சஞ்சீவனி குறிப்புகள்- கடலூர் சீனு

கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில், விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் அமர்வில், வாசகர்கள் அவரது எழுத்து வகைமையை பின்நவீனத்துவம் என்று வரையறை செய்து கேள்வி கேட்டபோது, “அப்டிலாம் ஒரு லேபில் போட வேண்டாமே, அது போக நான் கதை சொல்றது அப்டிங்கர அடிப்படைய கைவிடாம அப்டியேதானே வெச்சிருக்கேன். போஸ்ட் மாடனிசம் அப்டி இல்லையே. வேற வடிவத்துல கதையை சொல்லி பாக்குறேன் அவ்ளோதான்என்று பதில் தந்தார். இவ் விருட விருதாளர் எழுத்தாளர் இரா. முருகன் அவர்கள் ஆக்கங்களையும் இதே வகைமையின் கீழ் கொண்டு வர முடியும். வெவ்வேறு வடிவ அழகியல்களில், கதை சொல்வது எனும் அடிப்படை அம்சத்தை தவறவிடாத ஆக்கங்களை முன்வைத்தவர் என்று அவரை சொல்லலாம்அதே போல யுவனுக்கும் இராமுவிற்கும் இடையே உள்ள மற்றொரு ஒற்றுமை, யுவன் வளர்த்து எடுத்த மாற்று மெய்மை எனும் தளம். யுவன் யதார்த்தத்தை சற்றே கீறி அந்த கீறல் வழியே தெரியும் மாற்று மெய்மைக் களனை காட்டிவிட்டு நின்றுவிடுவார் என்றால், இரா மு விஸ்தாரமாகவே அதில் விளையாடுவார். பைசாசங்கள் யட்சிகள் எல்லாம் இவர் புனைவுலகில் அதுபாட்டுக்கு உள்ளே வந்து ஏதேதோ செய்து நிகழ்வனவற்றை பாதிக்க முயலும்.

பைசாசங்கள், யட்சிகள், உருவெளித் தோற்றங்கள் எல்லாம் இயல் மனிதர்களோடு இயல்பாக கலந்து பரவி, மாய யதார்த்த அழகியலில் விரியும் அரசூர் வம்ச வரிசை நாவல்கள், தன் வாழ்வில் ஒரு இழை, கற்பனையில் ஒரு இழை என்று பின்னி பயோ பிக்ஷன் அழகியலில் விரிந்த இரட்டை தெரு, த்யுப்ளெக்ஸ் வீதி போன்ற நாவல்கள், கடந்த காலத்தின் குறிப்பிட்ட சமூக அரசியல் சூழல் ஒன்றின் மேல் தாவி தாவி செல்லும் நாட்களின் நிகழ்வுகள் வடிவில் நிகழும் 1975,  இயல் உலகில் நடந்த வரலாற்றின் ஒரு இழை, இனி வர போகும் அறிவியல் மெய்மையின் மாற்று வாழ்வில் இருந்து ஒரு இழை என்று பின்னிய மிளகு பெரு நாவல், சொட்டு விழுந்து சிதறிய நிலை போல வரலாற்றை சிதற விட்ட ராமோஜியம், என இரா மு கையாண்டு சென்ற வடிவ அழகியல்கள் வரிசையில், தனது சமீபத்திய நாவலாக சஞ்சீவினி நாவலில் அவர் கையில் எடுத்திருக்கும் அழகியல் (அதி கற்பனை) ஃபேன்டஸி. இதுவரை அவர் கையாண்ட அனைத்து அழகியல் வெளிப்பாடுகளையும் சேர்த்து உருவான, இந்த யதார்த்த உலகின் தர்க்கத்தை உதறி, அந்த குறிப்பிட்ட புனைவு உலகின் விதிகளுக்கு மேல் நிகழும் ஃபேன்டஸி

