எழுத்தாளர் இரா.முருகன் மாயயதார்த்த வகையில் எழுதியுள்ள அரசூர் வம்சம் உட்படக் குறிப்பிடத்தக்கப் பல நாவல்களை எழுதி இருக்கிறார். அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று ‘மூன்று விரல்‘ . தமிழில் முதன்முறையாக கணினியைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட மூன்று விரல் என்ற இந்த நாவல் 2005 –ஆம் ஆண்டு வெளியானது. நாவலின் பல இடங்களில் இரா.முருகனின் விவரிப்புகள் திரைப் படத்தின் காட்சிகளாக அழகாக மனதில் விரியும்.
இரா.முருகனின் எழுத்துக் குறித்து எழுத்தாளர் சுஜாதா ஒரு பேட்டியில் “தமிழ் நடையில் என்னுடைய பாதிப்புப் பலரிடம் இருப்பதைக் கவனிக்கிறேன். இரா.முருகனின் தமிழ்நடையில் தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று எல்லாத் தமிழ் எழுத்தாளர்களையும் பார்க்கிறேன். இவர்கள் எல்லோரையும் தன் கம்ப்யூட்டர் திறமை, ஆங்கில உத்திகளால் சேர்த்து இவர் தனக்கென ஒரு புதிய தமிழ் நடையை உருவாக்கியுள்ளார்.“ என்ற கருத்தில் பாராட்டுகிறார்.
எழுத்தாளர் இரா.முருகன் இந்த நாவலைக் குறித்துப் பேசும் போது “மென்பொறியாளர்களைப் பற்றிய தட்டையான படிமத்தை உடைத்து தமிழில் ஒரு படைப்புக் கூட நகமும், சதையுமாக அவர்களை இதுவரை சித்தரித்துக் காட்டவில்லை. அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் பிரச்சனைகளைக் குறித்தோ எதுவும் பேசவேயில்லை என்று எனக்குப்பட்ட போது, இவர்களைப் பற்றிய முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன்வைக்க உத்தேசித்தேன். இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்” என்று குறிப்பிடுகிறார். அவ்வாறே தனது நாவலையும் எழுதி இருக்கிறார்.
மூன்று விரல் என்ற இந்த நாவல் ஓர் இணைய தளத்தில் தொடராக எழுதப்பட்டது. புராஜெக்ட் மேனேஜ்மென்ட் வேலை செய்யும்போது என்ன காரணத்தினாலாவது அந்தக் கம்ப்யூட்டர் என்ற எந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்று போக அதனை மீண்டும் இயக்கும் போது உருவான தலைப்புதான் இந்த மூன்று விரல் என்கிறார் எழுத்தாளர் இரா.முருகன். அதாவது ALT+CONTL+DEL ஆகிய மூன்று கீக்களையும் உபயோகப்படுத்துவதே மூன்று விரலான படிமம் பெற்று நாவலாக உருப்பெற்று இருக்கிறது.
சென்னையில் ஒரு துக்கடாக் கம்பெனியில் மென்பொறியாளராக, புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்யும் கதையின் நாயகன் தொழில் முறையில் சிறிது காலம் வேலை செய்ய லண்டன் செல்கிறான். அங்கு நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அவன் வேலை செய்யும் கம்பெனி நிறுவனம் வேறு ஒரு கைக்கு மாறும் போது ஏற்படும் நெருக்கடியால் அதனை விட்டு விலகுகிறான். பிறகு வேறு ஒரு கம்பெனிக்கு அவன் வேலை மாறுவதும், அதனுடைய ப்ராஜெக்ட்டுக்காக தாய்லாந்து சென்று அங்கும் சில சிக்கல்களை எதிர்கொள்கிறான். இறுதியில் அமெரிக்காவில் அவனது அடுத்த வேலைக்கான தேடலையும், நெருக்கடியையும் தீவிரவாதம், காதல்கள், ஊடல்கள் எனப் பின்னிப் பிணைந்து துடிப்பான நாவலைத் தந்து இருக்கிறார் எழுத்தாளர் இரா.முருகன்.
சுதர்சனின் வாழ்க்கை அவனைச் சொந்த ஊரில் சொந்தக்காரப் பெண்ணுடனும், லண்டனில் சந்திக்கின்ற ஓர் அழகிய பெண்ணுடனும், தாய்லாந்தில் ஒரு தாசிப் பெண்ணுடனும் இணைத்து ஒரு காதல் வாழ்க்கையை அவன் விரும்பியோ, விரும்பாமலோ நடத்திச் செல்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் வாழ்வின் நிர்ப்பந்தத்தால் ALT+CONTL+DEL செய்து நீக்கி விட்டுக் கடைசியில் அவனது டீமிலேயே வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு அமெரிக்காவில் முற்றிலும் மாறான ஒரு சூழ்நிலையில் அன்றையத் தேதிக்கேற்ப வாழ வாழ்க்கை அவனை நிர்ப்பந்திக்கின்றது. அவனும் அதை எதிர்கொள்ளத் தயாராகிறான்.
