(இரா முருகன் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)
வரலாற்று ஆய்வாளர் அ. கா. பெருமாள் அவர்கள் பேட்டி ஒன்றில் இடப்பெயர்ச்சியால் குல தெய்வத்தைக் கைவிட்டு விட்டு மீண்டும் கையெடுக்க முடியாத குடும்பங்களைப் பற்றி பேசுகிறார். அவ்வாறான குடும்பங்களுக்கு குறிசொல்லிகளால் கை காட்டப்படுவது சாஸ்தா என்கிறார் ஆய்வாளர்.அந்தக் குடும்பங்கள் சாஸ்தாவைத் தெய்வமாக ஏற்கிறார்கள்.எது எப்படியானாலும் அவர்களுக்குத் தெய்வம் கிடைத்துவிட்டது என்பது ஒருபுறம் இருந்தாலும் சில இடைவெளிகள் இதில் இருப்பதை உணரலாம்.நாம் ஒரு தர்க்கத்தில் வாழ்கிறோம். அதை வைத்துக்கொண்டு இது போன்ற குறிசொல்லிகளின் இயங்கு முறையில் தர்க்கம் இல்லை என்று நாம் உண்மையில் எண்ணிக்கொள்வோம். ஆனால் அது நாம் அறியாத தர்க்கத்தில் அமர்ந்திருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இதில் முரண் என்னவென்றால் குறிசொல்லி போன்றோர்களால் அதைக் காரணத்துடன் நிறுவ முடிவதும் இல்லை.தர்க்க பேதங்களுக்கும் , காரணத்திற்கும் உள்ள இடைவெளியில் இயங்குபவராக எழுத்தாளர் இரா. முருகனை வரையறுக்கமுடியும்.
சுருங்கச்சொன்னால் குலதெய்வ வழிபாட்டில் வைதீக தரப்பு, அவைதீக தரப்பு, என்று இருப்பதுபோல் இரா. முருகன் தரப்பு ஒன்று இருப்பதாக அவரின் மாய யதார்த்தத்தை வைத்து சொல்லலாம்.
மறக்கப்பட்ட அந்தத் தெய்வம் குடும்பத்தின் முதாதையாக இருக்கும் என்றால்? அப்படி மறந்தவர்கள் உண்மையாகவே மறந்தார்கள்தானா? அவர்கள் மறந்தாலும் அந்தத் தெய்வம் மறக்குமா? என்ற கேள்விகளோடு அரசூர் நாவல்களை அணுக முடியும்.
கதையின் ‘நோக்கம்’ என்னவாக இருக்கமுடியும் என்பதை வாசகர் சில கூறுகளால் உத்தேசிக்கமுடியும்.நோக்கம் என்ற பதம் ஆசிரியர் கதை சொல்லுவதன் விருப்பத்தை பொருத்து அமைவதாக இருக்கும்.விருப்பமில்லாது யாரும் கதை சொல்லப்போவது இல்லை தான். ஆனால் ஒரு இலக்கிய படைப்பு அதன் இயல்பிலேயே சில அடுக்குகளால் ஆகியிருக்கும்.அடுக்குகள் இல்லாத பிரதி இலக்கியமாகக் கருதப்படுவது இல்லை அல்லவா.விருப்பம் எதன் மீதோ அமர்ந்திருக்கும்.அதாவது ஒவ்வொரு எழுத்தாளரும் சில அடுக்குகள் மேல் அமர்ந்துள்ளனர்.அதுதான் அவர்களை கதை சொல்லவே தூண்டுகிறது.தத்துவமோ அரசியலோ வலுவான ஓர் அடுக்கு தான். வாசகனின் உத்தேசிப்பு ‘விருப்பம்’ எதன் மீது அமர்ந்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக இருக்கும். பேசுபொருள் , காலம், வடிவம், தொடர்ச்சி என்று சில இன்றியமையாமை அந்தக் குறிப்பிட்ட நாவலில் எவ்வாறு திரிகிறது என்று சொல்வதே சரியான வாசிப்பு என்பது என் எண்ணம். இவை அனைத்தும் கதைக்கு ‘உள்’ இருப்பதை மட்டுமே பொருள்படுத்துவது.
