இரா. முருகனுடைய படைப்புகளைத் தொகுத்துக் கொள்ள முற்படுகையில் பள்ளி காலத்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பார்த்த இரு காட்சிகள் நினைவிற்கு வந்தது. முதலாவது பெருங்கூட்ட நெரிசலில் முண்டியடித்து சென்று கொண்டிருக்கும்போது கருவறையில் இருளில் பிரகாசமான ஒளியில் ததும்பிய பகவதியின் மூக்குத்தி. பின் எப்போதும் மறக்க இயலாத அரூபமான காட்சியாக மனதில் தங்கிய ஒன்று அது. மேற்கு வானில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் எப்போது பகவதியின் மூக்குத்தியாகவே அதன்பின் தெரிந்தது. இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தபின் அது சுகுமாரனின் கவிதையாக, வெண்முரசில் கறும் இரவில் தன்னை மறந்து சென்ற நளனுக்கான தேவையானியின் காத்திருப்பாக, பின்னர் காத்திருப்பு என்ற உணர்வு மட்டுமேயாக என அக்காட்சி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இத்தகைய அரூபமான உணர்வை அளிக்கக்கூடியது கலை. இலக்கியத்தில் அவ்வுணர்வை பெருங்கவிஞர்களும், செவ்வியல் இலக்கியவாதிகளும் கடத்துவதை உணர்ந்திருக்கிறேன்.
சுற்றுலாவிலிருந்து நினைவுக்கு வரும் இன்னொரு காட்சி பத்மநாபபுரம் அரண்மனையில் ராணி காலைக்கடன் கழிக்கும் இடம் என்று காண்பித்த அறை. அது ஒரு கருங்கல்லால் ஆன இந்தியப் பாணியிலான கழிப்பறை. அக்காட்சி மனதை விட்டு நீங்காமல் இருந்ததற்கான காரணம் அன்று அடைந்த திகைப்பு தான். ஏனெனில் அது நாள் வரை ராணி காலைக்கடன் கழிப்பதை நான் கற்பனை செய்திருக்கவில்லை. ராஜாவையும் ராணியையும் அத்தகைய ஒரு சாமானிய தளத்தில் வைத்து அது நாள் வரை யாரும் எனக்கு கதை சொல்லியிருக்கவில்லை. பத்மநாபபுரத்தின் பெரும் அரண்மனையும், நடன அரங்குகளும் இதுவரை சொல்லப்பட்ட வீரதீர வரலாற்றுக் கதைகளுடன் இணைக்க முடிந்தாலும், அதே இடத்தில் இருக்கும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் கழிவறையை கற்பனையில் கோர்க்க முடியவில்லை.
பெரும்பாலும் நாம் புனிதமாகக் கற்பனை செய்து கொள்பவர்களை சாமானிய தளத்தில் வைத்து பார்க்க முடிவதில்லை. வரலாறும், வரலாற்று நாயர்களும் கூட அப்படித்தான். திட்டவட்டமான அதன் நேர்கோட்டுத்தன்மையான காலக்கோட்டில் மாற்றத்திற்கு இடமில்லை. நம் பகற்கனவுகளில் கற்பனையேற்றதினால் பேரழகாகத் தெரியும் பலவும் நிதர்சனத்தில் அவ்வாறு அல்ல என்பதை அந்தக் கழிவறை காட்சி பின்னெப்போதும் எனக்கு நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. புறம் மட்டுமல்ல அகம் சார்ந்தவைகள் கூட அவ்வாறு தான். இந்த யதார்த்தவாதம் அல்லது அன்றாட அழகியல் தான் நவீனத்துவ எழுத்தாளர்கள் பேச வேண்டிய பெருங்களத்தை அமைத்துக் கொடுத்தது எனலாம். யதார்த்தத்தில் இல்லாத நல்லதன்மையை, புனிதத்தன்மையை கேள்விகேட்கும் விதமாகவே அவை எழுதிப்பார்க்கப்பட்டது.
