அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் இன்று உங்களது மலர்ததுளி தொகுப்பில் இருந்து “என்னை ஆள” சிறுகதை வாசித்துக் கொண்டிருந்தேன். முதலில் நிதானமாக கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பிறகு அலுவலகத்திலிருந்து அந்தப் பெண் போன் செய்து அவனை வர சொல்லியிருந்தாள். முதல் நாள் அவன் போகவில்லை இரண்டாவது நாளும் போகவில்லை மூன்றாவது நாளும் போகவில்லை. திரும்பவும் அந்தப் பெண் அழைத்தபோது நாளை வருகிறேன் என்றான். இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு பெரிய பதட்டம் வந்தது. அவன் போகாமல் இருந்து விடுவானா அல்லது அந்த சந்திப்பு நிகழாமல் இருந்து விடுமோ, ஏதாவது துயர சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்ற ஒரு பதட்டம் வந்தது . என்னால் தாங்க முடியவில்லை. நேராக கதையின் முடிவை பார்த்து விடலாமா என்று கூட நினைத்தேன் . என்னை கட்டுப்படுத்திக் கொண்டு கதை முழுவதும் படித்து முடித்தேன்.
இந்த பதட்டம் இயல்பானதா அல்லது இது என்னுடைய முந்தைய வணிக வாசிப்பு பழக்கத்திலிருந்து அல்லது எதுவும் சினிமாத்தனமான எதிர்பார்ப்பில் இருந்து வந்ததா என்று குழப்பமாக உள்ளது.
தவறாக இருந்தால், எப்படி மாற்றிக் கொள்வது.
இதைப்பற்றி தெளிவுபடுத்தினால் எனக்கு உதவியாக இருக்கும்.
நன்றி
அன்புடன்,
சகுந்தலா
அன்புள்ள சகுந்தலா
நான் வாசிக்க ஆரம்பித்து அறுபதாண்டுகளாகப் போகிறது. ஏனென்றால் மூன்று வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நூலகத்துள் வாழ்கிறேன் என்றே சொல்லலாம். இன்றும் என் வாசிப்பென்பது நீங்கள் சொன்ன அதே வகையில்தான். உணர்ச்சிகரமாக கதையில் ஈடுபடுவேன். அடுத்தது என்ன என்னும் பதற்றமும் ஆர்வமுமாக இருப்பேன். துயருறுவேன். களிப்படைவேன். பெரும்படைப்புகளை வாசித்தபின் உருவாகும் ஆழ்ந்த பித்துநிலையால் சிலநாட்கள் எங்கிருக்கிறேன், என்ன செய்கிறேன் என்றே தெரியாமலிருப்பேன். அதன்பெயர்தான் வாசிப்பு.
கதை என்பது ஒரு நிகர் வாழ்க்கை. வாழ்க்கையில் நாம் அடைவன அனைத்தையும் கதையிலும் அடைந்தால்தான் அது மெய்யான வாசிப்பு. அந்த வாசிப்பையே இலக்கியப்படைப்பு கோருகிறது. அவ்வண்ணம் ஈடுபடாமல் வாசிப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு ஓவியத்தை வருடிப்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
நான் ‘இது கதைதான்’ என்னும் எண்ணத்தை நானே ரத்துசெய்துகொள்வேன். அது வாழ்க்கை என்று நம்புவேன். அவ்வாறு நம்புவதற்கு என் பக்கமிருந்து எந்தத் தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். இதையே ஐயத்தை அகற்றி நிறுத்தல் (suspension or disbelief) என இலக்கிய விமர்சனத்தில் சொல்கிறார்கள். அவ்வாறு என் வரையில் என் அவநம்பிக்கைகளை களைந்தால் மட்டுமே நான் எனக்குத் தெரியாத ஒரு புதிய உலகத்திற்குள் சென்று அங்கு வாழ்ந்து அப்புனைவை அனுபவிக்க முடியும்.
அவ்வாறன்றி என் அவநம்பிக்கையுடன் புனைவை அணுகினேன் என்றால் ஏற்கனவே எனக்குத் தெரிந்ததையே எங்கும் எதிர்பார்ப்பவன் ஆவேன், நானறிந்த வாழ்க்கை, நானறிந்த தர்க்கத்துடன் இருக்கும் புனைவையே ஏற்கத் தொடங்குவேன். அது நம் மூச்சையே நாம் திரும்ப இழுப்பதுபோல. சிறிய பெட்டிக்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்வதுபோல. நான் ஒவ்வொரு கணமும் புதிதென நிகழும் திறந்த வெளியை விரும்புபவன்.
நேரடி அனுபவங்களிலும், கனவிலும் நம் தர்க்கபுத்தி வேலைசெய்வதில்லை. அனுபவங்களுக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். இலக்கிய அனுபவம் என்பது அவ்வாறான ஒன்றே. ஒப்புக்கொடுப்பவர்களுக்கு மட்டுமே அமைவது அது. அனுபவம் நம்முள் நிகழ்ந்தபின், கனவு முடிந்தபின் நம் தர்க்கபுத்தி விழித்துக்கொண்டு அடைந்தவற்றை தொகுக்கத் தொடங்குகிறது. அவ்வாறே இலக்கியப்படைப்பின் மீதான சிந்தனைகளும் நிகழவேண்டும். அனுபவத்தை அனைத்து நுட்பங்களுடனும் தீவிரங்களுடனும் அடைந்தபின் அதை பகுத்து, வகுத்துக்கொள்ளும் முயற்சியே அறிவார்ந்த இரண்டாம் நிலைச் செயல்பாடு. என் வழி அதுவே.
அனுபவமென என்னில் புனைவுகள் நிகழ்வதனால்தான் அவை எனக்கு மறக்காமலிருக்கின்றன. நூற்றுக்கணக்கான புனைவுகள் என்னில் அனுபவமண்டலமாக திரண்டுள்ளன. சிலசமயம் என் கற்பனை அவற்றை மேலும் வளர்த்துக்கொண்டிருக்கும். எனக்கான முறையில் உருமாற்றம்கூட செய்துகொண்டிருக்கும். மெய்யான அனுபவங்களும் அவ்வாறுதானே? இன்று எண்ணும்போது ஒன்றை நான் வாசித்தேனா, கனவுகண்டேனா, நேரிலறிந்தேனா என்றே சொல்லமுடியாதபடி அவை அகமாகத் திரண்டுள்ளன.
நான் சென்ற வாரம் எகிப்து சென்றிருந்தேன். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் பலமுறை வந்ததுபோல் உணர்ந்தேன். அங்கே எல்லாம் வாழ்ந்திருக்கிறேன் என தோன்றியது. The Jewel of Seven Stars என்ற பிராம் ஸ்டாக்கரின் நாவல்தான் நான் எகிப்தைப் பற்றிப் படித்த முதல்புனைவு. இன்றுவரை வாசித்த புனைவுகள் வழியாக அங்கே நான் வாழ்ந்திருக்கிறேன் என அறிந்தேன்.
அப்படிப்பார்த்தால் என் வாழ்க்கை எவ்வளவு பிரம்மாண்டமானது. என்னைப்போன்ற இன்னொருவர் வாழும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டால் நான் பல ஆயிரம் மடங்கு பெரிய அகவாழ்க்கை கொண்டவன். நான் வாசிப்பது அதற்காகவே.
ஜெ