புனைவுக்கு வெளியே சில கேள்விகள் உண்டு.அது யார்? எப்போது? வகையான கேள்விகள்.கதையின் பெறுமானத்தை அடிக்கோடிட இது போதாது என்பது ஒருபுறமிருக்க, நாம் ஒரு நாவலை இந்தக் கேள்விகளை வைத்துதான் பண்பாட்டு சூழலில் , அரசியல் தளத்தில் நினைவு கூறுகிறோம்.இப்படி சொல்கிறேனே.வங்க பிரிவினையின் போது ஆனந்த மடம் என்னும் நாவல் செய்ததை வைத்தே அந்த நாவலை நினைவு கூறுகிறோம். இதன் பொருட்டு ஆனந்த மடத்திற்கு ஒரு முக்கியதுவம் உருவாகி விடுகிறது. ஏனெனில் அது ‘எப்போது’ என்ற கேள்வியால் எதிர் கொள்ளப்படுகிறது. யார்? எப்போது? என்ற கேள்வி காலம் தாண்டி எழுப்பப்படும் கேள்வி.ஆகவே அதை பொருள் கொள்ளாது ஓரமாக வைத்துவிட்டு ‘நோக்கம்’ பற்றி பேசும் போது, ‘உள்’ அம்சங்களை மட்டுமே பொருள் படுத்தலாம் என்று தோன்றுகிறது.இரா.முருகன் என்ற ஆளுமை தமிழில் மாய யதார்த்தத்தை அதிகம் எழுதியவர் என்றோ (எப்போது), பல தலைமுறை கதையை விரிவாக சொன்னவர் என்றோ(யார்), வருங்காலம் சொல்லாம். சமகாலத்தில் அதை சொல்லும்போது புனைவைக் கூடிய விரைவில் கடக்கும் உத்தேசமே தட்டுப் படுகிறது.ஆகவே ‘உள்’ சமாச்சாரங்களைப் பேசுவதே என் உத்தேசம்.
2
காலம் என்ற பேசுபொருள் சிறுகதை முதல் அனைத்து இலக்கிய துறைகளிலும் பேசப்பட்ட ஒன்று தான்.நாவலில் அது எவ்வகையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. ஏனெனில் அது வாழ்க்கையையே பிரதானமாக கொண்டுள்ளது.ஒரு நாவல் வாழ்வனுபவத்தைத் தரவில்லை என்றாலும் அது வாழ்வை தான் பேசும்.தொடக்ககால யதார்த்த வாத நாவல்களின் பாத்திரங்கள் பிரத்யேகமான வாழ்வைக் கொண்டிருக்கும். நாவலின் ஆசிரியர் பாத்திரத்தின் அக விசாரணையின் மூலம் அந்தப் பிரத்யேக தன்மை கூடி வந்துவிடும்.பிரத்யேக வாழ்வு கதையாகும் தகுதியை அடைந்துவிடும்.ஆனால் இரா. முருகன் கதையாகத வாழ்வு என்று ஒன்று இல்லை என்கிறார்.
இரா. முருகனின் அரசூர் நாவல்களில் காலம் என்பது மூன்றாக – நேற்று,இன்று,நாளையாக பிரிவதில்லை.இவற்றுள் உள்ள முரண்பாடுகளை ஆவணமாக்குவதில்லை.காலத்தை மூன்று இணைகோடாகவும் அது கொண்டிருக்கவில்லை. ஒரு பெரும் கோட்டின் மூன்று துண்டுகளாகவும் அது காலத்தைச் சித்தரிக்கவில்லை.இதுவரையில் தமிழின் பெரும்பாலும் காண கிடைப்பது இதற்கு புறம்பான பார்வைகள்தான்.இவ்விதமான பார்வைகள் நேற்றையோ நாளையையோ மிக மர்மமானதாகவோ, மலர்ச்சிக்கு உரியதாகவோ எண்ண வைக்கும். நேற்று என்பது இன்றும் நாளையும் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்றாக அரசூர் நாவல்கள் முன்வைக்கிறது.
ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இருக்கிறது.முரண் இல்லாமல் இருக்கிறது.
அரசூர் வம்சம் நாவலின் வரும் ராஜா நேற்றின் மூதாதையுடனும், நாளையின் பனியன் சகோதரர்களுடனும் எந்த முரண்களும் இல்லாமல் இருப்பது மட்டுமல்லாமல், பரஸ்பர ரகசியங்கள் இல்லாமல் இருக்கிறார்கள். ராஜாவுக்கு நேற்றிடமிருந்தும் நாளையிடமிருந்தும் எதையும் தெரிந்து கொள்ள விருப்பமில்லை.மறைப்பதிலும் ஆர்வமில்லை.ஆனால் அவைகளை வெறுமனே பொருள்படுத்துகிறார்.