இரா.முருகனை அந்த வகையில் நவீனத்துவ எழுத்தாளர்களின் நீட்சி என்று அவருடைய முதல் காலகட்டத்தைப் பொறுத்து மதிப்பிடலாம். அவரின் முதல் காலகட்டம் என்பது அரசூர் வம்சத்திற்கு முந்தைய படைப்புகள். இரா. முருகன் காஃப்கா, குந்தர் கிராஸ், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஆகியோரின் சோர்வு தட்டாத எழுத்தை முன் உதாரணமாகக் கொண்டு 1980-களின் ஆரம்பத்தில் கவிதைகள், சிறுகதைகள் வழியாக இலக்கியத்திற்குள் நுழைகிறார். அவரின் முதல் காலகட்டத்தைப் பொறுத்து இரு அம்சங்கள் தென்படுகின்றன. ஒன்று தன்வரலாற்றுக்கூறு தன்மை. இரண்டாவது பகடி. இதில் தன்வரலாற்றுத்தன்மை என்ற கூறு அவரின் சமீபத்திய நாவலான மிளகு நாவல் வரை தொடர்ச்சியாக வந்துள்ளது. இரண்டாவது கூறு அரசூர் நாவல்களில் தேய்ந்து பின் இல்லாமல் ஆவதைப் பார்க்க முடிகிறது. தொடர் பகடிகள் மேன்மையானவற்றையும் எளிதாக கீழிறக்கும் வல்லமை கொண்டவை. அந்தவகையில் அது இரா.முருகனை இயல்பாக கைவிட்டுச் செல்வது என்பது அவர் புனைவுப் பயணத்தில் முக்கியமான புள்ளி.
இரா.முருகனின் முதல் நாவலான “மூன்றுவிரல்” 2002-ல் வெளியானது. நவீன தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த வாழ்க்கையில் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கைக்கான நேரச் சமநிலை மற்றும் உளநிலைகளைப்பற்றி சரியான சித்தரிப்பை தருவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. இந்த நாவலுடன் அவர் எழுதிய சிலிக்கான உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறுகதைகளையும் இணைத்துக் கொள்ளலாம். நாவல் வெளிவந்த 2002 காலகட்டம் என்பது வேலைச் சந்தையில் தகவல் தொழில் நுட்பத்துறை பிரபலமாக இருந்த காலகட்டம். தொழில் நுட்பத்துறை எனும் பெரும் வலைபின்னலில் ஒருவரின் பங்கு என்பது எத்தனை எளிய கண்ணி என்பதிலிருந்தே நாவல் தொடங்குகிறது. ஒரு நாய் கிளீனிக்குக்கான வலைதளத்திற்கான எளிய பணியைச் செய்யும் சுதர்சன் தான் அதன் நாயகன். அவன் வழியாக அதிலுள்ள சாமானியர்களின் வாழ்க்கையும், வீழ்ச்சியும் நாவலில்சொல்லப்பட்டது. மிகுந்த அறிவாளியான ஒருவனின் வாழ்க்கை வீணடிப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் அவன் மீண்டும் கண்ட்ரோல் அல்ட் டெலீட் என அடுத்தகட்ட வாழ்க்கை நகர்வுக்குத் தயாராகும் ஒரு மீட்சியாகவும் வாசிக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த நாவலின் பேசுபொருள் என்பது நவீனத்துவ பாணிக்கு அணுக்கமானது.
*
அரசூர் நாவல்கள் மற்றும் அதற்கு பின்னான காலகட்டத்தில் பின்நவீனத்துவம், மாய யதார்த்தவாதம் பாணியிலான வரலாற்றுப் புனைவு நாவல்களை எழுதினார். காலம், இடம் என இரு பரிமாணங்களையும் முன்னும் பின்னும் நகர்த்திப் பார்க்கத்தேவையான மாயத்தையும், பிறழ்வையும், ஜம்ப் கட் உத்தியையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். திரைத்துறையில் பயன்படுத்தும் ஜம்ப் கட் உத்தியை இலக்கியத்தில் பயன்படுத்தியவர் என அசோகமித்ரன் இரா.முருகனின் கதைகளைப் பற்றி குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது.
வரலாறு என்பதே தன்னளவில் புனைவு தான். வரலாற்றை சாமானியரின் வாழ்க்கையை விசாரிக்க சட்டமாகப் பயன்படுத்திக் கொண்டவர் இரா.முருகன். தமிழில் வரலாற்றுப் புனைவுக்கு நீண்ட மரபு உள்ளது. தமிழ் நாவல்களின் ஆரம்பக காலகட்ட முயற்சிகள் என அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சித்திலெப்பை மரக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் (1885), பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் (1893), தி.த.சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி (1895) ஆகிய கதைகள் வரலாற்றுப் புனைவைச் சேர்ந்தவையே.
