கவிதையைப் பற்றி தர்க்கபூர்வமாக முடிவு என எதுவும் சொல்லிவிடமுடியாது. ஆகவேதான் கவிதையைப்பற்றி மூவாயிரமாண்டுகளாகத் தர்க்கவியல் பேசிக்கொண்டே இருக்கிறது. கவிதையியல் என்ற துறை இல்லாத செவ்வியல் மொழிகளே உலகில் இல்லை. ஏனென்றால் தர்க்கவியல் பேசமுற்படுவது எப்போதுமே தர்க்கபூர்வமாக அறுதியிட்டுவிட முடியாதவற்றைப் பற்றியே. இறை, மீட்பு, அறம், நீதி, அன்பு, அழகு என்று தர்க்கவியலின் பேசுபொருட்கள் எப்போதுமே அருவமானவை. பருவடிவம்கொண்டு, புலனறிதல்களுக்குச் சிக்குவதைப் பற்றிப் பேச தர்க்கம் தேவையே இல்லை. தர்க்கத்தின் பணியே அறியப்பட்டவற்றைக் கொண்டு அறியப்படாதவற்றை அளவிடுவதும், அந்தப் பாதையில் அளவிடமுடியாதவற்றைச் சென்று தொட்டுவிடுவதும்தான்.
இருபதாண்டுகளுக்கு முன்பு சம்ஸ்கிருத காவியயியலை பயிலும்போது மெய்யாகவே கவிதைகள் அளிக்கும் அந்த உளப்பொங்குதலை அடைந்தேன். ரசம் (மெய்ப்பாடு), அலங்காரம் (அணி) ,த்வனி (குறிப்புணர்த்தல்) வக்ரோக்தி (மொழிநுட்பங்கள்) ஆகியவை இன்றும் கவிதையை அளவிட மிகச்சிறந்த வழிமுறைகளே என்று நினைக்கிறேன். தமிழ்க்கவிதையியலின் திணைக்கோட்பாடு பற்றி முனைவர் .ஐயப்பப் பணிக்கர் வழியாக அறிந்தபோது அகநிலம் என்னும் பிரியத்திற்குரிய சொற்றொடரை அடைந்தேன். ஆங்கிலக் காவியயியலில் அரிஸ்டாட்டில் முதல் மாத்யூ ஆர்னால்ட் வரையிலானவர்களை ஐயப்பப் பணிக்கரின் உரைகள், கட்டுரைகள் வழியாகவே அறிமுகம் செய்துகொண்டேன். என் பிரியத்துக்குரியவர் அவர்களில் கூல்ரிட்ஜ்தான்.
கவிதைவிமர்சனம் இரண்டுவரை. கவிதையை ஆராய்வது முதல்வகை. ஆராய்ச்சிவிமர்சனம் இரண்டு களங்களில் நிகழ்கிறது. முதல் களம் கல்வித்துறை . கல்வித்துறை ஆய்வுக்கு அவர்கள் கையாள்வது மூன்று அளவுகோல்களை. ஒன்று இலக்கணம். அதுவரையிலான இலக்கியங்களில் இருந்து உருவாக்கிக் கொண்ட இலக்கிய வடிவவரையறையும், உள்ளடக்க வகைப்படுத்தலும் இலக்கணம் ஆகின்றன. இரண்டு, பிறதுறைகள் சார்ந்த அணுகுமுறை. மொழியியல், சமூகவியல், வரலாறு என வெவ்வேறு அறிவுத்துறைகளின் அறிதல்களை அவர்கள் இலக்கியத்தின்மேல் செலுத்திப்பார்க்கிறார்கள். இலக்கியத்தைக்கொண்டு அந்தந்த துறைகளை மேலும் தெளிவாக்குகிறார்கள். மூன்றாவது, ஒப்பிலக்கியம். இலக்கியப்படைப்புகளை ஒன்றுடனொன்று ஒப்பிட்டு ஆராய்வது அது.
இரண்டாவது ஆய்வுசார்ந்த அணுகுமுறை அரசியல்தரப்புகளில் இருந்து உருவாவது. அவர்கள் படைப்பின் அரசியலை அடையாளம் கண்டு தங்கள் அரசியலைக்கொண்டு மதிப்பிடுகிறார்கள். அல்லது படைப்பின் மேல் தங்கள் அரசியலை செலுத்திப்பார்க்கிறார்கள். அரசியல்கோட்பாடு, அரசியல் நடைமுறை சார்ந்து அவர்களின் ஆய்வுகள் அமைகின்றன.
ஆய்வுசார்ந்த அணுகுமுறை பெரும்பாலும் கவிதையின் கவிதைத்தன்மையை தவறவிட்டுவிடுகிறது. கவிதையின் வடிவத்தை ஒரு உயிர்நிகழ்வாக அன்றி ஒருவகையான கட்டுமானமாகவே அணுகுகிறது. அதை உடைத்தும் இணைத்தும் விவாதிக்கிறது. கவிதையின் பேசுபொருளை கருத்துக்களாக ஆக்கிக்கொண்டு மேலே பேசுகிறது. கவிஞர்களும் நுண்வாசகர்களும் இத்தகைய அணுகுமுறைகள் பற்றி உளச்சோர்வு கொண்டிருப்பார்கள். ஆனால் அத்தகைய ஆய்வுகள் ஒரு சமூகம் கவிதையை உள்வாங்கும் வெவ்வேறு வழிமுறைகளில் அடங்குபவையே என்றும், அவை தேவையே என்றும் நான் எண்ணுகிறேன். ஏனென்றால் அவை கவிதையின் கவித்துவத்தை அடைவதை தவறவிட்டுவிடுவது உண்மையே என்றாலும் வாசகர்களுக்கு கவிதையை அணுகும் பாதையை அமைத்துத்தரக்கூடும், கவிதையின் பின்புலம், தொடர்ச்சி ஆகியவற்றை விவரிப்பதன் வழியாக நுண்வாசகர்களுக்குக் கூட கவிதையின் வெவ்வேறு வாசிப்புச்சாத்தியங்களை அடையாளம் காட்டக்கூடும்.