முடிந்த காலத்தை நினைவாக முன்வைக்கும் போதும் காலம் துண்டாடப்பட்டுவிடும்.நினைவின் எல்லையை மாயம் என்ற முறைமையால் இரா.முருகன் விரிக்கிறார். மாயம் என்ற பதம் பாத்திரத்தின் தன்மைக்கு எற்றார் போல் குறக்களியாக,அரூபமாக, ரூபமாக, கனவாக,பிரதியாக வருகிறது. ஐந்து தலைமுறை கதையாக அரசூர் நாவல்கள் இருந்த போதும் ,பாத்திரத்திரம் இடம்பெறும் காலகட்டத்தைப் பொருத்து அந்த மாயம் மாறுகிறது. அரசூர் வம்சம், விஸ்வரூபம் இவ்விரண்டு நாவல்களும் இரண்டு நூற்றாண்டின் முன்பிருந்த பாத்திரங்களைக் கொண்டிருப்பதால் அவைகளின் நம்பிக்கையை நவீன மனத்தால் புரியும் படி ரூபமாக இருக்காது. திடீரென வெளிப்படும். அச்சுதம் கேசவம், வாழ்ந்துபோதிரே நாவல்களில் கனவு மற்றும் பிரதியில் அது வெளிப்படுகிறது.
வரலாறு என்ற பதம் கடந்த காலத்திலிருந்து எழுந்துவருவது.எவ்வகையிலும் வரலாறு வருங்காலத்திலிருந்து கடந்த காலத்தை தீர்மானிப்பதாக இருக்க முடியாது.கால வரிசை செய்யபட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக வரலாறு இருப்பதால், அதன் இயல்பிலேயே ஒரு காலகட்டத்தைப் பொருள்படுத்தியும்,முக்கிய நிகழ்வு நடக்காத ஒரு காலத்தைக் கருத்தில் கொள்ளாமலும் அது செயல்படுகிறது. முக்கியம்,முக்கியமின்மை இன்றி வரலாறு நகர முடியாது அல்லவா, ஆம் இது மிகவும் சப்ஜெக்டிவான ஒன்றேதான்.இப்படி சொல்கிறேனே காங்கிரஸ் வரலாற்றில் சூரத் உடைவுக்குப் பின் லக்னோவில் இணைவது வரை உள்ள காலம் வரலாற்றின் விடுபட்ட அல்லது முக்கிய மில்லாத பகுதியாக நாம் கருதுகிறோமே.முக்கியமில்லாத அந்த இடைவெளி வரலாற்றில் சேறுமா என்று இரா.முருகன் அவர்களிடம் கேட்டால் சேறும் என்று சொல்வாராக இருக்கும். ஏனெனில் அவர் காலத்தைத் துண்டாடுவதில்லை மேலும் முக்கியமாக, என்றென்றும் நடக்கும் ஒரு வரலாற்றை அவர் சித்தரிக்கிறார். அதுதான் ராமோஜியம்.பிரத்யேகங்கள் இல்லாத அன்றாடத்தின் வரலாறு என்று சொல்லலாம்.அரசூர் வம்சத்தின் ராஜாவின் பெயரைவிடவும் அவரின் இச்சை முக்கியமாக இரா. முருகன் முன் வைக்கிறார்.பெயர் என்று ஒன்றை சொன்னால் அது பிரத்யேகமாகிவிடும் அல்லவா?
காலத்தால் மாறாத, எப்போதும் ஒன்றான நடவடிக்கையாக இருப்பது அன்றாடம். அன்றாடம் இச்சைகளால் ஆனது.ருசி, காமம், இசை, கலை, கேஜெட்டுகள் எல்லாமே இச்சையாக இரா. முருகன் முன் வைக்கிறார்.இராமோஜியம் மட்டுமின்றி மற்ற நாவல்களிலும் இது வெளிப்படவே செய்கிறது.
ராஜாவுக்கு பிரிட்டிஷ் தரப்பு தரும் அழுத்தம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு தான் அன்று காலை உணவின் ருசி முக்கியம்.(அரசூர் வம்சம்).ஐந்து நாள் பயணத்திற்கு தேவையான உணவை அட்டவணை போட்டு எடுத்துச் செல்கிறார்கள் ராமோஜி தம்பதிகள்.பாவத்தை தொலைக்க திருக்கழுக்குன்றம் செல்லும் மகாலிங்க ஐயர் வனப்பு மிகு பெண்ணிடம் காம வயப்படுகிறார்.(விஸ்வரூபம்).