தீவிர இலக்கியத்தில் வரலாற்று நாவல்களைப் பொறுத்து சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், ந. சிதம்பர சுப்பிரமணியன் மண்ணில் தெரியுது வானம் ஆகியவை முக்கியமானவை. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாயக பிம்ப உருவாக்கல் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மதுரை நகரின் வரலாற்றை சித்தரிக்கும் வரலாற்றுப் புனைவாக கருதப்பட்டது. ஜெயமோகனின் வெள்ளையானை, பின்தொடரும் நிழனின் குரல் ஆகியவை புதிய-செவ்வியல் தன்மை கொண்ட வரலாற்று நாவல்களாக கருதப்பட்டன. தொண்ணூறுகளுக்குப் பிறகு நுண்வரலாறு சார்ந்த யதார்த்தவாதக் கதைகள் உருவாகி வந்தன. வரலாற்று நாவல்களுக்கும் யதார்த்தவாதக் கதைகளுக்கும் இடைப்பட்ட கோடு மெலிவதை இக்காலகட்டத்துக்குப் பின்னான படைப்புகளில் காணலாம்.
1950-களில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மூலம் பெரும் வரிசை கொண்ட ராஜராஜ சோழன் மற்றும் சோழப் பின்னனி கொண்ட பொது வாசிப்புக்குரிய நூல்கள் பல எழுதப்பட்டன. விக்ரமனின் நந்திபுரத்து நாயகி, அரு. ராமநாதன் ராஜராஜ சோழன் என்னும் நாடகம், பாலகுமாரனின் உடையார், சாண்டில்யனின் மன்னன் மகள், எல். கைலாசத்தின் மலர்சோலை மங்கை, அனுஷா வெங்கடேஷின் காவிரி மைந்தன் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவை பெரும்பாலும் வரலாற்றுக் கற்பனாவாத நாவல்கள். சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி சங்ககாலத்தில் குறிப்பிடப்படும் வேள்பாரி மன்னன் பற்றிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்றுக் கற்பனாவாத நாவல். அ.வெண்ணிலாவின் கங்காபுரம் சோழப் பின்னனியில் எழுதப்பட்ட நவீனத்துவகூறுகள் கொண்ட கதை. இவர் எழுதிய நீரதிகாரம் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னி குக் என்னும் பொறியாளர் தன் வரலாற்றை விவரிக்கும் பொதுவாசிப்புக்குரிய வரலாறுப்புனைவு நாவல்.
பின்நவீனத்துவ சிந்தனை செய்த தகர்ப்புப் பணியில் வரலாற்றுப் புனைவின் தகர்ப்பமைப்பும் ஒன்று. அதுகாறும் வரலாற்றுப் புனைவு பெருமளவில் திட்டமான மாறாத்தன்மையுடயதாக இருந்தது. ஆனால் சிதறுண்ட தன்மையும், மாய யதார்த்தமும் அதை இலகுவாக்கி புனைவுக்கான பரப்பை விரிவாக்கின. அந்த வகையில் பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட வரலாற்றுப் புனைவுகளாக பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதை, இரா. முருகனின் அரசூர் நாவல்கள், 1975, மிளகு ஆகியவையும், சாரு நிவேதிதாவின் நான் தான் ஔரங்ஸேப் நாவல் ஆகியவற்றையும் ஒரு வரிசையில் வைக்கலாம்.
சாரு நிவேதிதா 2022-ல் எழுதிய நான் தான் ஒளரங்கஸேப் நாவல் குறித்த ஒரு நேர்காணலில் ”பூமியிலிருந்து மேலே பறந்துகொண்டிருக்கும் பட்சியைப் போல் நான் வரலாற்றை நோக்குகிறேன். ஆகவே என்னைப் பொருத்தவரை பதினைந்தாம் நூற்றாண்டும் நாம் வாழும் இருபத்தியோராம் நூற்றாண்டும் ஒரே விதமாகத்தான் தெரிகின்றன. காலம் அல்லது கால வேறுபாடு என்பது எனக்கு ஒரு நேர்க்கோட்டின் பல புள்ளிகள், அவ்வளவுதான்.” என்கிறார். இது ஒரு பின் நவீனத்துவ பாணியிலான பார்வை. அந்தவகையில் காலத்தின் சிதறுண்ட தன்மையை வரலாற்று நாவலில் பயன்படுத்தியதைப் பொறுத்து இரா.முருகன் பின்நவீனத்துவ வரலாற்றுப் புனைவு பாணி எழுத்தின் முன்னோடி எனலாம்.
