சுசி, ஒரு வாழ்க்கையிலேயே செத்து மறுபிறப்பு கொண்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவர்களுக்கு அதன் பின் வாழ்தலின் முடிவிலாத உவகை இருக்கிறது. வாழ்க்கையை முழுமையாக காண்பதற்கு ஒரு கணநேரமென்றாலும் மரணத்தில் ஏறி நின்றாக வேண்டியிருக்கிறது.
நான் கண் விழித்தபோது மருத்துவமனையில் இருந்தேன். நான் இழந்த குருதி ஒரு புட்டியிலிருந்து எனக்குள் துளித்துளியாக ஏறிகொண்டிருந்தது. சிவந்த துளிகளாக நிதானமாகச் சொட்டிக் கொண்டிருந்த காலத்தையே பார்த்துக் கொண்டு கண்விழித்துக் கிடந்தேன்.
கிரீச்சிட்ட ஒலியுடன் கதவைத் திறந்து ஒரு நர்ஸ் எட்டிப் பார்த்தாள். அதன் பின்னர் அவளது தலையாட்டலைக் கண்டு மெல்லிய காலடிகளுடன் சந்திரா உள்ளே வந்தாள். ஒரு நாளில் முதுமையை அடைந்துவிட்டவள் போலிருந்தாள்.
நான் அவளை எவ்விதமான உணர்ச்சியும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தொலைதூர இறந்தகாலம் ஒன்றிலிருந்து சந்திரா வந்துகோண்டே இருந்தாள். என் எண்ணங்கள் மிகவும் கனத்து களைத்து கண்ணாடிப்பரப்பில் புழுக்களைப்போல நழுவி நழுவி ஊர்ந்தன.
நர்ஸ் வெளியே சென்றாள். சந்திரா என்னருகே டீபாயில் அமர்ந்தாள். ”உனக்கு ரொம்ப லோ பிரஷர் இருக்கு அருண்… எந்திரிக்காதே” என்றாள் ”ஏகப்பட்ட ரத்தம் வெளியே போயிருக்கு” ரத்தப்புட்டியைப் பார்த்து ”உங்கம்மாவோட ரத்தம்” என்றாள்.
”ம்ம்” என்றபடி திரும்பிப் பார்த்தேன் கொழுத்த ரத்தத்துளிகள்.
”அவங்களுக்கும் உனக்கும் ஒரே க்ரூப். ரொம்ப ரேர் க்ரூப்பாம்…”
நான் தலையசைத்தேன். அவள் மெல்ல புன்னகைசெய்து ”தப்பிச்சுட்டே.. நல்லவேளை…” என்றாள் ”நானும் நவீனும்தான் உன்னை இங்க கொண்டுவந்தோம்….
”நவீனா?”
”ஆமா… நீ கெளம்பி கொஞ்ச நேரமானப்பதான் எனக்கு நீ போயிட்டேன்னு தெரிஞ்சது… நான் உன் பின்னாலே இறங்கி ஓடினேன்… ரோட்டில தலைவிரிகோலமா ஓடிட்டிருந்தேன். அவன் என்பின்னால பைக்ல வந்து எங்கபோகணும் ஏறிக்கோ, கிறுக்கிமாதிரி ரோட்டில ஓடாதேன்னான். ஏறிட்டு உங்க வீட்டுக்கு வந்தேன். சுசி கெளம்பி போய்ட்டான்னா… நீ பின்னாடி போயிருக்கிறதா சொன்னா… நாங்க ஏர்ப்போட்டுக்குள்ள நுழையிறப்ப நீ கெளம்பி போறதைப் பாத்தோம்… உன் பின்னாடியே வந்தோம்…”
”பைக்லயா பாண்டிச்சேரி வரையா? அந்த ராத்திரியிலே– ”
”நவீன் ரொம்ப நல்ல டிரைவர்… அவன் இருக்கிறப்ப என்ன பயம்? ஹி இஸ் வெரி மேன்லி நவ், யூ நோ”
நான் பெருமூச்சு விட்டேன்.
