒருவகையான கலவையான பங்கேற்பாளர்கள் இருப்பதனால் கொண்டாட்ட மனநிலையும் கூடவே மேலோட்டமான விவாதங்களும் மட்டுமே இருக்கும்.

ஆனால் விஷ்ணுபுரம் விழாவில் முன்வைக்கப்படும் இலக்கியவாதிகள் முன்னரே அறிவிக்கப்படுகிறார்கள். அவர்களின் படைப்புகளை ஊன்றிப்பயின்றவர்களே விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். மிகத்தீவிரமாகப் படைப்புகள் சார்ந்தே உரையாடல் நிகழ்கிறது. தன் படைப்புகள் பற்றி இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே மிகச்சிறந்த உரையாடல் இதுவே என்று விவேக் ஷான்பேக்கும் குறிப்பிட்டார்.

விஷ்ணுபுரம் அரங்குகளில் எப்போதுமே மனநிறைவை அளிப்பது உணவுக்கூடம். இலக்கியத்தின்பொருட்டே சேர்ந்த பெருங்கூட்டம் திரண்டு அமர்ந்து ஒரு குடும்பவிழா போல உணவுண்பதைக் காண்பதென்பது மிகப்பெரிய ஓர் அனுபவம். நாஞ்சில்நாடன் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்வதுண்டு.

பதினைந்தாண்டுகளுக்கு முன்பு விஷ்ணுபுரம் நிகழ்வில் அனைவரும் நீண்டவரிசையாக அமர்ந்து உணவுண்பதைக் கண்டு அரங்கசாமி கண்கலங்கி என் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த நெகிழ்வு இன்றும் நீடிக்கிறது. இந்தியாவில் பல இலக்கியவிழாக்கள் நிகழ்கின்றன, எங்கும் இத்தகைய ஓரு நிகழ்வைப் பார்க்கமுடியாது.

புகைப்படம் ஆனந்த்குமார்

மாலை ஐந்தரை மணிக்கு மீண்டும்கூடிய அரங்கில் அகரமுதல்வன் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஒரு நல்ல ஆவணப்பட இயக்குநரின் சவால் என்பது இருக்கும் சாத்தியங்களினூடாக நல்ல படத்தை உருவாக்குவது. ஆவணப்படத்துக்கு இரா.முருகன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எங்கும் பயணம் செய்யும் நிலையில் அவர் இல்லை.

ஆனால் அந்த சிறு சாத்தியக்கூறுக்குள் ஒரு தெருக்கூத்துக் கற்பனைக் கதைமாந்தரை உருவாக்கி பிற இரண்டு உரையாடல் சரடுகளையும் இணைத்து மிகச்சிறந்த ஆவணப்படத்தை அகரமுதல்வன் உருவாக்கியிருந்தார். திரைப்படத்துறை அனுபவம் கொண்டவர்களின் திறன் அது. ஆவணப்படம் முருகனின் புனைவுலகம் போலவே மாயமும் யதார்த்தமும் கலந்த ஒன்றாக அமைந்திருந்தது.

புகைப்படம் ஆனந்த்குமார்

பரிசளிப்பு மேடையில் எழுந்து நின்று அரங்குநிறைந்து பரவியிருந்த முகங்களைப் பார்க்கையில் உருவாகும் பெருமிதமும் மேலேசெல்லும் கனவும் மகத்தான ஒன்று. பதினைந்தாண்டுகள் ஓர் இலக்கிய அமைப்பு ஒவ்வொரு நிகழ்விலும் பலமடங்கு விரிவடைந்து அடுத்த இலக்கு நோக்கிச் செல்வதென்பது தமிழ்ச்சூழலில் அனேகமாக இன்னொன்று சுட்ட முடியாத நிகழ்வு.

பதினைந்தாண்டுகளுக்குப்பின் இன்று அதன் மாபெரும் விளைவை, தமிழிலக்கியத்திலும் பண்பாட்டிலும் அதன் நிகரற்ற பங்களிப்பை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.இன்று தீவிரமாக எழுதுபவர்கள், பேசுபவர்கள், இலக்கியத்தில் செயல்படுபவர்களில் மிகப்பெரும்பான்மையினர் இந்த தொடரியக்கத்தில் இருந்து வெவ்வேறுவகையில் தொடங்கி முன்னகர்ந்தவர்களே.

புகைப்படம் ஆனந்த்குமார்

இவ்வெற்றிக்கு அடிப்படைக் காரணம் என நான் குறிப்பிடுவது எங்கள் நேர்நிலை நோக்கு மட்டுமே. எதிர்மறை உளநிலைகள் செறிந்துள்ள நம் சூழலில் அவற்றை பொருட்படுத்தாமல் நம்பிக்கையை, கனவை, அவற்றைப் பங்கிட்டுக்கொள்ளும் நட்புச்சூழலை உருவாக்கிக்கொள்வது பெரும்சவால். ஆனால் நாம் நம்மை நம்பினால் அது இயல்வதாகும்.

