
ஜெ ,
முழுமையடைந்த பெருநாவல் ஒன்று வாசிப்பில் எவ்வாறு உணரப்படும் என்பதை எண்ணும் பொழுது இரு உதாரணங்கள் நினைவில் எழுகின்றன. ஒன்று ராஜ கோபுரம் ஒன்றின் கம்பீரத்தை அதன் வெளியில் நின்று பார்ப்பதைப் போன்றது இரண்டாவது ரோம் நகரில் உள்ள மாபெரும் தேவாலயம் ஒன்றினுள் நுழைந்து அதன் உட்கட்டுமானத்தின் விஸ்தாரத்தில் மத்தியில் நின்று வியந்து அதில் மூழ்கிவிடுவது. முதலாவது புறநிலை அனுபவம் இரண்டாவது அகநிலை அனுபவம்.
என்னுடைய வாசிப்பில் விஷ்ணுபுரம் ஏற்கனவே புற நிலையின் வியப்பை அளித்த பெரும்புனைவு என்று சொல்லுவேன். ஆயினும் அது மண்ணைத் தொடாது வின்னோக்கிச் செல்லும் நவீன உரைநடைப் புனைவின் காவிய நிலை. காவியம் அப்படித்தான் இருக்கும். எனக்குத் தேவையானது கலையம்சமும், பிரமாண்டமும், அதே நேரத்தில் புதிர்கள் நிறைந்து பூமியில் உறைந்து கிடக்கும் இவ்வாழ்க்கை பற்றின தரிசனத்தையும் அளிக்கும் நாவல் ஒன்று. வேறொன்றாக அல்லாது அது வெறுமனே நாவலாகவே இருக்க வேண்டும். அதனையே பெருநாவல் என்று என் மனம் உணரக் கூடும்.
அந்த வகையில் காடு ஒரு பெரு நாவல். நாவலை வாசிக்கும் போதே அது அக நிலையில் தன் முழுமையை கொண்டு என்னுள் நிறைவை அளிக்கத் தொடங்கியது. புறநிலையில் காட்டின் முடிவின்மையும் அதில் தன் அகத்தைக் கொண்டு அதனை தேடி அலையும் கிரிதரனின் அகத் தேடலும் பெரு நாவலின் இரு பெரு நிலைகள். ஆனால் காட்டின் புற நிலையை கண்டடைய வாசகன் கிரிதரனின் அகத்தைக் கொண்டே காடு முழுக்க பயணிக்க வேண்டி இருக்கிறது. அதில் ஆழத்தே அவன் கண்டடையும் இறுதிப் பொருள், நீலி.
காட்டுக்குள் தொடர்ந்து பயணிக்க பயணிக்க புறம் சிதைந்து அகம் உயிர் கொள்கிறது. காட்டின் அகம் கிரிதரனில் உயிர் கொள்ளும் போது அவன் என்றோ வாசித்த குறுந்தொகையின் சொற்கள் அவனுடைய ஆழத்தில் இருந்து வெளிவருகின்றன. அவனுக்குள் என்றோ விதைக்கப்பட்ட குறுந்தொகை பாடல்கள் விதைகளாக எவ்வளவு காலம் அசைவற்று இருந்தனவோ தெரியவில்லை!
காட்டுக்குள் நுழைந்தவுடன் காட்டின் ஒவ்வொரு பகுதியும் விதையென உறைந்து கிடக்கும் குறுந்தொகையின் சொற்கள் ஒவ்வொன்றையும் அவனுக்குள் உயிற்கொள்ள செய்துவிட்டன. காடே கபிலரின் சொற்களாக உயிர் கொள்கிறது.
ஆச்சரியம் என்னவெனில் கிரிதரன் மீண்டும் நிலம் நோக்கி செல்லும் போது கபிலரின் பாடல்கள் அனைத்தும் செயலற்ற விதைகளாக உயிர் அற்று மீண்டும் ஆதி நிலைக்கு உறைந்து விடுகின்றன. காட்டுக்கு வெளியில் அதன் இருப்பும் கூட உணரப்படுவதில்லை.