ராமோஜிக்கு சினிமாவாகவும், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே நாவல்களில் அர்ஜுன நிருத்தமாகவும் கலை இருக்கிறது.கிராமபோன், ருக்மணி குக்கர்,நாக்பூர் கத்தரிக்கோலுமாக கேஜெட்டுகள் விரிகிறது.
(நிற்க.இரா.முருகன் புனைவுகளில் இச்சை மலிந்து இருப்பதால் அதை துண்டாக பேச வேண்டாமே.)
வரலாறு மாறாத அன்றாடத்துடன் எவ்வாறு உரையாடுகிறது? அன்றாடம் வரலாற்றை பாதிக்கிறதா? வரலாறு அன்றாடத்தை பாதிக்கிறதா ? ஆகிய கேள்விகள் ராமோஜியத்தின் சாரம் என்று தோன்றுகிறது.
காலத்தைப் பேதமில்லாமலும், வரலாற்றை அன்றாடத்தின் தொகுப்பாகவும் பார்ப்பதனால் மரணம் எந்த வகையிலும் முடிவாக இல்லை.(அரசூரில் மரணம் இல்லாமல் போவதாக அச்சுதன் கேசவம் நாவலில் ஓர் இழை வருகிறது.) வாழ்ந்து முதிர்ந்து உயிர் நீத்தவரைவிடவும், அற்ப ஆயுளுடன் உயிர் நீத்தவர்களே கடவுளாக முழு தகுதி கொண்டவர்கள்.தமிழ் சமுதாயத்தின் குற்ற உணர்வோ, துக்கமோ பக்தியாக மாறுவதாக கொள்ளலாம்.கடவுளாக்கம் என்ற செயல்பாட்டிலிருந்து தப்பி விட்ட மூதாதைகள் பசி பசி என்று அலைவதை அரசூர் வம்சத்திலும், விஸ்வரூபத்திலும் பார்க்கலாம். கடவுள்ளாக்கப்படும் பொறுப்பிலிருந்து தப்பி விட்டவர்கள் மீண்டும் திரும்புவதை மற்ற இரண்டு நாவலிலும் காணலாம்.
3
அரசூர் நாவல்கள் பெரும் கால கட்டத்தில் நிகழ்ந்தாலும், அதிக பாத்திரங்களைக் கொண்டதாக இருந்தபோதும் அது கையாண்ட வடிவம் ,வியம்புதல் மற்றும் மாயம் தரும் தர்க்க மீறல்களினாலும் அது வாழ்க்கை அனுபவத்தை தருவதில்லை.(விஷ்வரூபம் நாவலின் வரும் மகாலிங்க ஐயர் மட்டும் விதிவிலக்கு).மேலே சொன்னது போல் யதார்த்தவாத நாவல்கள் அதன் விசாரிப்பு முறையால் அதை சாதிக்கிறது.இரா.முருகன் விசாரிப்பை விட உரையாடலையே பெரிதும் எழுதுகிறார். அது இரு பாத்திரங்களுக்கு இடையே என்று இல்லாமல், அந்த பாத்திரமும் அதன் மாயமும்,அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் பேசுவதாக நாவல்களில் முன் வைக்கப்படுகிறது. (ராமோஜியம் யதார்த்தவாத நாவல் என்பதால் அது வாழ்க்கை அனுபவத்தை தரும்)
நவீன இந்திய என்ற சிந்தனனையால் அடைந்ததையும் இழந்ததையும் பற்றி கோட்பாட்டாளர்களால் விரிவாக பேசமுடியலாம்.காந்தியத்தை தவறவிட்டதால் அடைந்ததும், முதலாளித்துவத்தால் அடைந்ததையைப் பற்றியும் கோட்பாட்டாளர்கள் விமர்சிப்பதைப் பார்த்திருப்போம்.உண்மையில் மக்களின் அன்றாடத்தில் எப்படி இது பாதிக்கிறது என்பதை இரா.முருகனின் நாவல்களில் காணலாம்.அது இந்தியாவை இரண்டாக பிரிக்கிறது.இரண்டு இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசத்தைப் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் மாயத்தால் உணர முடியும்.
