என் வாழ்க்கையில் எப்போதுமே நிகழ்வுகள், பயணங்கள் இருந்துகொண்டிருக்கின்றன என்றாலும் சென்ற செப்டெம்பர் முதல் கொஞ்சம் பரபரப்பு மிகுதி. செப்டெம்பரில் தத்துவ வகுப்பு முடிந்து அப்படியே திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்வு. இரண்டு நாட்களுக்குப் பின் அமெரிக்கா. திரும்பி வந்த இரண்டு நாட்களிலேயே ஷார்ஜா புத்தகவிழா. அங்கிருந்து திரும்பி வந்து இரண்டே நாளில் தத்துவ முகாம். மீண்டும் இரண்டு நாளில் எகிப்து.
எகிப்தில் இருந்து திரும்பி வந்து நான்குநாட்கள் இடைவெளி இருந்தது. அதன்பின் துபாய் கலைவிழா. அங்கிருந்து வரும் டிசம்பர் 11 ஆம் தேதி திரும்பி வந்ததும் ஈரோட்டில் ஒரு நிகழ்வு. ஈரோட்டில் இருந்து நேரடியாக வடகரைக்கு ஒரு இலக்கியவிழாவுக்காகச் சென்று அங்கிருந்து நேராக பெங்களூர் இலக்கிய விழாவுக்குச் சென்று அங்கிருந்து நாகர்கோயில் திரும்பி இரண்டு நாட்கள் கழித்து விஷ்ணுபுரம் விழாவுக்காக கோவை. அதன்பின்னரும் அப்படியே ஜனவரி 10 வரை.
நடுவே இந்த நான்கு நாட்களை அனுபவிப்போம் என நாகர்கோயிலில் இருந்தேன். இரா.முருகன் பற்றிய நூலுக்கான பணிகள் என எழுதுவதற்கும் ஏராளமாக இருந்தன. விஷ்ணுபுரம் அலுவலகத்தில் இருந்து அழைத்து சேலம் புத்தகவிழாவுக்காக இரண்டுநாட்கள் வரமுடியுமா என்று அழைத்தனர். முதல்முறையாக சேலம் புத்தகவிழாவில் கடைதிறந்திருக்கிறார்கள். அடைமழையில் முதல் நான்குநாட்களில் கிட்டத்தட்ட சும்மாவே இருக்கும் நிலை. நான் வந்தால் விற்பனை சற்று சூடுபிடிக்கும் என்றனர்.
முடியாது, நேரமில்லை என்றேன். அதன் நடுவே ஓர் எண்ணம். எப்போதும் என்னைச் சீண்டும் சொற்றொடர். “Why not?” எனக்குப்பிடித்த சொற்றொடர் அது. பல முடிவுகளை எடுக்க அதுவே காரணமாக அமைந்துள்ளது. வருகிறேன் என்றேன். டிக்கெட் போட்டு கிளம்பிவிட்டேன். கிருஷ்ணனும் வருகிறேன் என்றார். ஆகவே 3 ஆம் தேதி கிளம்பி 4 ஆம் தேதி ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகம் வந்தேன். அங்கிருந்து ஆனந்தகுமார் காரில் நானும் கிருஷ்ணனும் ஈஸ்வரமூர்த்தியும் சேலம் சென்றோம். வழியில் திருச்செங்கோட்டில் மதிய உணவு.
சேலத்தில் என் பழைய நண்பர்களைச் சந்தித்தது நாட்களை இனிமையாக்கியது. நான் தர்மபுரியில் இருந்த நாட்களில் (1989 முதல் 1996 வரை) சேலம் எனக்கு அணுக்கமான ஊர். மாதமிருமுறையாவது சேலம் வந்தாகவேண்டும். எங்கு செல்வதென்றாலும் சேலம் வழியாகவே. அன்றெல்லாம் தர்மபுரியில் இருந்து சென்னை செல்லவே சேலம் வரவேண்டும்.