”என்ன வேகமா ஓட்டினே தெரியுமா நீ? ரோடெல்லாம் ஏகப்பட்ட லாரிகள் கார்கள்.. மைகாட்… எப்டி வந்தோம்னு இப்ப நெனைச்சா நெஞ்சே நடுங்கிடுது. ஆனா அப்ப ஒண்ணுமே தெரியலை… உன்னோட கார் ஓட்டல் வாசலிலே இருகிறதைப் பாத்து உன் ரூமுக்கு வந்தா…. யப்பா …ரூம் கதவு வழியாகவே ரத்த வாசனை… உடைச்சு உள்ள வந்து பாத்தா ரூமெல்லாம் ரத்தம்… அப்டியே அள்ளிபோட்டு இங்க கொண்டு வந்துசேத்தோம். இது நம்ம சங்கரன் டாக்டரோட கஸின் நடத்துற கிளினிக்… நல்லவேளை… தப்பிச்சுட்டே…. அரைமணிநேரம் லேட்டாகியிருந்தா எல்லாமே வேற மாதிரி ஆயிருந்திருக்கும்”
நான் கசப்புடன் புன்னகை செய்தேன்.
”அம்மாவும் தங்கச்சிகளும் எல்லாம் இருக்காங்க…. நான் உன்னை சந்திச்சு பேசினதுக்குப் பிறகு அவங்க சந்திச்சா போரும்னு சொல்லிட்டேன்… அருண் எல்லாமே முட்டாத்தனம். வெறும் செக்ஸ்.. அதைப்போய் அது இதுன்னு நெனைச்சுகிட்டு இல்லாத ஆர்ப்பாட்டம் பண்ணிட்டோம்… ஜஸ்ட் ·பர்கெட் இட்… இப்ப மறுபிறப்பு எடுத்து வந்திருக்கே… நானும் மறுபிறப்பு எடுத்திருக்கேன். நம்ம ரெண்டு பேருக்குமே எல்லாம் தெளிவா இருக்கும் இப்ப..”
”ம்ம்” என்றேன்.
”உன் மேலே தப்பே இல்ல. எனக்கு அந்த வயசிலே ஒரு ஆண்துணை தேவைப்பட்டது… குமார் போனப்ப நான் கல்யாணம் பண்ணிட்டிருக்கணும்… பெரிய ஐடியலிஸ்ட் மாதிரி விட்டுட்டேன்..அப்றம் வயசாச்சு… ஆண்துணை தேடின என் மனசு உன்னை என்னை அறியாமலேயே அட்ராக்ட் பண்ணியிருப்பேன்னு நெனைக்கிறேன்… பொம்பிளையோட அடிமனசில ஒரு ஆண்மேல ஆசை வந்தாக்கூட அவ உடம்பு அவனை எப்டியோ கூப்பிட ஆரம்பிச்சிடும்னு சொல்வாங்க…. அதான் இயற்கையோட ரகசியம்… நம்ம விஷயத்திலே அதான் நடந்திருக்கணும்… நீ என்னை புடிக்கலை… நான்தான் உன்னைப் புடிச்சிருக்கேன்… ஏன்னு சிந்திச்சா ஒரு ஆணுக்காகத்தான்னு புரிஞ்சுது…” லேசான கசப்புச் சிரிப்புடன் ”புருஷனும் மகனுமா ரெண்டு ரோல் பண்ற ஒரு ஆம்பிளை… ஸில்லி”
நான் புன்னகை செய்தேன்.