கிரிதரன் மீண்டும் காடு நோக்கி மீளும் போது மீண்டும் குறுந்தொகை மீண்டும் கபிலர். மலைக்கு கீழே உள்ள நாகரீக உலகம் கிரிதரனின் அகத்திற்கு கொஞ்சமும் பொருத்தமற்ற உலகம். கீழே இருக்கும் அந்த நாகரிக உலகம் அவனுக்கு பொருந்தாக் காமம், பெருந்திணை. காட்டின் அடர்த்தியின் ஆழத்தில் வேங்கை மரத்தின் கீழ் உன்னை சந்திப்பேன் என்று சொல்லிய கரிய நிற நீலி மட்டுமே அவனுக்கானவள். வாசக மனம் நிலத்தில் வாழும் வேணியை அவனுக்கானவாளாக யோசித்துப் பார்க்கவும் முடியவில்லை. அவள் நிறமும் பற்களும் குமட்டலை ஏற்படுத்துகிறது. நீலியை வாசிக்க வாசிக்க பெண்ணின் கருமை நிறம் எவ்வளவு காதல் கொள்ளத்தக்க நிறம் என்பதை வாசகனாக உணர ஆரம்பித்தேன்.
நாவலை வாசிக்கும் போதே பைபிளின் ஆரம்ப வார்த்தையான “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” என்ற வசனம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. காடு நாவல் முழுவதும் அந்த வசனத்திற்கான antithesis போன்று இருந்தது. என்னில் எழுந்த இந்த எண்ணத்தை முழுமையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இந்த antithesisல் ஒழுங்கின்மை என்ற ஒரு பகுதியை மட்டும் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன். ஆம் ஆதியில் பூமியானது காடாக ஒழுங்கின்மையாகத்தான் இருந்தது. அதில் மனிதன் கை பட்டவுடன் ஒழுங்கின்மை வட்டங்களாகவும் சதுரங்களாகவும் முக்கோணங்களாகவும் ஆகிவிடுகின்றன. காட்டிற்கு வடிவங்கள் என எதுவும் கிடையாது. மனிதனின் ஒழுங்கு என்பது வட்டம் சதுரம் முக்கோணம் போன்ற இத்யாதி வடிவங்கள் மட்டும்தான். மனிதனின் ஒழுங்கு வரையறைக்கு உட்பட்டது. காட்டின் ஒழுங்கின்மைக்கு வரையறையே இல்லை. வடிவங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இதனை நாவலின் ஆரம்பத்தில் உணர்ந்த போது தொடர்ந்து எனது ஆங்கில வகுப்புகளில் ஒழுங்கின்மையின் முடிவிலி நிலையைப் பற்றி மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். Geometric Shapesகளின் மீது அப்போது ஒரு அலட்சியப் பார்வை உண்டானது. காட்டின் முடிவற்ற கோணல் வடிவங்களை யாரேனும் எண்ணி தொகைநிறுத்த முடியுமா என்ன!. ஆம் ஆதியில் பூமி ஒழுங்கின்மையாகத்தான் இருந்தது. எப்போது மனிதன் உள்ளே நுழைந்தானோ அப்போதே அது வன்முறைகளால் நிறைந்த வடிவங்களின் வரையறைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மனிதன் தன் குறைந்த எண்ணிக்கைகளிலான வடிவங்களைக் கொண்டு முடிவிலியின் காட்டை கட்டுப்படுத்தி விட்டான். நாகரிகம் என்ற பெயரில் அதனை வென்றெடுத்தும் விட்டான்.
மனிதன் வரையறைக்கு உட்பட்ட நாகரிகத்தில் இருந்து மீண்டும் காட்டுக்குள் நுழையும் போது முடிவின்மையின் தெய்வ நிலையை நோக்கி அவன் சென்றடைகிறான். அல்லது தெய்வங்களின் வாழ்விடத்தில் அவர்களுடன் ஒன்றாகி விடுகின்றான். இன்று நிலப்பரப்பில் நம்மிடையே உள்ள தெய்வங்கள் அனைத்தும் காட்டிற்குரியவை என்ற நாவலின் ஒரு கூற்று என்னை அதிகம் யோசிக்க வைத்தது. காடு அழிந்து குடியிருப்புகள் ஆன பின்பும் அங்கே எஞ்சி இருப்பது தெய்வங்கள் மட்டுமே. அவைகள் காடிற்குறியவைகள். காடாக இருக்கும் போது உயிர் கொண்ட யட்சிகள் அவை. அதுவே நிலமாக நாகரிகம் அடையும் போது அவைகள் கல்லென உறையும் தெய்வங்கள் ஆகிவிடுகின்றன.