சேலத்தில் என் நண்பர் கணபதி சுப்ரமணியம் அக்காலத்தில் மருத்துவப் பிரதிநிதியாக ஒரு பிரம்மசாரி அறையில் தங்கியிருந்தார். அங்கே நண்பர் கான், சாகிப் கிரான், ஷாஅ, க.மோகனரங்கன், குவளைக்கண்ணன் , சேலம் ஆர்.குப்புசாமி, சிபிச்செல்வன் என பல நண்பர்கள் கூடுவார்கள். ஒருவகை இலக்கிய அரட்டைக்களம். என் ரப்பர் வெளிவந்த நாட்களில் என்னை ‘முறையாக’ அழைத்து ஒரு சந்திப்பு நடத்தினர். அது ஓர் குட்டி இலக்கிய அமைப்பாக மாறி சில ஆண்டுகள் நடைபெற்றது. அதில் நான் நிறைய கலந்துகொண்டிருக்கிறேன். என்னுடைய தெளிவாகாத சிந்தனைகளை எல்லாம் பேசித்தள்ளி தெளிவாக்கிக் கொண்டிருக்கிறேன்.
சேலம் வந்ததுமே சந்தித்தவர் நண்பர் கான். அவரிடம் கணபதி சுப்ரமணியம், ஷாஅ பற்றியெல்லாம் விசாரித்தேன். எல்லாருக்குமே என்னைப்போல கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தது. ஆனால் எல்லாருமே இன்னும் இலக்கியத்துடனும், இலக்கிய நட்புடனும்தான் நீடிக்கிறார்கள். கான் பள்ளிநிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். சாகிப் கிரான் அறைக்கு வந்திருந்தார். உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். சேலம் புத்தகக் கண்காட்சி அரங்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அரங்க முகப்பில் தமிழின் எழுத்தாளர்களின் கோட்டுப்படங்கள் இருந்தது உண்மையில் நிறைவளித்தது. இப்படி எழுத்தாளர்கள் முன்னிறுத்தப்படுவதை கேரளத்திலும் கர்நாடகத்திலும்தான் கண்டிருக்கிறேன். வடிவமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.
அரங்குக்கு கணபதி சுப்ரமணியம் வந்திருந்தார். விரிவாகப் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. மழை விட்டிருந்தமையால் புத்தகக் கண்காட்சியில் கூட்டமிருந்தது. எங்கள் அரங்கிற்கும் எதிர்பாராத அளவுக்கு நல்ல விற்பனை. தொடர்ச்சியாக வாசகர்கள் வந்து புத்தகங்கள் வாங்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். விற்பனை முகம் மலரச்செய்யும் அளவுக்கு இருந்தது. எனக்கும் புதிய வாசகர்களை சந்திப்பது மிக மனநிறைவூட்டும் அனுபவமாக இருந்தது.
சேலம் நண்பர்கள் பலர் விஷ்ணுபுரம் கடையை அமைக்கவும் நடத்தவும் உதவினார்கள். நண்பர் சோழராஜா கிட்டத்தட்ட கடை ஊழியராகவே பணியாற்றினார். ஆய்வுமாணவர். எங்கள் முழுமையறிவு நிகழ்வுகளில் கலந்துகொண்ட நல்ல மாணவர். நண்பர் சிவப்பிரசாத் சேலம் புத்தகவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் கூட. அவரும் பெருமளவில் உதவினார்.
நண்பர் வசந்தகுமார் ஊத்தங்கரையில் இருந்து வந்திருந்தார். அவரை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவரை நான் ஒரே ஒருமுறைதான் சந்தித்திருக்கிறேன் – நண்பர் அலெக்ஸ் மருத்துவமனையில் இருந்தபோது. அவர் செல் பற்றி எழுதிய முற்கோள்களை இன்று அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டிருப்பதைப் பற்றிய அவருடைய ஆதங்கம் என் தளத்தில் நேற்றுமுன்தினம் பதிவாகியிருந்தது. அதையொட்டி சந்திக்க வந்திருந்தார். (ஓர் அறிவியலாளர், ஒரு கைவிடப்படல்.) தன் சொந்தச்செலவில் ஒரு ஆய்வுக்கூடத்தை அமைத்து ஆய்வைத்தொடரும் எண்ணத்தில் இருக்கிறார்.
