அன்புள்ள ஆசிரியருக்கு,
சிறு வயதில் இருந்து கேட்ட மகாபாரதக் கதை. கல்லூரி காலத்தில் கையடக்க மகாபாரத புத்தகத்தில் முழுமையாக வாசித்து முடித்த கதை. கொரானா கால கட்டத்தில் மகாபாரதம் தொடர் தொலைக் காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது முழுமையாக பார்த்து குறிப்பு எடுத்துக் கொண்ட கதை. புதிதாக என்ன இருக்கப் போகிறது ? வாசிக்க வேண்டுமா? வெண்முரசு வாசிக்கத் தொடங்கும் முன் இத்தகைய எண்ணங்களே எனக்கு இருந்தன. அதனால் தங்களுடைய பிற புத்தகங்களையே வாசித்துக் கொண்டிருந்தேன். தற்போது முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டிய மருத்துவ காரணங்கள். கடுமையான உளச் சோர்விலேயே இருந்தேன். இவற்றை மீறி வாசிக்க என்னை நானே உந்தித் தள்ளிக் கொண்டேன்.
வாசிப்பு எனக்கு எப்போதும் உவப்பானதாகவே இருந்து வந்துள்ளது. இருப்பினும் ஒரு நீண்ட நெடிய வாசிப்பை உள்ளம் நாடியது. வெண்முரசை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். செப்டம்பர் மாதம் வெண்முரசை தங்கள் தளத்திலேயே வாசிக்க ஆரம்பித்தேன். முதல் தொகுதியானமுதற்கனலை நிறைவு செய்ய ஏறத்தாழ இரண்டு மாத காலம் எடுத்துக் கொண்டேன். முதற்கனலை விட இரு மடங்கு பெரிய இரண்டாம் தொகுதியான மழைப்பாடலை நவம்பர் 12 அன்று மதியம் தொடங்கி நவம்பர் 23 என் பிறந்த நாளன்று காலை பன்னிரண்டு நாட்களில் நிறைவு செய்தேன்.
மழைப்பாடலால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டு விட்டேன். இரவு பகலாக வாசித்தேன். மகாபாரதத்தில் பல இடங்களில் எழுந்த சந்தேகங்கள் பலவற்றுக்கு விடை கிடைத்தது. பாண்டுவை, குந்தியை இவ்வளவு முக்கிய கதாபாத்திரங்களாக ஒரு போதும் நான் கற்பனை செய்திருக்கவில்லை. குந்தியின் பேராளுமை வியப்பில் ஆழ்த்துகின்றது. எப்போதும் குழந்தைகளை உடலில் சுமந்து செல்லும் தந்தையாக பாண்டு நெருக்கமாக உணர வைக்கிறான். அவன் இறப்பை ஏற்க மனம் மறுக்கிறது. எனது இக்கட்டான கால கட்டத்தை மன நிறைவுடன் எதிர் கொள்ள வெண்முரசு துணையாக இருக்கிறது. மனதில் இருந்த பல குழப்பங்களுக்கு விடை கிடைத்தது.
நன்றி
பேச்சியம்மாள் ஐயப்பன்
அன்புள்ள பேச்சியம்மாள்,
நலம் கொள்க.
நீண்டகாலத்திற்கு முன்பு ஒரு நிகழ்வை வாசித்தேன். உடல்நலமில்லாமலிருக்கும் நண்பரைச் சென்று பார்க்க விரும்பிய பிரிட்டிஷ் பிரசுரகர்த்தரான ஜான் முர்ரே அவருக்குப் பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க விரும்பினார். கடையில் ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்த்தார். எல்லாமே நவீன நாவல்கள். அடிப்படையில் கசப்பு, அவநம்பிக்கை, ஒவ்வாமையை வெளிப்படுத்துபவை. வாழ்கையை வெறுக்கவைப்பவை.
அப்போதுதான் நவீன இலக்கியத்தின் அந்த மாபெரும் குறைபாட்டை அவர் உணர்ந்தார். அகவல்லமை இல்லாத, நோயுற்ற, தோல்வியுற்ற, பிறழ்வுகொண்ட மனிதர்களால்தான் பெரும்பாலும் நவீன இலக்கியம் எழுதப்பட்டிருந்தது. அல்லது அப்படைப்புகளே பிரபலமாக இருந்தன. அவையே இலக்கியம் என்றும் ‘உண்மையை உடைத்துச் சொல்பவை’ என்றும் கருதப்பட்டன.
எவருடைய உண்மையை? அந்த சிறிய மனிதர்கள் அடைந்த பிரபஞ்ச உண்மைதான் உண்மையா? நோயாளியின் உண்மைதான் ஆரோக்கியமானவர்களின் உண்மையா? பிரபஞ்சத்திற்கும் வாழ்க்கைக்கும் அப்படி நிலையான, சாரமான உண்மை என ஏதாவது உண்டா? உண்மை என்பது ஒருவர் தன்னியல்புக்கு ஏற்ப, தன் தேவைக்கு உகக்க உருவாக்கி அறிவது மட்டும்தானே? வாழ்க்கையை நிராகரிக்கும் கருத்துருவகங்களால் எவருக்கு என்ன பயன்?