கபிலரின் பாடல்களும் அப்படித்தான். நிலத்தில் அவைகள் மனிதர் அவ்வளவு எளிதில் அணுக முடியாத ஏட்டுக்கல்வி. கிரிதரன் என்றோ அதனை written text (logos) ஆக வாசித்து வைத்திருக்கிறான். எப்போது கிரியை காடு சூழ்ந்து கொள்கிறதோ அப்போது written text அவனுக்குள் உயிர் கொண்ட ‘சன்னதக்‘ குரலாக மாறிவிடுகிறது. கல்லென உறையும் தெய்வமும் சரி பிரதியென ஏட்டில் நின்ற சொல்லும் சரி அவைகள் நம்மிடம் பேசுவதில்லை. நாம் தான் அவைகளிடம் வேண்டி மன்றாடி முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் காடு சூழ்ந்த யட்சியும், சங்கத் தொல் பிரதியும் ஒரு கட்டத்தில் மனிதனுடன் உரையாடும் சன்னதக் குரல்களாக உயிர் பெற்று விடுகின்றன. காட்டிற்கு பேய்கள் என்றும் தெய்வங்கள் என்றும் எந்த பாகுபாடுகளும் கிடையாது. காட்டை வென்ற அரசர்களுக்கு அது இரத்தம் பருகும் நீலி, பேய். குட்டப்பனின் நீலி கதை கூட நிலம் காட்டை நோக்கி கட்டமைத்த அச்சுறுத்தும் பேய் கதைதான். கிரிதரனுக்கோ அவள் குறிஞ்சி நிலத்தில் தலைவன் கண்ட தலைவியான குன்றக் குறமகள் (வேதசகாயகுமார்).
யதார்த்த வாழ்க்கையின் விளங்கிக் கொள்ள முடியாத புதிர் முடிச்சுகள் சில இந்நாவல் வழியே விடுபட்டன. நம் தரப்பு நியாயங்களைக் கொண்டு மற்றவர்களை நல்லவர்கள் தீயவர்கள் என அவர்கள் மீது எளிதில் தீர்ப்பு எழுதிவிடுகிறோம். எனினும் அவரவர் நியாயம் அவர்கள் வழி மட்டுமே வெளிப்படும் போல. நிஜ வாழ்க்கையில் இதனை உணர வாய்ப்பே இல்லை. ஆனால் பெருநாவல் ஒன்று நிஜத்திற்கு இணையான வாழ்க்கையை நம்மிடம் கொண்டு வரும் போது அது வாழ்க்கையை பல கோணங்களில் அலசுகிறது. நடப்பியலில் நாம் அறியாத சில பக்கங்கள் நம் பார்வைக்கு வருகின்றன. அப்போது வாழ்க்கைப் பற்றின சூட்சுமமான புதிர்கள் பல விடுவிக்கப்படுகின்றன. காட்டில் கிரியை சூழ்ந்த குட்டப்பன், குருசு, ரேசாலம், சினேகம்மை, மற்றும் இரட்டையர்களான ஆபேல் ராபி காட்டின் அகத்திற்குள் அவரவர் விருப்பப்படி வாழ்கின்றனர். ஒழுக்க மதிப்பீடுகள் எதுவும் அவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை.
ரெசாலத்திற்கு என்று ஒரு தேவாங்கு. குட்டப்பனுக்கு என்று காடும் யானையும். ஆபேலுக்கு என்று ராபி. காட்டில் ஐயருக்கு என்று அவருடைய சைவ மெய்யியலும் காடே வாழ்க்கை என்று அவரவர் விருப்பத்திற்கு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொள்கின்றனர். நிலம் அவர்களை தொந்தரவு செய்வதில்லை. அவர்களும் நிலத்தை சீண்டுவதில்லை. நிலத்தின் வாழ்க்கை எவ்வளவு குழப்பங்களால் நிறைந்தது! காட்டில் இருந்து நிலத்தை பார்க்கும் போது அதன் சீரழிந்த நாற்றமெடுக்கும் அழுகிய தன்மை தெளிவாக காணப்படுகிறது. நம்மிடம் இருக்கும் அறம் என்ற மிக உயர்ந்த கூற்றே கூட நிலம் தன் வசதிக்காக கட்டமைத்துக் கொண்ட செயற்கையான விழுமியமோ என்று தோன்றுகிறது.