நண்பர்களிடம் நான் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நாம் நம் கனவுகளுக்கு மட்டுமே நம்மை அளிக்கவேண்டும். இங்கே நாம் வாழும் இச்சிறுவாழ்க்கையில் அக்கனவுகளே நம் அன்றாடம் என்றாகவேண்டும். அவை காலப்போக்கில் நம் சாதனைகளும் ஆகும். நீடித்த இலட்சியம், அன்றாடமென நிகழும் இலட்சியம் மட்டுமே செயல்வேகமாக ஆகும். அது மட்டுமே மெய்யான மகிழ்ச்சியை, நிறைவுணர்வை அளிக்கும்.

புகைப்படம் ஆனந்த்குமார்

நேர்நிலை உளநிலையை நாடிவருபவர்கள், அதனுடன் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் பல்லாயிரவர். ஏனென்றால் அது அவர்களின் அகத்திற்கு ஒளியூட்டுகிறது. அவர்களையும் நம்பிக்கையும் செயலூக்கமும் கொண்டவர்கள் ஆக்குகிறது. சாதனைகளை செய்யவைக்கிறது. வாழ்க்கையை பொருளுடையதாக ஆக்குகிறது. அத்தகையோரை ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்குபவர்கள். தங்கள் செயலுறுதிகளையும் திட்டங்களையும் பற்றிச்  சொல்பவர்கள்.

இந்தப் பதினைந்தாண்டுகளில் விஷ்ணுபுரம் அமைப்பு ஓர் இயக்கமென ஆகியிருப்பது இந்த நேர்நிலைவிசையால்தான். நான் ‘அமைப்பு’ என்பதில் நம்பிக்கை அற்றவன். ஆகவே இன்றுவரை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஓர் நட்புக்குழுமம் மட்டுமே. தலைவர், அமைப்பாளர், செயலர் என எந்தப் பொறுப்பும், பதவியும் இதில் இல்லை. அனைவரும் அவர்களால் இயன்றவரை பங்களிப்பாற்றலாம் என்பதே எங்கள் செயல்முறை.

புகைப்படம் ஆனந்த்குமார்

கிட்டத்தட்ட மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தும் ஓர் அமைப்பு, உலகமெங்கும் பரவியுள்ள ஓர் அமைப்பு, நிர்வாகக்கட்டுமானம் இல்லாமல் செயல்படுவது என்பதை சொல்லும்போதெல்லாம் எங்கள் விருந்தினர்கள் திகைப்படைவதைக் காணமுடிகிறது. பண்பாட்டுச்செயல்பாடுகளுக்கு நான் பரிந்துரைக்கும் வடிவமும் இதுவே. இதை காந்தி வெவ்வேறு உரையாடல்களில் சொல்லியிருக்கிறார்.

இன்னொன்று, இது ஒரே அமைப்பு அல்ல என்பது. நான் சொல்லும் ஓர் உருவகம் சுடர் என்பது. ஒரு சுடரிலிருந்து இன்னொரு சுடர் பற்றிக்கொள்கிறது. முந்தைய சுடரின் நீட்சி என்றால் அவ்வாறே. ஒரே சுடர் என்றாலும் சரிதான். ஆனால் ஒவ்வொரு சுடரும் தனித்தது. தன்னிலிருந்து மேலும் சுடர்களை உருவாக்குவது. ஒன்றைவிட இன்னொன்று பெரிதோ சிறிதோ அல்ல.

ராம்குமார் இ.ஆ.ப (விஷ்ணுபுரம் அமைப்பாளர்) இராமுருகனை கௌரவிக்கிறார். புகைப்படம் ஆனந்த்குமார்

எங்கள் செயல்பாடுகளில் இருந்து மேலும் கிளைத்து இன்று உலகமெங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இணைய இதழ்கள், பண்பாட்டு அமைப்புகள், இலக்கிய அமைப்புகள், கல்விச்சேவை அமைப்புகள், பழங்குடிப் பணிகளுக்கான அமைப்புகள், பயிற்சி வகுப்பு அமைப்புகள் கிட்டத்தட்ட நூறு. நவீன இலக்கிய வாசிப்பரங்குகள், செவ்வியல் இலக்கிய வாசிப்பரங்குகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கு அப்பால் இயற்கைவேளாண்மை செய்பவர்கள், மாற்றுமருத்துவக் களத்தில் பணியாற்றுபவர்கள் என எங்களிடமிருந்து தொடங்கி தங்கள் வழியில் சென்ற பலர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய களங்களைக் கண்டடைந்து எங்களிடம் வந்து கூறுபவர்கள் அறிமுகமாகிக்கொண்டே உள்ளனர்.

புகைப்படம் ஆனந்த்குமார்

அனைத்துக் களங்களிலும் எங்கள் செயல்திட்டம் என்பது நுண்ணலகு சார்ந்தது. அடிப்படைக்களத்தில், சிறிய அளவில் நீடித்த செயல்பாடு என்பது எங்கள் நடைமுறை. அதுவே காந்தி காட்டிய வழி. எனக்கு நம்பிக்கையிருக்கும் ஒரே அரசியலும் அதுவே.

