சுஜாதாவின் இன்மை, கடலூர் சீனு
சுஜாதா, இலக்கிய மதிப்பீடுகள்
வணக்கம்,
தாங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்த என் கடிதத்துக்கான பதிலை படித்தேன். இவ்வளவு விளக்கமான பதிலை எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சி. தங்கள் பதில் ஒரு கட்டுரை போல நிறைவாக இருந்தது. எனக்கு, நான் அனுப்பிய ஆறு கடிதத்தில், தங்களிடம் இருந்து வரும் முதல் எதிர்வினை. முன்னது நான் சரியான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் பதிலில் நான் உங்களிடம் கேள்வியாய் வெளிப்படுத்திய கருத்தும், உங்கள் பதில் கருத்துக்கும் பெரிதும் வேறுபாடில்லைஎன நினைக்கிறேன். ஒன்றைத்தவிர. நான் ‘எழுத்து நிராகரிப்பை‘ சொல்லியிருந்தேன். நீங்கள், யாரும் நிராகரிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அங்குதான் நான் பார்க்கும் கோணம் மாறுகிறது எனப்படுகிறது. ஆனால் சுஜாதா மற்றும் ராஜேஷ்குமார் படித்ததில், நீங்கள் சொல்லும் படிநிலை பற்றிய கருத்தில் எனக்கு நன்கு புரிதலுண்டு. நன்றி.
நான் ஆரம்ப நிலை வாசகன் தான். ஆனால் உங்கள் வலைத்தளத்தில் நிறைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். பெரும்பாலும் இலக்கியம் மற்றும் இந்திய தொன்மரபு பற்றிய கட்டுரைகள். அந்த வாசிப்பின் பின் தான் இந்த கேள்வி கேட்டேன். தங்களின் கன்யாகுமரி நாவல், அறம் தொகுப்பு (வலைத்தளத்தில்), உச்சவழு தொகுப்பு, தன்மீட்சி கட்டுரைகள், போன்றவற்றை வாசித்திருக்கிறேன். உங்களின இலக்கியம் பற்றிய நூல்கள் இன்னும் வாசிக்கவில்லை. விரைவில் வாசித்து பார்க்கிறேன்.
சுந்தர ராமசாமி சிறுகதைகள் (காகங்கள் தொகுப்பு), அசோகமித்திரன் (மானசரோவர்), ஜெயகாந்தன் நாவல் மற்றும் சிறுகதைகள் சில, புதுமை பித்தன் சிறுகதைகள் சில, சுஜாதா, பாலகுமாரன், கல்கி, வைரமுத்து நாவல் மற்றும் கவிதைகள் என பரவலாக, கொஞ்சம் கொஞ்சமாக படித்திருக்கிறேன்.
வாசிப்பை இன்னும் தீவிரமாக்க முயற்சி செய்கிறேன். இப்போதைக்கு கவிதை எழுத ஆசை. கொஞ்சம் துணுக்கு கவிதைகள் எழுதி வைத்துள்ளேன். வாசிப்பு நீள நீள என் எழுதும் ஆசையும் வாய்க்கும் என நினைக்கிறேன்.
நன்றி.
ரவிவர்மன்
அன்புள்ள ரவிவர்மன்
உங்கள் வாசிப்பு தொடக்கநிலையிலுள்ளது என தெரியும். ஆனால் கேள்விகளுடன் இருக்கிறீர்கள். ஆகவே விரைவாக முன்செல்வீர்கள், வாழ்த்துக்கள்.
கேள்விகளுடன் இருப்பது முக்கியம். உறுதியான நிலைபாடுகளுடன், விருப்பு வெறுப்புகளுடன் தொடக்கநிலையில் இருக்கவேண்டாம். தன்னை ஐயத்துடன் தானே பார்ப்பவர் மட்டுமே முன்னேறிச்செல்லமுடியும். எஞ்சியோர் அந்தந்த நிலையிலேயே தேங்கிவிடுவார்கள். வாசிப்பனுபவம், மெய்யனுபவம், சிந்தனை வழியாக நீங்கள் உங்களுக்கான கருத்துக்களை அடைந்தபின் நிலைபாடுகளை அடையலாம். அவையே மதிப்புள்ளவை.
ஜெ