நான் நண்பர் * வுடன் வந்து உங்களைச் சந்தித்ததை நினைவுகூர்வீர்கள் என நம்புகிறேன். அவர் இலக்கியத்திற்காக வாழ்ந்த ஒரு களப்பலி. அவர் நடத்திய சிற்றிதழை அன்று கொண்டுவந்து உங்களுக்கு அளித்தோம். குமரிமாவட்ட இலக்கியத்தில்கூட இன்று அவரை நினைவுகூர்பவர்கள் இல்லை. இன்று அவர் இல்லை. அவர் இலக்கியத்தால் கொல்லப்பட்டார் என்றே நான் நம்புகிறேன். அவரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்யவேண்டும் என்று விரும்புகிறேன். இலக்கியவாதிகள் அவரைப்பற்றி ஏன் பேசுவதே இல்லை?
க
அன்புள்ள க,
உங்கள் நீண்ட கடிதத்தைச் சுருக்கியிருக்கிறேன். அக்கடிதத்தில் பெரும்பகுதி இலக்கியவாதிகள் பற்றிய வசைகள், ஏளனங்கள். இலக்கியவாதிகள் அனைவருமே தன்னலவாதிகள், தந்திரமானவர்கள் என்பது உங்கள் கணிப்பு. வாழ்க்கையில் தோல்வியடைந்து, நலிந்து மறைந்திருந்தால் மட்டுமே உங்கள் பார்வையில் அவர் இலக்கியவாதி. அவர் பெரிதாக ஏதும் எழுதவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் சமநிலையைப் பேணிக்கொண்டவர், தொடர்ச்சியாக எழுதியவர்கள் எல்லாருமே சந்தர்ப்பவாதிகள், அயோக்கியர்கள்.
இதைச் சொல்லும் நீங்கள் உங்களை எங்கே நிறுவிக்கொள்கிறீர்கள்? நீங்கள் ‘மனசாட்சியுள்ள சான்றோன், மற்றும் நுண்ணுணர்வு கொண்டவர்’ இல்லையா? ஆனால் இலக்கியத்துக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? நல்ல இலக்கியவாதி என நீங்கள் நம்பும் படைப்பாளிகளுக்காக ஒரு கூட்டமாவது ஏற்பாடு செய்ததுண்டா? ஒரு குறிப்பு எழுதியதுண்டா? குறைந்தபட்சம் நல்ல வாசகராகவாவது இருந்ததுண்டா? இல்லை என்பதை நான் அறிவேன், இல்லையா?
எனில் உங்கள் ஆதங்கம்தான் என்ன? உங்களுக்கு இலக்கியவாதிகள் மேல், இலக்கியம் மேல் இருக்கும் காழ்ப்பை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது, இல்லையா? அதற்கு இந்த ‘பரிதாப’ எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் இல்லையா? அதன்பொருட்டு இலக்கியவாதிகள் தோல்வியடையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், காத்திருக்கிறீர்கள், இல்லையா? இந்த பிணந்தின்னிக் கழுகு உளநிலையை நீங்கள்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும். உங்கள் பாவனைகளை களைந்து உங்களைப் பாருங்கள்.
*
தமிழில் எப்போதுமே ‘எழுதமுடியாதுபோன’ எழுத்தாளர்களின் ஒரு நீண்டபட்டியல் உண்டு. தொடர்ச்சியாக எழுதுபவர்கள் குறைவு. எழுத்தில் சாதிப்பவர்கள், சாதித்தோம் என அகம் நிமிர்பவர்கள் மிகமிகக் குறைவு. பெரும்பாலானவர்களுக்கு எழுதும் முனைப்பு உலகியல் வாழ்க்கையின் ஈடுபாட்டால் இல்லாமலாகி விடுகிறது. ஒரு பதவி உயர்வு இலக்கியத்தைவிட பெரிதாகப் படுகிறது, பத்தாண்டுகள் இலக்கியத்தை விட்டுவிடுகிறார்கள். குடும்பம், வணிகம் என பிறவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதனாலேயே எழுதமுடியாமலாகிறது. சிலருக்கு சமூகவலைத்தள வம்புகளே எழுத்தை அழித்துவிடுகின்றன.
அத்துடன் இலக்கியமும் கலைகளும் அத்தனை எளிதாக அருள்வனவும் அல்ல. அந்த தெய்வம் முழுமையான அர்ப்பணிப்பை கோருகிறது. இடைவிடாத முயற்சியை நோன்பெனக் கொள்ளச் செய்கிறது. கலையை நிகழ்த்துபவனிடம் இயல்பான திறனும் நுண்ணுணர்வும் இருந்தாகவேண்டும். அதை இன்றைய உலகியல் சூழலில் பொத்திப்பாதுகாத்து, ஒவ்வொரு நாளுமென வளர்த்துக்கொண்டே இருந்தாகவேண்டும்.
