சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில

 

சவப்பெட்டிக்குமேல் மழை

 

சவப்பெட்டிக்குமேல் பெய்த மழை

பிணத்திற்கு அதன் ஊரை நினைவூட்டியது

புளியமரத்திற்கு கீழே அன்புக்குரியவள்

புணர்வது தன்னையோ இன்னொருவனையோ

மரணத்தையோ என்று

பிரித்தறிவதற்கு முன்பு

ஒரு பெரிய சூரியகாந்தி விரிந்து

அந்தக் காட்சியை மறைத்தது

 

ஆலமரத்தில் ஒரு கிளிக்குள் இருந்து

கோயில்குளத்தில் கட்டி மூழ்கடிக்கப்பவளின்

ஆத்மா பேசத்தொடங்கியது

வெள்ளரி விதைகள் மண்ணுக்கடியில் கிடந்து

முகில்களின் மொழியில்

உரையாடிக்கொண்டன

 

மழை நின்றபோது

பிணம் ஊரின் எல்லையை கடந்துவிட்டிருந்தது.

மயானத்தின் எல்லா பிணங்களும்

கண்ணாடிமணிகளை குலுக்கி

விருந்தாளியை வரவேற்கக் காத்திருந்தன

ஊதா நிறத்தில்

ஐம்பத்தொன்று மலையாள விரல்களுடன்.

 

(மலையாள எழுத்துக்கள் 51)

 

காய்ச்சல்

 

( 1 )

 

சின்னஞ்சிறு மகளின்

கொதிக்கும் காய்ச்சல் படுக்கையில் அமர்ந்து

காய்ச்சல் கொண்ட ஓர் அந்தியில் நாங்கள்

பத்தாயிரம் ஆண்டுகள் நீளும் வெம்மையையும்

பெருநிலங்களில் படர்ந்தேறும்

பூகம்ப ப்பாடல்களையும்

சூரியனில் உருக்கி வடித்தெடுத்த

பாலஸ்தீனின் மதம் கொண்ட போர்விமானங்களையும்

சிலியின் சிவந்த வானத்திற்கும்

ஊறவைத்த காற்றுகளுக்கும்

குறுக்காகச் சட்டென்று கடந்துசென்ற

கழுகின் நிலழலையும்

மிஸிஸிப்பியின் கரும்புலிகளின்

கோடுபோட்ட கவிதைகளையும் பற்றி

உரக்க பேசிக்கொண்டிருந்தோம்

குழந்தையை விழிக்கச்செய்யவேண்டாம் என்ற

வேண்டுகோளுடன் அதைப் பெற்றவளின்

எரியும் மௌனம் அறையில் நிறைந்திருந்தாலும்.

 

சின்னஞ்சிறு மகளின் கொதிக்கும் காய்ச்சல் படுக்கையில் அமர்ந்துகொண்டு..

 

( 2)

 

எங்கும் காய்ச்சல்

மருந்துவிற்பவர்களின் நீண்ட நாக்குகள்கூட நின்றுவிட்டிருந்தன

அவர்களுக்கும் காய்ச்சல்

 

( 3 )

 

காய்ச்சல் படுக்கையில்

முகத்தோடு முகம் பார்த்து அமர்ந்திருந்தபோது

அந்தப் பழையநாட்களை

நீ மீண்டும் நினைவூட்டினாய்

வீடு, குழந்தைகள்

தொடக்ககாலக் கனவுகளின் தெளிவற்ற முணுமுணுப்பு

 

ஆனால் நான் சொன்னேன்

நிறுத்து அந்தப்பழைய காதல்கதையை

இது துயரங்களின் போர்க்கருவிகளின் காலம்

 

நீ ஒரு சுயநலக்காரன்

குரூரத்தில் கொம்புமுளைத்து

கண்களை தீக்கனலாக்கி

கிறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு தறுதலை

 

ஆம்,

நீதான் சிறந்த நீதிபதி

என் குழந்தைகள் என்னை வெறுப்பார்கள்

இதோபார் அறிந்தோம் என பாவனைசெய்பவர்

பாவனைசெய்ய மட்டும் அறிந்தவர்.

