இரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை
Links to buy the book
Hardcopy அச்சுப்பிரதி வாங்க
Ebook: https://www.amazon.in/dp/
அன்புள்ள ஆசிரியர் ஜெ அவர்களுக்கு
இரு கடல் ஒரு நிலம் புத்தகம் வாசகர்களுக்கு உங்களுடன் அதே காரில் அமெரிக்கா முழுவதும் நெடும் பயணம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது. இது அமெரிக்காவின் க்ராஸ் கண்ட்ரி (Cross country) ஈஸ்ட் கோஸ்டிலிருந்து வெஸ்ட் கோஸ்ட்க்கு 5044 மைல்கள், 15 நாட்கள், 13 மகாணங்கள், 81 மணி நேர சாலைவழிப்பயணம் (Road trip) பற்றிய புத்தகம். நிறைய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் நேரே சென்று பார்ப்பது போல் இருக்கிறது. அமெரிக்காவில் பல வருடங்கள் இருந்தவர்கள், என்னைப் போல பல முறை அமெரிக்கா சென்றவர்கள் கூட இந்த எல்லா இடங்களை பார்த்திருக்க மாட்டார்கள். பார்த்திருந்தாலும் இந்த புத்தகத்தில் வரும் பல செய்திகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
இந்த நூலின் ஆசிரியர் திரு.விஸ்வநாதன் முதலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் பெயர்களையும் மிகவும் சுவாரஸ்யமாகவும், இலக்கிய நுட்பம் கொண்டதாகவும் கொடுத்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் கூடவே பயணத்தின் அனுபவத்தை சேர்த்து சொல்லியிருப்பது மிக அருமை. ஜெவிடம் கேட்கப் பட்ட கேள்விகள் அத்தியாயத்தின் முதலிலும் அவரின் பதில்கள் அத்தியாயத்தின் முடிவிலும் தரப்பட்டுள்ளது. ஜெவின் பல பதில்களும், குறிப்புகளும் புத்தகம் முழுக்க வருகிறது (உதாரணமாக–ஒரு எழுத்தாளருக்கு நேரடி வாழ்க்கை அனுபவம் எந்த அளவு முக்கியம்? கிறித்துவம் இஸ்லாமில் உள்ளது போல சம்பாதிப்பதில் இத்தனை சதவீதம் கொடை தர வேண்டும் என்று இந்து மதத்தில் இல்லை. கொடை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?)
ஒவ்வொரு மாகாணத்தின் உள்ளே நுழையும் பொழுதும் அதன் விளம்பம்பரங்களிலேயே அந்த ஊர் மக்களின் மனநிலை, அமெரிக்க சுதந்திரத்திற்கு முன், பின், பூர்வகுடிகள் முதல் இன்று வரை வரலாறு, புவியியல் அமைப்பு, விலங்குகள், உணவுகள், கட்டிடக் கலைகள், வெளி உலகத்தை அறியாத கிராமங்கள், மனிதர்கள் (அமெரிக்காவிலா?) என சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.
இசையைப் பற்றி மிக விரிவாக மெம்ஃபிஸ் நகரின் எல்விஸ் ப்ரெஸ்லி, ஜாஸ் உருவான கதை, நாஷ்வில் கண்ட்ரி மியுஸிக், பயணத்தில் போட்ட மியூஸிக் என எல்லா அத்தியாயத்திலும் வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ந்த வரலாறு சிலிகான் வேலியாக மாறியது, இண்டல், மைக்ரோசாப்ட் நிறுவனம், கணனிகள், பிராசசர்கள் தொடங்கி வளர்ந்த வரலாறு என கல்லூரி மற்றும் தொழில் நுட்ப துறையினர்க்கு வேண்டிய செய்திகள் உள்ளது.
மிக முக்கியமாக நதிகள், பனி மலைகள், பாலை நிலங்கள், பள்ளத்தாக்குகள், நேஷனல் பார்குகள், ஸ்மோக்கி மௌண்டன், மேசா வெர்தே, கேன்யான் லேண்ட்ஸ், மெக்சிகன் தொப்பி, ஹார்ஸ் ஷு பெண்ட், ரேட் கேன்யான், க்ராண்ட் கேன்யன் இவை எப்படி உருவாகியது என்ற செய்தி, நூற்றென்பது கோடி ஆண்டுகளுக்கு முந்தயவை என்று அறிந்ததும் சாங்கிய தரிசனத்திலும், கால தரிசனத்திலும் மூழ்கி கண்கள் நிறைந்தது.
திருசந்தவிருத்தத்தில் திருமழிசைபிரான் அருளிய பாடல் நினைவுக்கு வந்தது.
பூ நிலாய ஐந்துமாய் புன்ற்கண் நின்ற நாங்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்று ஆகி வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே
நூல் ஆசிரியர் விஸ்வநாதன் உதவிய அவருடைய மனைவியின் கடின உழைப்பு புத்தகத்தை பயண நூலுக்கு மேல் ஒரு சிறப்பான தரிசனத்தை தருகிறது.
நன்றி
உமா ரமேஷ் பாபு