அதற்கும் அப்பால் நல்லூழும் தேவை. கலையை அடைய இடைவிடாது முயல்வதற்குரிய வாழ்க்கைச் சூழலும் குடும்பச்சூழலும் அமைவதே இந்தியச்சூழலில் ஒரு நல்லூழ். அனைத்தும் இருந்தாலும்கூட கலைப்படைப்பு கலைஞனில் வந்தமைவதில் ஒரு தற்செயல் உள்ளது. அதை விளக்கவே முடியாது. கனவு நிகழ்வதுபோலத்தான். நாம் சூழலை அமைத்துவிட்டுக் காத்திருக்கலாம். நிகழவேண்டுமென விரும்பலாம், அவ்வளவுதான்.
ஆகவே ஆசைப்படுபவர்களில் சிலருக்கே கலையிலக்கியத்தில் வெற்றி அமைகிறது. அவர்களுக்கே இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம். எஞ்சியோர் பலர் தன்னிரக்கம் வழியாக கடுமையான காழ்ப்பு நோக்கிச் செல்கிறார்கள். முதலில் கலையிலக்கியத்தில் சாதித்தவர்கள் மேல் அக்காழ்ப்பு வெளிப்படுகிறது. அத்தனை இலக்கியவாதிகளையும் இழிவுசெய்யத் தொடங்கி, மெல்ல மெல்ல இலக்கியத்தையே இழிவுசெய்ய ஆரம்பிக்கிறார்கள். எந்தக் கலையை அவர்கள் வாழ்நாளெல்லாம் விரும்பினார்களோ அதையே சிறுமை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
சமூகவலைத்தளம் அதற்குரிய களம். அங்கே தன்னிரக்கப் புலம்பல்களுக்கென தனி ஆதரவாளர் வட்டமே உண்டு. அவர்கள் வெறும் உலகியலாளர்கள், உலகியலில் திளைப்பது பற்றிய குற்றவுணர்ச்சி கொண்டவர்கள். இப்புலம்பல்கள் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன, ‘நல்லவேளை நான்லாம் தப்பிச்சேன்’ என அவர்கள் மகிழ்கிறார்கள். அந்த மகிழ்வை ‘உச் உச் அடாடா, நீங்கள்லாம் எங்கியோ இருக்கவேண்டியவரு சார். இலக்கியவாதிகளே கெட்டவங்க சார்’ என்று சொல்லி வெளிப்படுத்துகிறார்கள். இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக இழிவுசெய்யும் இடத்திற்கு இந்த தோல்வியடைந்த இலக்கியமுயற்சியாளர் சென்றாரென்றால் ஆதரவு வட்டம் பெருகும். நூறுபேர் கூடி அத்தனை இலக்கியமேதைகளையும், ஒட்டுமொத்த இலக்கியத்தையும் சிறுமைசெய்து வசைபாடுவார்கள்.
இலக்கியத்தில் வெற்றி- தோல்வி என்பது புறவயமானது அல்ல என்று முதலில் சொல்ல விரும்புகிறேன். புகழ் பணம் ஆகியவையே புறவயமானவை. இலக்கியத்தில் ஒருவர் அடையும் நிறைவு என்பது அவரே அறிவது, உணர்வது மட்டுமே. ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார், எழுத்தில் மனமகிழ்ச்சி கொள்கிறார் என்றால் அதுவே அவர் வாழ்க்கையில் அடையும் வெற்றிதான். வெளியே ஒரு வெற்றி அவருக்கு தேவையில்லை. அவர் தன்னளவில் நிறைவடைந்தாலே போதும்.
இந்த வாழ்க்கை எத்தனையோ சோர்வுகளும் சரிவுகளும் கொண்டது. நீக்கவே முடியாத பிரபஞ்சத்தனிமையால் சூழப்பட்டது. அதை எதிர்கொள்ள முடியாமல்தான் கோடானுகோடிப்பேர் வெற்றுக்கேளிக்கைகளில் திளைக்கிறார்கள். போதைகளை நாடுகிறார்கள். அரசியல் காழ்ப்புகளில், குடும்ப வம்புகளில் சிக்கி எதிர்மறை மனநிலைகொண்டவர்களாக ஆகிறார்கள். கசப்பை திரட்டிக்கொண்டும் அக்கசப்பை பிறர்மேல் உமிழ்ந்துகொண்டும் முதுமைநோக்கி செல்கிறார்கள்.