தொடர்ச்சியாக வாசகர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். பவா செல்லத்துரையுடன் நான் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற புகைப்படம் உண்டு. அதை எடுத்தவரான நண்பர் சண்முகவேலு வந்திருந்தார். வசந்தன் என்னும் நண்பர் காவல்துறையில் பணியாற்றுகிறார். நிறைய வாசிப்பவர். காவலர்கையேடு உட்பட நாவல்கள் கவிதைகள் எழுதியிருக்கிறார். வேல்முருகன் என்னும் நண்பர் காலைக்கதிர் இதழில் வேலைபார்ப்பவர். நிறைய நூல்களை வாங்கினார். தொடர்ச்சியாக வாசிப்பவர். இந்த புத்தகக் கண்காட்சியில் ‘கீதையை அறிதல்’ போன்ற சில நூல்கள் வெளியாகியுள்ளன. ஆழ்நதியைத் தேடி போன்ற பல நூல்கள் மறுபதிப்பாகியுள்ளன.
மாலையில் நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஸ்பைஸ் 7 என்னும் உணவகத்துக்கு உணவுண்ணச் சென்றோம். மிகச்சிறந்த உணவு, மெனு கார்டைப் பார்த்து நான் விரதத்தை சபலம் கொண்டு இரவுணவு உண்டேன். வழக்கத்துக்கு மாறான உணவுகள், ஆனால் அனைத்துமே சுவையாக இருந்தன. அண்மையில் சாப்பிட்ட நல்ல உணவகம்.
இரவு 11 மணிக்குத்தான் அறைக்குத் திரும்பினேன். கிருஷ்ணனும் நானும் ஆனந்தகுமாரும் அறையில் தங்கினோம். ஈஸ்வரமூர்த்தி கிளம்பி சென்றார். இரவு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் பழைய சேலம் நாட்களின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தேன். திரும்பிப் பார்க்கையில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நண்பர்களுடன் பேசிக் களித்திருந்த நாட்களே வாழ்வின் இனிய தருணங்கள் என தோன்றுகிறது. அதிலும் இந்த மூன்றுமாதக் காலத்தில் மூன்றுநாட்களுக்கு ஒரு இடம், புதிய நண்பர்கள் என சென்றுகொண்டே இருக்கிறேன். எழுத்தாளனாக இருப்பதன் பெரிய வெகுமதி இதுவே. உலகமெங்கும் நிறைந்திருக்கும் மாபெரும் நட்புவட்டம்.
ஐந்தாம் தேதியும் விற்பனை நன்றாக இருந்தது. வாசகர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தனர். சேலம் போன்ற ஊர்களில் அறம் தொகுப்புதான் தொடர்ச்சியாக விற்றுக்கொண்டே இருக்கும். இம்முறை காடு நாவலும் தொடர்ச்சியாக விற்றுக்கொண்டே இருப்பதைக் கண்டேன். அஜிதனின் மைத்ரியும் விற்பனையாகியது.
பகல் முழுக்க பள்ளிமாணவர்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் கண்காட்சிகளை அரசு ஆதரவுடன் நடத்த ஆரம்பித்தபோதுதான் மாணவர்கள் வரும் வழக்கம் தொடங்கியது. பகல் முழுக்க அரங்கு கூட்டம் நெரிபடும். ஆனால் விற்பனை இருக்காது. அதைப்பற்றி பதிப்பாளர்களின் சலிப்புகளும் காதில் விழும். ஆனால் அவ்வாறு வர ஆரம்பித்த மாணவர்களில் ஒரு சாரார் இன்று புத்தகம் வாங்கும் வாசகர்களாக உள்ளனர். அதுவே பெரிய எண்ணிக்கை. தமிழ் வாசிப்பில் அந்த முயற்சி நல்விளைவை உருவாக்கியுள்ளது.