மானுடம், குகை ஓவியங்கள், பாறையில் பெரும் வெட்டு சித்திரங்கள் என்று தன்னை முன்வைத்த முதல் சுவடுகளை இன்று ஒட்டு மொத்தமாக பார்க்கையில் அது ஒரு பெரிய ஃபேன்டஸி களம் என்றே படுகிறது. மேலை மரபின் இலியட் ஒடிசி, கீழை மரபின் உபநிஷத் கதைகள் ராமாயண மகாபாரதம் துவங்கி, மானுடத்தின் ஆதிக் கலை வெளிப்பாடும், மரபு இலக்கிய வெளிப்பாடும் ஃபேன்டஸி அம்சம் கொண்டதே. தமிழில் பண்டைய புராண இலக்கியங்கள் துவங்கி சிலப்பதிகாரம், பெரிய புராணம்  வரை யாவும் இந்த மிகு கற்பனை அம்சம் கூடுதலாகவோ குறிப்பிட்ட அளவிலோ தன்னுள் கொண்டதே. மேற்குலகில் அச்சுப்பண்பாடு வந்த பிறகே  அச்சு இலக்கிய பரவல் வழியாகவே அதன் முந்தைய ஒவ்வொரு அழகியல் நிலையும் கோட்பாட்டாக்கம் கொள்ள, இந்த ஃபேன்டஸி கூறு தனித்த ஒரு வகை மாதிரியாக வளர்ந்து உயர்ந்து பெரும் வரவேற்பு அடைந்ததை குழந்தைகளுக்கான ஹாரி பாட்டர் துவங்கி பெரியவர்களுக்கான  லார்ட் ஆப் தி ரிங்ஸ் வரை மேலை இலக்கிய வரலாறு காட்டுகிறது. தமிழ் தீவிர இலக்கியப் பரப்பில் கேளிக்கை எழுத்தின் இடுபொருட்கள் என்று விலக்கிவைக்கப்பட்டிருந்த இந்த அழகியல் முறைகள், மேலை மரபின் போர்ஹேஸ் மார்க்வேஸ் வழித் தொடர்ச்சியாக இங்கே தீவிர  இலக்கியத்தில் பின்நவீன அலை எழுந்தபிறகே அவை தீவிர வாசிப்பின் புழக்கத்துக்குள் வந்தது.  

ஹாரி பாட்டர், லார்ட் ஆப் தி ரிங்ஸ், நூற்றாண்டு தனிமை, யுவனின் பகடையாட்டம், ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இவற்றின் ஃபேன்டஸி அம்சம் என்பது அது நிகழும் கற்பனை நிலத்தினின்றும், ஒன்றின்றி பிரிதில்லை எனும்படிக்கு பிரிக்க இயலாதது. சஞ்சீசனி நாவலும் அதே விதிக்குட்பட்டு 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நாடான கோகர்மலை எனும் கற்பனை நாட்டில் பொ யு 5000 இல் நடக்கிறது.

அனுகுண்டுகள் வீசி, ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்து நடந்து முடிந்த மேலும் இரண்டு உலக யுத்தங்களை கடந்து வந்த ce 5000. விளைவான மியூடேஷன் தவறுகளால் எல்லாம் மாறி, தேள்கள் 6 அடி உயரமாகி பேசும் சக்தி அறிவு எல்லாம் பெற்று, சகலத்தையும் வென்று சர்வாதிகார ஆட்சி நடத்த, அரசு நிர்வாகம் ராணுவம் காவல் இவற்றை, தேள் போலவேஉயர்ந்தகரப்பான்கள் கையில் இருக்க, அந்தக் கூட்டணி ஆளும் சமூகத்தின் பிரஜைகளாக மனிதர்கள். வந்தேறி மனிதன் ஒருவன் ஊட்டிய பேராசை கொண்டு அதிகாரம் வழியே தேளரசன், சமூகத்தை கொத்தடிமையாக மாற்ற, நாயகன் ஒருவன் வழியே மக்கள் புரட்சி வெடிக்கிறது. அதை பயன்படுத்தி கரப்புகள் ராணுவ பலம் வழியே தேளரசு ஆட்சியை கவிழ்த்து தாங்கள் ஆட்சிக்கு வர முயல, புரட்சியாளன் என்னானார்? மக்கள் புரட்சி வென்றதா? அல்லது கரப்புகள் வென்றதா? தேளரசன் என்னானார்இந்தக் கதைக் கட்டுமானத்தில் நிகழும் சுவாரஸ்ய ஃபேன்டஸி வாசிப்பனுபவமே சஞ்சீவனி.

