சூரியதிசை, கடிதம்

 

சூரியதிசைப்பயணம்

.

நான் 1986 லிருந்து 1993 வரை நாகாலாந்து மாநிலம், கோஹிமா மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தேன்.நீங்கள் எழுதிய அனைத்தையும் கண்கூடாக. நேரில் பார்த்தும், அங்கே வாழ்ந்தும் இருக்கிறேன்.அங்காமி நாகா என்று அழைக்கப்படும் ஒரு நாகா பழங்குடியினர் பிரிவினர் வசிக்கும் சமுக்குடிமா பகுதியில் வசித்தேன்.தன்சரி ஆறு ஓடும் பகுதி.இங்கு பாட்காய் கிருத்துவ கல்லூரி நடத்தும் பள்ளியில் ஆசிரியர் பணி.நாகா பழங்குடியினர் பழகுவதற்கு மென்மையான மக்கள்,நம் இந்தியர்களை (Plain ) தரைப்பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று அழைப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்டதை போல வங்காளிகள் இந்த வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்திலிருந்த போது  நிறைய சுரண்டல்கள் நடந்தது உண்மை.பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் கேரளா ஆசிரியர்களை நிறைய  காண முடியும்.திமாப்பூர் நுழைவுவாயில், இங்கே அதிகமாக வங்காளிகள் மற்றும் பீகாரிகளை காணமுடியும்.

கோஹிமா இரண்டாம் உலக போரில் மரணமடைந்த வீரர்கள் சமாதி முன் நின்று பிராத்தித்திருக்கிறேன்.எத்தனை தமிழர்கள். விடுமுறைக்கு அஸாம் கவுகாத்தி நகர் செல்வேன், நீங்கள் எழுதிய அத்தனை காட்சிகளையும் கண்டு இருக்கிறேன்.”பிகுஎன்ற திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்.மணிப்பூர்,அஸாம்,நேபாள்,பழைய உத்திரபிரதேசத்தை சார்ந்த ஆசிரியர்களுடன் பணிபுரிந்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

நாகா பழங்குடிகள் நடை, உடை ,பாவனையில் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர்கள்.ஆங்கில கலாச்சாரத்தை விரும்புகிறவர்கள்.இங்கே நடக்கும்  கிருத்துவ ஆலயங்கள், நாகர்களை நல்வழிப்படுத்தியது என்றால் மிகையல்ல.

தற்போது இந்திய நீரோட்டத்தில் மெல்ல, மெல்ல நாகா பழங்குடியினர்  இணைந்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் ,இரணியல் பகுதியை  சார்ந்த என்னுடைய முகநூல் நண்பர் திரு.நெல்லையப்பன்  தற்போது  நாகாலாந்து,கோஹிமா  கல்வித்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகின்றார்.

தங்களுடைய சூரியதிசைப்பயணம் என்னுடைய நாகாலாந்து வாழ்க்கையை அசைபோட வைத்தது.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை மீண்டும் நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்.

வாசகன்,

தா.சிதம்பரம்.

தோவாளை.

முந்தைய கட்டுரைPessimism is actually our hypocrisy.
அடுத்த கட்டுரைதாமரைமணாளன்