ஒரு நாவலிலோ, சிறுகதையிலோ அல்லது கவிதையிலோ நான் விரும்புவது அதன் அழகியல் தன்மையை தான். திருச்செந்தாழை கதைகளில் பெரிதான தத்துவ விசாரணைகளோ அல்லது ஆன்மீக தரிசனங்களோ இருப்பதில்லை. ஆனால் வாழ்க்கையை அதன் அழகியல் தன்மையோடு அணுகுகிற பார்வை இருக்கும். வாய்வழி சொல்லும் போது மிக எளியதாக தெரியும் கதைகள் அவரின் எழுத்தில் விஸ்வரூபம் கொண்டு எழுகின்றன. சிறுகதையை வாசித்து முடித்த பிறகு கதையின் கரு மிகச் சிறியதாக தெரியும் ஆனால் அது எனக்குள் ஏற்படுத்திய உணர்வு என்பது காலில் குத்திய சிறிய முள் போல உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த உணர்வை கவனித்து கையில் எடுத்து பார்க்காமல் என்னால் கடந்து செல்லவே முடியவில்லை. திருச்செந்தாழையின் கதைகள் நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல, மாறாக அவை காட்சிகளின் தொகுப்புகள். ஒரு நிகழ்வைப் பற்றியோ, உறவை பற்றியோ அல்லது உணர்வின் தளத்தையோ திரைப்படக் காட்சிகளைப் போல எழுத்தின் மூலம் என் மனதில் பதிய வைத்து, ஒரு மின்னல் வெட்டு போல கணப் பொழுதில் அக்காட்சிகளை விழியால் காண வைக்கிறார்.
ஒரு சிறுகதை வெறுமனே அழகியல் தன்மையோடு இருந்தால் போதுமா? அதன் பேசு பொருளோ, அது வாசகனுக்குள் எழுப்பும் கேள்விகளோ முக்கியமில்லையா என்ற எண்ணம் எழலாம். திருச்செந்தாழையின் எழுத்து வடிவம் என்பது இரு வாள்களை நன்கு தீட்டி அதன் முனைகளைக் கூராக்கி ஒரு வாளின் முனையை இன்னொரு வாளின் முனையால் குத்துவது போல கதாபாத்திரங்களை மோதவிடுவது. எல்லா கதாபாத்திரங்களும் அவற்றின் நியாயங்கள், தர்க்கங்களோடு உயர எழுந்து நிற்கும் போது கதையை முடித்து விட்டு கைகட்டி வேடிக்கை பார்ப்பது போல அமர்ந்து விடுகிறார். எந்த கதையையும் நீங்கள் முடித்து வைப்பதில்லை. வீட்டைக் கட்டி அழுகுபடுத்தி விட்டு கதவு செய்து நீயே பூட்டிக் கொள் என சாவியை என் கையில் தந்து விட்டது போல உணர்ந்தேன். அந்நேரத்தில் சிறுகதையின் பேசு பொருளின் மூலம் கதாபாத்திரங்களின் நியாயங்கள், தர்க்கங்கள் வழியாக என் மனம் பல கேள்விகளால் நிறைந்திருந்தது. சரியென்றோ, தவறென்றோ ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அவர் எழுதிய வாழ்க்கை தருணத்தின் பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்து கொண்டே இருந்தது.