*
பொதுவாக கதைகள் அன்றாடத்தளத்திலிருந்து சற்று வித்தியாசமானதை, வித்தியாசமான நாளை, முரண் சார்ந்த விடயங்களைப் பேசுபவை. ஆனால் பெருந்தலைவர்கள், வரலாற்று நாயகர்களேயானாலும் அவர்களின் அன்றாடம் என்பது சுவாரசியமில்லாதவை தான். ஆனால் அவர்களின் வாழ்நாளின் விசேஷமான நன்மை நாட்களின் கூட்டுத்தொகையே வரலாறாகிறது. ஆனால் இரா.முருகனின் வரலாற்றுப் புனைவு இரண்டாலும் ஆனது. நாவல்களின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாளின் டைரிக்குறிப்புகள் போலவே உள்ளன. தனிமனிதர்களின் அன்றாடத்திற்குள் நுழையும் வரலாறே பேசப்படுகிறது. இது எழுதப்பட்ட ஆய்வு ரீதியான நவீன வரலாற்றெழுத்துக்கு மாறாக அதன் இடைவெளிகளில் ஒரு சம்பவம் நிகழ்ந்த காலத்தில் அது எப்படி இருந்திருக்கும், சாமானிய தளத்தில் அந்நிகழ்வு எதிர்கொள்ளப்பட்டிருக்க சாத்தியமான முறையை எழுதி காட்டி அதன் மேல் கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
வரலாற்றை ஆங்கிலேயர்கள், தேசியவாதிகள் ஆகியோரின் கண்கள் வழியாக மட்டுமின்றி சாமானியர்களின் பார்வை வழியாகப் பார்க்கும் பார்வை பின்நவீனத்துவத்திற்கு முன்பிருந்தே இலக்கியத்தில் கையாளப்பட்டிருப்பினும் இரா. முருகனின் நாவல்களில் வரலாற்று நாயர்களின் அன்றாடத்தை சித்தரிப்பதன் வழியாக அவர்களின் சாமானியத்தனத்தை வெளிப்படுத்தும் புதிய கூறு முறையை கையாண்டிருக்கிறார்.
இக்கருவிகளின் வழியாகவெல்லாம் கால நெடுகிலும் சென்று சாமானியர்களின் வாழ்க்கையை தன் பகற்கனவின் வழியாக புனைவாக நிகழ்த்திப் பார்க்க இரா.முருகனால் முடிந்திருக்கிறது. உதாரணமாக 1975 நாவல் முதல் முறையாக எமர்ஜென்சி எனும் வரலாற்று காலகட்டத்தை எடுத்துக் கொண்டு அதில் சாமானியனின் நிலையைச் சொன்ன கதை. அரசூர் வம்சம் நாவல் 1857 முதல் 1967 காலகட்டம் வரையிலான சட்டகத்தில் இரா.முருகனின் முன்னோர்கள் எனும் சாமானியர்களையும் மற்றும் வீழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன்தாரின் அன்றாடத்தின் வழியாக அவரின் சாமானியத்தனத்தையும் சொன்ன நாவல் வரிசை. மிளகு நாவல் காலத்தாவல் உத்திவழியாக 1596-1606 மற்றும் 1999-2000 ஆகிய காலங்களில் பயணிப்பதைப் போலவே, இடத்தாவல் உத்தி வழியாக அம்பலப்புழை, ஹொன்னாவர், புது தில்லி, லண்டன், கந்தஹார் -, மிர்ஜான் கோட்டை, கெர்ர்ஸொப்பா, மதுரை ஆகிய ஊர்களிலும் பயணித்து காலத்துக்கு அப்பாலான பரிமாணத்தில் வரலாற்றைப் பார்க்கும் ஓர் அறிவியல் புனைவுத் தன்மையை வெளிப்படுத்துகிறார்.
*
பெரும் செவ்வியல் நாவல்கள் நம்மை அதன் ஒரு பகுதியாக வாழச் செய்து நாம் நம் மீதும் இந்த உலகத்தின் மீதும் ஏற்றிவைத்த பொருளேற்றங்களைக் களைந்து நம்மை இந்த பெரும் ஊழின் ஒரு பகுதியாக உணரச் செய்து வெறுமையைத் தருபவை. அரசூர் நாவல்கள் அவ்வாறு வாழ்ந்த மனிதர்களை வேடிக்கை பார்க்கச் செய்பவையாக இருக்கின்றது. ஏனெனில் இந்த நாவல்களில் பெரிய அக புறச் சிக்கல்கள் இல்லை என்று சொல்வதை விட சொல்லப்பட்டாலும் விசாரிக்கப்படவில்லை எனலாம்.