அறிவியல் தொழில்நுட்பம் மொத்தமும் அதிகாரத்தின் கையில் குவிந்து சமூகத்தை அதை கொண்டு கட்டுக்குள் வைப்பது, இரண்டு வேறு இனங்கள், சமூக அடுக்குகள், அரசனை கைக்குள் போட்டுக்கொள்ளும் வந்தேறி பிராமணன். மனித சமூகத்தின் மேல் வரி மேல் வரி விதித்து பின்னும் புதிய வரி விதிக்க இடைவெளி ஏதும் உண்டா என்று அரசன் தேடுவது, எல்லோரையும் அவரவருக்கான அடையாள சில்லு வழங்கி அதன் வழியே அவர்களை கட்டுக்குள் வைப்பது, அரசு மக்களுக்கு புதிய மருந்து தருவதற்கான முஸ்தீபில் நிகழும் பொருளாதார இடர், அந்த மருந்து ஏற்றுமதியில் கணக்கு என்ன என்றே தெரியாமல் நிறைய வைக்கப்படும் அரசரின் கஜானா, அதில் அவர் அவருக்கு சென்று சேரும் பங்குகள் என்றெல்லாம் நாவலை நகர்த்தும் சம்பவங்கள் சார்ந்து இணையாக வேறு ஏதேனும் வாசகர் நினைவில் எழுந்தால், அதெல்லாம் கிடையாது இது சுத்தமான அக் மார்க் மிகை கற்பனையால் செய்யப்பட்ட நயம் புனைவு மட்டுமே என்று சத்தியமாக, நிச்சயமாக, அவரது தமிழ்ப் புலமை மீது ஆணையாக முன்னுரையில் சொல்லி எழுத்தாளர் ஜகா வாங்கி விடுகிறார்

பண்டைய சீனத்தில் அரசோனோடு அவ்வுலகில் சேவகம் செய்ய அவனது படை மொத்தமும் பொம்மைகளாக செய்து புதைக்கப்பட்ட களம் போல, பிரமிட் உள்ளே பதப்படுத்தப்பட்ட மன்னர் உடலுடன் அவ்வுலகுக்கு தேவையான அடிமைகள் உட்பட அனைத்தும் புதைக்கப்பட்டது போல, இந்த நாவலில் வரும் ஏமத்துயில் மையம். தேளரசனின் தந்தை மடிந்து போன முதுதேளார், அவரது சேவைகர்களுடன் அங்கே துயிலில் இருக்கிரார். இன்றைய க்ரயோநிக் டெக்னாலஜியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளில் தனியார் நிறுவனங்கள் செத்து போன ஆசாமிகளை அவ்விதம் பாதுகாக்கும் bbc ஆவணப்படம் ஒன்று கண்டேன். நாளையோ அடுத்த நூற்றாண்டோ அந்த உடலுக்குள் உயிர் அளிக்கும் டெக்னாலஜி வரலாம். அதுவரை அந்த உடலில் ஒரு மயிர் கூட உதிராமல் ஒரு செல் கூட அழுகாமல் அந்த தொழில்நுட்பம் அந்த உடலை பாதுகாக்கும். அதே டெக்னாலஜியில் உயிர் இன்றி உடல் பத்திரமாக கிடக்கும் தேள் தாத்தா. அவருக்கு மீண்டும் உயிர் கொடுக்க, தானும் நீண்ட ஆயுளோ மரணமின்மையோ பெற அரசன் விரும்ப அதற்கு தேவைப்படுவது சஞ்சீவனி.

