நான் ஆங்கிலத்தில் கண்போனபோக்கில் தேடி வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கதை என்னை கவர்ந்தது, வேங்கைச்சவாரி. அது கன்னடக்கதையின் ஆங்கில மொழியாக்கம். விவேக் ஷான்பேக் எழுதியது. அதன்பின் அப்பெயர் என் நினைவைச் சீண்டியது. நான் அவரை அறிவேன். 1992ல் நான் கதா விருது பெற்றபோது கன்னடத்தில் விவேக் எழுதிய கதை ஒன்று விருது பெற்றிருந்தது. நம்ம மனகே நாவு (நம் வீட்டில் நாம்) என்னும் கதை. அந்த விருதுவிழாவில் அவரை நான் சந்தித்திருந்தேன். என்னுடைய ஜகன்மித்யை என்னும் கதை அவரை கவர்ந்திருந்தது, அதைப்பற்றி பாராட்டி என்னிடம் சொல்லியிருந்தார். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகன் அவர்.
அக்கதையை நான் மொழியாக்கம் செய்து என் தளத்தில் வெளியிட்டேன். விவேக்கின் பிற கதைகளை மொழியாக்கம் செய்யும்பொருட்டு அதன்பிறகே அவரை தொடர்புகொண்டேன். அவர் அனுமதியுடன் கதைகளை ஆங்கிலம் வழியாக மொழியாக்கம் செய்தேன். பின்னர் சில கதைகளை என் நண்பர்களிடம் சொல்லி மொழியாக்கம் செய்து என் தளத்தில் வெளியிட்டேன். வம்சி பதிப்பக வழியாக அந்நூல் வெளிவந்தது.
அன்று முதல் தமிழில் விவேக் விரும்பி வாசிக்கப்படும் ஒரு படைப்பாளியாகவே இருக்கிறார். அவருடைய வேங்கைச்சவாரி எப்போதும் உரையாடலில் இருந்துகொண்டிருக்கிறது. அவருடைய காச்சர் கோச்சர் தமிழில் மிகவும் பேசப்பட்ட ஒரு படைப்பு. அவருடைய கதைகள் இன்று கன்னடமொழியின் முதன்மை இலக்கிய அடையாளங்களாக ஆகியுள்ளன. காச்சர் கோச்சர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நூலாக உள்ளது.
விவேக் கதைகளின் அழகியல் மூன்று அடிப்படைகள் கொண்டது. நேரடியான வாழ்க்கை விவரிப்பு. எளிய நடை. குறைத்துச்சொல்லும் பாணி. அவ்வகையில் அவர் பெருமளவு அசோகமித்திரனுக்கு இணையானவர். அசோகமித்திரன் தமிழில் அடைந்த ஏற்புதான் விவேக்கை நோக்கியும் நீள்கிறது என நினைக்கிறேன். மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறைந்த சொற்களில் ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை முன்வைத்துவிட்டு தேர்ந்த நுண்பின்னல்களால் அவ்வாழ்க்கையின் அடித்தளத்தின் சிக்கல்களை விரித்துவிரித்துச் செல்பவை விவேக்கின் கதைகள். அவ்வகையில் அவற்றின் அந்த எளிமையை ஒருவகை செவ்வியல்தன்மை என்றே சொல்லவேண்டும்.
விவேக்கின் கதைகள் தென்மேற்கு கர்நாடகத்தின் கிராமப்புறத்தையும், நவீனவாழ்க்கை திகழும் நகர்ப்புறத்தையும் ஒரே சமயம் தழுவு விரிபவை. பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை விவரிப்பவை. ஆனால் ஒரு உயர்தொழில்வணிக சூழலின் கருவைக் கொண்டுள்ள வேங்கைச் சவாரி போன்ற கதையையும் அதேயளவு நம்பகத்தன்மையுடன் அவரால் எழுத முடிகிறது. விவேக்கின் கதைகளில் பகடியோ வேடிக்கையோ இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை, உரையாடல்களை அமைப்பதில் எப்போதும் மெல்லிய நகைச்சுவை இருந்துகொண்டிருக்கிறது. படிகங்களில் எஞ்சியிருக்கும் வானின் ஒளி போன்ற கண்கள் தொட்டு துலக்கி அறியவேண்டிய ஓர் அழகு அது.
வடிவத்தேர்ச்சியும், அழகியலமைதியும், கூர்மையும் கனிவும் கொண்ட வாழ்க்கைநோக்கும் கொண்ட இக்கதைகளை தமிழில் கொண்டுவந்தமை குறித்த பெருமிதம் எனக்கு உண்டு
ஜெ
(விவேக் ஷன்பேக் எழுதிய கதைகளின் தொகுதியாகிய வேங்கைச் சவாரி நூலின் மறுபதிப்புக்கு எழுதிய முன்னுரை)
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)