“ஆபரணம்” சிறுகதையின் முடிவில் சித்திரையின் முந்தானை மறைவிலிருந்து வெளிவரும் குழந்தையின் முகம் தரும் உணர்வெழுச்சியை விட, வேகமாக மேலேறும் காரின் கண்ணாடியில் மனம் பதறிவிட்டது. போட்டியில் வென்ற பிறகு வெல்வதற்காக செய்த சூழ்ச்சியை எண்ணி குற்றவுணர்வு கொள்ள நமக்கு காலம் ஒரு தண்டனையை தர வேண்டியிருக்கிறது. இல்லையேல் அந்த சூழ்ச்சியே சமயோஜித புத்தியாக மாறிவிடுகிறது. ஒரு தோல்வியில் நாம் எல்லோருமே ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்தே கவலை கொள்கிறோம். சித்திரைக்கு அந்த கவலை இல்லை, தோல்வியடையும் போதும் மகிழ அவளுக்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் மரியம் வெற்றியிலும் கவலை கொள்கிறாள். இந்த முரண்பாட்டை எழுத்தின் மூலம் வாசகனுக்குள் புகுத்தும் இடத்தில் திருச்செந்தாழை வைரம் போல ஒளிர்கிறார். எழுதும் ஆசையுடைய அனைவரும் பொறாமைப்படும் அளவுக்கு நேர்த்தியுடன் எழுதப்பட்ட பகுதி அது. அதை தத்துவ ரீதியாகவோ அல்லது ஆன்மீக ரீதியாகவோ அல்லாமல் வயிற்றில் புரளும் குழந்தையின் பிஞ்சு பாதத்தின் உதையை உணர்ந்து சித்திரை மகிழும் வாழ்க்கை தருணத்தை வைத்தே விளக்கியிருப்பது இன்னும் சிறப்பாக இருந்தது. அப்போது விரக்தியால் விலகிய மரியத்தின் கண்களைக் கூட என்னால் பார்க்க முடிந்தது.
நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் சிறுகதையே அல்ல. ஒவ்வொரு வரிக்கும் “enter” தட்டினால் அது ஒரு கவிதையாகவே மாறிவிடும். ஒரு கவிதையை வாசிக்கும் மனநிலை தான் அந்த சிறுகதை முழுவதும் இருந்தது. எந்த வகையிலும் நாம் வாழும் உலகுடன் பொருத்திக் கொள்ள முடியாத கதை அது. ஒருவேளை எதிர்காலத்தில் வரபோகிற அதிமனிதர்களைப் பற்றிய கதையா அல்லது மேலிருந்து நோக்கும் கடவுளர்களைப் பற்றிய கதையா என உள்ளம் மயங்க செய்தது. எனவே அந்த கதையை புரிந்துகொள்ள முயல கூடிய தர்க்கங்களில் மனதை நுழைய விடாமல், ஒவ்வொரு வரியையும் என் கற்பனையால் உண்மையாக்கினேன். மேகங்களில் மிதந்தேன். இவ்வுலகை ஒரு செய்திதாளாக வாசித்தேன். ஒரு காகிதத்தின் நுனியென வீட்டின் விளிம்புகளை எரித்தபடி உள் நுழையும் பகலாய் ரசித்தேன். நிலவு மெழுகும் இரவுகளில் காதலனானேன். பால்கனியில் நின்று முத்தமிட்டேன். ஒரு நட்சத்திரத்தை திராட்சை பழம் போல உரித்து ருசித்தேன். என் ஆச்சரியமெல்லாம் திருச்செந்தாழையின் மூளையின் எந்த மூலையில் இந்த கற்பனை துளிர்த்திருக்கும்?. இது அபத்தமான கேள்வி என்பதை நான் அறிவேன். ஆனால் என்னால் கேட்காமலிருக்க முடியவில்லை. அந்த கதையை வாசித்த போதே என் மனம் லேசாகி பறந்தது. அப்படியானால் அதை நிகழ்த்திய அவரின் கற்பனை எந்த நட்சத்திரத்தின் ருசியிலிருந்து வந்திருக்கும்.
