‘ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி‘ இந்த வரிகளை முதன்முதலில் படித்தது தன்னறம் வெளியீடான ‘தன்மீட்சி‘ நூலில் .
ஒரு வாசகன் ஒரு நூலை வாங்க பல காரணிகள் இருக்கும். அதன் உள்ளடக்கம் முக்கியம் என்றாலும் தன்னறம் நூல்களை நான் விரும்பி வாங்க அதன் வடிவம், நேர்த்தி , அவர்களின் முன்னுரை , நூல்களின் தலைப்புகள் , அட்டைப் படங்கள், இறுதியாக முன் மற்றும் பின் அட்டைகளில் உள்ள மற்ற எழுத்தாளர்கள், அறிஞர்களின் பொன்வரிகள். அந்த வகையில் நான் இன்று வாசித்தது என் ஆசானின் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியின் ‘கொஞ்சம் விஷயங்கள்‘ என்ற மலையாள நூலின் தமிழாக்கமான ‘சின்ன சின்ன ஞானங்கள்‘.
யூமா வாசுகியின் தேர்ந்த மொழி பெயர்ப்பில், பதினேழு கட்டுரைகள் கொண்ட தொகுப்பிது. நித்யா அவரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை நம்மிடம் இயல்பாக சொல்லிச் செல்லும் நடையில் அமைத்துள்ளது இந்த நூல் முக்கியமாக நம் குழந்தைகளை நமக்கே அறிமுகம் செய்யும் வகையில் உள்ள கட்டுரைகள் பெரும்பான்மையானவை. குழந்தைகளுக்காக என எழுதப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் வாசிக்க வில்லை என்றாலும் அவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் வாசித்து இதில் சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களை குழந்தைகள் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்னும் கோரிக்கையுடன் துவங்குகிறது
மேலை நாடுகளுக்கும் நமக்குமான முக்கிய வேறுபாடு அன்றாட செயல்பாடுகளில், முறைமைகளில், வெற்று பெருமிதங்களில்; குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நடிக்காமல்
எப்படி தங்களை முன்வைப்பது, நமது கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் என்ன என்ன, மனநிலையில் உள்ள குறைபாடுகள் என்ன என்ன, ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும், அவரது மாணவப் பருவ நிகழ்வுகள் அதில் குறிப்பாக சாக்கோ சாரையும் உயர்ந்த இடத்தில வைத்து சொல்வது, தன் தம்பியின் கலைத்திறனை அழிக்க அவர் ஆற்றிய பங்கு என தனக்கு நேர்ந்த பல அனுபவங்களை அப்பட்டமாக சொல்கிறார் நித்யா.
நான் இந்த நூலில் அடைந்தவைகளுக்கு காரணமாக வாசித்து முடித்தபின் மேலெழுந்து நிற்பவை என சில கட்டுரைகளை குறிப்பிட விழைகிறேன். முதலாவது ‘மோசமானவர்களின் நண்பன்‘ என்ற கட்டுரை. இதில் சாக்கோ என்ற தனது ஆசிரியர் தன்னை எப்படி துன்புறுத்தினார் என சொல்லியுள்ளார். அதில் வரும் வரிகள் ‘குழந்தைகள் போய் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்மையை கேட்கும் மனமும் தைரியமும் வேண்டும்‘ என ஒரு வரி வரும். இந்த வரி என்னை ஏனோ தொந்தரவு செய்தது . இன்றைய அவசர கதி உலகில் ‘பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்மையை கேட்கும் மனமும் தைரியமும் பொறுமையும் வேண்டும்‘ என சற்று சேர்த்து சொல்லிக்கொண்டேன் எனக்கே.
