கே.சச்சிதானந்தன்- தமிழ் விக்கி
காதல் புத்தன்
இப்புவியின் மிக இனிமையான முத்தம் எது?
ஒரு முறை நீ என்னை பதிலில்லாமலாக்கினாய்
தூங்கவைத்த குழந்தையின் நெற்றியில்
அது விழிக்காதபடி அன்னை வைக்கும்
இறகுத்தொடுகை போன்ற முத்தமா?
பொன்னுருகும் சூரியகாந்திப்பூவின் இருபுறமும் நின்று
காதலன் காதலிக்கு அளிக்கும் கொதிக்கும் முதல்முத்தமா?
கணவனின் சடலத்தின் இறந்த உதடுகளில்
விதவை பதிக்கும் பிரிவில் நனைந்த இறுதி முத்தமா?
குருவின் கழுவப்பட்ட பாதங்களில்
இளந்துறவி வைக்கும்
தூய துறவின் முத்தமா?
அல்லது காற்று மரத்துக்கும் ,இலை கிளிக்குஞ்சுக்கும்,
வெயில் வனத்துக்கும், நிலவு நதிக்கும், மழை மலைக்கும்
அளித்துக்கொண்டே இருக்கும் பசியமுத்தங்களா?
இப்போது நான் அதற்குப் பதில் சொல்கிறேன்
தேவிகுளத்திற்கு மேல் மூடுபனிக்கு ஒரு வீடுண்டு.
அப்பால் மலைச்சரிவுகளில்
பெருகியிறங்கும் மரகதம்
இப்பால் பூமியளவுக்கே பழமைகொண்ட பாறைகளின்
தொன்மையான நிமிர்வு
பாறையடுக்குகளுக்கு நடுவே மரணம்போல
இருட்டும் மர்மமும் நிறைந்த ஒரு குகை
அதில்
பெயர் தெரியாத முப்பத்தியேழு வகை
காட்டுபூக்களின் கலவைமணத்தை சான்றாக்கி
நான் உன்னை முத்தமிட்டேன்
அதில் முதல் முத்தம் இருந்தது
இறுதி முத்தமும்
நீ குழந்தையும் காதலியும் விதவையுமாக இருந்தாய்
நான் காற்றும் இலையும் வெயிலும் நிலவும் மழையுமானேன்
காலம் முழுக்க ஒரு நிமிடமாகச் சுருங்கியது
இருளில் நம் முத்தம் இடிமின்னலென சுடர்கொண்டது
அந்தக் குகை போதியாயிற்று
எனக்கு காதலின் ஞானம் பிறந்தது
இப்போது நான் பிறவிகள் வழியாக செல்கிறேன்
இறுதி மானுட இணையும்
காதல் நிர்வாணம் அடைந்தபின்னரே
எனக்கு வீடுபேறு
கை
நீ உன் கையை
என் கையில் வைத்தாய்
வானம் பூமிமேல் என.
கறிவேப்பு பூத்தது என்று சொல்லி
நான்கு கொக்குகள்
மூங்கில்புதரிலிருந்து எழுந்து
மேகங்களுக்குக் குறுக்காகச் சென்றன.
வேலியில் வானவில் சுடர்விட்டது
நதி நம் காலடிகளை நாவால் தொட்டபடி
மேசைக்கு அடியில் சுருண்டுகிடந்தது.
மேலிருந்து இறங்கிவந்த
ஒரு சொற்றொடரில் தொற்றி
நாம் கைலாயத்தை அடைந்தோம்
உன் உடல்முழுக்க நனைந்திருந்தது.
என் சிறகுகள் சிவந்திருந்தன
இப்போது
அந்தச் சொற்றொடரின் சொற்கள்
மரங்களாகி
நம்மை கடவுளின் பார்வையிலிருந்து மறைத்தன.
மழை, நீ
அது மழையா
அல்லது நீயா?
மணங்களிருந்தன
புதுமண்ணின் அரளிப்பூவின்
பெண்ணின் உள்ளுதடுகளின்
கூரிய மணங்கள்
நிறங்களிருந்தன
உப்பின் காலைப்புதுமலரின்
மயில்துத்தத்தின் காட்டுத்தீயின்
நனைந்த சேனையிலையின்
சிவந்த ஒயினின்
வரிநெல்லின்
பறக்கும் நிறங்கள்.
நினைவுகள் இருந்தன
சுட்டுவிரலின் ஈர உதடுகளின்
விழித்தெழுந்த முலைக்கண்களின்
காயத்தின் மணிகளின்
மாற்றிவைக்கமுடியாத இதயத்தின்
தாங்கமுடியாத நினைவுகள்.
எத்தனை பெயர்கள் எத்தனை தனித்துவங்கள்
எத்தனை ஊர்கள் எத்தனை பிறவிகள்
தொடுகையிலெழும் எத்தனை ஆறுகள்
உன்னை இழந்தபோது நான் கற்பனைசெய்துகொண்ட
திரும்ப அடைதலின் பித்து
நீ திரும்பி வந்தபோது
நான் அஞ்சிய
உன்னை இழப்பதன் பேரிடி
இதுபோன்ற நீலமழையை நான் கண்டதில்லை
இதுபோல் ஒரு திரவத்தழுவல், அடங்காநடனம்
முடிவில்லாமல் பெய்து பெய்திறங்கும்
இதுபோன்ற ஓர் அடைமழைமுத்தம்
நீ என் மழையேதான்.
மதியத்திற்கு நீளம் கூட்ட
மதியத்திற்கு நீளம்கூட்ட
பீர் அருந்தியபடி
நான் இறுதிக்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறேன்
உன் விழிகளில்
தொடக்கநாட்களின் ஒளியை கண்டு
எனக்கும் காற்றுக்கும்
போதையேறுகிறது.
சாவெனவே முடிவற்ற கடல்
நம்மை கவனிப்பதே இல்லை
பூமி கற்றுக்கொண்ட புதிய ஒரு பாட்டு என
மேலே பறவைகளின் பல்லவி.
சுழலும்முன்ன்னரே மணலில் புதைந்த
ஒரு பம்பரம் என் குழந்தைநாட்கள்.
ஒருமுறை ஒரு குருவியின் அழுகையில் நான்
புயலின் முழக்கத்தைக் கேட்டேன்.
இல்லை, நம்மால் தடுக்கமுடியாது
கூடிக்கூடிவரும் இக்குளிரை.
மகிழ்ச்சி என்பது
இருட்டை நோக்கி எறியப்பட்ட
ஒரு கண்ணாடிப்பாத்திரம்.
காதல்
முகில்கள் நடுவே
சென்றுமறையும் ஒரு பருந்து.
ஓவியங்கள் DEBASHREE DEY