ஆனாலும் அகமறிந்த உண்மைகளை அவர் வாழ்ந்த போதீரே பகவதிக்குட்டி, கிட்டவாயனின் மகளான தெரெசா, கற்பகம் பாட்டி, விஸ்வரூபத்தின் கொச்சு தெரெசா, அரசூர் வம்சத்தின் சாமிநாதன், துரைத்தனத்தார் அனுமதிக்கும் மானியத்தில் வாழும் வீழ்ந்து கொண்டிருக்கும் ஜமீந்தார் ஆகியோரின் வழியாக சித்தரிக்கிறார். பணம்/பொருளாதாரம் என்பது பெரும் மையச் சரடாக வருவதைப் பார்க்க முடிகிறது. ”பணம் இருந்தால் காலத்தில் முன்னாலும் பின்னாலும் சென்று வேண்டியதை வாங்கி உபயோகித்து சுவைத்துக் கொள்ளலாம்.” என்ற எண்ணம் இல்லாத மையப் பாத்திரங்கள் கதையில் இல்லை எனலாம். எக்காலத்திலும் இன்றியமையாத பணம், அதிகாரம், காதல் காமத்தை வீழ்ந்து அல்லது தலை எடுத்து வரக்கூடிய ஒரு வம்சத்தின் வழியாக பேசுகிறது.
அபான வாயு பற்றி வரும் இடங்கள், யாரோ மறைந்திருந்து தான் குளிப்பதைப் பார்ப்பதாகச் சொல்லும் ராணி, அவளின் சீகைக்காய் பூசிய தலை, எண்ணெய் ஏறிய தோடுகளோடு வரம் கொடுக்கும் மூத்தகுடிப் பெண்கள் ஆகியவை அந்த சாமனியத்தளத்தில் நடக்கும் பீபத்ச அம்சத்தை சித்தரிக்கிறது.
நெம்பர்-40 ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி ஆகிய இரண்டு நாவல்களும் தன்வரலாற்று நாவல்கள். நினைவுகளிலிருந்து தன் வரலாற்றுத் தன்மையுடன் கூடிய படைப்புகளாக இருந்தாலும் வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகள் அடங்கியதாகவும், அகம் சார்ந்த பார்வைகள் உடைய கதாப்பாத்திரங்கள் இருப்பதால் அழமாக உள்ளது. உதாரணமாக தியூப்ளே வீதியில் வரும் ஜோஸ்பின் கதாப்பாத்திரம். அமேலி, கயல் போன்ற கதாப்பத்திரங்களை கதைசொல்லி கள்ளமற்று, சலனத்துடன், குற்றவுணர்வுடன் எதிர்கொள்வதற்கு எதிர்த்தரப்பில் ஜோஸ்பின் கதைசொல்லிக்கு சொல்லும் வாழ்க்கைப் பார்வை முக்கியமாக உள்ளது. அமேலியுடனான முதல் உறவுக்குப் பின் கதைசொல்லி குற்றவுணர்வுடன் வருந்தும் சமயம் அதை கண்டிப்பதுடன் அவனால் அமேலியின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அவள் அடையச் சாத்தியமான உணர்வுத்தத்தளிப்பையும் அளிக்கும் கதாப்பாத்திரமாக ஜோஸ்பின் வருவது அதன் ஆழத்தைக் காண்பிக்கிறது.
*
இரா. முருகனின் எழுத்தில் வெளிப்படும் இன்னொரு கூறு நுண்வரலாற்றுத் தகவல்கள். புத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் எழுந்த சிந்தனை “உள்ளூர்மயமயமாக்கலே புதிய உலகமயமாக்கல்” என்பது. நுண்வரலாறுகள் வழியாகத் கோர்த்துக் கொள்ள வேண்டிய பெரும் வரலாறு பற்றிய சிந்தனையும் இரண்டாயிரம் காலகட்டத்தில் எழுந்து வந்தது. தமிழ் இலக்கியத்திலும் அது மதம், இனக்குழு, ஊர், குடும்பம், பால், நம்பிக்கைகள், பண்பாடு சார்ந்த நுண்வரலாற்றுக் கூறுகள் கொண்ட படைப்புகளை எழுதும் போக்கை அதிகரித்தது. அ.கா.பெருமாள் போன்ற ஆய்வாளர்கள் வழியாக நுண்வரலாற்று ஆய்வு நூல்கள் கிடைக்கப்பெற்றன. ஒருவகையில் கன்னியாகுமரி, நாகர்கோவில் வட்டாரத்திலிருந்து அதிக எழுத்தாளர்கள் உருவாகி வந்ததற்கு இத்தகைய ஆய்வளர்களின் பங்கு முக்கியமானது. ஆய்வுகள் வெளிவராத பகுதிகளில் புனைவெழுத்தாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தைப் பற்றி அ.கா.பெருமாள் ஒரு கேள்வி-பதில் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். தஞ்சை போன்ற பகுதிகளில் வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும் அளவு நுண்வரலாற்று ஆய்வுகள் கிடைக்காத பட்சத்தில் ஆய்வாளர்கள் சார்ந்திருப்பது தி.ஜா போன்ற புனைவெழுத்தாளர்களின் எழுத்தையே என்று சொன்னார்.