”அன்னைக்கு நவீன் அந்த கெழவிகிட்டே பேசின தோரணையில என் கண்ணு தெறந்திட்டுது அருண்… அவன் இப்ப ஒரு ஆம்பிளை…. சின்னப் பிள்ளைன்னு நெனைச்சிட்டிருந்தேன். என்ன ஒரு மெச்சூரிட்டி என்ன ஒரு தைரியம்…. எங்கப்பா இல்ல, நான் இருக்கேன்னு சொன்னான் பாரு… அப்டியே எனக்கு சிலுத்துப்போச்சு… ஓடிப்போய் மானசீகமா அவன் காலில விழுந்திட்டேன். இனி அவன்தான் எனக்கு எல்லாமே… அவன் கௌரவமும் மரியாதையும் மட்டும்தான் எனக்கு முக்கியம்… நீ எனக்கு இனிமே ஒரு பொருட்டே கெடையாது… உன் கூட இனிமே எனக்கு எந்த உறவும் இல்லை… அதைச்சொல்லத்தான் நான் வந்தேன்…”
அவள் முகம் நிதானமாக இருந்தது. ஒரு பாடத்தை சொல்லிக் கொடுப்பவள் போல இருந்தாள்.
”உன்னை இங்க கொண்டு வந்து சேத்தபிறகு இந்த ஆஸ்பத்திரி கேரிடார்ல வச்சு அப்டியே அவன் கையப் புடிச்சுட்டு அழுதிட்டேன். உன் காலிலே விழுறேன் என்னை மன்னிச்சிடுடான்னு சொல்லி கதறினேன். மன்னிக்கிறதுக்கு என்ன இருக்கு அம்மா… நீ அழறதைப்பாத்தா எனக்கு கஷ்டமா இருக்கு. முன்னை மாதிரி கம்பீரமா இருக்கிற அம்மாதான் எனக்கு வேணும்னு சொன்னான். என் புள்ளை மனசில நான் எங்க இருக்கேன் பார்த்தியா?”
அவள் வெறுமையாகப் புன்னகை செய்தாள் ”அவனுக்கு முன்னாடியே எல்லாம் தெரியுமாம். ராஜம்மா பாட்டி சொல்லியிருக்கா. அவன் கிளாஸ்மேட் ஜாஸ்மின் கிட்டே சொன்னானாம். அது உங்கம்மாவோட சொந்த விஷயம் நீ தலையிடாதேன்னு சொல்லிட்டாளாம்… சொல்றான். எந்த அளவுக்கு மெச்சூர்டா இருக்கிறாங்க பாரு… நாமதான் கண்ட கண்ட புக்ஸ்லாம் படிச்சு சிந்திச்சு பேசி வீணாப்போனோம்.. எத்தனை வலி எத்தனை துக்கம்… யப்பா….”
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. மௌனமாக கன்ணீரை துடைத்தபின் மூக்கை ஒரு கர்சீபால் துடைத்தாள்.
”சந்திரா” என்றேன் ”நீ சொன்னதனால நானும் இதைச் சொல்றேன்… நேத்து அந்த ரத்தத்திலே….”
”ம்ம்” என்றாள் அதைப்பேசப் பிடிக்காதது போல.
”அப்பவே எனக்கு ஒண்ணு தோணிச்சு… நம்ம உறவு அங்க முடிஞ்சிட்டுதுன்னு… அதுக்குமேலே ஒண்ணுமில்லைன்னு… அந்த பாத்ரூம் வாசலிலே நின்னுட்டு உன்னைப் பாத்தேன்… அப்ப உன் வயித்திலே இருந்து ஒரு பிள்ளையா நான் பிறந்து ரத்தத்தோட நகர்ந்து போறது மாதிரி இருந்தது…”
சந்திரா ”எனக்கும் அப்ப ஒரு நெனைப்பு வந்தது” என்றாள் ”…என் உடம்பிலே இருந்து ஒரு கையை வெட்டி போட்டதுமாதிரி.. அந்தக்கை தனியா விலகிப் போறது மாதிரி நீ போனே… அப்பவே அவ்ளவுதான்னு தோணிட்டுது… அதனாலதான் என்னெனமோ அபத்தமா பேசினேன். செண்டிமெண்டா பேசிப்பாத்தேன். ஆனா முடிஞ்சிட்டுதுன்னு அப்பவே உள்ளுக்குள்ள தெரிஞ்சிட்டுது… அதை நானே ஒத்துக்கறதுக்காகத்தான் இதெல்லாம்….” பெருமூச்சுடன் எழுந்தாள் ”’அம்மாவை வரச்சொல்றேன்… தைரியமா பேசு. ரொம்ப ஆடிப்போய்ட்டாங்க… நீ தனி ஆள் இல்ல அருண். உன்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க…நீ இல்லேன்னா அவங்களுக்கும் வாழ்க்கை இல்லை…”
நான் கண்கள் கலங்க உதடுகளை இறுக்கிக் கொண்டேன்.