 

எல்லாவற்றுக்கும் காய்ச்சல்

மனிதர்களுக்கும் மரங்களுக்கும் நதிகளுக்கும் எல்லாம்

 

( 4 )

 

 

ஏன் நம் கவிதையும் வெடித்து தெறிக்கும்

கருவிழிகளைப்போல கருமைகொள்ளவில்லை

அடங்காத நயாகரா போல

காட்டின் ஆழம் நோக்கி

கர்ஜனை செய்வதில்லை?

மழைக்கால அமேஸான் போல

தூக்கமில்லாமல் சிவந்து வீங்கிய முகத்துடன்

பெருகிச்செல்வதில்லை?

இனிப்பற்ற காப்பியை உறிஞ்சும்போது கேட்டான்.

 

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை

சுவரில் தொங்கிய

கரையான் அரித்த உலகப்படத்தில் கண்ணோட்டினேன்

சரித்திரம் அடித்துக்கொண்டு சென்ற அழுக்குகள் எல்லாம்

செறிந்தேறிய அந்த சிறிய தீவின்

நெரிசலான ஆளின்மையை பார்த்தேன்.

 

இலைகளில் இப்போதும் பனி விழுகிறதா

என்று கேட்கும் அதே இயல்புடன்

நீ இப்போதும் இந்த நாட்டை

விரும்புகிறாயா என்று நான் கேட்டேன்

 

…ஆனால் இந்த இந்தியாவை அல்ல

இந்த எலும்புச்சமவெளியை அல்ல

இந்த சிதையின் அழத்தில்

எலும்புகளின் நகரங்களுக்கும்

நினைவு தவறிய குன்றுகளுக்குக்கும்

அரண்மனை மணிகளுக்கும் அடியில்

இன்னமும் கனல்களா?

கொதிக்கும் காய்ச்சல்படுக்கையில் அமர்ந்தபடி

 

( 5 )

 

அன்பென்பது இங்கே தெரிவதொன்றும் அல்ல

காட்டுபன்றியை வேட்டையாட வேடன்

கூர்மைப்படுத்தும் ஈட்டியின் முனையிலெங்கோ உள்ளது அது

ஃப்யூஜியாமாவின் காய்ச்சல் வந்த ஆத்மாவிலெங்கோ

அல்லது ஆல்ப்ஸில் எவரெஸ்டில் காகுல்தாயில்.

இந்த மெல்லிறகு இமைகள், தளிர்விரல்கள் சிறு முலைமொட்டுகள்

இதுதான் மிகச்செறிந்த வனம். மிக உயர்ந்த மலை

மிக ஆழமான கடல்

சிறுமகளின் கொதிக்கும் காய்ச்சல்படுக்கையில் அமர்ந்தபடி

காய்ச்சல் வந்த மாலையில்.

 

( 6 )

 

அரண்மனை விட்டு கிளம்பும் இளவரசனை

திரும்ப அழைக்கக்கூடாது

நோயும் வறுமையும் சாவும்

அவனை ஆலமரத்தடி நோக்கி அழைக்கின்றன என்றால்

அந்த ஆலமரத்தடியில்

ஒரு நஞ்சுபூசிய அம்பைக்கொண்டுசென்று வைத்துவிடுங்கள்

துயரத்தை எய்து வீழ்த்த முடியவில்லை என்றால்

அவன் தன்னையாவது வீழ்த்தி

இவ்வுலகை தலைமழித்தலில் இருந்து காக்கட்டும்.

முந்தைய கட்டுரைஆண்டாள் பிரியதர்ஷினி
அடுத்த கட்டுரைதிட்டு மெயில், முதற்சாதனை