நமது தேவைகள், நமது பாவனைகள்- பதில்.

நமது தேவைகள், நமது பாவனைகள்

அன்புள்ள பிரவீன்,

உங்கள் கடிதம் உண்மையான உணர்வுகளால் ஆனது. ஆனால் அந்த உணர்வுகளின் அடிப்படையில் உள்ளது ஒருவகையான சுயநடிப்பு என்றே எனக்குப்படுகிறது. இதை நான் புண்படுத்துவதற்காகச் சொல்லவில்லை. நம்மை நாமே மிகக்கறாராக பார்த்துக்கொள்ளாவிட்டால் நாம் நம்முடைய பாவனைகளுக்குப் பலியாகிவிடுவோம். ஆகவே ஒவ்வொரு உணர்ச்சிநிலைகளின் போதும் நம்மை நாமே அறுத்து பார்த்துக்கொண்டாக வேண்டும்.

முதல்விஷயம் ‘இலட்சியக் கனவுகளோடு பேரியக்கத்தில் பங்கெடுக்கும் யாருக்கும் ஏதோவொரு தருணத்தில் வரும் சோர்வு’ என உங்கள் சோர்வைச் சொல்லிக்கொள்கிறீர்கள். உங்கள் இலட்சியக் கனவுகள் என்ன? ஒருவர் தன் சொந்தவாழ்க்கையில் உலகியல் இலக்குகள் கொண்டிருப்பது ஒன்றும் இலட்சியம் அல்ல. அது செயல்திட்டம் மட்டுமே. அச்செயல்திட்டம் தன்னுடைய திறமை மற்றும் பயிற்சியின் அளவைக்கொண்டு அமையவேண்டும். சூழலைக் கருத்தில் கொண்டிருக்கவேண்டும். அதன்பின் தொடர்முயற்சியும் தேவையாகும். அதில் வெற்றிதோல்வி இயல்பானது. அப்படி இந்த உலகில் பலகோடிப்பேர் உலகியல் இலக்குகளுடன் செயல்பட்டு வெற்றியும் தோல்வியும் அடைகிறார்கள். தோல்வியடைபவர்களில் பலர் தங்களை மிகையாக மதிப்பிட்டவர்கள். பலர் சூழலை பிழையாக மதிப்பிட்டவர்கள். சிலருக்கு நல்லூழ் அமையாது போகும். அவர்கள் எல்லாம் இலட்சியவாதிகள் அல்ல.

இலட்சியம் என்பது பொதுநலன் சார்ந்த ஒரு ‘பங்களிப்பை’ இலக்காக்குவது. சமூகப்பங்களிப்பு. அறிவியக்கப் பங்களிப்பு. அது மட்டுமே இலட்சியவாதம். அப்படி ஒரு இலட்சியவாதம் உங்களிடம் உண்டா என்ன? அப்படிப்பட்ட இலட்சியவாதிக்கு சோர்வுநிலைகள் உண்டு. ஒன்று இளமையின் துடிப்பில் தன்னைப்பற்றிய மிதமிஞ்சிய பிம்பத்துடன் இலட்சியவாதச் செயல்பாட்டுக்குச் செல்பவர்கள் மிக எளிதில் அக்குமிழி உடைபட்டு சோர்வடைவார்கள். சமூகம் பற்றி கற்பனாவாத உளப்பிம்பம் உடையவர் யதார்த்தத்தை சந்திக்கையில் உளச்சோர்வடைவார்கள். அந்த உளச்சோர்வுக்கு தீர்வுகள் உண்டு. அதற்கான பயிற்சி வகுப்புகளை நான் பங்குகொண்டு நடத்தியுள்ளோம்.

தன்னைப் பற்றிய உண்மையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளாமல் இலட்சியவாதச் செயல்பாடு இயல்வது அல்ல. தன்னை எதிர்கால நோபல் பரிசு பெறுபவன் என எண்ணிக்கொள்வது இளமையில் ஓர் இனிய கனவாக இருக்கலாம். அது உடைந்தாக வேண்டும். தன் பங்களிப்பு என்ன என்பதை ஒருவன் உணர்ந்தாக வேண்டும். பங்களிப்பை அளிப்பது மட்டுமே தன் பணி, அதன் விளைவுகளை எதிர்பார்க்கலாகாது, அது காலத்திடமே உள்ளது என உணர்ந்தாகவேண்டும்.  சமூகம் என்றால் உண்மையில் என்ன என்னும் புரிதலும் நடைமுறை வழியாக உருவாகிவரவேண்டும்.

இன்னொரு இலட்சியவாதியைச் சந்தித்தாலே அந்த புரிதல் உருவாகிவிடும். இலட்சியவாதிகள் எவரும் தனியர்கள் அல்ல. அவர்களுக்கு முன்னோடிகள் இருப்பார்கள். தோழர்கள் இருப்பார்கள். அச்சூழலில் இருந்து அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வார்கள். அச்சூழலில் இருந்து யதார்த்தத்தையும் புரிந்துகொள்வார்கள்.

ஒருவர் எவருடனும் ஒத்துப்போகமுடியாத தனியர் என்றால் அவர் இலட்சியவாதி அல்ல. அவர் எதையும் செய்பவர் அல்ல. செயற்களம் எதுவானாலும் அதில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர் ஒத்துப்போகிறவராகவே இருப்பார். ஒத்துப்போகும் களங்களை, விஷயங்களை, நபர்களை கண்டடைந்து கொண்டே இருப்பார். மனிதர்களைத் திரட்டிக்கொண்டே இருப்பார்.

