கல்பற்றா நாராயணன் நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். அவர் என் வீட்டுக்கு வருவது இதுவே முதல்முறை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஓர் நிகழ்ச்சி. முந்தினநாளே வந்து ஒருநாள் என்னுடன் தங்கி பின்னர் நாங்கள் சேர்ந்து செல்வதாக ஏற்பாடு. அவர் வரும் தகவலைச் சொன்னதும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் அவரும் வருவதாகச் சொன்னார். சென்னையில் இருந்து செந்தில் வருவதாகச் சொல்லி பின்னர் நின்றுவிட்டார்.
கிருஷ்ணனும் தங்கமணியும் அதிகாலை ஆறுமணிக்கே வந்து விட்டார்கள். நான் இரண்டுமணிக்குத்தான் படுத்தேன். அருணா வந்து என்னை எழுப்பியபோது என் கண்கள் கனத்துக் கொண்டிருந்தன. ஏழு மணிக்கு கல்பற்றா நாராயணன் வந்தார். அருண்மொழிக்கு அலுவலக விடுப்பு கிடைக்கவில்லை. பொங்கல் சமைத்து வைத்துவிட்டுசென்றிருந்தாள். கல்பற்றா நாராயணனை அவள் சாலையில் சந்தித்ததாகச் சொன்னார்.
காலை டிபனை அஜிதன் பரிமாறினான். இட்லியை அவனே சமைத்தான். சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நான் என் வழக்கமான டிரைவரை வரச்சொல்லியிருந்தேன். அம்பாசிடர் கார். நிதானமாக ஓட்டுவார். காரில் ஏறி முதலில் திருவட்டாறு கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் விரிந்த பிராகாரங்கள் வழியாக நடந்துகொண்டு மலையாள இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கோயிலுக்கு மேலேயும் முன் மண்டபத்திலும் உள்ள மரச்சிற்பங்கள் தமிழகத்தில் அபூர்வமானவை. அதிலும் முன்மண்டபத்தின் சிற்பங்கள் மிகச்செறிவாக ஒன்றுடன் ஒன்று நிரப்பிப்பரந்தவையாக இருக்கும்.
திருவட்டாறு ஆற்றுக்கு இறங்கிச் சென்றோம். கிருஷ்ணன் ‘மத்தகம்’ நினைவுக்கு வருவதாகவும் , இடத்தைப் பார்த்ததும் ஏமாற்றமாக உணர்வதாகவும் சொன்னார். அது எப்போதுமே அப்படித்தான். கலை உருவாக்கும் நிலத்தை கடவுள் உருவாக்க முடியாது. திருவட்டாறு கோயிலில் சைதன்யர் வந்து தங்கியிருந்தபோது அவருக்காக கட்டப்பட்ட கிருஷ்ணன் கோயிலை புதுப்பித்துக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். குலசேகர ஆழ்வாரின் கோயிலும் புதுப்பிக்கப்படுகிறது. ‘புதுப்பிக்கப்பட்ட’ சிற்பங்கள்தான் மழுங்கிவிட்டன.
திருவாட்டாரில் இருந்து திற்பரப்பு அருவி. அருவியில் நல்ல தண்ணீர் இருந்தது. திற்பரப்பு அருவியில் குற்றாலம் போல அல்லாமல் நிறையபேர் ஒரே சமயம் குளிக்கலாம். ஆளுக்கொரு அருவியில் தனியாக நிற்கலாம். நீரும் குளிராக இருக்காது. அருவியில் நிற்கும் போது ஒரு தியான நிலை கூடுகிறது. நான் தேவதேவனின் ஒரு கவிதையைச் சொன்னேன். அருவியில் நிற்கிறார். கபாலம் சடென்று திறந்து மூளை ஒரு பச்சைத்தவளை போல எம்பிக்குதித்து ஒரு பாறை இடுக்கில் போய் அமர்ந்துகொண்டது. வெட்டவெளியாக தலைக்குமே ஓர் உணர்வு. அதன்மேல் அருவி….கல்பற்றா அது நல்ல கவிதை என்றார்.
மதியம் வரை குளித்துக்கோண்டிருந்தோம். கேரளத்தில் நிறைய அருவிகள் உண்டு, கல்பற்றா நாராயணனின் சொந்த ஊரிலேயே சூசிப்பாறை என்ற மிகப்பெரிய அருவி உண்டு. எதிலும் குளிக்க முடியாது. நாங்கள் குற்றாலத்தில் ஒழுங்குசெய்திருந்த கூட்டத்துக்கு வந்து குளித்த பின்னர் இப்போதுதான் அருவியில் குளிப்பதாகச் சொன்னார். குழந்தைபோல மகிழ்ந்துகொண்டே இருந்தார்.
