நான் உங்களது நீண்ட நாள் வாசகன். என்னுடைய பல சந்தேகங்களுக்கு விளக்கங்கள் உங்களிடமிருந்தே கிடைக்கின்றன மகிழ்ச்சி .
உங்களிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆனால் தொடர்பு எண் கிடைக்கவில்லை. கடைசியாக உங்களுக்கு என்ற தனிப்பட்ட வலைதளத்தில் தேடிய பொழுது மெயில் ஐடியை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் என்று தெரிந்தது .ஆகவே மெயில் மூலமாக உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
எனக்கு காடு நாவலின் பிடிஎப் பிரதி வேண்டும். தங்களது வலைப்பக்கத்தில் சென்ற பொழுது எனக்கு கிடைக்கவில்லை. எப்படி அதை நான் தரவிறக்கம் செய்வது என்று சற்று விளக்குங்களேன்.
கருணாகரன்
அன்புள்ள கருணாகரன்,
உங்கள் கடிதத்தை இப்படி மறுசொல்லமைப்பு செய்யலாம்.
”அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு. நான் உங்கள் மேல் மதிப்பு உள்ளவன். எனக்கு உங்கள் வீட்டில் திருட ஆசை. உங்கள் வீட்டுச் சாவியின் நகலையும் நீங்கள் வீட்டில் இல்லாமல் இருக்கும் நாள் பற்றிய தகவல்களையும் சொல்லி உதவுங்கள்”
நண்பரே, பதிப்புரிமை உள்ள நூல்களை பிடிஎஃப் பெற்று வாசிப்பதென்பது நேரடியான திருட்டு மட்டுமே. காடு புத்தகமாக வாங்கக்கிடைக்கிறது. மின்னூலாகவும் வாங்கலாம். என் நூல்களில் வெண்முரசு உட்பட பல நூல்கள் இணையதளங்களில் என்னாலேயே இலவசமாக வாசிப்புக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசிக்கலாம். தொன்மையான பதிப்புரிமை இல்லாத நூல்களும் ஆர்கைவ் தளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை பிடிஎஃப் வடிவில் வாசிக்கலாம்.
ஆனால் விலைக்கு விற்கப்படும் நூல்களுக்கு பிடிஎப்ஃ தேடுவது குற்றம்.
ஜெ