இந்தியா என்னும் மோசடிக்களம்
ஒவ்வாமையெனும் உயர்நிலை
வணக்கம் ஜெயமோகன் சார்,
இந்தியாவில் நடக்கும் பண மோசடிகளை பற்றி தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரைகளை படித்தேன்.
கிராமப்புற பகுதிகளில் வங்கி அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
கிராம மக்கள் கள்ளம் கபடம் இல்லாதாவர்கள் . அடுத்தவர் பணத்தின் மேல் ஆசைப்படாத வர்கள் என்ற பொது புத்தி தான் எனக்கும் இருந்தது. ஆனால் அது அங்கு பணியாற்ற துவங்கியதுமே மாறிவிட்டது.
1. பாட்டிகள் எட்டு பேர் ஒரு குழுவாக வந்து வங்கியில் அழுவதும் , திட்டுவதுமாக பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்தனர். விசயம் இது தான் அவர்களுக்கு அரசு கொடுத்த ஓ.ஏ.பி பணம் அக்கவுண்டில் இல்லை. வங்கியில் தான் எடுத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் வைத்தார்கள். ஒவ்வொருவரின் அக்கவுண்ட் நம்பரையும் வாங்கி , பணம் எங்கே சென்றது என தேடிப் பார்க்கையில் பப்ஜி கேமுக்கும் , ரம்மி சர்க்கிளுக்கும் செலவாகியிருந்திருக்கிறது. யாரிடமாவது பேங்க் பாஸ்புக் கொடுத்தீர்களா என கேட்ட போது தான். பக்கத்து வீட்டு இளைஞரை பற்றிய செய்தி கிடைத்தது. விசயம் இது தான் பக்கத்து வீட்டு இளைஞன் பாட்டிகளின் போனையும் , அக்கவுண்ட் நம்பரையும் வைத்து ஆன்லைன் ட்ரான்ஸாக்ஸன் செய்து, பாட்டிகளின் பணத்தையெல்லாம் செலவு செய்திருக்கிறான். போலீஸ் கம்பளையண்ட் கொடுத்து இளைஞரை வங்கிக்கு வரவழைத்து விசாரித்ததில் தெரிய வந்தது.
2. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்த இரண்டு பெண்கள் ஐம்பது வயதில் ஒருவரும் தள்ளாடி நடந்தபடி ஒரு பாட்டியும் வந்தனர். இட்லி கடை வைச்சிருக்கோம், அதற்கான தொழில் லோன் வேணும் மேடம் என கேட்டு வந்தனர். லோனுக்கு தேவையான டாகுமெண்ட்களை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்து அனுப்பினேன்.
லோன் ப்ராஸஸ் செய்வதற்கு முன் இன்ஸ்பெக்ஸன் பார்ப்பது வழக்கம். அடுத்த நாள் அவர்கள் கொடுத்திருந்த முகவரிக்கு சென்று பார்த்த போது அந்த இடத்தில் நாலு சென்ட் அளவு பெரிய கான்கிரீட் வீடும் , அதில் நேற்று வந்த பெண்மணிகள் கழுத்து , காது , கை , மூக்கு என அனைத்து நகைகளும் அணிந்து நல்ல புடவைகளையும் அணிந்திருந்தனர். வங்கியிலிருந்து இன்ஸ்பெக்சன் வருவார்கள் என அறிந்திருக்கவில்லை போலும். இட்லி கடை எங்க இருக்குங்கம்மா என்று கேட்டேன். வெச்சிருந்த கடை சாலை ஓட்டையாருச்சு அதை புதுசா கட்ட தான் லோன் என்றார்கள். என் அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு சரி இட்லி பாத்திரம் வெச்சிருப்பீங்களே பழைய கடையோடது அத காட்டுங்க என்றேன். செய்வதறியாமல் வீட்டு சமையலறைக்குள் சென்று விசில் வரும் சிறு இட்லி குக்கரை எடுத்து வந்து காட்டினார்கள். எதுவும் பேசாமல் அமைதியாக வந்துவிட்டேன். எனக்கு என்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து கண்ணீரே வந்துவிட்டது. அடுத்த நாள் காலையில் வங்கிக்கு ஒரு வக்கீலோடு வந்தார்கள். வக்கீல் தான் பேசினார். லோன் குடுக்கனும்னா லஞ்சம் கேட்டீங்களாமா ? உங்க மேல கேஸ் போடப் போறோம் என்றார். அந்த அம்மாக்கள் இறுக்கமாக , திமிராக நின்றார்கள். நல்லவேளையாக நான் பெண் என்பதனால் லஞ்சம் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். இதே ஒரு ஆண் மேனேஜர் ஆக இருந்திருந்தால் அவரின் மேல் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டார் என வழக்கு தொடர்ந்திருப்பார்கள். பெண்ணாக இருப்பதனால் உள்ள அன்வான்ட்டேஜ் ஐ உண்மையில் அன்று தான் உணர்ந்தேன். திரும்பவும் போலீஸ் வரவழைத்து என்னுடைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு , இன்ஸ்பெக்சன் சென்ற போது எடுத்த போட்டோக்களை காட்டி என ஆறு மாதம் செலவாகி அந்த வழக்கை முடிக்க முடிந்தது.