அருவியில் சின்னபையன்கள் முப்பதுபேர் வந்திருந்தார்கள் . ஒரே கிரீச்சிடல், கூச்சல். அவர்களின் வாழ்க்கையில் பொன்னாளாக அது இருக்கக் கூடும். பலர் வாழ்க்கை முழுக்க அந்தக் குளியலை நினைத்திருப்பார்கள். திற்பரப்பில் இருந்து திருவரம்பு பக்கம்தான். அந்தவழியாக வரும்போது முன்பு மௌனகுருவுடன் வந்ததைப்பற்றி பேசினேன். இதய நோய் வந்து சிகிழ்ச்சைக்குப் பின் பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பில் ஓய்வில் இருக்கிறார்
என் சொந்த ஊரான திருவரம்பு வழியாக அருமனைக்கு வந்தோம். வற்கீஸை அவனது ஸ்டுடியோவுக்குச் சென்று பார்த்தோம். சொந்தவீடு கட்டும் வேலையில் ஆழ்ந்திருந்தான். ஒருசில நிமிடங்கள் பேசியபின் அருமனையிலேயே ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். சாப்பிட்டு வெளியே வந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. வலுவான கோடை மழை. சாலையில் சிவந்த நீர் பெருகிச்சென்றது
காரில் ஏறி கொஞ்சதூரம் போனதும் மழை இல்லை. ஆனால் இருட்டும் குளிரும் இருந்தது. சிதறால் மலைக்குச் சென்றோம். தமிழகத்தின் மிகத்தொன்மையான இடங்களில் ஒன்று இது. கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பலகலைகழகம் ஒன்று இங்கே இருந்தது. பலநூறு மாணவர்கள் படித்தார்கள். அவர்களுக்கு குறத்தியறையார் என்ற அரசி நிபந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய ஒரு கல்வெட்டு அங்கே உள்ளது. அது தமிழ்-பிராமி மொழியில் உள்ள கல்வெட்டு அது
இந்தமலைக்கு பழங்காலத்துப்பெயர் திருச்சாரணத்துமலை.ஒரு குடைவரை கோயில் அங்கே இருந்தது. சமணர்கள் கைவிட்டுச்சென்றபின் பல நூற்றாண்டுக்காலம் அழிந்து கிடந்த அக்கோயிலை இரண்டாம் ராஜராஜன் காலத்தில் இந்து ஆலயமாக எடுத்துக்கட்டியிருக்கிறார்கள். இப்போது அது சிதறாலம்மை என்ற பகவதியின் கோயில். ஆனால் சுவர்களில் அழகிய சமண சிற்பங்கள் உள்ளன.
சமீபத்தில் அரசு சிதறாலை சுற்றுலாத்தலமாக ஆக்கி சில வேலைகளைச் செய்தது. கொத்தனார்கள் இரண்டாயிரமாண்டு பழமை கொண்ட சிலைகளை உடைத்துவிட்டு போனார்கள். பேரழகுமிக்க பத்மாவதி யட்சிக்கு இப்போது முலை இல்லை. அந்த மலை மீது தொஉவானை நோக்கியபடி தவமிருக்கும் தீர்த்தங்காரர்களை மாலையின் மஞ்சள் வெயிலில் பார்த்தபோது மனம் ஒரு பெரும்கனவை அடைந்தது.
மழை பெய்ய ஆரம்பித்தது. மலையில் யாருமே இல்லை. சுற்றும் ஓங்கிய பாறைக்கூட்டங்கள். புதுமழையில் பாறைகளின் பாசி மணக்க ஆரம்பித்தது. தைல வாசனை. வறுக்கும் வாசனை. நான் மல்லாந்து படுத்து பதினைந்து நிமிடம் தூங்கினென். கனவுகளும் நினைவுகளும் கலந்தோடும் ஒரு போதை.விழிப்புவந்தபோது கல்பற்றா நாராயணனின் செல்போனில் இருந்து புல்லாங்குழலில் அலைபாயுதே கண்ணா என்னும் பாடல் கேட்டுக்கோண்டிருந்தது. நான் எழுந்து அமர்ந்து அரை மயக்கத்தில் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மனம் ததும்பிக் கொண்டிருந்தது.
நால்வரும் கோயில் மண்டபத்தில் பாட்டைக் கேட்டபடி மழையைப்பார்த்து ஒருமணிநேரம் இருந்தோம். மாலை நன்றாக இருள ஆரம்பித்தது. சிறு தூறல் ஆகியபோது எழுந்து கீழே வந்தோம். காரில் ஏறிக்கோண்டோம். அருமனையில் வாங்கிய நேந்திரம் பழங்களை காரில் வைத்திருந்தோம். அவற்றை உண்டுவிட்டு நாகர்கோயிலுக்கு திரும்பினோம்.
போகும்போது பேசிக்கொண்டே போனோம், திரும்பும்போது பேச்சு நின்றுவிட்டது. சிதறால் மலையின் அமைதி எங்களுடன் வந்தது
பழைய கட்டுரைகள்
கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
குமரிமாவட்டம் தகவல்கள்
http://www.panoramio.com/photo/6348062
http://www.karma.org.in/product_info.php?products_id=239
http://www.flickr.com/photos/lakshmanpoobesh/2090293467/in/photostream/
http://anjaiboys.blogspot.com/2008/09/about-kanyakumari-district.html