வெளியில் இருந்து மற்றொருவரை உள்ளே அனுமதிக்காத இரு அல்லது ஒரே பாலினத்தவர்களின் obsessive இணக்கம் பல கால கட்டங்களில் என்னை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. அதுவும் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு கால கட்டத்தில் சில obsessive இணையர்கள் அதிகம் எரிச்சலை உண்டாக்கி இருக்கின்றனர். அவர்கள் இருவருடைய உலகத்தில் மற்றெவருவருக்கும் இடம் கிடையாது என்பதில்லை அவர்கள் பாவனை. தங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இந்த பூமியில் இல்லை என்று கூறுவது போன்று இருக்கும் அவர்களது இணக்கம். இன்றுவரையிலும் இது போன்ற obsessive இணையர்கள் என் கண் முன் நின்று கொண்டு எரிச்சல் அடையச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்த obsessive இணையர்கள் விளங்கிக் கொள்ள முடியாத பெரும் புதிர்கள். காடு நாவலில் ராபி ஆபெல் இரட்டையர்களை பார்த்த பின்பு புதிர் விளங்கி விட்டது எரிச்சல் அடைய அவசியம் இல்லை என்று விளங்கிவிட்டது. மேலும் எச்சரிக்கை ஒன்றும் கிடைத்தது. இரட்டையர்களில் நடுவில் நுழைந்து அவர்களின் இணக்கமான பேச்சுக்களில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்று கிரிதரன் முயற்சி செய்கிறான். குட்டப்பன் அது கூடாது என்று தடுத்து எச்சரிக்கிறார். அவர்கள் இருவரும் ஒரே கத்தரியின் இரண்டு கத்திகளைப் போன்றவர்கள் என்கிறான். அந்த ஒன்றில் இருவர் மட்டுமே இயங்க முடியும். மூன்றாவது ஒருவர் உள்ளே நுழைய முற்பட்டால் ஆபத்துதான் என்று. ஒன்றின் இரண்டு மூன்றாவதை கத்தரித்துக் கொன்றுவிடும். அத்துடன் கிரிதரன் அவர்களிடம் உரையாட முற்படுவதை கைவிட்டு விடுகிறான்.
நாவலின் இறுதியில் இரட்டையரில் ஒருவரை விஷக் காய்ச்சல் தாக்குகிறது. காய்ச்சல் உற்றவனை இன்னொருவர் தொட மற்றவன் மிருகம் போன்று அனுமதிக்காமல் தடுக்கிறான். அவன் ஒண்டி ஆளாக அவனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறான். அவன் ஒருவனே அவனை பராமரிக்கிறான். அவனை பராமரிக்க தன்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்காததை பார்க்கும் போது குட்டப்பன் சொன்ன கத்தரிதான் அவர்கள் என்பது உண்மையாகிறது. நிஜத்தில் நான் கண்டு எரிச்சல் அடைந்த அத்துனை obsessive இணையர்கள் அனைவருமே வெட்டும் கத்தரிகள்தாம் என்ற வாழ்வின் விளங்கிக் கொள்ள முடியாத இந்த சூட்சுமத்தை ராபி ஆபேல் வழியே தெளிவு படுத்திக் கொண்டேன். அவர்கள் ஒரே பாலினத்தவர்க்களாகவோ அல்லது இரு பாலினத்தினராகவோ இருந்தாலும் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் என்ற இந்த புதிருக்கான விடை குட்டப்பனின் கத்தரிகளின் படிமம் வழியே விளங்கிக் கொண்டேன்.
நாவலுக்கான வேதசகாயகுமாரின் முன்னுரை தனித்த ஆய்வுக் கட்டுரை என்றுதான் சொல்ல வேண்டும். நாவலின் கதையில் பெரும் ரசனையில் கம்பராமாயணமே கதியாகக் கிடக்கும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வேதசகாயகுமார் என்ற புனைவு பாத்திரத்தை வாசித்து விட்டு உண்மை உலகத்தில் உள்ள அதுவும் இதே நாவலுக்கு முன்னுரை எழுத ஆரம்பித்த வேதசகாயகுமார் அந்த புனைவு பாத்திரத்தை வாசித்ததும் எப்படி உணர்ந்திருப்பார் என்று எண்ணிக் கொண்டு இளநகையோடு காடு நாவலை மூடி வைத்தேன்.
நன்றி!
அருள்