சுயவிமர்சனம், கடிதம்

நமது கிராமங்களும் மோசடிகளும், கடிதம்

 

ஆசிரியருக்கு, 

குறைந்தபட்ச சுய விமர்சனத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின் தரத்தை அறிகிறோம். சுய விமர்சனம் என்பது அம்பலப் படுத்துதல் கூடத் தான். இன்று தளத்தில் வந்துள்ள நமதுகிராமங்கள், நமது மோசடிகள்கடிதத்தில் முக்கிய விடுபடல் ஒன்று உள்ளது. வங்கி ஊழல் குறித்தது தான் அது. அதை கடிதம் எழுதிய வங்கி அதிகாரி எழுதுவார் என்றால் நாம் நேர் வழி வாழ ஒரு பங்களிபாற்றியவர் ஆவார்.

 நான் அறிந்தவரை இன்னும் போதிய அளவில் பேசப்படாதது, அவ்வளவாக வெளியே தெரியாதது, இந்த வங்கி அதிகாரிகள் மேலாளர்கள் செய்யும் ஊழல் தான். வங்கி அதிகாரிகள் நடத்தும் ஊழல் இயங்குமுறையை வெளிப்படுத்த ஒரு நேர்மையான வங்கி அதிகாரி தேவை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தேசிய அளவில் ஒரு கூட்டு ஊழல் செயல் திட்டத்தையே நிகழ்த்தினார்கள். நான் பார்த்த, கையாண்ட வழக்குகளை வைத்து சிலவற்றை சொல்ல முடியும். ஆனால் முழு சித்திரத்தை வங்கித் துறையில் உள்ளவர்தான் அளிக்க இயலும். 

தகவல் கசிவு: உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது யாருக்கு பரிமாற்றம் நிகழ்கிறது என்பதை இணைய மோசடி நிறுவனத்துக்கு விற்று விடுகிறார்கள், அவர்களுடன் தொடர் உறவிலும் இருக்கிறார்கள். இணைய மோசடியில் ஏமாந்த பின் உங்கள் பணம் செலுத்திய கணக்கு எது அது யார் பெயரில் எந்த ஊரில் உள்ளது என்கிற தகவலை அறிய நீங்கள் வாங்கிக்கு செல்வீர்கள் ஆனால் அதைத் தர தாமதம் செய்வார்கள். மோசடி கணக்கு போலீஸால் முடக்கப்படும் முன் பணத்தை மோசடி கும்பல் எடுத்துக் கொள்ள உதவுவார்கள். போலி கணக்கு துவங்கிய நபர் மோசடி தொகையில் கமிஷன் தருவார்கள், இதற்கு சற்று துணிச்சல் வேண்டும். இத்தகைய போலி நபர்கள் போலிக் கணக்கு துவங்க உதவும் வங்கி அதிகாரிகள் நமது பொருளியலுக்கே புற்று நோய் போன்றவர்கள். 

போலி பண பரிமாற்றம்: இது ஒருவகை வட்டித் திருட்டு. தினமும் இரவு 9 மணிக்குள் கணக்கு முடித்து தலைமை வங்கிக்கு இணையத்தில் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதை 3 நாட்கள் தாமதமாக சமர்பிக்கலாம் என்கிற விதிவிலக்கு வைத்துள்ளார்கள். இது ஊழல் செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட விதி. உங்கள் நிரந்தர வைபீடு, சேமிப்பு கணக்கு போன்றவற்றில் இருந்து பணத்தை எடுத்து வங்கி அதிகாரிகள் தங்கள் பினாமி கணக்கில் ஓரிரு நாட்கள் செலுத்தி அந்த வட்டியை எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் பணத்தை எடுக்கும் போது மீண்டும் உங்கள் கணக்குக்கு பணம் வரும் ஓரிருநாள் தாமதம் கூட ஆகும். இந்த ஓரிரு நாட்களில் உங்கள் பணம் உங்கள் கணக்கில் நீங்கி திரும்ப வந்ததை அறிய மாட்டீர்கள். ஒரு கணக்கில் பணம் எடுத்தும் எடுக்கப் படாதது போல சில நாட்கள் காட்டுவதும் பணம் சேர்ந்தும் சேராரது போல காட்டுவதும் அதிகாரிகளால் முடியும். உங்களுக்கு இழப்பு 500 ரூபாய்க்குள் இருப்பதால் பெரிதும் பொருட்படுத்த மாட்டீர்கள். ஆனால் பல்லாயிர வங்கிக் கணக்கில் இருந்து சில நூறுகள் சேர்ந்து லட்சக்கணக்கில் வாங்கி அதிகாரிகள் கையில் ஏறுகிறது. 