உலக அளவில் தொல்லியல் அடிப்படையில் கிடைத்த முதல் கதையான கில்காமேஷ் காவியத்தில் அந்த மன்னன் சாகா வரம் தேடிதான் பயணம் செய்கிறான். சீனத்தின் முதல் மன்னன் கதையும் அவன் சாகா வரம் தேடி செல்வதேஇந்திய புரணங்களில் பாற்கடல் கடைந்து எடுக்கப்படும் அமுதம் கதை மையம் வகிப்பது. தேவர்கள் அசுரர்கள் ஆக்கள் மாக்கள் என ஆளாளுக்கு அந்த அமுதம் சார்ந்து அடிதடி நடக்கிறது. அசுரர்கள் தெய்வங்களிடம் சாகா வரம் கேட்கிரார்கள். இதிகாசத்தில் யயாதி நிரந்தர இளமை தேடி அலைகிறான். தமிழில் சித்தர் மரபுசார்ந்த கதைகளில் நிரந்தர இளமை, நிரந்தர ஆயுள் தரும் காயகல்ப மருந்து சார்ந்த கதைகள் உண்டு. அந்த மருந்து சேர்மானத்தில் முதலில் தண்ணீரை நெய் போல ஒரு திரவத்தை இன்னொன்ரு திரவமாக மாற்றும். அடுத்த சேர்மானத்தில் திரவத்தை உலோகமாக மாற்றும். இறுதி சேர்மானத்தில் ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றும். (இரும்பை தங்கம் என்றாக்கும்) அந்த சேர்மானத்தை அருந்தினால் உடல் வளர்சிதை மாற்றத்தில் இருந்து வெளியேறி, இளமை பெற்று அதன் காரணமாக நிரந்தரமாக உயிர் வாழலாம் என்பது அது சார்ந்த சுவாரஸ்ய கதை. அந்த ரசவாத மருந்து தேடி இந்த 2025 இலும் திரிவோர் உண்டு. அத்தகைய ஆசாமிகளில் ஒருவன் ce 5000 இன் இந்த தேளரசன். அவன் துப்பரிந்து கிடைத்த தகவல்படி சஞ்சீவனி செய்ய தெரிந்த நீலன் வைத்தியரை கடத்தி வர, குயிலி வானம்பாடி எனும் மானுட தோழி இணையரை அனுப்புகிறான். நீலன் வைத்தியர் இருப்பதோ ce 300  சங்க காலத்தில். இந்த தோழியருக்கு துணையாக இவர்களின் காலப் பயணத்தில் உடன் வருகிறான் (புரட்சி நாயகன்) குழலன்குகை ஓவியங்கள் துவங்கி, கிரேக்க தொன்மம் தொடர்ந்து, இந்திய ஆலயங்களின் புருஷா மிருகம் வரை, இடை வரை மனிதனும் இடைக்கு கீழே மிருகமும் என இருக்கும் தொன்ம கதாபாத்திரம் போல ஒருவன் குழலன். தேளை மனிதன் ஆக்க அறிவியல்  கொண்டு தேளரசன் நிகழ்த்தி பார்த்த முயற்சியில் தோற்று பாதி மனிதனும் பாதி தேளும் என்றாகி உபரியாக சில உயர் சக்திகள் பெற்று ஆராய்ச்சி சாலையில் இருந்து தப்பிவந்தவன்தேள் அரசால் தேடப் படுபவன். இணையாக இந்த கூட்டணிக்கு இடைஞ்சலாகவும், துணையாகவும் வரும் வேறு வேறு இணை பிரபஞ்சத்தை சேர்ந்த ஆசாமிகள். இவர்களால் ஆன இந்தக் கதையின் முக்கிய பிற மூன்று பாத்திரங்கள் கற்பூரமைய்யர், அவன் மனைவி கபிதா, துணைவி பூர்ணா. 50 ஆம் நூற்றாண்டில் கிளம்பி பல்வேறு ஆண்டுகளில் சிக்கி வெளியேறி 3 ஆம் நூற்றாண்டு வந்து நீலனை கடத்தி மீண்டும் 50 ஆம் நூற்றாண்டு செல்லும வழியில் 20 ஆம் நூற்றாண்டில் சிக்கி அங்கே கற்பூரனை கால படகில் ஏற்றி கொண்டு 50 ஆம் நூற்றாண்டு வந்து இறங்க, இந்த 50 ஆம் நூற்றாண்டில், கற்பூரன் நீலன் அவனது கண்டுபிடிப்பான  சஞ்சீவினி குழலன் இந்த நான்கின் இடையீட்டால் தேள் அரசில் என்னென்ன நிகழவேண்டுமோ அவை நிகழ்ந்து நிறைகிறது நாவல்

