பயணங்களில் திரள்வது

அண்மையில் ஒரு நண்பர் ஒரு கேள்வியைக் கேட்டார், இன்றைய கூகிள் யுகத்தில் பயணக்கட்டுரைகளின் தேவை என்ன? அதிலும் தொடர்ச்சியாக செய்திகளில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்தியாவின் வழியாகச் செல்லும் பயணங்களை ஏன் வாசிக்கவேண்டும்?

நான் அதற்குச் சொன்ன பதில் இதுதான். இந்த பயணநூல்கள் ஏன் இத்தனை ஆர்வமாக வாசிக்கப்படுகின்றன? என் நூல்களில் அதிகமாக விற்பவற்றில் இவையும் உண்டு. ஏன் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்? எனில் இவற்றுக்கான தேவை உள்ளது என்றுதானே பொருள்? கூகிள் அந்த தேவையை நிறைவேற்றவில்லை அல்லவா? அந்த தேவையை நீங்கள்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

அந்நண்பர் மேலும் வாதிடத்தொடங்க நான் மேற்கொண்டு பேசுவதில் ஆர்வமிழந்தேன். ஆனால் எனக்குள் அந்த வினா பதிந்துவிட்டது. நுணுக்கமாக அந்த கேள்வியை விரித்துக்கொண்டேன்.இத்தனை செய்திகளில் இல்லாதது என்ன பயணக்கட்டுரைகளில் இருக்கிறது? இத்தனை காட்சியூடகப் பதிவுகளில் (விளாக் என்ற செல்லப்பெயரில் அவை இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன) இல்லாதது எது அச்சுவடிவ நூலில் உள்ளது?  எத்தனை விவரித்தாலும் மொழிவடிவப் பதிவு காட்சிப்பதிவுக்கு நிகராகாது அல்லவா?

அதற்கான பதில் ஒன்றே. இவை இலக்கியங்கள். இலக்கியத்திற்கான தேவைதான் இவற்றை வாசிக்க வைக்கிறது. பயணப்பதிவுகளுக்கும் பயண இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? அந்த வேறுபாடுதான் இத்தனை பதிவுகளுக்கு பிறகும் இவற்றை தேடி வாசிக்கச்செய்கிறது.

இலக்கியப்படைப்பின் முதன்மையான அம்சம் அதன் ஆசிரியன்தான். கூகிள்பதிவில் அவன் இல்லை. ஆசிரியன் தான் ஒரு பதிவை, ஒரு வெளிப்பாட்டை ஒரு படைப்பாக (டெக்ஸ்ட் ஆக) மாற்றுபவன். வாசகன் தேடுவது ஒரு படைப்பைத்தான். ஒரு படைப்பு எந்நிலையிலும் புறவயமானது அல்ல.  தானியங்கித்தன்மை கொண்டது அல்ல. அது ஓர் உருவாக்கம். அதை உருவாக்கிய ஆசிரியனின் வெளிப்பாடு அது. ஒரு படைப்பின் பேசுபொருள் என்பது அந்த ஆசிரியனில் இருந்து வேறுபட்டது அல்ல. அவனேதான் அப்பேசுபொருள். படைப்பில் வாசகன் பார்க்க விரும்புவது அதன் ஆசிரியனைத்தான்.

படைப்பை வாசிக்கையில் அங்கே நிகழ்வது ‘தெரிந்துகொள்ளும்’ அனுபவம் அல்ல. தெரிந்துகொள்ள பயணக்கையேடுகளே போதும். பயண இலக்கியத்தில் வாசகன் அந்த ஆசிரியனுடன் ஓர் உரையாடலை நிகழ்த்துகிறான். அப்படைப்பை ஆசிரியன் தன் மொழியினூடாக முன்வைக்க மொழியில் இருந்து வாசகனே அதை மீண்டும் உருவாக்கிக் கொள்கிறான்.