அந்த வகையில் இரா. முருகனின் நாவல்களில் புனைவுக்கான பெருஞ்சட்டகமான வரலாற்றுக் காலத்தைவிட அதை அன்றாடமாக்கி எழுதும் அத்தியாயங்களுக்கு நுண்தகவல் சார்ந்து மெனக்கெட வேண்டிய உழைப்பு அதிகம்.
”அது ஏன் பெரிய பாத்திரங்கள்? நாலு வாய் காபி குடிக்கிற சைஸில் குட்டி டம்ப்ளர்களே போதும். ஒன்றிரண்டு பெரிய பாத்திரங்களை சமூக வரலாற்றிலிருந்து நேரடியாக இறக்கிவிட்டு இதை மேக்ரோ ஹிஸ்டரி சார்ந்த படைப்பாக மாற்றியிருக்கலாம். அரசூர் வம்சத்திலேயே அந்த சவுகரியம் இருந்தது. ஆனாலும் இந்த விஷயத்தை (நுண் வரலாறு) சோதனை செய்து பார்ப்பதில் தான் உற்சாகாம்” என இரா.முருகன் குறிப்பிடுகிறார். அவர் வாழ்வனுபவத்தின் பின்புலம் இல்லாத எந்த நிலப்பரப்பையும் எழுத்தில் கை கொள்ளவில்லை என்பதிலிருந்து அவர் நுண்வரலாற்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பிரயத்தனத்தை தெரிந்து கொள்ளலாம்.
அரசூர் வம்சம் நாவலில் பிராமின் – கிறிஸ்டியன் என்கிற புதிய சமுதாயம் உருவான காலகட்டத்தின் சித்தரிப்பு, அக்காலத்திய சென்னைப் பட்டணம், சிவகங்கை, அரசூர், அம்பலப்புழை ஆகியவற்றைப் பற்றிய பழைய காலச் சித்திரம் ஆகியவை துள்ளியமாக அமைந்துள்ளன. விஸ்வரூபம் என்ற ஒரு நாவலில் 3 நாடுகள், எட்டு ஊர்கள், 4 கலாச்சார சூழல்கள், 6 மொழி நடைகள், 50க்குக் மேற்பட்ட கதாப்பாத்திரங்கள் வருகின்றன.”உணவு” என்ற ஒற்றைக்கூறை எடுத்துக் கொண்டு அவரின் நாவல் வழியாக ஆராய்ந்தால் நம்மால் பெருந்தரவுகளை எடுத்துவிட இயலும்.
அ.கா.பெருமாள் மாதிரியான பெரும் நுண் வரலாற்றாய்வாளர்கள் எல்லா மண்டலங்களுக்கும் இல்லை. இல்லாத இடங்களில் புனைவெழுத்தாளர்கள் வழியாகவே நுண்வரலாற்றுத் தகவல்களை எடுத்தக் கொள்ள வேண்டியிருக்கிறது என்ற நிலையில் நுண்வரலாற்றுத் தகவல் சேகரிப்பைப் பொறுத்து நாஞ்சில் நாடனுக்கு இணையான இடத்தை இரா. முருகனுக்கு வழங்கலாம்.
*
பொதுவாசிப்புக்குரிய வரலாற்றுப்புனைவு உணர்ச்சிகரமானது, நாயகபிம்ப உருவாக்கம் கொண்டது. சில சமயம் அது ஆய்வுத்தகவல்களைக் கோர்த்து எழுதப்படுவது. இதற்கு எதிர்முனையாக இந்த பின்நவீனத்துவ பாணியிலான வரலாற்றுப்புனைவை வைக்கலாம். இரா. முருகனின் எழுத்துக்கள் வழியாக நோக்கினால் இது முதன்மையாக செய்வது வரலாற்றை நோக்கிய பகடியை. அதன் நேர்கோட்டுத்தன்மையை, அது நிறுத்த முற்படும் நாயகர்களை, மிகப்பெரிய கதாப்பாத்திரங்களை பகடி செய்கிறது. காலம் என்பதை முன்னும் பின்னும் மாய யதார்த்தம், அறிவியல் நோக்குவழியாக மயங்கும் ஒரு பரிமாணமாகப் பார்க்கிறது.