நாவலின் சுவைகளில் பிறவற்றை மீறி சற்றே தூக்கலாக இருப்பது பீபத்ஸ ரசம். உணவு முதல் காமம் தொடர்ந்து மரண நிலை வரை நாவலின் பேசுபொருட்கள் பலவும் இந்த ரசம் கொண்டு அடிக்கோடிடப்படுகிறது. அது இந்த நாவலுக்குள் முன்னரே ருசித்து சுகித்து இனிதே பேசப்படுபவை மீதான எதிர் நிலையாக, கிட்ட தட்ட பேசப்படுபவை மீதான சித்தர் நோக்கு நிலை போலும் அமைந்த விமர்சனம் என்றே பொருள் படுகிறது.

நாவலின் பிரதான சுவாரஸ்யங்கள் பலவற்றில் முதன்மையானது நாவல் நெடுக வாசிக்கையில் புன்னகை கிளர்த்தும் வண்ணம் விரவி நிற்கும் பகடிகள். உதாரணமாக 3 ஆம் நூற்றாண்டு ஆசாமி 50 ஆம் நூற்றாண்டு காலப் படகில் பயணம் கிளம்புகிறார். வழியில் அவருக்கு வயிறு கலக்குகிறது. குயிலி அவர் எவ்விதம் காலக் கலன் கழிவறையை பயன்படுத்துவது என்று சொல்லி ஆற்றுப்படுத்துகிராள். இறுதிச் சொல்லாகவேறு எதையேனும் தவறுதலாக பிடித்து இழுத்து விடாதீர்கள் நீங்களே வெளியேறிச் சென்று கருந்துளைக்குள் விழுந்து மறைந்து போக நேரிடும்என்று சொல்கையில் அது உள்ளே கிளர்த்தும்  சித்திரம்அடுத்த அழகு மொழி. நாவல் களம் சங்க காலத்துக்கு செல்லும்போதெல்லாம் சங்கத் தமிழில், சங்ககால வாழ்வு, சங்க கால கவிதைகள் மீது பகடிகள் நிகழ்கின்றனபெரும்பாலும் உரையாடல் துணை கொண்டே நகரும் இந்த நாவலில் பல்வேறு காலத்தில் பல்வேறு நிலத்தில் நிகழும் இந்த நாவலில், புற சித்தரிப்பு என்பது கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். மினிமலிச பாணியில் மிக மிக சில கோட்டு இழுப்புகளாக மட்டுமே புறம் நிலம் சூழல் சார்ந்த வர்ணனைகள் வருகின்றன. பீபத்ஸ ரசம் எழும் தருணங்களில் இந்த குறைந்த கோடுகள் கொண்ட புறச் சித்தரிப்பே கூட தாங்க ஒண்ணாததாக அமைகிறது.