இலக்கியமெனும் தனியுலகை கண்டடைந்து அதில் ஈடுபடுபவர், அதைக்கொண்டே அனைத்து வெறுமைகளையும் நிரப்பிக்கொள்ள முடியும். அத்தனைச் சரிவுகளிலும் தன்னைக் காத்துக்கொள்ள முடியும். அந்தப் பெரிய அருள் கிடைத்த ஒருவருக்கு உண்மையில் அதற்குமேல் எதுவுமே தேவையில்லை. எவருடைய ஏற்பும் தேவையில்லை. எவரும் வாசிக்கவில்லை என்றாலும் கூட குறையில்லை.
இதை நான் மெய்யாகவே உணர்ந்து சொல்கிறேன். எனக்கு புகழும், ஏற்பும் இலக்கியத்தில் உள்ளன. ஆனால் இவை இல்லையென்றாலும் எக்குறையையும் உணர மாட்டேன். ஏனென்றால் எனக்கு எழுத்து என்பது எனக்கான தனியுலகம். அங்கே நான் உணரும் மகிழ்வும் நிறைவுமே எனக்கான பெரும் பரிசுகள். இதை என்னையோ என் எழுத்தையோ அறிந்த எவரும் உணரமுடியும். இத்தனை எழுதுகிறேன் என்றால், எச்சூழலிலும் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அது என் அந்தரங்கமான கொண்டாட்டம் என்பதனால்தான். அங்கே நான் மகிழ்ந்திருக்கிறேன் என்பதனால்தான்.
இலக்கியத்தில் தங்களுக்கு உரிய ஏற்பில்லை என்று கசந்து , இலக்கியவாதிகளையும் இலக்கியத்தையும் வசைபாடும் நிலைக்குச் செல்பவர்கள் உண்மையில் நாடியது எதை என்னும் வினா எப்போதுமே என்னில் எழுவதுண்டு. அவர்கள் நாடியது புகழையும், பணத்தையும், சமூக ஏற்பையும் மட்டுமே. அதன்பொருட்டு அவர்கள் தெரிவு செய்ததே இலக்கியம். ஆகவேதான் அந்த கசப்பு.
இலக்கியத்தை மெய்யாக அறிந்த ஒருவர், இலக்கியம் படைப்பதன் இன்பத்தையும் இலக்கிய வாசிப்பின் களிப்பையும் துளியேனும் உணர்ந்த ஒருவர், இலக்கியத்தை இழிவுசெய்ய மாட்டார். நமக்கு மெய்யான அழகியல் அனுபவங்கள் அளித்த இலக்கியவாதிகளைச் சிறுமைசெய்ய மாட்டார். எந்நிலையிலும் இலக்கியத்தின் பொருட்டு நிலைகொள்பவராக, அதற்காக பேசுபவராக, இலக்கியச் சாதனையாளர்களை கொண்டாடுபவராக மட்டுமே திகழ்வார்.
காழ்ப்பைக் கொட்டுபவர்களுக்கு உண்மையில் இலக்கியம் முக்கியமே அல்ல. அவர்களுக்கு புகழும் பணமும் ஏற்பும் பெற ‘ஏதேனும்’ ஒரு துறை தேவை என படுகிறது. அவர்களின் முதல்தெரிவுகள் சினிமா, அரசியல் என பல. எளியது என்று நினைத்துத்தான் அவர்கள் இலக்கியம் பக்கம் வருகிறார்கள். இலக்கியத்தை யார் வேண்டுமென்றாலும் உருவாக்கிவிடலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கான வாசிப்பை, மொழித்தேர்ச்சியை, வடிவப்பயிற்சியை அடைவ முயல்வதே இல்லை.
இவர்களில் பலர் இலக்கியம் மீதும், இலக்கியவாதிகள் மீதும் காழ்ப்புகளைக் கொட்டும்போது புகழ்பெற்ற படைப்பாளிகளை ’தாஜா செய்தும், குழு அரசியல் செய்தும் புகழ்பெற்றவர்கள்’ என்று அடிக்கடிச் சொல்வதைக் காணலாம். உண்மையாகவே இலக்கியத்தில் அவ்வாறு வெற்றிபெறலாம் என நம்பிச் செயல்பட்டவர்கள், செயல்படுபவர்கள் இவர்கள். இலக்கியத்தில் அது அணுவளவும் செல்லுபடியாகாது. இலக்கியம் என்பது வாசகர்களால் தீர்மானிக்கப்படுவது. நுண்ணுணர்வுகொண்ட, சமரசமற்ற, ஆனால் கண்ணுக்குத்தெரியாத வாசகவட்டம் ஒன்று எப்போதுமுண்டு. அவர்களே மெய்யான சக்தி. அவர்களிடம் மெய்யான கலைப்படைப்புடன் மட்டுமே சென்று நிற்க முடியும்.