ராமோஜியத்தில் – மூன்று ராமோஜிகள் உண்டு.1940கள் ,1698 – 1707,1745.நாற்பதுகளின் ராமோஜிக்கு வரலாற்றின் தகவல்களைச் செய்தியாக தெரிந்துக்கொள்ளும் நபர். அவருக்கு நேர் மேலே வரலாறு சும்மா ஓடுகிறது.இச்சையுடன் இருக்கும் சாதாரண குமாஸ்தா. அரசுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையும் மாற்றி வைக்க முடியாதவர்.சென்னையில் குண்டு விழுந்ததோ,வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூர்க்கமாக நடைபெற்ற போதோ ஷம்பக்காக காபி குடித்த சாதாரண ஆள்.ஆனால் 1745 – பாண்டிச்சேரி ராமோஜி முக்கியமான ஆள். அவர் ஆனந்தரெங்கம் பிள்ளையின் நண்பரின் மகன். ஆனந்தரெங்கம் பிள்ளைக்கு அடுத்த இடத்தில் வர கூடியவர்.அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையை அரங்கேற்ற உதவியவர் என்று கலைக்கு பங்களித்த பெயர் அறியாத நபர்.ராமோஜியம் நாவலிளே இது மிகவும் முக்கிய இடம். தன் மனைவிகளான ரத்னா மற்றும் புவனாவை இந்தப் பகுதியில் தன் மகள்களாக ராமோஜி பார்க்கிறார் என்பதால் மட்டும் இதை சொல்லவில்லை.அதுவரை சொல்லப்பட்ட சாரத்தை பிரதி தலைகீழாக முன் வைக்கிறது. ஒருவரின் (ராமோஜி) அன்றாடம் வரலாற்றை பாதிப்பதாக அந்தப் பகுதி முடிகிறது.இத்தனைக்கும் வேலை இல்லாத, குடும்பம் இல்லாத நபர் அவர்.கலை தரும் நிறைவை அனுபவிக்கிறார்.அப்படியென்றால் நவீன ராமோஜி எதை பெற்றதால் ஷம்பக் அவருக்கு வாய்க்கிறது? என்று கேட்டால் நவீன இந்தியாவை புரிந்துகொள்ள முடியலாம்.
4
பகடி என்ற உத்திக்கு சில இயல்புகள் உண்டு.பெரும்பாலும் அது குறைத்தும், கூர்மையாகவும் அமைந்திருக்கும்.அதை வாசிக்கும் போது அடைந்த அனுபவம் சொல்லும் போது இருக்காது.இரா.முருகன் பகடி கூர்மையாகவோ,குறைவாகவோ இல்லை.அதனால் அது பகடியே இல்லை என்று சொல்ல தோன்றுகிறது.சற்று அதிகம் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ராமோஜி நாளிதழை எடுக்கிறார் ‘இந்த வருஷம் ஜலகஷ்டம் ஜாஸ்தி இருக்காது’ என்ற வரியை படிக்கிறார். ‘என் தமிழே மேல்’ என்று மூடி வைத்து விடுகிறார்.
பகடி என்பது மொழியில் மட்டும் இருந்தால் போதுமா, அல்லது பாத்திரங்களுக்கும் பகடிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று யோசித்துப் பார்க்கலாம். அவர் கையாளும் பாத்திரங்கள் இயல்பிலேயே ஜோக்கருக்கு உடைய இயல்புகளைக் கொண்டுள்ளது.இதை எதிர்மறையாக கூறவில்லை. பிரத்யேக அம்சமாகவே இதை குறிப்பிட விழைகிறேன்.கேலிகார தன்மை என்பது male ego,masculine எல்லாம் இல்லாத தன்மை என்று பொருள் கொள்ள முடியும். ஒரு புறத்தை மறைத்து வைக்கும் தன்மை அது.அப்படி பட்ட பாத்திரங்களின் கதைசொல்லியாக இரா. முருகன் இயங்குகிறார்.இதனால் நீட்டி முழக்கியே அவர் சொல்கிறார்.நகைப்புக்கு மேலான அம்சத்தைக் கேலித்தன்மை உத்தேசிக்கிறது.(க.நா.சு உரையாடல் நிகழ்வில் பகடியை தன் வாழ்க்கையிலும் மேற்கொள்ளும் பார்வையாக இரா.முருகன் சொல்கிறார்)