இரண்டாயிரங்களுக்குப் பிறகு யதார்த்தவாத எழுத்திற்கும் வரலாற்றுப் புனைவுக்கும் இடைப்பட்ட கோடு மழுங்கி வந்ததற்கான இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று பண்பாட்டில் நுண்வரலாற்றின் மீதான ஆய்வுகள் சார்ந்த தாக்கம். இன்னொன்று தன்னைப் புனைந்து கொண்டு தானே கதாநாயகியா(கரா)க பாவித்துக் கொள்ளுதல் அதிகரிக்கும் போக்கு. முகநூல், இன்ஸ்ஸ்டாகிராம் மற்றும் பிற செயலிகளின் சந்தைப்படுத்தலும் தாக்கமும் இப்போக்கின் அதி தீவிர வளர்ச்சிக்கான காரணம். வேறெந்த காலத்திலும் இருந்ததைவிட தனிமனித ஆவணப்படுத்தல் சார்ந்த இணையக்குப்பை இன்று அதிகரித்திருக்கிறது. சிந்தனைகள் சார்ந்து ஒவ்வொருவரும் துண்டுபட்ட சிந்தனையாளர்களாக, துண்டுபட்ட உள்ளீடற்ற தத்துவவாதிகளாக ஆகிக் கொண்டிருப்பதைக் காணலாம். இது அறத்தின் மீது, விழுமியத்தின் மீது, பெருந்தலைவர்கள், கலைஞர்கள், இயல்பான நன்மை மீதான பெருங்கசப்பை உருவாக்கியிருப்பதையும் காணலாம். இக்கசப்பிற்கும், பொதுவாசிப்புக்கென சந்தைப்படுத்தப்படும் அதீத உணர்ச்சிகரமான நன்மைக்கும் இடையேயான முரணியக்க உரையாடலுக்கு மத்தியில் தான் அறம் சார்ந்த, விழுமியம் சார்ந்த, நேர்நிலையான படைப்புகள் எழுந்து வர இயலும்.
”ஊர் பொதுத்தன்மையும் சிறப்பு தான் ஆனால் உலகப் பொதுமை அதைவிட சிறப்பு” என்பார் பேராசிரியர் மெளனகுரு. அவர் கூத்துக்கலையில் உலகளாவிய தன்மையைக் கொணரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். இன்று வரலாற்றுப் புனைவுக்கும் அத்தகைய ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு பொதுவாசிப்புக்குரிய நூல்களுக்கும் பின் நவீனத்துவ வரலாற்றுபாணி எழுத்துக்கும் இடைப்பட்ட இந்த முரணியக்க உரையாடல் தேவைப்படுகிறது. இதன் நடுப்பாதையில் தான் செவ்வியல்தன்மை வாய்ந்த வரலாற்றுப் புனைவுகள் உருவாகி வர இயலும்.
வெகுஜன வாசகர்கள் வழியாக இலக்கியத்திற்குள் நுழைந்து தீவிர இலக்கியத்தில் பின்நவீனத்துவ பாணி எழுத்தாளராக உருவாகி வந்தவர் இரா. முருகன். இன்று இலக்கியத்தில் வேகப்புனைவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். தீவிர இலக்கியப் படைப்புகள் திரைக்கதையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரைக்கதையாசிரிகள் இலக்கியத்தில் நாவலாசிரியர்களாக இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இயக்குனர்களாக இருக்கிறார்கள். இயக்குனர்கள் எழுத்தாளர்களாகிறார்கள். வணிக எழுத்து என்பது இன்று இல்லாமலாகிவிட்டது. அனைத்து கலைகளும் முயங்கி எழுந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டமிது. அவற்றிலும் உலகத்தை நோக்கிப் பேசக்கூடிய படைப்புகளுக்கான தேவைக்கான கனவை முன்னோடிகள் வைக்கின்றனர். அந்தப் பாதையை நோக்கிய பயணத்தில் இரா.முருகனின் படைப்புகள் வழியாக தென்படும் பின்நவீனத்துவ கருவிகள் முக்கியமானவை.
*
தமிழின் முதல் பின்நவீனத்துவ சிந்தனையாளார் என்று அயோத்திதாச பண்டிதரைச் சொல்லலாம். மாற்றுவரலாற்றுக்கான பாதை ஒன்றை உருவாக்கிய முதல்சிந்தனையாளர் அவர். ஆங்கிலேயர்கள், இந்திய, தமிழ் தேசியவாதிகள் வழியாக உருவாகி வந்த வரலாற்றுக்கு இணையாக மாற்று வரலாற்றை முன்வைத்தவர். இந்தியாவின் மொத்த வரலாற்றையும் முற்றிலும் புதிய ஒரு கோணத்தில் பார்ப்பதற்கான பார்வைக் கோணத்தை அவர் தன் ஆய்வுகளினூடாக உருவாக்கினார். அந்த வகையில் இரா. முருகனை வரலாற்றுப் புனைவெழுத்தில் மாற்றுப் பாதை ஒன்றை உருவாக்கியவராகவும் மதிப்பிடலாம்.
