கே.சச்சிதானந்தன் ஐந்து கவிதைகள்

சிம்லா- தியானங்கள்

 

  1. கல்லின் குரல்

 

ஒருகாலத்தில் நான்

அமைதிப்பெருங்கடலில் இருந்தேன்

பவளப்பாறைகளுக்கும் கடற்குதிரைகளுக்கும் நடுவே

கண்டத்தட்டுகளின் அசைவில்நான்

கரையின் வெறுமைக்கு தூக்கி வீசப்பட்டேன்

 

பூமியின் ரகசியங்கள் என்னில்

அடுக்கடுக்காக எழுதப்பட்டுள்ளன.

பூச் சூடும்போது நான் தேவி

மிதிக்கப்படுகையில் சண்டாளி

 

என் முதுகில் உரசி

ஆயுதங்களைத் தீட்டுகையில்

குருதி பெருக்குகிறேன்.

காதலையும் தியானத்தையும்

நான் பிரித்துப் பார்ப்பதில்லை

என்னிலுள்ளன கடலும் வானமும்

தொடக்கம் பரிணாமம் அமைவு

 

உங்கள் தலைகளை

என் வினாக்களிலிருந்து

பாதுகாத்துக்கொள்ள

இந்தக் குடை போதுமானது அல்ல.

 

2. இந்த மலர்

 

மறதியின் நிறம் ஊதா என்று

நேற்றுவரை அறிந்திருக்கவில்லை நான்

அனைத்துக்கும் பெயரிடும்

மனிதனின் துடிப்பு

எங்கும் சென்றடையாதது என்றும்

 

3 பனி

 

முதலில் உருவானவன் நான்

என்னால் மூடப்பட்டுள்ளன

எல்லா மொழிகளும்

 

கதிர்களில் நான் கரைந்தபோது

எழுந்து வந்தன எழுத்துக்கள்

அவை மரங்களும் உயிர்களுமாயின

சிந்தனைகளும் கற்பனைகளுமாயின

இப்போதும் நான் மொழிகளின்மீது

ஒட்டிக்கொண்டிருக்கிறேன்

அவற்றை

பொருள் ஊடுருவாதபடி செய்தபடி.

Kellie Marian Hill
Kellie Marian Hill

 

விரைந்துறங்கு..

 

விரைந்துறங்கு மகளே

வெயில் சாயும் கொன்றை மலர் போல

நிலவுப் பொற்பல்லக்கை ஏந்தி

வருகிறது கரிய மதயானையிரவு

மானும் முயலும் தூங்கிவிட்டன

காடும் ஆறும் கடலும் தூங்கிவிட்டன

நீர்ப்பாசியில் விழி மயங்கியது மீன்

நீலக் காயலில் கனவாகியது சூரியன்

பறவையும் பாட்டும் கூடுதிரும்பின

 

நீ விழிமயங்கும்போது

உலகம் ஒரு நீலமயில் மகளே.

உன் விழிகளுக்குள்

கல்லும் புல்லும் சிறகுகொள்கின்றன

நீ தூங்கும்போது கனவின் போர்க்களம்

பூமுற்றமாகிறது

அன்னையற்றவர்களுக்கெல்லாம் அப்போது

அன்னையென நான் நிலவாகிறேன்.

 

வற்றும் ஆற்றில் நீர் பாடும்

காயும் காட்டில் தளிர் தழைக்கும்

விரைந்துறங்கு  மகளே

இரவின் பூமரம் பூத்துக்குலுங்குகிறது

காற்றின் தோளில் தொங்கும் காணாத செண்டையென

சாரல்மழையின் முழக்கம்

விரைந்துறங்கு மகளே விரைந்து

விரைந்து உறங்குக மலரே.

Manabu Ikeda

 சென்றுவிட்டால்

 

சென்றுவிட்டால்

ஒருநாள் திரும்ப வருவேன்

 

நீங்கள் இரவுணவுக்கு அமர்ந்திருக்கையில்

கிண்ணத்தின் விளிம்பில் ஒரு உப்புப்பரல் என

என்னைக் காண்பீர்கள்

நோட்டுப்புத்தகத்தைத் திறக்கையில்

காய்ந்தும் மணம் போகாத ஒரு

தாழம்பூவாக என்னைக் காண்பீர்கள்

 

வெற்றிலையில் நான் நரம்பாவேன்

குன்றிமணியில் கருமை

செம்பரத்தியின் மகரந்தம்

கர்ப்பூரவல்லியில் கசப்பு

பச்சைமிளகாயில் காரம்

காகத்தின் கருமை

கலைமானின் தாவல்

ஆற்றின் வளைவு

கடலின் ஆழமென ஆவேன்.