இறுதியாக உணவு, இதை சொல்லிவிட்டால் கட்டுரையின் நோக்கம் முடிந்துவிடும்.தமிழ் சமூகத்தில் அன்பையும்,வெறுப்பையும் உணவுவில் காட்டிய தலைமுறையை சேர்ந்தவர் இரா.முருகன்.குடும்ப அரசியலின் பகடை காய்கள் உணவுதான்.யார் யாருக்கு எப்படிபட்ட உணவை தருகிறார்கள் என்பது அவர்களை விளக்கி கொள்ள போதுமானதே.ராமோஜியமோ, அரசூர் நாவல்களிளோ உணவை குடும்ப அரசியலுடன் முன் வைக்க வில்லை. உணவை உண்டாக்குபவரின் மெனக்கெடலுக்கு அன்பும்,கரிசனமுமே கச்சா பொருள்கள்.சுவை அதன் விளைச்சல் தான். உணவை விதவிதமாக எழுதுவதில் உள்ள விருப்பத்தில் கசப்பு கலந்துவிட இரா. முருகன் அனுமதிப்பதில்லை.அதனால் தான் அந்த அரசியலுள் அவர் செல்ல விரும்பியவில்லை. தி. ஜாவின் புகழ் பெற்ற கதை ‘இக்கரைப் பச்சை’ அதில் தம்பதிகளுக்கு இடையே தகராறு.கோபம் கொண்ட மனைவி சோற்றுபானையில் சானத்தை கரைத்து ஊற்றிவிடுவாள். இரா. முருகன் எழுதும் பாத்திரம் எதுவும் இதை செய்ய முடியாது என்று தோன்றுகிறது.ஏனெனில் உணவு வெறும் உணவாக மட்டும் இருப்பதில் தான் அதன் ஆற்றல் உரைந்துள்ளது.மேலும் இரா. முருகன் புனைவுலகில் பூசல்கள் இல்லை.ஜமீன் நிலத்தின் ஒரு பகுதியை சங்கரன் குடும்பம் நூறு வருடங்களுக்கு உரிமை கொண்டாடுகிறது.ஆனால் அவர்களுக்கு இடையே சச்சரவு இருப்பதில்லை.அதுமட்டுமல்ல ஜமீன் தம்பதிகளுக்கு இறுதி காலத்தில் சங்கரன் குடும்பம் அன்றாடம் உணவு தருகிறது.பங்காளி பாகப்பிரிவினை சிக்கல் இல்லாமல் நடந்த ஒரே குடும்பம் தமிழ்நாட்டிலே ஆலப்புழா ஐயர் வகையறாவில் மட்டுமாக கூட இருக்கும்.(விஷ்வரூபம்)உறவு முறிவதில் உள்ள எந்த நியாயத்தையும் இரா.முருகன் ஏற்பதில்லை.ஒதுங்கி இருக்க ஒன்பது காரணம்.அம்மா தள்ளி இருக்க வேண்டாம் என்று கடந்து விடுகிறார்.உணவென்பது உறவுகளுடனான இணக்கம் தான்.
அறவுணர்வு தொடங்கி குற்றவுணர்வு வரை மேலாக விஷயங்களை மனித குலத்துக்கு போதித்தது கலையும், இலக்கியமுமே என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் குறைவு.இலக்கியம் போதிக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள் இலக்கியத்தில் உண்டு.அவர்கள் வாழ்வில் இலக்கியமும், இலக்கியவாதிகளுமமே போதிக்கும் தகுதியை கொண்டிருக்கும்.போதனை என்ற பீடத்தில் இலக்கியம் என்ற கலை அமராது இருப்பதே இதற்கு காரணம் என்றும் தோன்றும்.பசி முதல் ருசி வரை, இச்சை முதல் மரணம் வரை, இணக்கம் முதல் சமரசம் வரை லௌகீகத்தில் எதிர் கொள்வது எவ்வளவோ.கலை அனுபவத்தை தாண்டியும் இதற்கான சில செய்திகளை இலக்கியம் வைத்திருக்கும் என்பது என் நம்பிக்கை.அதை வலுப்படுத்தும் வகையில் தனித்துவமான பார்வைக் கொண்டவர்தான் இரா. முருகனும்.
அச்சுதம் கேசவம் நாவலில் வரும் வரியுடன் இதை நிறைவு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
இந்தச் சோழிகள் உன் வாழ்ந்த காலத்தைச் சொல்லாது. எதிர் கொள்ள வேண்டிய தினங்களில் பற்றியும் இவை எதுவும் தெரிவிக்காது.சோழிகள் உயிர் நீத்த சங்கு பூச்சிகள் மேல் ஓடு… .
சோழிகள் எதைச் சொல்லும் என்று கேட்டால் – ஒரே பதில் தான்.
அது கேட்பதைப் பொருத்து மாறும் என்பது தான்.