எழுத்தாளர் இரா.முருகன் இந்த 380 பக்க நாவலை மென்பொருள் பிழைப்பின் பிரச்சனைகளை முன்வைத்து ஊடுபாவாக நீக்கமறக் காதலைக் கலந்து தனித்த நடையுடன் விறுவிறுப்பாக எடுத்துச் செல்கிறார். கண நொடியில் விமானத்தில் தீவிரவாதிகள் செய்யும் வெடிப்பு வேலை மனிதர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதையும் நாவலில் கூறுகிறார். நாவல் நெடுக பகடியும் சேர்ந்து இழையோடுகிறது.
நாவலில் ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. கதையில் முக்கியப் பாத்திரங்கள் மட்டுமல்ல. கதையில் வரும் சிறிய பாத்திரங்கள் கூட முழுமையாக உள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் குணத்தையும், பின்புலத்தையும் ரசிக்கும் வகையில் நாவலில் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் முருகன்.
சுதர்சனின் காதலியான சந்தியா நாவல் முழுவதும் நெடுக அவனது கனவிலும், நனவிலும் வந்து நம்முடைய நெஞ்சையும் கொள்ளை கொள்கிறாள். நாவலை வாசித்து முடித்தவுடன் ஜெப்ரி, புஷ்பா, அவ்தார்சிங் என யாரையும் உடனே மறக்க முடியவில்லை. நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் கனவிலும், நினைவிலும் நிறைந்து நிற்கிறது.
இலண்டனின் முக்கியத் தெருக்கள், முக்கிய இடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் குறித்த விவரங்களைத் தருகிறார். அத்துடன் அங்குக் காணக் கிடைக்கும் முத்த மழைக்காட்சிகளையும் இரா.முருகன் இளமை பொங்கச் சுவாரஸ்யமாகத் தருகிறார்.
நாவலில் தாய்லாந்தின் வனப்பு, அந்த நாட்டு அழகிய இளம் பெண்கள், இரவு நேரக் கேளிக்கைகள், சிறப்பு நடனங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை கதாசிரியர்.
நாவலின் முக்கியமான பகுதி இது தான்.
//அமெரிக்காவுக்குச் சொந்தமான நான்கு விமானங்களைக் கடத்திய அல்குவைதா பயங்கரவாதிகள் 19 பேர், 2001, செப்., 11ம் தேதி, உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தின் மீது அவற்றை மோதச் செய்தனர். மோதிய 2 மணி நேரத்துக்குள் மொத்தக் கட்டடமும் தரை மட்டமானது. இரண்டு விமானங்களில் இருந்த பயணிகள் 147 பேரும், வணிக மையக் கட்டிடத்தில் இருந்த 2,606 பேரும் பலியாகினர்.// என்ற இந்தப் பத்திரிக்கைச் செய்தி கதையில் மிக முக்கியமான திருப்பமாக வருகிறது. கதையின் இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் அந்தப் பயணிகள் விமானத்தில் மாட்டியதால், நம்முடைய மனம் பதைபதைக்க, அநியாயமாகக் கொல்லப்பட்டு இறக்கிறார்கள். அடுத்து என்ன என்று துடிப்புடன் நம்மை எதிர்பார்க்க வைக்கிறது கதை. வேகமாக 50 அத்தியாயங்கள் ஓடுகின்ற கதை, கடைசி 2 அத்தியாயங்களில் முடிச்சுகள் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட்டுச் சட்டென முடிகிறது. அது தான் நாவலின் சிறப்பு என்றும் சொல்லலாம்.
கதாசிரியர் இரா.முருகன் நாவலின் முன்னுரையில்
“எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். நாவலை வாசித்து முடிக்கின்ற வாசகனை ஓரிரு நாட்களாவது அதன் நினைவில் அலைக்கழிக்க வைக்கிற வகையில் வெற்றி அடைகிறார் இரா.முருகன் என்றே சொல்ல வேண்டும்.
நாவலின் தன்மை, இலக்கணம், முறைமை குறித்து உலகெங்கும் பல படைப்பாளிகள், விமர்சகர்கள் பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ளனர். எழுத்தாளர் நகுலன் பேசும் போது “நாவலில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது சீரான அனுபவப்பூர்வமான குரலை உயர்த்தாத ஒரு கலைப்பாங்குடைய நடை” என்கிறார். எழுத்தாளர் இரா.முருகனின் மூன்று விரல் நாவல் இந்த வகையைச் சார்ந்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.
எழுத்தாளர் ஜெயமோகன் நாவலைச் சிறுகதையில் இருந்து வேறுபடுத்திச் சொல்லும் போது “சிறுகதை என்பது உள்ளங்கையில் ஏந்திய படிகக் கல். நாவல் என்பது தொலைதூர மலை. மலைக்கே உரிய பிரம்மாண்டம் நாவலில் வேண்டும். நாவல் அடிப்படையான பிரச்சனை ஒன்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். ” என்று குறிப்பிடுகிறார். அந்த வகையில் நாவலில் கம்யூட்டர் துறையில் முதல் தலைமுறையில் வேலை செய்யும் ஒருவன் வீட்டிலும், வெளியிலும் எதிர் கொள்கின்ற பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு பரந்த பார்வையில் அனைத்து விதமான கோணங்களிலும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.
தமிழ் நாவல் உலகில் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் எழுத்தாளர் இரா.முருகனின் மூன்று விரல்.