இலட்சியவாதம் நேர்நிலைத்தன்மையுடன் இணைந்திருக்கும் என்பதே காந்தியிடமிருந்து நான் கற்றது. ஆகவே ஓர் ஆக்கபூர்வச் செயல் எதற்கு எதிரானதாகவும் இருக்காது. அதில் கசப்புக்கும் வெறுப்புக்கும் இடமில்லை. அவ்வுணர்வுகள் கொண்ட செயல்பாடுகள் உளமகிழ்வை அளிப்பதில்லை, ஆகவே நீடிப்பதுமில்லை.

என் அடிப்படை நம்பிக்கை ஒன்றுண்டு. நாம் இங்கே மகிழ்ச்சியாக வாழவே வந்துள்ளோம். இச்சமூகத்திற்கும் அறிவியக்கத்திற்கும் நாம் அளிக்கும் பங்களிப்பே மெய்யான மகிழ்ச்சியை அளிப்பது. ஒரு செயல் சரியானதா என்பதற்கு அது அளிக்கும் மகிழ்ச்சி மட்டுமே சான்று. விளைவுகளை நாம் கணக்கிடவே முடியாது.

அந்நம்பிக்கையையே திரும்பத் திரும்ப முன்வைக்கிறேன். அதை ஏற்று வந்துகூடுபவர்களின் திரள் பெருகிக்கொண்டே இருப்பது என் நம்பிக்கையை மேலும் உறுதியாக்குகிறது. தமிழகத்தில் இன்றுநிகழ்ந்துகொண்டிருக்கும் மிகத்தீவிரமான ஓர் இலக்கிய- சமூகவியல் செயல்பாடு என இதை ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியும்.

விழா முடிந்தபின் வழக்கமாக சிரிப்பும் கொண்டாட்டமுமாக ததும்பிக்கொண்டிருப்போம். வழக்கம்போல கூட்டுப்புகைப்படம். அது இன்று கூட்டப்புகைப்படமாக ஆகிவிட்டது. வழக்கம்போல படிகளில் அமர்ந்து ஓர் உரையாடல். நிகழ்வை ஒருங்கிணைத்த செந்தில்குமாருக்கு பொன்னாடை.

அப்போது ஓர் அறிவிப்பை இளம்நண்பர் சிபி சொன்னார். சிபி மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் முனை என்னும் அமைப்பின் சார்பில் ஈரோடு முதல் மாணவர்கள் வேதாரண்யம் வரை உப்புகாய்ச்சிய போராட்டத்தின் அதே பாதையில் ஒரு காந்தியநடைபயணம் செல்லவிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் நடக்கிறார்கள். இது கையில் பணம் இல்லாமல் செல்லும் பயணம். அந்தந்த ஊர்களிலேயே உணவும் உறைவிடமும் பெற்றுக்கொண்டு செல்கிறார்கள்.

அதன் பின் அறைக்குள் சென்றோம். பாடல். இலக்கிய வினாடிவினா என இரவு நீண்டது. மேலும் பல திட்டங்களை, கனவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். வரும் ஆண்டுகளில் இந்திய அளவில் ஆங்கிலத்தில் இணைய இதழ்கள், இலக்கிய அமைப்புகள், வெளியீட்டகங்கள் என பல முன்னெடுப்புகள் நிகழவுள்ளன. எங்கள் செயல்பாடுகளில் முக்கால்பங்கு பெண்கள் முன்னெடுப்பவை. Girls power என்பதே எங்கள் முதன்மைவிசை. இன்றைய பெண்களிடமிருக்கும் ஆற்றல் வியப்பூட்டுவது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் விசைகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. விழாவுக்கு ஒரு குழு திருவனந்தபுரம் திரைவிழாவில் இருந்து வந்திருந்தது. இரண்டு குழுவினர் தஞ்சைபயணத்தில் இருந்து வந்தனர். விழாவுக்குப்பின் கடலூர் சீனு குழுவுடன் தேன்வரந்தை குகை ஓவியங்கள் பார்க்கச் சென்றார். செல்வராணி குழுவினர் காசி. ஜெயக்குமாருடன் ஒரு குழுவினர் பதாமி. இன்னொரு குழுவினர் தஞ்சை. ஒரு குழு திருவட்டார் திருவனந்தபுரம் சென்றது

அந்த இரவும் நான் தூக்கம் நோக்கிச்செல்ல இரவு மூன்றுமணி ஆகியது. ஒரு கனவு இன்னொரு கனவை உருவாக்கும். ஓர் இலட்சியம் இன்னொரு இலட்சியத்தை கிளர்த்தும். ஒரே உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அவை பகிர்ந்துகொள்ளப்படும். அவர்கள் வாழும் உலகமே வேறு. மெய்யான மகிழ்ச்சிகொண்ட, மெய்யான பொருளுள்ள வாழ்க்கைக்களம் அது மட்டுமே.

 

முந்தைய கட்டுரைசார்ல்ஸ் மால்ட்
அடுத்த கட்டுரைபபாசி- கலைஞர் பொற்கிழி விருதுகள்