இப்படிச் சொல்லலாம். ஒரு பயணக்கையேட்டில் உள்ள நிலம் என்பது புறவயமான தகவல். ஓரு பயண இலக்கியத்திலுள்ள நிலம் அந்த நூலில் இருந்து அந்த வாசகனால் வாசிப்பின் வழியாக உருவாக்கிக்கொள்ளப்படுவது. அந்த வாசகப்பங்களிப்பே அதை படைப்பாக ஆக்குகிறது. அந்த வாசக இடம் வழியாகவே பயண இலக்கியம் அகவிரிவு கொண்டதாக ஆகிறது. வாசிக்க வாசிக்க பெரிதாகிறது. வாசிப்பில் விரிவதே படைப்பாக முடியும். பதிவுகள் அப்படி ஆவதில்லை.

காணொளிகள் அவற்றுக்குப் பின் அவற்றை உருவாக்கித் தொகுக்கும் ஓர் ஆசிரியன் இருப்பான் என்றால் படைப்புகளே. உலகின் மகத்தான திரைப்படைப்பாளிகள் அவ்வாறு காணொளிப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு அவை ஒருபடி குறைவானவையே, ஏனென்றால் நான் மொழியினூடாகக் கற்பனை செய்வதை விரும்புபவன்.

நாங்கள் மூன்று வெவ்வேறு பயணங்களிலாக வடகிழக்கு நோக்கி பயணம் செய்தவை இரு நூல்களாக வெளிவந்துள்ளன. சூரியதிசைப்பயணம், எழுகதிர் நிலம் என்னும் அவ்விரு நூல்களையும் நான்  வாசித்துப்பார்த்தபோது மீண்டும் ஒரு புத்தம்புதிய பயணத்தைச் செய்தேன், மொழி வழியாகச் செய்த அந்தப்பயணம் நேரில்சென்ற அப்பயணத்தைவிட மகத்தானதாக இருந்தது.

எந்தப்பயணத்திலும் நான் குழந்தைபோல இருக்க முயல்வேன். கண்களைத் திறந்துவைத்து வேடிக்கைபார்ப்பேன். எவை என்னில் இயல்பாகப் பதிகின்றனவோ அவையே முக்கியமானவை. அவை சின்னஞ்சிறு செய்திகளாக இருக்கலாம். ஆனால் அவை என்னளவில் குறியீட்டுத்தன்மை கொண்டவை. என் நினைவில் அவை நீடிப்பதற்கான காரணமே அவை குறியீடுகள் என்பதனால்தான்.அவை நினைவில் பதியும்போதே வெவ்வேறு அர்த்த அடுக்குகளை ஏற்றுக்கொண்டு குறியீடுகளாகிவிடுகின்றன.

உதாரணமாக, நாகாலாந்தின் ஒரு சந்தையில் விதவிதமான கத்திகளும் வாள்களும் அம்புகளும் விற்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. என் கண்களுக்கு விதவிதமான ஒளிரும் மீன்கள் பரப்பி வைக்கப்பட்டிருப்பதாகவே அவை தோற்றமளித்தன. இன்றும் நீடிக்கும் அந்தக் காட்சி அந்நிலத்தின் பழங்குடித்தன்மையை ,வேட்டைக்கலாச்சாரத்தை சொல்வதாக ஆகிறது. அங்கிருந்தும் வளர்ந்தேறுகிறது.

எந்தப் படைப்புக்கும் அடிப்படை அலகு என்பது படிமமே. இலக்கியம் மொழிப்படிமம், மற்றும் காட்சிப்படிமங்களால் ஆனது. அவ்வகையில் இந்த நூல்களும் ஒரு நாவலை போல படிமங்களின் தொகைகளாக வாசிக்கத்தக்கவை. வாசக உள்ளத்தில் கனவை எழுப்பும்தன்மை கொண்டவை .

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

சூரியதிசைப்பயணம்

எழுகதிர்நிலம், கடிதம்

முந்தைய கட்டுரைவாசாப்பு நாடகம்
அடுத்த கட்டுரைதிருவாசக உரை