”சும்மா அழுதிட்டிருக்கக் கூடாது. அதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை…. நான் சுசிகிட்டே பேசிட்டேன்”
நான் நிமிர்ந்து பார்த்தேன்
”அவ பாம்பே ஏர்போர்ட்டிலே இருந்தா… நான் அவகிட்டே பேசினேன். நவீனும் பேசினான். எல்லாத்தையும் சொன்னேன். அவளால உன்னை விட்டுப்போகவே முடியாது அருண்… நீ அவ பின்னாடி பம்பாய்க்கே வந்திருவேன்னு எதிர்பார்த்திருக்கா…. ஸில்லி கேர்ல்…. நீ என்ன பண்ணினாலும் உன்னை அவ வெறுக்கமாட்டா.. அதான் உண்மையான காதல்… உண்மையான காதல்னா காதலை கொடுக்கிறது மட்டும்தான்னு எங்கியோ படிச்சிருக்கேன்… அவளோட லவ் அப்டிப்பட்டது …” என்று பெருமூச்சுவிட்டு ” அவ கெளம்பி வந்திட்டிருப்பா இந்நேரம்….” என்றாள்.
சுசி என் மனதின் எல்லா வாசல்களும் திறந்துகொண்டன. தூய காற்றும் ஒளியும் உள்ளே நுழைந்தன. இருண்டமூலைகள் எல்லாம் தூயதாகி ஒளிவிட்டன.
சந்திரா எழுந்து சென்றாள். கண்ணாடிக் கதவு மெல்ல அசைந்து வளை உள்ளே இழுத்துக்கொண்டது. கதவு நெகிழ்ந்து அம்மாவும் சுபாவும் ராணியும் சித்தியும் வந்தார்கள். அம்மாவின் முகம் அழுகையும் சிரிப்புமாக கனத்திருந்தது. சுபாவும் ராணியும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா என்னருகே வந்ததும் சட்டென்று என் கால்களைப் பிடித்துக்கொண்டு அவற்றில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கி அழுதாள். சித்தி அம்மாவை பிடித்து ஆறுதல் செய்தாள். அவளும் அழுதுகொண்டிருந்தாள்
அலையடித்த அழுகைகள். பெருமழை போல அவை எல்லா குப்பைகளையும் அடித்துச் சென்றன. பின்னர் மெல்லமெல்ல அது அடங்கி வெளிச்சம் வந்தது. அம்மா சிரித்தபடி என் கன்னத்தை மெல்ல அறைந்தாள். சுபாவும் ராணியும் சிரித்துக்கொண்டு என் கைகளைப்பிடிக்க சித்தி வாய்பொத்தி சிரித்தாள்.
நர்ஸ் வந்து நின்றாள். அவர்கள் எழுந்து சென்றார்கள். நான் மீண்டும் தனிமையிலாழ்ந்தேன். என் புஜங்களில் மென்மையாக ஊசி பதிந்தது. என் எண்ணங்களை நனைந்து படியச் செய்யும் மருந்து என் மூளைக்குள் பரவியது.
சுசி, கண்ணாடிக் கதவுகளின் நீரலைகளைப் பிளந்து நீ உள்ளே வரும் நொடிக்காக இதோ காத்து கிடக்கிறேன்
[முற்றும்]