அன்புள்ள ஜெ,
உங்கள் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருபவன் என்றாலும் உங்களுடைய ஆன்மிகநூல்கள் மீதுதான் எனக்கு ஆர்வம் மிகுதி. மெய்யான ஆன்மிகம் என்பது ஒரு விளிம்புநிலை வழியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டியது. உபநிஷத் சொல்வதுபோல கத்திமுனையில் பயணம் செய்யவேண்டும். ஒரு பக்கம் மூடநம்பிக்கையும் ஆசாரவாதமும். இன்னொரு பக்கம் அறிவியலும் தத்துவமும். இரண்டு பக்கமும் சாயக்கூடாது. ஒரு துளி சாய்ந்தால்கூட ஆன்மிகம் சிக்கலாக ஆகிவிடும். அதைவிடவும் சிக்கல் அறிவுசார்ந்த ஆணவம் கொஞ்சம் வந்தால்கூட ஆன்மிகம் என்றபேரில் சொந்த விளக்கங்களை அளிப்பதும் சொந்த அனுபவங்களை மிகைபடுத்திக்கொள்வதும் ஆரம்பமாகிவிடும். தமிழில் தொடர்ச்சியாக மெய்யான ஆன்மிகத்தை முன்வைத்து வருபவர்களில் நீங்களே முக்கியமானவர். அதற்கு உங்களுக்கு உங்கள் ஆசிரியரின் ஆசி பூரணமாக உள்ளது.
இந்தியஞானம் என்னும் நூலை ஒரு பாடநூல் என்றே சொல்லவேண்டும். இந்திய ஞானமரபை இலக்கியங்களிலும் தத்துவமரபிலும் நுணுக்கமாக ஆராய்ந்து வகுத்துரைக்கும் அழகான நூல் இது. ஆனால் எந்தவகையான பாவனைகளும் இல்லாமல் நேர்த்தியான நடையில் விரிவாக்கச் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சிந்தனைமுழுக்க ஊடுருவியுள்ள வேதாந்தம் பற்றிய ஆய்வுகள் மிக ஆழமானவை. ஒரு பொற்பட்டுநூல் என்னும் சொல்லை ஜபம் போலச் சொல்லிக்கொண்டே இருந்தேன். பாவனை என ஏன் சொல்கிறேன் என்றால் இரண்டு வகையான பாவனைகள் இங்கே உண்டு. மிதமிஞ்சிய நெகிழ்ச்சியையும் அனுபூதிநிலையையும் பாவனை செய்வார்கள். அல்லது தத்துவஞானத்தில் கரைகண்ட பண்டிதசிரோமணிகளாகப் பாவனை செய்வார்கள். நீங்கள் வாசித்ததெல்லாம் ஆழமான புரிதலுக்கு மட்டுமே உதவியிருக்கிறது. நான் அண்மையிலே வாசித்த அருமையான மெய்யியல் நூல் இது.
எஸ்.ஆர். சந்தானம்
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)