நண்பரே, உங்களுடையது இலட்சியவாதம்தானா என்பதை நீங்கள் பரிசீலனை செய்துகொள்ளுங்கள். உங்களுடையது இலட்சியவாதம் என்றால் அதற்கு 3 அடையாளங்கள் இருக்கும்

அ. நீங்கள் வெறுமே பேசிக்கொண்டிருக்க மாட்டீர்கள். வெறும் திட்டம் மட்டும் கொண்டிருக்க மாட்டீர்கள். செயலில் இருப்பீர்கள். சிறிதளவேனும் செயலாற்றாமல் ஒருநாளைக் கூட செலவிடமாட்டீர்கள். அச்செயல் வழியாகவே கற்றுக்கொள்வீர்கள். அச்செயல்வழியாக உங்களுக்குரிய சூழலையும் சுற்றத்தையும் கண்டடைந்திருப்பீர்கள்.

ஆ. இலட்சியவாதம் என்பது தன்னை தகுதிப்படுத்திக்கொண்டே செல்வதும்கூட. கற்றுக்கொண்டே இருப்பது அது. வாழ்நாள் முழுக்க கற்றுக்கொண்டே இருக்காத ஒரே ஒரு இலட்சியவாதிகூட இல்லை. இலட்சியவாதிகளின் இன்பம் என்பது அந்தக் கல்வி தான். அவர்களின் சோர்வுகளைப் போக்குவது அதுவே. எல்லா இலட்சியவாதிகளும் பேரூக்கத்துடன் அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பற்றியே பேசுவார்கள்.

இ. இலட்சியவாதிகளுக்கு ஆதர்சமனிதர்கள் இருப்பார்கள். நேரிலும் வரலாற்றிலும். அவர்கள் கொண்டுள்ள அந்த இலட்சியத்தை தாங்களும் கொண்டு சாதித்தவர்கள். முன்னால் சென்றவர்கள். அவர்களின் மீதான பெரும்பிரியம் என்பது இலட்சியவாதியின் வழியில் பற்றுக்கோடாக ஆகிறது.

உங்களுடையது இலட்சியவாதம் என்றால் நீங்கள் மேற்கொண்ட மூன்றையும் கொண்டிருப்பீர்கள். உங்கள் சோர்வுக்கான தீர்வும் அங்கேயே உண்டு. அவ்வாறன்றி இன்று பலர் இருக்கும் ஒரு நிலையையே நீங்கள் இலட்சியவாதத்தின் சிக்கலாக எண்ணிக்கொள்கிறீர்களா என்று பாருங்கள்.

அ. இன்று பெரும்பாலானவர்களுக்குக் கவனக்குவிப்பு இயல்வதில்லை. காரணம், இன்றைய மிகையூடகச் சூழல். ஆகவே எதையும் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ள முடிவதில்லை. தொடர்ச்சியாக ஒரு செயலை செய்து முழுமையடையச் செய்ய இயல்வதில்லை.

ஆ. இன்றைய ஊடகச் சூழல் இளைஞர்களை தனிமைப்படுத்துகிறது. வெற்றுப் பகற்கனவுகளில் வாழச்செய்கிறது. ஆகவே தொடர்புறுத்தலுக்கான ஆற்றல் இல்லாமலாகிறது. விளைவாக சூழலுக்குப் பொருந்தாமல் ஆகிவிடுகிறார்கள். எங்கும் முரண்படுகிறார்கள். சுற்றம் இல்லாமலாகிறது. அத்தனிமை இலட்சியவாதத்தின் விளைவு அல்ல. அது ஒரு தகுதியின்மை. இலட்சியவாதி என்பவன் தெளிவாகத் தன்னை தொடர்புறுத்தத் தெரிந்தவன்.

இ. எதையும் செய்து, கற்று, அறியாமல் வெறுமே ஊடகம் வழியாகவே அறிந்துகொள்வது இன்றைய இளைஞர்களின் வழக்கம். ஆகவே அனுபவ அடிப்படையோ, கற்றறிந்த அடிப்படையோ இல்லாமல் வலுவான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அதை இன்றைய சமூக ஊடகச்சூழல் வளர்க்கிறது. ஆனால் திட்டவட்டமான கற்றல்பின்புலமும் சாதனைவரலாறும் இல்லாத ஒருவர்  வலுவான கருத்துக்கள் கொண்டிருப்பது தகுதி அல்ல. போதிய அடிப்படைகள் இல்லாமல் வலுவான கருத்துக்கள் கொண்டிருப்பது ஒரு பிழை, ஒரு போதாமை, கடந்தாகவேண்டிய ஆளுமைச் சிக்கல் மட்டுமே.  ஆழ்ந்த அடிப்படைகள் கொண்ட ஒருவர், சாதனையாளர் என அறியப்பட்ட ஒருவர் மட்டுமே உறுதியான கருத்துக்களைக் கொண்டிருக்கமுடியும். அதாவது தன் சாதனைக்களத்தில் மட்டும். அவர் பொருட்படுத்துவது இன்னொரு சாதனையாளரின் கருத்தை மட்டுமே.

‘நிலையான வேலையில்லாமல் இன்னும் பொருளாதார தன்னிறைவின்றி அடிப்படை செலவுகளுக்கே அல்லல்படும் நிலை’ என்று சொல்கிறீர்கள். உண்மையான சிக்கல் அது தான் என நினைக்கிறேன். அதைத்தான் நீங்கள் தீர்த்துக்கொள்ளவேண்டும். அதுவே வழி.

எண்ணிப்பாருங்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகுண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்
அடுத்த கட்டுரைகிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்