திருவிழாவில் எதை எடுத்தாலும் எட்டணா கடை போட்டு வாழும் 20 ஆம் நூற்றாண்டு கற்பூரமையர், 50 ஆம் நூற்றாண்டு வந்து அரசனை கைகுள் போட்டுகொண்டு கார்பரேட் முதலாளி ஆகும் கேரக்டர் ஆர்க், கணவன் கற்பூரம் வேறொரு பெண்ணுடன் முயங்கி கிடப்பது கண்டு அந்த துரோகம் தாளது தற்கொலை செய்து கொள்ளும் கபிதா, முன்னதாக இருவரையும் பிணைந்த கோலத்தில் காணும்போது மனதுக்குள் புன்னகைத்து கொள்வது என சின்னச் சின்ன நுட்பங்களு்டன் பயணிக்கும் இந்த நாவலின் மற்றொரு பிரதான ரசனைக்கூறு இது வரலாற்றை அணுகும் விதம். குயிலி, குழந்தையாக திண்ணையில் விளையாடும் உ.வே.சா வை கண்டு அவர் கிண்ணத்தில் உள்ள பணியாரத்தை திருடி தின்று விடுகிறாள். அதற்கு மேல் அவளுக்கு வரலாற்றைக் கலைக்க உரிமை இல்லை என்பதால், ஆங்கிலேயர் வசம் கொத்தடிமை என வாழும் தூக்கில் தொங்கிய மருது சகோதரர்களின் இளைய மருது மகன், என் மனைவி குழந்தைகளை நான் பார்க்க வேண்டும், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும், உதவி செய்யுங்கள் என்று அழுதபடி அவன் குயிலியை பின்தொடர்ந்து ஒடிவரும்பொது அவளால் எதுவும் செய்ய முடிவதில்லைவரலாறு நெடுக யாரோ யாரயோ அதிகார வெறியால் அடிமை செய்து கொண்டும் இன அழிவுகளை நிகழ்த்தி கொண்டும் இருக்கிறார்கள். நாவலின் இறுதியில் கரப்பு இனம் ஒட்டு மொத்தமாக கொன்று ஒழிக்கப்படும் சித்திரம், ஆப்பிரிக்கா ருவாண்டாவில் இந்த கரப்பான் பூச்சிகளை ஒழியுங்கள் என்ற கோஷத்துடன் டூட்ஸ்ஸி இன மக்கள் அழித்து ஒழிக்கப்பட்டதை நினைவுறுத்தும். வித விதமான காம குரோத விவரணைகளால் நிறைந்த இந்த நாவலில் ஆக சிறந்த குரோதம் வெளிப்படும் இடமும் இங்குதான். ஒருவன் குழந்தை கரப்பு ஒன்றை பிடித்து ரசித்து ரசித்து அதன் கால்களை பிய்த்து அந்த கால்கள் கொண்டே அதன் கண்களை அவன் தோண்டி எடுக்கும் சித்திரம் அது.

எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மனிதர்கள் வசம் மாறாத, விலங்கினங்களும் மனிதர்களாக மாறினால் அதுவும் கைக்கொள்ளும் காமம், குரோதம், அதிகார வெறி இவற்றை மையம் கொள்ளும் இந்த நாவல், இரா முருகனின் மற்றய நாவல்களில் இருந்து வேறுபடும் முக்கிய புள்ளி, இந்த நாவல் தன்னை வெளிப்படுதிக்கொள்ளும் முறை. முழுக்க முழுக்க ஒரு கார்டூனிஷ் தன்மை கொண்டு தன்னை முன்வைக்கிறது இந்த நாவல். கேலிக்கூத்து போலன்றி, கார்ட்டூன் சித்திரங்களுக்கு ஒரு நோக்கமும், குறிப்பிட ஒன்றை தலைகீழாக்கும், கேலி செய்யும், அதன் வழியே விமர்சிக்கும் தன்மை உண்டு. இந்த நாவல் முற்ற முழுதாக அப்படிதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது

ஆத்மீக பரிமாணம் அற்ற முற்றிலும் லெளகீக எல்லைக்குள் பசி, ருசி, காமம், துரோகம், அதிகார வெறி, பண வெறி, குரோதம் இவற்றில் மட்டுமே நிகழும் வாழ்வு கொண்ட இந்த நாவலில் மேற்சொன்ன அனைத்துக்கும் வெளியே நிற்கும் தகிக்கும் விஷயங்கள் இரண்டு, இரண்டுமே வஞ்சிக்கப்பட்ட பெண்களின் சாபம். எந்த அதிகாரமும் அற்ற வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களின் சாபமே சர்வ வல்லமை கொண்ட சர்வாதிகார அரசாங்கத்தை மண்மேடாக்கும் ஆயுதமாக எழுகிறது. இந்த சாபத்தை அளித்தவள் 3 ஆம் நூற்றாண்டு கண்ணகி கொண்ட கற்பு ஒழுக்கம் கொண்டவள் அல்ல நியதிகள் ஒழிந்த  50 ஆம் நூற்றாண்டு கலவி வாழ்வு கொண்டவள். எனில் சாபத்துக்கு கற்பொழுக்கம் ஒரு பொருட்டில்லை, வஞ்சிக்கப்பட்டவள் பெண், அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் பத்தினியுடயதாய் இருந்தால் என்ன பரத்தையுடயதாய் இருந்தால் என்ன, அவள் வஞ்சிக்கப்பட்டவள் அதற்கு மேல் ஏதும் இங்கே தேவை இல்லை

நாவல் சுட்டும் வாழ்வுத் துயருக்கு நாவலுக்குள்ளேயே இரண்டு இடங்களில் இரு வேறு நிவர்திகள் மிக மிக மெல்லிய குரலில் அப்படி ஒன்று அங்கே உண்டா என்பதை போல சொல்லப் படுகிறது. முதலாவது நித்தம் சாவு முனையில் போரில் வாழும் ஒரு கிரேக்க வீரன் தனக்கு சஞ்சீவனி தேவை இல்லை என்று கிடைத்த சஞ்சீவனியை மறுக்கும் தருணம். மிக எளிது ஆனால் மனிதனால் முடியாதது. நீண்ட ஆயுள்,நீண்ட இளமை, நீண்ட போகம்,முடிவுறா அதிகாரம் இவற்றுக்கான இச்சையில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி. போதும் என்பது. இரண்டாவது, உறவுகள் பொய்யோ மெய்யோ இதில் நிச்சயம் ஒரு ஹிதம் இருக்கிறது. அந்த இதத்தின் பொருட்டேனும் மனித உருவில் வாழலாம் என்று சற்று நேரம் மனித உருவில் வாழும் ஒரு தேள் உணரும் கணம். அந்த ஹிதம் தேடித்தான் 50 ஆம் நூற்றாண்டு குயிலியும் வானம்பாடியும் 3 ஆம் நூற்றாண்டுக்கு தப்பி வந்து தஞ்சமடைந்து விடுகிறார்கள். அந்த இருவரும் ஒருபால் புணர்ச்சி கொண்ட தோழியர். 3ஆம் நூற்றாண்டிலும் அவர்கள் அவ்விதமாகவே இருப்பர்

மானுடம் தன்னுள் அடிப்படையாகக் கொண்ட ஹிதம் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது

இரா முருகனின் பிற நாவல்கள் போலவே, சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாக அமைந்த நாவல் இந்த சஞ்சீவனி.

இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் பிரியத்துக்குரிய எழுத்தார் இரா.முருகன் அவர்களுக்கு இந்த வாசகனின் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

முந்தைய கட்டுரைமந்தைக்கு வெளியே
அடுத்த கட்டுரைசிதைவதும் ஒளிர்வதும் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்