இலக்கியத்தை இவ்வாறு அற்பமாக எண்ணிக்கொள்வதனால் இவர்களில் பலர் அதில் எதையும் சாதிப்பதில்லை. பணமோ புகழோ பெறுவதற்கு இலக்கியம் எவ்வகையிலும் உதவாது என காலப்போக்கில் புரிந்துகொள்கிறார்கள். இவர்களில் பலர் இலக்கியத்தில் இருப்பதே வேறெதிலும் எதையும் செய்ய முடியாதவர்கள் என்பதனால்தான். பலரை நான் அறிவேன், அவர்களின் உண்மையான கனவு சினிமாதான். சினிமாவுக்குள் செல்ல இலக்கியம் ஒரு வழி என நினைக்கிறார்கள். இலக்கியம் அதற்கு உதவாதபோது இலக்கியத்தால் அழிந்தேன் என இலக்கியத்தை வசைபாடுகிறார்கள்.
இலக்கியத்தால் அழிந்தோம் என்றெல்லாம் சொல்லும் பலர் இலக்கியத்தை நம்பியவர்களோ, அதில் தீவிரமாக ஈடுபட்டவர்களோ அல்ல. பலர் திரைப்படத்துறைக்குச் செல்ல இலக்கியத்தை ஊடகமாக்கிக்கொண்டவர்கள். நீங்கள் குறிப்பிட்ட நம் நண்பரும் அவ்வாறே. அவர் திரை இயக்குநராக விரும்பினார். நீங்கள் பாடலாசிரியராக முயன்றீர்கள். உங்களால் எண்ணியபடி உள்ளே நுழைய முடியவில்லை, ஆனால் அதற்கு இலக்கியம் பொறுப்பேற்கவேண்டும் என்கிறீர்கள்.
திரைப்படம் ஒரு தொழில். ஒரு தொழிலில் நுழைய முயன்று தோல்வி அடைந்தவர்கள் பலர் இருப்பார்கல். அவ்வாறு பலவகை தொழில்களில் நுழைய முயன்று முடியாமலான அனுபவம் அனைவருக்கும் இருக்கும். காலப்போக்கில் அவரவருக்கு சாத்தியமான தொழிலில் சென்று அமைகிறார்கள். ஒரு தொழில் அமையாது போவதற்கு தொழிலில் உள்ள தேவைகள், தொழில்தேடுபவரின் தகுதி என பல காரணங்கள் இருக்கும். ஒருவருக்கு ஒரு தொழிலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் அத்தொழிலின் ’புனிதபலி’யா என்ன?
இலக்கியத்தின் பொருட்டு அருந்தவம் இயற்றியவர்கள் உண்டு. பெரியசாமி தூரன் போல. எஸ்.வையாபுரிப்பிள்ளை போல. இன்றும் நம்மிடையே அத்தகையோர் வாழ்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறோம். இலக்கியத்தின் பொருட்டு சொத்துக்களை இழந்தவர்கள் உண்டு. க.நா.சு. முதல் சி.சு.செல்லப்பா வரை. அவர்களுக்கு என்றும் வரலாற்றில் இடமுண்டு. இலக்கியத்தின் வழியாக சினிமாவுக்கு முயன்று முடியாமல் போனவர்களுக்கு இலக்கியம் பொறுப்பா என்ன? அவர்களில் பலருக்கு சினிமாவும் தெரியாது. தெரியாத ஒன்றை வென்றுவிட முட்டாள்தனமாக முயல்கிறார்கள். தோற்றால் இலக்கியத்தின் களப்பலி என்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட நண்பருக்கே வருகிறேன். அவருடைய இலக்கு சினிமா மட்டுமே. என்னிடம் அவர் சினிமா வாய்ப்பு பற்றி மட்டுமே பேசியிருக்கிறார். சினிமாவில் ஓர் அறிமுக அடையாளம் என்னும் வகையிலேயே ஒரு சிற்றிதழை சில இதழ்கள் கொண்டுவந்தார். அதேசமயம் சினிமாவுக்குத் தேவையான எந்த தகுதியையும் அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் அவருக்கு ஒரு நடிகரிடம் கதைசொல்ல வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன், உங்களுக்கே தெரியும். அவரால் கதையைச் சொல்ல முடியவில்லை—அவர் தயாரித்துக்கொண்டே செல்லவில்லை. அத்துடன் சினிமாவின் அடித்தளத்திலுள்ள குடி போன்ற பழக்கங்கள். அவை மிக எளிதாக வந்து தொற்றிக்கொள்பவை.
