கீதையின் முகப்பில்- கடிதம்

அங்குலப்புழுவின் நடனம்

அன்புள்ள ஜெ,

இன்று உங்கள் கீதை உரையான கீதையை அறிதலை சிறு நூலாக வாசித்து முடித்தேன். என் அம்மா சேலம் புத்தகக் கண்காட்சியில் இந்த நூலை வாங்கினார்கள். வாசித்துவிட்டு எனக்கு பரிந்துரைத்து அனுப்பியிருந்தார்கள். நான் ஆன்மிகமான நாட்டம் கொண்டவன். 

ஆன்மிக நாட்டம் என் வாழ்க்கையில் இருந்து உருவான ஒன்றும். 21 வயது வரைக்கும் தொடர்ச்சியான சுவாசநோயால் அவதிப்பட்டுவந்தேன். வாழ்க்கைமேலேயே பிடிப்பில்லாமல் இருந்து வந்தேன். ஆன்மிகமான புரிதல்கள் வழியாக என்னை மீட்டுக்கொண்டேன். தியானம், யோகம், சுவாசப்பயிற்சிகளை மேற்கொண்டேன். இங்கே இருக்கும் பிரபஞ்சத்துடன் என்னை சரியாக இணைத்துக்கொள்வதே மெய்யான ஆன்மிகம் என்று புரிந்துகொண்டேன். அதுவே என் வாழ்க்கையின் அடிப்படையாக ஆகியது. இன்று நான் நிம்மதியான, உற்சாகமான, பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்கிறேன் என்றால் அது ஆன்மிகத்தால்தான். 

என் ஆன்மிக ஆசிரியர் என்றால் அது சுவாமி சித்பவானந்தர்தான். நான் வாசித்த முதல் நூல் சித்பவானந்தரின் கீதை உரைதான். அதன்பின்னர் பல உரைகளை வாசித்திருக்கிறேன். என் ஆன்மிகப்பயிற்சியாளரான குரு சுவரானந்தரும் பயிற்சிகள் அளித்திருக்கிறார். ஆனால் இந்த கீதையுரை எனக்கு முற்றிலும் புதிய ஒன்றாக இருந்தது. 

இதுவரைக்குமாக நான் வாசித்த கீதையுரைகள் இரண்டுவகையானவை. சித்பவானந்தர் போன்றவர்கள் கீதையை எங்களைப்போல அன்றாடத்தில் உழலும் சாமானியர்களுக்காக மிகமிக எளிமையான உபதேசமாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் அப்படி அதை விளக்கியிராவிட்டால் நானெல்லாம் வாசித்திருக்கவோ மீண்டிருக்கவோ மாட்டேன். அத்துடன் பல்வேறு கீதையுரைகள் அவரவர் ஆன்மிகப்பாதையை கீதையுடன் இணைப்பதையே செய்துள்ளன. 

பெரும்பாலான கீதை உரைகள் கீதையை தங்களுக்குத் தேவையானபடி புரிந்துகொள்வது என்னும் அளவிலேயே உள்ளன. அதெல்லாம் பிழை இல்லை. கங்கையை சிலர் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் குளிக்கிறார்கள். சிலர் விவசாயம் செய்கிறார்கள். அவரவர் பாத்திரத்துக்கு ஏற்றபடி அவரவர் தாகத்துக்கு ஏற்றபடி ஆறு உருமாறுகிறது. 

ஆனால் மெய்யாக கீதையின் வரலாறு என்ன,இந்திய தத்துவ மரபில் அதன் இடம் என்ன, கீதையை உலகதத்துவத்தின் பின்புலத்திலும் இன்றைய சிந்தனையின் பின்புலத்திலும் எப்படி புரிந்துகொள்வது என்ற கோணத்தில் செய்யப்பட்ட மிகச்சிறந்த அறிமுகம் என்று கீதையுரையைச் சொல்லமுடியும். மிக அற்புதமான ஒரு நூல். உரையாக ஆற்றப்பட்டமையால் அபாரமான ஒரு ஒழுக்கு இதற்கு உள்ளது. எடுத்தால் கீழே வைக்கமுடியாதபடி ஒரு வாசிப்பனுபவத்தை இது அளிக்கிறது. 

கீதையை வாசிப்பவர்களின் பிரச்சினை என்னவென்றால் அதை அவர்கள் இன்று நமக்குக்கிடைக்கும் எந்த ஒரு நூலையும்போல வாசிக்கிறார்கள் என்பதுதான். அது ஒரு குருமரபின் மூலநூல். ஒரு சிந்தனைமுறையின் சூத்திரவடிவ நூல். அதை வாசிக்க ஏராளமான துணைநூல்கள் உள்ளன. முன்னூல்கள் உள்ளன. அதை வாசிக்க ஒரு முறைமை உள்ளது. அதன் சொற்களுக்கெல்லாம் தனியான தத்துவ அர்த்தங்கள் உள்ளன. அதையெல்லாம் விளக்கும் அபாரமான உரைநூல் என்று இதைச் சொல்வேன். இந்நூலில்தான் யோகம் என்று கீதை சொல்வதற்கு என்ன பொருள் என்று புரிந்துகொண்டேன். இதுவரை நானும் யோகப்பயிற்சி என்றுதான் புரிந்து வைத்திருந்தேன்.

இந்த அழகான நூலுக்காக மனமார்ந்த நன்றி. கீதையை புரிந்துகொள்ள விழைபவர்கள், கீதையினுள் நுழைவதற்கு முன்பாக அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது. கீதையுரைகள் எவற்றை வாசிப்பதென்றாலும் இந்நுலை அவற்றுக்கான முன்னுரையாகக் கொள்ளலாம். அதிகம் போனால் இரண்டுமணிநேரத்தில் வாசிக்கத்தக்க இந்நூலை ஒரு வாழ்க்கைமுழுக்க கூடவே வரும் ஒரு பெரிய ஆன்மிகத்துணைவன் என்று தயங்காமல் சொல்லமுடியும்.

நன்றி.

கிருஷ்ணா பிரபாகர்

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா பதிவுகள்
அடுத்த கட்டுரைகு.கல்யாணசுந்தரம்