என்னுடைய வழி ஆய்வு அல்ல. இலக்கியப் பகுப்பாய்வில் எனக்கு ஈடுபாடில்லை, ஏனென்றால் நான் எழுத்தாளனும் வாசகனுமாகவே நிலைகொள்கிறேன் – அறிஞனாக அல்ல. என் இலக்கிய விமர்சனம் ரசனை சார்ந்தது. இதை ரசனைவிமர்சனம் என்று நான் வரையறை செய்கிறேன். ரசனைவிமர்சனம் என்பது விமர்சகன் தன்னை தீவிரமான, முழுமையான வாசகனாக மட்டுமே முன்வைப்பது. வாசிப்பை ரசனைவழியாக தன்னியல்பாக நிகழ்த்திவிட்டு, விவாதத்தின்பொருட்டு மட்டுமே தர்க்கத்தை கைகொள்வது. ஆகவே இதுவும் ஒரு தீவிரமானப் படைப்புச் செயல்பாடுதான்.
இதன் படைப்புச் செயல்பாட்டை நான் இப்படி வரையறை செய்வேன். கவிதை என்பது புறவயமான அனுபவங்களில் இருந்து ஓர் அகவயமான தாவலை நிகழ்த்திக்கொள்வது. கவிதைவிமர்சனம் என்பது கவிதையை வாசிக்கும் அனுபவத்தை அந்த புறவயமான அனுபவத்தளத்தில் வைக்கிறது. அதன்பின் நிகழ்வது விமர்சகன் நடத்தும் தாவல்தான். அந்த தாவலுக்கு இலக்கியத்தின் எல்லா வழிமுறைகளையும் ரசனைவிமர்சகன் பயன்படுத்திக்கொள்ளலாம். படிமங்கள் முதலிய அணிகள், மொழிவிளையாட்டுகள் எல்லாமே.
ரசனை விமர்சனம் கவிஞனை ஆராய்வதில்லை, அவனை ‘கண்டுபிடிக்கவோ’ அல்லது ‘வரையறை செய்யவோ’ முயல்வதில்லை. அது பறவையுடன் சேர்ந்து பறக்கும் முயற்சி மட்டுமே. அந்தப் பறத்தலால்தான் அது இலக்கியமாகிறது. உடன்பறந்து அறிவதனால் வேறெந்த ஆய்வாளனை விடவும் கவிதையை அறிந்தவனாகிறான் ரசனைவிமர்சகன். அறிவார்ந்து கவிதையைப் பகுப்பாய்வு செய்யும் விமர்சகனுக்கு இந்த வகையான சுதந்திரங்கள் இருக்கலாகாது. அவனுடையது விலக்கம் வழியாக அறியும் முறை.
நான் வால்டர் ஸ்காட் முதல் கூல்ரிட்ஜ் வரையிலான விமர்சகர்களை ஏன் முன்னோடியாகக் கொள்கிறேன் என்றால் அவர்கள் கவிதைபற்றிப் பேசிய கவிஞர்கள் என்பதனால்தான். மலையாளத்தில் அவ்வகையில் என் முன்னோடிகள் இருவர். பேரா.எம்.என்.விஜயன் வாழ்நாள் முழுக்க கவிதைபற்றிப் பேசியவர். அவருடைய உரைகளும் கவிதைகளே. கல்பற்றா நாராயணன் எம்.என்.விஜயனின் வழித்தோன்றல். கவிதைபற்றிய கவிதை என கல்பற்றா நாராயணனின் கவிதைவிமர்சனத்தைச் சொல்லலாம். நான் அணுகவிரும்புவது அவர்கள் உருவாக்கிய எல்லையையே.
தமிழில் கவிதைபற்றி கவிஞர்கள் எழுதியவை இந்த அணுகுமுறைக்கு உதாரணங்களாக உள்ளன. வ.வே.சு.ஐயர் தமிழில் ரசனைவிமர்சனத்தின் தொடக்கம். கம்பராமாயணம் பற்றிய அவருடைய ஆய்வுதான் முதன்மை வழிகாட்டி. கு.ப.ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, பிரமிள், சுந்தர ராமசாமி முதல் தேவதேவன் வரை அவ்வகையில் என் முன்னோடிகள் பலர். நான் அவர்களின் வழியில் செல்ல விரும்பும் விமர்சகன். இந்தக் கட்டுரைகள் அதற்கான சான்றுகள்
இக்கட்டுரைகளில் வெளிப்பாட்டில் தர்க்கமொழியும் கவிதையை உணர்வதில் அழகுணர்வு சார்ந்த அகநோக்கும் உள்ளன என நினைக்கிறேன். என் உணர்கொம்புகள் அறிந்தவற்றை வகுத்துரைக்க முயன்றிருக்கிறேன். திளைத்துத் திளைத்து நாக்கு அறிந்த இனிமையை கைகளால் நடித்துக்காட்ட முயல்வதுபோல. முடியாமலிருக்கலாம். ஆனால் கைகளின் உச்சகட்ட சாத்தியக்கூறு வெளிப்பட்டிருக்கும் அல்லவா?
ஜெ
(விஷ்ணுபுரம் வெளியீடாக வரவிருக்கும் உள்ளுணர்வின் தடத்தில் நூலின் இரண்டாம்பதிப்புக்கான முன்னுரை)