இலக்கியம் தொழில் அல்ல. மனிதர்கள் வாழ்வதற்கு தொழில் தேவை. வாழ்வதற்குரிய செல்வம் இல்லை என்றால் தொழில் ஒன்றைச் செய்தே ஆகவேண்டும். இன்று உலகம் முழுக்க இதுதான் நிலைமை. இலக்கியம் ஒருவனின் அந்தரங்கமான உலகம். ஆன்மிக ஈடுபாட்டை ஒருவன் தன் தொழில் என சொல்லிக்கொள்ள முடியுமா? ஆன்மிகம் எனக்கு சோறுபோடவில்லை என அங்கலாய்க்க முடியுமா? ஆன்மிக ஈடுபாட்டுக்கு நிகரான அகவிடுதலையையே இலக்கியவாதி இலக்கியத்தில் தேடுகிறான். இலக்கியத்தில் அவன் தனக்கான இன்பங்களை அடைகிறான், நிறைவைக் கண்டடைகிறான்.
அவன் இலக்கியத்தில் முதன்மைச் சாதனைகளைச் செய்தான் என்றால் ஒருவேளை பணமோ புகழோ ஏற்போ தேடிவரக்கூடும். தொழில் தேவையில்லாமல், எழுத்தில் வாழவும் முடியக்கூடும். இலக்கியத்தை நான் எனக்கு சோறும் துணியும் சம்பாதித்துத் தரவேண்டும் என ஏவியதில்லை. அதற்கு அரசுவேலையையே நாடியிருந்தேன். அரசு வேலை கிடைக்காவிட்டால் ஏதாவது வணிகம் செய்திருப்பேன். ஓர் உணவகம் நடத்தியிருக்கக்கூடும். இன்று சினிமா என் தொழில், நேற்று தொலைத்தொடர்புப் பணி எப்படியோ அப்படி. இன்றும் எழுத்து எனக்கு முதன்மையான வருமான வழி அல்ல. ஆகவேதான் லட்சக்கணக்காக விற்கும் நூல்களை முற்றிலும் பதிப்புரிமை இல்லாமல் பொதுவெளிக்கு அளிக்கவும் என்னால் இயல்கிறது.
நான் இந்த தோல்விகளை புனிதப்படுத்துவதோ கொண்டாடுவதோ இல்லை. அதைச் சாக்கிட்டு சாதித்தவர்களை புழுதிவாரித் தூற்றவேண்டிய அவசியமும் எனக்கில்லை. தங்கள் இயலாமைகளால், இன்னும் என்னென்னவோ சிக்கல்களால் வீழ்ந்தவர்களை எல்லாம் இலக்கியத்தின் களப்பலிகளாக சித்தரித்து இலக்கியம் என்னும் செயல்பாட்டின்மேலேயே அடுத்த தலைமுறைக்கு அவநம்பிக்கையையும் சோர்வையும் உருவாக்க விரும்புவதுமில்லை. நான் மெய்யான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சாதித்தவர்க்ளையே முன்வைக்கிறேன்.
நான் சொல்ல விரும்புவது இதுதான். மெய்யாகவே இலக்கியத்தை தவமென இயற்றியவர்கள் எவரும் அப்படி மறைந்துபோனதில்லை. எஸ்.வையாபுரிப் பிள்ளையோ பெரியசாமித் தூரனோ வரலாற்றில் பேராளுமைகள் மங்கிப்போன பின்னரும் ஒளியுடன் நீடிக்கத்தான் செய்கிறார்கள். எழுத்தில் வென்ற எவரும் தனிப்பட்ட சிக்கல்கள் கொண்டவர்கள் என்றாலும் முற்றிலும் கைவிடப்பட்டதுமில்லை. பிரான்ஸிஸ் கிருபாவோ, விக்ரமாதித்தனோ. அவர்களுக்கான வாசகர்கள், புரவலர்கள் என்றுமிருப்பார்கள்.
ஆம், இலக்கியம் எவரையும் களப்பலி கொண்டதில்லை. ஒரு மெய்யான உபாசகனைக்கூட இந்த தெய்வம் கைவிட்டதில்லை. நம்புங்கள்.
ஜெ