அவரின் இந்த மாற்று வரலாற்றுப் புனைவிற்கான தகர்ப்பமைப்பு கருவிகளைக் காணும்போது மு. தளையசிங்கத்தின் கனவும், அதைப் பற்றிய முன்னோடிகளான எம். வேதசகாயக்குமார், வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன், எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலரும் ஊட்டியில் 2002-ல் நிகழ்த்திய கருத்தரங்கும் நினைவிற்கு வருகிறது. புதிய கூறு முறை, புதிய புனைவுக்களம், புதிய பேசுபொருளுக்கான தேடல் கொண்ட ஒரு இளம் தலைமுறைக்கு சிந்தனையின் ஊற்றுமுகமாக அமைந்தவர் மு. தளையசிங்கம். இதுகாறும் சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் புனைவு நாவல்களுக்கு மாற்று வழியை, வரலாற்றுப் புனைவு எனும் நாவல் வகைமைக்கான பரப்பை விஸ்தரிப்பதாக அமைந்த இரா. முருகனின் நாவல் முயற்சிகள் அந்த வகையில் முக்கியமானவை. இவ்வகையான வரலாற்றுப் புனைவு நாவல் வாசகர்களை நோக்கி எழுதப்படுவது என்பதை விடவும், எழுத்தாளர்களை நோக்கி எழுதப்படுவது என்ற சிந்தனையும் முக்கியமானது.
*
கனவுகளில் இரு வகையுண்டு. ஒன்று கனவை அதன் போக்கில் விடுவது. இரண்டாவது முறைப்படுத்தப்பட்ட கனவு (Lucid Dreaming). அதாவது எதைக் கனவு காண வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது, அதை நாம் கூர்ந்து கவனிப்பது. இது ஒரு அறிவுத்துறையாகவே இன்று வளர்ந்து வருகிறது. “Oneirology” என்பது கனவைப் பற்றிய அறிவுத்துறை. முறைப்படுத்தப்பட்ட கனவுகளிலும் கூட நம்மை மீறி நடக்கும் கனவின் நிகழ்வுகள் உண்டு. பகற்கனவுகள் பெரும்பாலும் இத்தகைய தன்மையைக் கொண்டிருப்பதை நாம் உணரலாம். இரா.முருகனின் புனைவுலகத்தை நாம் அவ்வாறு முறைப்படுத்தப்பட்ட கனவாக அல்லது வரலாற்றுப் புனைவின் பகற்கனவாக சித்தரித்துக் கொள்ளலாம்.
”ஆடுவோரும், ஆடி முடித்து அள்ளிச் செல்லாமல் ஒதுங்குவோரும், ஆட வந்தவர்களுமாகக் கதை விரிவதிலும் ஒரு ரசம் உண்டு.” என இரா.முருகன் குறிப்பிடுகிறார். தன்னுடைய வாழ்க்கையின் சிக்கல்களை முன்னோர்களில் ஆராய்வது என இவரின் கதைகளைச் சொல்லலாமா? வெறும் சமூக வரலாற்று நாவல் என்றோ குடும்ப வரலாறு சார்ந்த நாவல் என்றோ மட்டும் சொல்லிவிட இயலுமா? பழமையில் எதிர்காலத்தின் வித்துக்கள் உறங்குகின்றன என்ற மயக்கமான நம்பிக்கையைத் தரும் கதைகள் எனலாமா? இவையாவற்றையும் தாண்டி கதை சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்பைத் தவிர இரா.முருகனை முடுக்குவது வேறு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. அவரின் நாவல்கள் பெரும்பாலும் கதை சொல்ல வேண்டும், கதையில் வாழ வேண்டும் என்ற முனைப்பில் எழுதப்பட்டவையே. அந்த வகையில் இப்புனைவெழுத்துக்களின் வழியாக வாழ்ந்தும், தன் பகற்கனவுகளை வாசகன் காணவுமான ஒரு புனைவுப் புதிர்களத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த சிதறுண்ட பகற்கனவுகளின் பெருஞ்சட்டகமாக வரலாற்றை பயன்படுத்திக் கொண்டிருப்பது அவர் தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புனைவு எனும் இலக்கியவகைமைக்கு அளித்த சிறந்த பின்நவீனத்துவக் கருவி.
தன் பகற்கனவின் புதிர்பாதையில் வாசகர்களைக் கூட்டிக் கொண்டு நாற்பது வருடங்களுக்கு மேலாக பயணிக்கும் 2024 விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் இரா.முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*