காலையில் என் நண்பர் வாழப்பாடி ராஜசேகரன் வந்திருந்தார். பல ஆண்டுகளாக வாசகரும் நண்பருமாக இருப்பவர். சிறிய உடல்நலக்குறைவு உடையவர். அவருடைய தங்கை மகளுக்கு திருமணம். அங்கிருந்து தன் மகனுடன் வந்திருந்தார். எப்போதுமே ஒரு சால்வையுடன் வந்து சந்திப்பது, ஒரு சிலையை பரிசளிப்பதும் அவருடைய வழக்கம். இம்முறை ஒரு திருவள்ளுவர் சிலையை அளித்தார் (அவரைப்பற்றி முன்னர் எழுதியிருக்கிறேன் வாழப்பாடி ராஜசேகரன் )
மதியம் நண்பர் கோபிநாத் வந்திருந்தார். அவருடன் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச்சென்றோம். நண்பர் செந்தில் உடன் வந்தார். கோபிநாத் சேலத்தில் ஏ.என். ஐ. அமைப்பை நடத்துகிறார். சேலத்தில் ஒரு கட்டண உரை நடத்தினால் என்ன என்று கேட்டார். ஜனவரியில் நடத்தலாமா என்று விவாதித்தோம். தோராயமாக முடிவுசெய்திருக்கிறோம்.
காந்திய ஆய்வாளர் சித்ரா பாலசுப்ரமணியம் இன்றைய பேச்சாளர். இங்கே ஒரு நல்ல வழக்கம். உரைகளை மாலை ஐந்தரைக்குத் தொடங்கி ஆறரைக்குள் முடித்துவிடுகிறார்கள். ஆகவே வருபவர்கள் உரை முடித்து புத்தகக்கண்காட்சிக்குள்ளும் நுழைந்து நூல்களைப் பார்க்க வாய்ப்பமைகிறது. பல புத்தகக் கண்காட்சிகளில் உரைகளையே மாலை நான்கு முதல் இரவு ஒன்பது மணிவரை வைத்துவிடுகிறார்கள். உரைக்கு வருபவர்கள் உள்ளே நுழைவதே இல்லை. பாரதி கிருஷ்ணகுமார் பேசிய ஒரு புத்தகக் கண்காட்சியில் மொத்தக்கூட்டமும் வெளியே இருந்தது, உள்ளே காற்று உலவியது.
சித்ரா விஷ்ணுபுரம் அரங்குக்கு வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலை திருசெங்கோடு காந்தி ஆசிரமம் செல்வதாகச் சொன்னார். அங்கே ராஜாஜி தங்கிய நாநூறு சதுர அடி கொண்ட சின்னஞ்சிறு வீடு இன்றுமுள்ளது. தன் குடும்பத்துடன் அங்கே வாழ்ந்தார். அங்கிருந்துதான் நேராக டெல்லி வைஸ்ராய் மாளிகைக்கு இடம்பெயர்ந்தார். அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். சித்ரா எழுதவிருக்கும் நூல்களைப் பற்றிப் பேசினார்
மாலைவரை நண்பர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். இந்தவகையான அரங்குகளில் பொதுவாக சந்திப்புகள், புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே நிகழும். அவ்வப்போது இடைவெளிகளில் சீரிய விவாதமும் நடைபெறுவதுண்டு. நண்பர் அழகுராஜா சீனா மற்றும் ஏகாதிபத்யம் பற்றிப் பேச ஆரம்பித்து உற்சாகமான ஓர் உரையாடல் நிகழ்ந்தது.
இன்றே நான் ஊருக்குத் திரும்பியாக வேண்டும். இரண்டுநாட்கள் நாகர்கோயில். சொல்லப்போனால் சென்றுசேர்வது ஒருநாள். ஒருபகல். அன்றிரவு. மறுநாள் மாலையிலேயே துபாய்க்குக் கிளம்புகிறேன். இன்னொரு இலக்கியப் பயணம்.
பயணங்களில் சலிப்படையாதவர் என எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடனை மட்டுமே பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் நாஞ்சில் விற்பனை அதிகாரியாக ஏராளமாகச் சுற்றியலைந்தவர். ஆனால் எப்போதும் வீட்டில் பெட்டி தயாராக இருக்கும், கிளம்பிவிடுவார். பயணங்களில் உணவு, வசதி பற்றி கவலை இல்லை. எல்லாவற்றுக்கும் பழகியிருப்பவர். சாப்பாடு முக்கியம் – ஆனால் எல்லா சாப்பாட்டையும் சுவைக்கும் மனநிலை உண்டு. நாஞ்சில் மனநிலை கொஞ்சம் எனக்கும் உண்டு என நினைத்துக்கொண்டேன்.