அறிவுஜீவிகளுக்கும் கல்வித்துறையாளர்களுக்கு நோயுற்ற, தோற்றுப்போன, பிறழ்ந்த மனிதர்கள் மேல் ஓர் ரகசிய ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான, வெற்றிகரமான, மதிப்புகொண்ட மக்கள். அந்த ஈடுபாட்டால் அவர்கள் நோயாளிகளான, தோல்வியுற்ற, பிறழ்ந்த மனிதர்களின் எழுத்துக்களை கூர்ந்து கவனிக்கிறார்கள். அவற்றை இலக்கியத்தின் முன்வரிசையில் வைக்கிறர்கள். அவற்றில் ‘ஆழங்களை’ கண்டடைகிறார்கள்.
அத்தகைய புனைவுகளை அறிவுஜீவிகள் ‘நேர்மையான வாக்குமூலங்கள்’ என சித்தரிக்கிறார்கள். ஆனால் உண்மையில் எந்தப் புனைவும் நேரடியான வாக்குமூலம் அல்ல. வாக்குமூலங்களே கூட புனைவுகள்தான். எல்லாவற்றிலும் அவற்றைச் சொல்பவன் தன்னை புனைந்துகொண்டுதான் இருக்கிறான். அது இந்த அறிவுஜீவிகளுக்கு புரிவதில்லை. அவர்கள் ‘வெள்ளந்தியான’ புனைவாசிரியனை, அவனுடைய மரணவாக்குமூலத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். நவீனத்துவ ஆக்கங்கள் பலவும் இவ்வகையானவையே.
முர்ree ‘நோயாளிக்குப் பரிசளிக்கத்தக்க’ நூல் ஒன்றை வெளியிடவேண்டும் என எண்ணம் கொண்டார். அவ்வாறுதான் அவர் சான் மிஷேலின் கதை (The Story of San Michele) என்னும் நூலை கண்டடைந்தார். ஸ்வீடிஷ் மருத்துவரான அக்ஸெல் முந்தே (Axel Munthe) எழுதிய தன்வரலாற்றுப் படைப்பு. நினைவுக்குறிப்புகள் போலத் தோன்றினாலும் புனைவுத்தன்மை ஓங்கிய ஒருவகை நாவல் அது.
முதல் உலகப்போர் முடிந்து, ஆழ்ந்த சோர்வு நிறைந்திருந்த காலகட்டத்தில் தன் வாழ்க்கையின் பொருளை தானே தன் எளிய அன்றாடங்களில் இருந்தும், கற்பனைகளில் இருந்தும் புனைந்துகொண்ட ஒருவரின் வாழ்க்கை இந்நூல். இந்நூலை எழுதும் காலகட்டத்தில் முந்தே ஒளியைப் பார்க்கமுடியாதபடி விழிகள் பாதிக்கப்பட்டிருந்தார். அணுகிக்கொண்டிருந்த இருளைப் பார்த்தபடி இதை எழுதினார். உலக இலக்கியத்தில் ஒரு செவ்வியல்படைப்பாக இது கருதப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. என் வாசிப்பில் நவீனத்துவத்தின் மிகைப்படுத்திக்கொண்ட பாவனைச் சோர்வுக்கு மாற்று இந்நூலே.
இன்று தமிழில் ஒருவர் நோயிலிருக்கிறார் என்றால் தயங்காமல் நான் வெண்முரசை பரிந்துரைப்பேன். அப்படி ஒன்றை எழுதமுடிந்தது என்பது என் வெற்றியே. அது மிகப்பெரிய நாவல், அல்லது நாவல் தொடர். அத்தகைய ஒன்றையே நோயில், தனிமையில், சலிப்பில் இருப்பவர்கள் நாடவேண்டும். முதுமையிலிருப்பவர்களும். ஏனென்றால் அதில்தான் ஆழ்ந்து ஆழ்ந்து செல்ல இடமிருக்கிறது. சில ஆண்டுக்காலம் வாழ்வதற்கான புனைவுவெளி உள்ளது.
வெண்முரசு எந்த பாவனையையும் விட்டுவைப்பதில்லை. எந்தப் பொய்யையும் கிழிக்காமல் கடந்துசெல்வதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அது வாழ்க்கையையும் வரலாற்றையும் திரட்டி அளிக்கும் பெரும்பரப்பு வாசிப்பவரை அந்த வெளியில் ஒரு துளி என தன்னை உணரச் செய்யும். தான் தான் என எண்ணிக்கொண்டிருப்பதே நோயில், தனிமையில், சலிப்பில் நம்மை தாளமுடியாத எடைமிக்கவர்கள் ஆக்குகிறது. நம் காலத்தை அசைவற்றதாக்குகிறது. வெண்முரசு வாசகனை அவனுடைய தன்னில் இருந்து விடுதலைசெய்யும். இலக்கியம் அளிக்கும் விடுதலை என்பது அதுதான்.
வெண்முரசின் வாசகன் பலநூறு கதைமாந்தர்களாக நடித்து நடித்து பல்லாயிரம் வாழ்க்கைகளை வாழ்ந்து செல்லமுடியும். அப்புனைவுப்பரப்பு அவனை பெருக்கிப் பெருக்கி பிரபஞ்சவெளியின் முன் சிறுதுகளென்றும் ஆக்கிவிடுகிறது. அந்த விடுதலையையே நான் அதில் அடைந்தேன். அதை ஒரு வாசகரும் அடையமுடியும் என சொல்வேன்.
ஜெ
விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)