இந்து ஞானம் – அடிப்படைக் கேள்விகள்

இந்த கேள்விகள் அனைத்துமே வெவ்வேறு தருணங்களில் என்னை வந்தடைந்தவை. நான் தொடர்ச்சியாக வாசகர்களுடன் உரையாடிக் கொண்டே இருப்பவன். ஆகவே இன்று நம் சூழலில் திகழும் ஐயங்கள் எனக்கு மின்னஞ்சல்களாக வந்தடைகின்றன. அவை இரண்டு வகைகளில் எனக்கு முக்கியமானவை. ஒன்று, இன்றைய சூழலில் என்னென்ன சிந்தனைகளும் ஐயங்களும் உள்ளன என்பதை என்னால் அவற்றினூடாக உணர முடிகிறது. இரண்டு அவற்றுக்கான பதில்களை நான் என்னுள்ளும் வரலாற்றிலும் கேட்டுக்கொள்ள முடிகிறது.அவை என்னை தொடர்ச்சியாக நூல்களிலும், மரபின் குறியீடுகளிலும் ஆழ்ந்திறங்கச் செய்கின்றன.

இந்த வினாக்கள் மிக அடிப்படையானவை. ஆகவே எளியவை. இவற்றுக்கு நான் நம்பிக்கை சார்ந்த பதில்களைச் சொல்லவில்லை. என் பதில்கள் வரலாறு, பண்பாடு ஆகிய களங்களின் அடிப்படையான தர்க்கங்களில் இருந்து உருவாகின்றவை. அவற்றை ஒரு வாசகர் பரிசீலித்துப் பார்க்கலாம். தொடர்ச்சியாக மேலே சிந்தித்துச் செல்லலாம். இவை தொடக்கநிலை வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. ஆகவே மிகச்சுருக்கமாகவே உள்ளன. சிந்திப்பதற்கான ஒரு தொடக்கத்தையே அளித்துள்ளேன். ஆர்வம் கொண்டவர்கள் மேலே தொடர்ந்து வாசிக்கலாம்.

தொடர்ச்சியாக நான் ஒன்றை தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். மதம் என்பது வெறுமொரு அதிகார அமைப்பு அல்ல. அது சமூக ஆதிக்கத்திற்காக சிலர் உருவாக்கிய கருத்தியல் அல்ல. அது தொன்மையான கற்காலம் முதல் மானுடன் கொண்ட அடிப்படையான வினாக்களில் இருந்து எழுந்தது. வாழ்க்கைபற்றி, பிரபஞ்சம் பற்றி மானுடனின் தேடலும் கண்டடைதலும் அடங்கியது. பல்லாயிரமாண்டுகளாக அந்த தேடலை மானுடன் முன்னெடுத்ததும் கண்டடைந்தவையும் மதங்களிலேயே உறைகின்றன. ஆகவே மதத்தை சிந்திக்கும் மானுடர் எவரும் நிராகரிக்க முடியாது. மதமே தத்துவம், கலை, இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றின் பெருந்தொகுப்பு.

மதம் அதிகாரத்தால் பயன்படுத்தப்பட்டது. எல்லா சிந்தனைகளும் அதிகாரத்தால் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றுகூட விதிவிலக்கு அல்ல. அக்காரணத்தால் சிந்தனைகளை நாம் நிராகரிக்கமுடியாது. சிந்தனைகளிலுள்ள அதிகார அம்சத்தை, ஆதிக்கக் கூறை அகற்றும் பணியிலேயே சிந்தனையாளர் ஈடுபடவேண்டும். மதத்திலுள்ள மெய்யியலை, தத்துவத்தை, கலையிலக்கியத்தை அதிகாரத்தில் இருந்து பிரித்து மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். மதம் வேறு மத அரசியல் வேறு. இந்த வேறுபாட்டையே சொல்லிக்கொண்டிருக்கிறேன். 

அவ்வாறு மதத்தை வரலாற்று, பண்பாட்டு நோக்கில் அறிபவர்களுக்கான தொடக்கநூல் இது. எளிய அரசியல்களுக்கும், தனிப்பட்ட மதக்காழ்ப்புகளுக்கும் அப்பால் சென்று மெய்யாகவே அறிவின் பாதையை கடைக்கொள்பவர்களுக்கான சிறிய வழிகாட்டி இது.

ஜெயமோகன்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்துஞானம் அடிப்படைக் கேள்விகள் நூலுக்கான முன்னுரை)

தொடர்புக்கு : [email protected] 

Phone 9080283887)

முந்தைய கட்டுரைகாமன்
அடுத்த கட்டுரைசித்தாந்தம்- சைவ இதழ் தொடக்கம்