கணக்கிடம் பிணக்கு என்றொரு கட்டுரை இதில் ‘படிப்பது எதற்கு? விஷயத்தை புரிந்து கொள்வதற்கு. தவிர, வேறொருவருக்கு தெரிவிப்பதற்கு அல்ல‘ இந்த இடத்தில் ஒரு சலனத்தை உணர்ந்தேன் என்னிடம்.அதாவது தீவிர இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து ஓரிரு ஆண்டுகளே ஆகியுள்ள எனக்கு. எப்போதைய நினைப்பும் ஒப்பீடுகளும் தாழ்வுணர்ச்சியும் தீவிர இலக்கியத்தில் பல ஆண்டுகளாக மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுடன் தான். அது என்னை மேலும் வாசிக்க செய்கிறது என்றாலும் சோர்வுறவும் செய்கிறது அதற்கு மருந்தாய் மாற்றுக் கருத்தாய் இருந்தது இந்த வரிகள்.

அடுத்தது ‘எப்படி வாசிக்க வேண்டும்‘ என்ற கட்டுரை இதில் ஆழ்ந்து வாசிக்க என்ன என்ன செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் . அதை படிக்கும் போது மறுபடியும் உணர்ந்து கொள்ள முடிந்தது நித்யா போன்ற அறிஞர்கள் சொல்லும் ஓவ்வொரு சொல்லுக்கு கீழும் உறைந்துள்ள அவர்களின் ஆண்டுக்கணக்கான ஒருமுகப்பட்ட உழைப்பை. இதில் சொல்லப்பட்டுள்ள இன்னொரு முக்கிய அம்சம் ஒரு உவமைக்கதை மூலம் ‘தேவையற்ற புத்தகங்களை ஒதுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என‘
இரண்டு உடல்கள் என்கிற கட்டுரையிலும் எப்படி வாசிக்க வேண்டும் அதற்கான தயாரிப்புகள் என்ன என்ன நாம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதில் நமது கல்வி முறையின் குறைபாடுகள் அதற்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது என்ன என ஒரு நல்ல ஆசிரியர் சராசரி மாணவருக்கு சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
இந்த கட்டுரையில் உள்ள வரிகள் ‘எந்த விஷயத்தையும் சுவையானதாக ஆக்க முடியும். வெளிப்புறம் இருக்கும் ஒரு அறிவையும் உள்ளே உள்ள ஆனந்தத்தையும் ஒன்றோடொன்று இணைப்பதைத்தான் படிப்பு என சொல்கிறோம்‘. ஒரு வரி படித்தாலும் சமநிலை தவறா நிறைவான நிலையில் படிக்க வேண்டும் என எனக்கு சொன்னது போல இருந்தது . இதில் சாக்கோ சாரை ‘அவர் நல்லவர்தான் ஆனா அவர் என்னை மாற்ற எடுத்துக் கொண்ட வழிதான் எனக்கு கஷ்டமா இருந்துச்சுப்பா‘ என நூலாசிரியர் சொல்கிறார்.
மொழிபெயர்ப்பாளர் மூலத்தின் மேல் எந்த சாயமும் பூசாமல் மிக உண்மையாய் மொழிபெயர்த்துள்ளார். இது மலையாளத்தில் அம்மொழி பேசும் மக்களுக்காக முதலில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழுக்கு கொண்டு வரும்போது அந்த வரிகளை அப்படியே சொல்லி . எந்த இடங்களில் தமிழுக்கு என தனித்து சில சொல்லவேண்டும் என்பதை உணர்ந்து அவைகளை சேர்த்தும் உள்ளார் அது தனது கருத்து /வரிகள் என்பதையும் சொல்லி. அதோடு குழந்தைகள் வாசிக்க வேண்டிய உலக இலக்கிய ஆக்கங்கள் பட்டியலும். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி .
தன்னறம் முன்னுரையில் சொல்லியுள்ளது யூமா வாசுகி இதை மொழிபெயர்க்க அடித்தளமாய் அமைந்தது நித்யாவின் அருகமர்ந்தது மற்றும் ஜெயமோகனிடம் செவி கூர்ந்தது. அவர்களுக்கும் அண்ணன் சிவராஜ் உள்ளிட்ட தன்னறம் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.
அன்புடன்
கே.எம்.ஆர்.விக்னேஸ்