திருச்செந்தாழை சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ள உருவகங்களும், படிமங்களும் அசாத்தியமானது. ஒரு முயற்சியாக அவரின் கதைகளில் வரும் உருவகங்கள் மற்றும் படிமங்களை விட்டுவிட்டு கதையை மட்டும் வாசித்துப் பார்த்தேன். அப்போதும் கதைகளின் பேசு பொருளும், கதாபாத்திரங்களின் இயல்புகளும் அவ்வாறே இருந்தது. ஆனால் ஒன்று புரிந்தது. திருச்செந்தாழை உருவகங்கள் மற்றும் படிமங்கள் மூலமாக கதையின் உணர்வு தளத்தை வாசகனுக்குள் கடத்துகிறார். உருவகங்களும் படிமங்களும் அதற்காக பயன்படுத்தப் படுவது தான் ஆனால் அவர் எழுதுவது தேர்ந்தெடுக்கப்பட்ட உருவாகங்களை. எப்படியெனில் கதையின் சூழலுக்கும், கதாபாத்திரத்தின் இயல்புக்கும் ஏற்றவாறு கதையின் உணர்வை மாற்றியமைக்காத அல்லது அதை ஒட்டிய உருவகங்களை. அமானுஷ்யம் தொடர்பான “அசபு” சிறுகதையில் அத்தனை உருவகங்களும் ஆமானுஷ்யத்தின் ஆழத்தை, குளிர்ச்சியை அதன் நிறத்தை வெளிபடுத்தும் விதமாகவே இருந்தது. மலர் கூட தீமையின் மலராக மாறுகிறது. கதையின் நிகழும் சூழலை கூட சாம்பல் நிறத்தில் தான் கற்பனை செய்ய முடிகிறது. ஒளியை சுமந்து வரும் கதைகளுக்கு பிரகாசமான உருவகங்கள், இருளை சுமந்து வரும் கதைகளுக்கு மங்கலான உருவகங்கள் என எழுதிருந்தார்.
“அசபு” சிறுகதையை என்னால் தொகுக்கவே முடியவில்லை. அதை தொகுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த சிறுகதையை எழுதிய போது அவரின் மனநிலையும், உணர்வு நிலையும் எவ்வாறு இருந்திருக்கும் என கற்பனை செய்து, அதை அடையும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருந்தேன். தொடர்ச்சியே இல்லாத அந்த சிறுகதையில் முழுக்க முழுக்க நிறைந்த அமானுஷ்ய உணர்வு கதையை வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்துகிறது. மூன்று பகுதிகளாக உள்ள சிறுகதையை எந்த பகுதியில் இருந்து வாசித்தாலும் அதன் தீவிரம் மாறுவதில்லை. அசபுவும் டூமனும் சில இடங்களில் ஒரே நபரின் இரு வேறு வெளிப்படுகளாக தெரிகின்றனர், சில இடங்களில் நண்பர்களாக, சில இடங்களில் சகோதரர்களாக தெரிந்தனர். அவர்களின் உறவைப் பற்றிய எந்த விளக்கமும் இல்லாமல் அதை வாசகனின் ஊகத்திற்கே விட்டது போலவும், பொறிகளில் சிக்கியிருக்கும் எலிகளின் உருவகம் பவனத்தில் வாழும் மனிதர்களைப் பற்றியதாகவும் எனக்கு தோன்றியது.
“மஞ்சள் பாலூன்கள்” சிறுகதையில் காதல் ஒருவனை மென்மையாக்கி, அவன் ஆணவம் அழிந்து தன்னிலை மறந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைப்பதை எழுதி வரும் போதே சட்டென அடுத்த வரியில் “மனிதன் துயரங்களை விரும்பியுண்ணும் விலங்கு” என்கிறார். அதை ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஏனெனில் மனிதர்கள் அனைவருக்குமே ஒரு மகிழ்வின் உச்சத்தில், இத்தனை மகிழ்வும் வரப்போகும் ஏதேனும் துயரத்தின் முன் அறிவிப்பா? என்ற பயம் சிறிதளவேனும் எட்டிப்பார்க்கும். திருச்செந்தாழை மனித மனதின் அந்த உளவியல் மூலையை தன் எழுத்துத் தூண்டிலை போட்டு சரியாகப் பிடித்து அதன் மூலம் நிரஞ்சனாவை அறிமுகம் செய்கிறார். முரண்களிலான காதலில் ஒருவரையொருவர் வெல்ல வெளிபடுத்தும் காமத்தின் பச்சை வாசனையை அவரின் எழுத்தின் மூலம் உணர முடிகிறது. கலவிக்கு பிறகான அவனின் வெறுமையுணர்வை நிரப்ப முயலும் நிரஞ்சனாவின் காதலை அஞ்சி ஒதுங்கி தனிமையிலேயே மூழ்கும் அவனுக்கான விடுதலையை நிரஞ்சனாவே அளித்து அவர்களுக்குள் நடந்த விளையாட்டை முடித்து வைக்கிறாள். காதலுக்காக, அன்புக்காக, வாழ்வுக்காக ஆணிடம் கெஞ்சாமல் கேட்டதைக் கொடுத்து விட்டு தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறாள் நிரஞ்சனா.