 

சூரியனாக மாட்டேன்

சந்திரனோ தொடுவானமோ ஆகமாட்டேன்.

தாமரையும் மயிற்பீலியும் ஆகமாட்டேன்

 

எழுத்தென ஆவேன்

ஒவ்வொரு தலைமுறையுடனும்

புதியதாகப் பிறந்தெழும் எழுத்து.

குருதியென்றாவேன் நான்

கொல்லப்பட்ட நீதிமானின்

உறையாத கொழுங்குருதியாக.

மழையாவேன் நான்

அனைத்தையும் கழுவும்

இறுதி மழை.

 

2

 

சென்றுவிட்டால்

ஒருநாள் திரும்பி வருவேன்

வாசற்கதவில் தட்டுவேன்

ஏழுவரிக் கவிதையில்

ஒரு வரி சேர்த்து முழுமையாக்க.

முற்றத்தின் காசித்தும்பையில்

கடைசியாக விரிந்த மலரின்

நிறமென்ன என்று பார்க்க.

அதிகாரத்தால் கொல்லப்பட்ட

இளைஞனின் சடலம்

மறதியின் எந்த ஆழத்தில் என்று அறிய.

சிறைக்கனுப்பப்பட்டு திரும்பி வந்த கடிதத்தை

மீண்டும் விலாசமெழுதி அனுப்ப.

பாதி வாசித்த நாவலின் கதைநாயகன்

கடத்தப்பட்ட பெற்றோரை

கண்டுபிடித்தானா என்று காண.

 

திரும்பி வருவேன்

அன்றாட வம்புகளுக்கும்

திருவிழாக்கொண்டாட்டங்களுக்கும்

பழைய கிளிக்கொஞ்சல்களுக்கும்

 

யாருக்கு தெரியும்,

ஒருவேளை வாழ்க்கைக்கேகூட!

ரயில்

 

அந்த ரயில் செல்வது

என் கிராமத்திற்கு

ஆனால் நான் அதில் இல்லை

அது விரையும் தண்டவாளம்

என்னுள்

அத இரும்புச் சக்கரங்கள் என் நெஞ்சில்

என் அலறலே அதன் ஓசை

 

அது என்னை கொண்டுசெல்ல வரும்போது

நான் இருக்கமாட்டேன்.

எனினும் என் உயிர்

அந்த வண்டியின் மேலே அமர்ந்து பயணிக்கும்

அருகே என் உடலை படுக்கவைத்தபடி

 

அது கிராமத்தை அடைந்து

என்னுள் நுழைந்து

பழைய பாதைகள் வழியாக சைக்கிள் ஓட்டும்

அதன் மணியோசை கேட்டு

நண்பர்கள் ஓடிவருவார்கள்.

அம்பு வந்துவிட்டான் அம்பு வந்துவிட்டான் என்று

வந்தது என் உடல்தான் என

எந்த மொழியில் அவர்களிடம் சொல்வேன்?

நரகத்தின் மொழியிலா சொற்கத்தின் மொழியிலா

நான் அவர்களுடனல்லவா இருக்கிறேன்

 

கிணறு பேசட்டும்

அல்லது குளம்

உடல் பேசவில்லை என்றால்

முற்றத்தின் முருக்கு மரத்தில் அமர்ந்திருக்கும்

காகத்தின் உள்ளே இருந்து என் உயிர்

அவர்களிடம் உண்மையைச் சொல்லட்டும்.

மகள்

 

முப்பது வயதான என் மகளை

மீண்டும் காண்கிறேன்

ஆறுமாதக் குழந்தையாக

 

அவளைக் குளிப்பாட்டுகிறேன்

முப்பது ஆண்டுகளின் தூசியும் அழுக்கும்

கழுவி நீக்குகிறேன்

அப்போது அவள் அப்பாவின்

ஒரு சின்னக் கவிதைபோல

மகத்தான நீரொளியில் சுடர்கிறாள்

குட்டித்துண்டு காலத்தில் நனைகிறது.

 

சன்னல் கம்பிகளை பியானோக்கட்டைகளாக்கி

பீத்தோவன் மானுடனுடையதல்லாத

கைகள் தூக்கி நிற்கிறார்

மகள் ஒரு சிம்பனியின் உள்ளிருந்து

வெளிவந்து என்னை தழுவ

ரோஜாமலர்க் கைகளை நீட்டுகிறாள்.

 

வெளியில் மழையின் பேகாக்

கிசோரி அமோங்கர்.

முந்தைய கட்டுரைவள்ளிமலை சமணப்பள்ளி
அடுத்த கட்டுரைதெய்வ உருவங்களை எப்படி புரிந்துகொள்வது?