என்னுடைய யூகம் இது ஒரு தேசிய ஊழல் வங்கி அதிகாரிகள் வலை தான், நாடு முழுவதும் இது விரிந்துள்ளது. கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் செய்யும் நகைக் கடன், விவசாயக் கடன் ஊழல் போன்றவை காலங்காலமாக தொடர்கிறது. இது பற்றியும் நமக்கு தெளிவு தேவை. 

எனது வழக்கறிஞர் துறையை விமர்சிக்க வேண்டும் என்றால் 

திறனின்மை: பொது மக்கள் வக்கீல்கள் ஆங்கில அறிவு உடையவர்கள், நீதிமன்றங்களில் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடக்கிறது என நினைக்கிறார்கள். இது பெரும் பிழை புரிதல். உயர்நீதிமன்றம் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள முக்கால்வாசி வக்கீல்களுக்கு ஆங்கில அறிவு இல்லை. ஆங்கிலத்தில் இரண்டு பக்கம் எழுதவோ பத்து நிமிடம் பேசவோ இயலாது, 90% கீழமை நீதிமன்ற தீர்ப்புகள், நடவடிக்கைகள் தமிழில் தான் நடக்கிறது. ஆங்கில அறிவு இல்லாததால் சட்டத்தை படிக்க இயலாமல், மேல் நீதிமன்ற தீர்ப்புகளை படிக்க இயலாமல் அதனால் திறம்பட வழக்கு நடத்தாமல் தமது கட்சிக்காரர்ளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். 

தாமதம்: ஒரு வழக்கின் காலம் அதிகம் ஆக ஆக கட்சிக்காரரிடம் அவர் சிறுக சிறுக பெறும் கட்டணம் லாபம். ஆகவே இரு தரப்பு வக்கீல்களும் ஒரு வழக்கை தாமதப் படுத்துவார்கள். விரைவாக வழக்கு முடிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் எதிர்ப்பார்கள். இது இந்திய நீதித்துறையை பிடித்துள்ள நோய். இவ்வளவு வழக்கு தேக்கத்துக்கும் கால தாமதத்துக்கும் இது முக்கிய காரணம். விலை போதல்: எதிர் தரப்பில் பணம் பெற்று தன் வழக்கை தோர்க்க வைத்தல். இப்போது இது கூடிக் கொண்டு வருகிறது.  

இதுபோக காவல்நிலைய கட்டப் பஞ்சாயத்து வக்கீல், ரவுடி வக்கீல் என ஒரு பிரிவும் உண்டு. வக்கீல் மீது புகார் கொடுத்தால் பார் கவுன்சில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதும் மிக அரிது. இது போக ஊழல் நீதித்துறை அதிகாரிகளுக்கு வக்கீல்கள் முகவராக செயல்பட்டு கமிஷன் பெறுவது தனி. இதற்கு கடுமையான சீர்திருத்தம் தேவை. 

வங்கி அதிகாரிகள் போலி கணக்கு பற்றிய வழக்கும் செய்தியும்https://www.google.co.in/amp/s/www.thehindu.com/news/cities/bangalore/ccb-busts-online-investment-scam-bank-manager-among-eight-arrested/article68756199.ece/amp/ 

கிருஷ்ணன், ஈரோடு

முந்தைய கட்டுரைகடம்பவனங்கள் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகே.வி.சுப்ரமணிய ஐயர்