“திராட்சை மணம் கொண்ட பூனை” சிறுகதையில் சிறுதுளியும் காதல் இல்லாமல் முழுக்கவே காமம் வியாபித்திருக்கிறது. அந்த காமத்தின் தருணங்களை சிறிதும் கொச்சையில்லாமல், முகம் சுளிக்க வைக்காமல் ஆனால் அதை உடல் உணரும் தீவிரத்துடன் எழுதியிருக்கிறார். சிறிது தவறினாலும் இயல்பு மாறிவிடக்கூடிய கதையில் பிறழ் உறவில் உள்ள ஒரு பெண் அக்காமத்தின் வழியாக பெரும் உடல் விடுதலையை கவிதையின் கணங்களாக விரித்து செல்கிறார். முழுக்க முழுக்க காட்சிப் படிமங்கள். வாசிக்கும் போது அவை காட்சிகளாக விரிந்து உடலையும் மனதையும் புல்லரிக்க செய்தன. அவள் செய்வது சரியா தவறா என மனம் தர்க்கிக்கவில்லை. என்ன அழகு!!! என வியந்து கொண்டே இருந்தது. கதையின் ஆரம்பத்தில் கீழே கிடந்து இருளில் மின்னிய சாவி அவள் மனமோ என்று தோன்றியது. அதை அவளின் மனமாக நினைத்தால் கதையை இன்னொரு பரிமாணத்திலும் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு தவறு செய்த பிறகு அந்த தவறின் மணத்தை எப்படியோ நுகர்ந்து விடுவார்களோ என்ற தவிப்பில் செய்யும் இயல்பற்ற காரியங்களோ அல்லது அதிகப்படியான கவனிப்போ சந்தேகத்தை மையை போல துணியில் பரவ செய்வதை, தம்பளரில் நீர் நிரப்பி மேசையின் ஆளில்லாத பகுதிக்கு அவள் நகர்த்துவதன் மூலமே உணர முடிந்தது. அவள் கணவனுடன் நிகழ்த்தும் காமத்தின் முன்னான விளையாட்டுகளில் கவனமாக பதுங்கி இருந்த ஒரு மிருகம் வேட்டைக்காக முதுகு தாழ்த்தி, விழி கூர்ந்து முன் வருவது போன்ற குரூரம். அந்த குரூரத்தின் நிஜ முகத்தை அது எதையோ மறைக்க கொள்ளும் பாவனைகளை விளக்க கனவில் வரும் பூனையின் மியாவில் திராட்சை மணம் சேர்த்தது மிகச்சிறப்பு. இறுதியில் அந்த மிருகம் முழுவதுமாக வெளிவந்து அஸ்தமன சூரியனின் கீழ் உள்ள பாறையில் கம்பீரமாக நிற்கிறது. இக்கதையில் வரும் பெண்ணை பற்றி நாம் எங்கேனும் கேள்விபட்டாலோ அல்லது படித்தாலோ அவள் மீது வெறுப்பு தான் வரும். ஆனால் இக்கதையின் முடிவில் அவள் புன்னகைக்கும் போது, நமக்கும் வரும் புன்னகையை நிச்சயம் தடுக்க முடியாது.
முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்கள், தேவைகள், த்வந்தம் சிறுகதைகளில் வரும் பெண்களும் ஆண்களின் வெறுப்பையும், கோபத்தையும், இயலாமைகளையும் தங்களின் ஆளுமைமூலம் ஆழமான மௌனத்தின் மூலம் இல்லாமலாக்கி கடந்து செல்பவர்களாகவே வருகிறார்கள். இப்போது யோசித்தால் ஒன்று தெரிகிறது. இத்தொகுப்பின் எல்லா பெண் கதாபாத்திரங்களும் பல்வேறு முகம் கொண்டு ஆண்களை ஏதேனும் ஒரு வகையில் வெல்பவர்களாகவே இருக்கிறார்கள். “வேர்” சிறுகதையின் இறுதியில் தமயந்தி சொல்லும் “லவ்லி” என்ற ஒற்றை வார்த்தையில் தன் வாழ்க்கையில் இழந்தது என்ன என்பதை உணர்கிறான் நாயகன். அதுவரை தன் வாழ்க்கை பற்றிய தெளிவான முடிவுகளுடன் இருந்த அவன் நிச்சயம் அதன் பிறகு சிந்திக்கத் தொடங்கிருப்பான். காதல் வந்து தன்னை முழுமையாக ஆட்கொள்ளும் போது அதன் சுகங்களில் மூழ்க விரும்பாமல் விலகி போகிறவர்கள் உண்மையிலேயே சபிக்கப்பட்டவர்கள்.
“முடிவற்ற நட்சத்திரங்களின் வசீகர வெளிச்சங்களின்” ஜோசேபினை ஆண்களால் புரிந்து கொள்ளவே முடியாது. அதுதான் அவனுக்கும் நடக்கிறது. அவன் அவளை வெறுப்பதற்கான காரணம் அவள்மேல் உள்ள காதல் தான். ஆனால் அவனால் அது காதல் என்று ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியவில்லை அல்லது அந்த எண்ணத்தையே அவள் மீது வெறுப்பை கூட்டி புறம் தள்ளுகிறான். ஏனெனில் அவன் அவளது இருப்பை விரும்புகிறான், அவளை ஏதேனும் ஒரு வகையில் புண்படுத்தி தவறுக்காக அவள் வருந்த வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால் அவள் எதையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்லும் போது மிகச் சிறியவனாக தன்னை உணர்ந்து வேதனை அடைகிறான். இறுதியில் அவன் மன இருளே அவளை அவ்வாறு துன்புறுத்த எண்ணுவதை புரிந்து கொள்கிறான். குரியனின் குழந்தை அவனிடம் சிரித்துக் கொண்டே “ஹேப்பி கிறிஸ்துமஸ்” என்று சொல்லும் போது அவன் மன இருள் மொட்டை மாடியில் இடப்படும் விளக்கின் ஒளியில் விலகி செல்கிறது. இக்கதையில் குரியனின் குடும்பம் ஒரு குறியீடாகவே எழுதப்பட்டுள்ளது.
“த்வந்தம்” சிறுகதையின் லீலாவை ஆண்களால் எல்லா பெண்களிலும் கண்டுகொள்ள முடியும். தன்னிடம் பழகும் ஆண்களின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வெகுளியாக எந்த பெண்ணும் இருப்பதில்லை. அப்படி எந்த பெண்ணாவது சொன்னால் அவர்கள் நடிக்கிறார்கள் என்றே அர்த்தம். ஒரு பார்வையே அவர்களுக்கு போதும். ஆனால் தாங்கள் வெளியேறும் பாதையை முன்னரே தீர்மானித்து விட்டு தான் ஒரு பகடையாட்டத்தில் இறங்குவார்கள். தங்கள் வாழ்க்கையின் வெற்றியின் மேல் பேரார்வமும், ஆசையும் உள்ள பெண்கள் முன் ஆண்கள் வெறுமனே பயன்படுத்தப்படுபவர்கள். லீலா அவ்வாறு அவனை பயன்படுத்த எண்ணவில்லை ஆனால் அவள் மீதான அவனின் ஆசையை உணரும் போது எல்லையை தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கவைத்து விடுகிறாள். சிறுகதையின் தலைப்பை போலவே இது ஒரு போர் தான். யாருக்கும் வெற்றியும் தோல்வியும் இல்லாமல் முடிவடைந்த போர்.
பெண்களை சுற்றி நிகழும் ஆண்களின் உலகைப் பற்றிய தொகுப்பாக கூட இச்சிறுகதைகளை கருதலாம். “விலாஸம்” சிறுகதையை தன் மகள் மற்றும் பேத்தியின் வாழ்க்கையால் உலகின் வெற்றி தோல்வி போட்டிகளின் மேல் ஆர்வம் இழந்துவிட்ட ஒரு பெரியவரின் சலிப்பாக கூட பார்க்கலாம். ஏனெனில் தன்ராஜ் எதிர்பார்க்கும், அவர் மனதில் உள்ள விலங்கை வெளிக்கொண்டு வரும் எந்தவிதமான எரிச்சலோ அல்லது முகச்சுழிப்போ மாப்பாவிடம் இருந்து வரவில்லை. மாறாக, தன்ராஜ் தான் திரும்பி வரும் வழியில் எரிச்சலுறுகிறார். காரிலிருந்து இறங்கிய உடனேயே மழையிலிருந்து தானியங்களைப் பாதுகாக்க தார்ப்பாளை எடுத்துக் கொண்டு ஓடும் அவரின் வேகத்தில் இருப்பது மாப்பாவை எரிச்சலுற வைக்கும் அவரின் வெற்றி தான். ராம விலாஸின் மொத்த சொத்து கூட அந்த வெற்றிக்கு ஈடாகாது.
இந்த சிறுகதைகளை படிக்கும் போது எழுந்த சித்திரம் வேறு ஆனால் இதை எழுதும் போது வேறொரு சித்திரம் எழுகிறது. இதில் தான் திருச்செந்தாழையின் எழுத்தின் பல பரிமாணங்கள் புரிகின்றன. சிறுகதையில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் பார்வையின் மூலமாக கூட கதையை நம்மால் விளங்கி கொள்ள முடியும். அதற்கான இடைவெளிகளும் சாத்தியங்களும் அவரின் கதைகளில் பல்வேறு முடிச்சுகளாக இருக்கின்றன. ஏனெனில் காப்பு, தேவைகள், டி ஷர்ட் சிறுகதைகளும் அத்தகைய இடைவெளிகளுடனும் மௌனங்களுடனும் தான் எழுதப்பட்டுள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் கதைகளை வாசிக்கும் போதே என் மனதின் ஒரு பகுதி அச்சிறிய கதாபாத்திரங்களின் வழியாக கதையை அணுக முயன்று கொண்டே இருந்தது.
அதுபோல கீறல் சிறுகதையின் மைய முடிச்சையே வாசகனின்ஊகத்துக்காக அமைதியாக விட்டிருக்கிறார். வேலுமணி அத்தையின் உருவத்தை அவ்வளவு பெரிதாக வரைந்து அழகுகாட்டி விட்டதால், கடைசியில் அவர் அழும் போது இந்த கீறல் எப்படி சாத்தியம் என்றே மனம் வியக்கிறது. பெரும்பாலானவர்கள் எழுதி எழுதி தாக்கத்தை ஏற்படுத்த முயலும் வாழ்க்கை தருணத்தை எழுதாமலே விட்டு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
திருச்செந்தாழையின் கதைகள் உச்சதை நோக்கி பயணிப்பவைகளாக இல்லை. வாழ்க்கை தருணத்தின் உச்சத்தை சுற்றி நிகழ்பவைகளாக இருக்கின்றன. அதனாலேயே கதையின் முடிவு அளிக்கும் அதிர்ச்சியையோ அல்லது அனுபவத்தையோ கதை முழுவதும் அவரால் தர முடிகிறது. நிழல் இழந்த முற்றம், அவற்றின் கண்கள், மீன் முள்ளின் இரவு சிறுகதைகளில் நன்றாகவே உணர முடிந்தது. நிழல் இழந்த முற்றம் மற்றும் அவற்றின் கண்கள் சிறுகதையில் சூழும் வெறுமையும், மீன் முள்ளின் இரவு சிறுகதையில் சூழும் அச்சமும் கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை தொடர்கிறது.
துலாத்தான் சிறுகதையின் தொடர்ச்சி போலவே படையல் சிறுகதை. துடி சிறுகதை எல்லா கதைகளிலும் இருந்து வேறுபட்டு இருந்தது.
மிகச்சிறப்பான தொகுப்பு. அருமையான வாசிப்பு அனுபவம் கிடைத்தது. திருச்செந்தாழைக்கு என் நன்றிகள். மேன்மேலும் எழுத அவருக்கு என் வாழ்துக்கள்.