3. ட்ராக்டர் லோன் வாங்குவதற்காக நிலத்தை அடமானம் வைத்திருக்கிறார். வைத்து ஆறு வருடங்களாகிவிட்டன. ஆனால் பணம் திரும்ப கட்டவில்லை. நிலப் பத்திரம் வங்கியிலேயே இருக்கிறது. வராக்கடன் வசூல் செய்ய போகும் போதெல்லாம் ஏழ்மையை காட்டி முடியவில்லை என்றே புலம்புவார். ஒரு நாள் அவராகவே வந்து வாராக் கடன் பணத்தை கட்டுகிறேன். எனது பத்திரத்தை கொடுங்கள் என்று கேட்டார். நாங்களும் லோன் குளோசிங் உண்டான அனைத்து ப்ராஸஸ்களையும் முடித்து பத்திரத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி அனுப்பினோம். அடுத்த நாளே ஒரு ரியல் எஸ்டேட்காரர் , அரசியல்வாதி ஒருவரின் துணையோடு வங்கியில் வந்து பிரச்சினை செய்தார். ட்ராக்டர் லோன் வாங்கிய தாத்தாவினுடைய நிலத்தை ரியல் எஸ்டேட்காரர் ஐந்து வருடங்களுக்கு முன் வாங்கியிருக்கிறார். பத்திரம் பேங்கில் இருக்கிறது என கூறிய போது அரசியல்வாதியும் , ரியல் எஸ்டேட் சாமியும் இணைந்து போலி பத்திரம் தயார் செய்து கிரயம் முடித்திருக்கிறார்கள். அதற்கான பணத்தையும் தாத்தாவிற்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது கூட ட்ராக்டர் லோனை திருப்பி கட்டவில்லை அவர். ஐந்து வருடங்களுக்கு பிறகு பக்கத்தில் உள்ள நிலங்கள் இன்னும் அதிக விலைக்கு போவதை பார்த்து தாத்தா மாஸ்டர் பிளான் செய்திருக்கிறார். வங்கிக்கு வந்து கடனை திருப்பி கட்டி ஒரிஜினல் நிலப் பத்திரத்தை வாங்கி கொண்டு போய் , போலீஸிடம் ரியல் எஸ்டேட் ஆசாமியின் மேல் கம்ப்ளையண்ட் செய்திருக்கிறார். தன்னுடைய நிலத்தை தான் விற்கவே இல்லையென்றும் , அவர்கள் போலியாக அனைத்தையும் செய்துவிட்டார்கள் என்றும் புகார். அய்யா இதை நீங்கள் நீதிமன்றம் சென்று தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வங்கியில் லோன் கட்டி முடித்தபிறகு அவருடைய பத்திரத்தை கொடுப்பது தான் எங்களுடைய வேலை என்று அவர்களுக்கு புரிய வைத்தாலும் பயன் இல்லை. எங்களை கேட்காமல் நீங்கள் எப்படி பத்திரத்தை கொடுக்கலாம் என்பது தான் பிரச்சினையாக இருந்தது. தாத்தாவின் வாரிசுகள் சென்னையில் இருக்க, அவர்களிடம் தொடர்பு கொண்டு வரவழைத்து விபரத்தை கூறினோம். அவர்களுக்கே தாத்தாவின் செயல் ஆச்சரியத்தை கொடுத்தது.தாத்தா நிலத்தை விற்றதே அவர்களுக்கு தெரியாது என்றார்கள் . ஒரு வழியாக வங்கியை விட்டு அந்த பிரச்சினை நீதிமன்றத்தை சார்ந்து இன்னமும் சென்று கொண்டிருக்கிறது.
3. வங்கியின் அருகிலேயே மளிகை கடை வைத்திருப்பவர். ஒரு நாள் தன்னுடைய அக்கவுண்ட்டில் பணம் குறைந்து விட்டது என்றும் , தான் பணமே எடுக்கவில்லை என்று கூறினார். ட்ரான்ஸாக்ஸன் நடந்த தேதியில் சிசிடிவி கேமராவில் தேடி அந்த நேரம் வரும் வரை தேடிப்பார்த்து போது அவரே தான் வந்து பணம் எடுத்திருக்கிறார். எனக்கு கோபம் தலைக்கேறியது .ஆனால் காட்ட முடியாது. சார் இது நீங்க தானே என்று கேட்டேன். அது தான் இல்லை என்றே சாதித்தார். பிறகு திரும்பவும் போலீஸை அழைத்து உதவி கேட்டோம். அவர்கள் வந்து விசாரித்த போது பணம் எடுத்தது அவர் தான் என ஒத்துக் கொண்டார். அந்த மனிதரை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. வெறும் ஆயிரம் ரூபாய்க்காக காலை முதல் வங்கியின் அலுவலக நேரத்தையும் , காவல் துறையின் நேரத்தையும் என எவ்வளவு பேரின் உழைப்பை வீணாக்குகிறார்கள் இவர்கள்.
4. தன்னுடைய இரண்டு பெண்குழந்தைகள் 7 மற்றும் 10 வயது குழந்தைகளை அழைத்துக் கொண்டு , வங்கிக்கு அழுகையோடு ஓடி வந்தார் ஒருவர். மனைவி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் அவருடைய அக்கவுண்ட்டில் இருக்கும் பிக்ஸ்டு டெபாசிட் அமொளண்ட் பத்தாயிரத்தை எடுத்து தரும்படியும் அழுதார். குழந்தைகளும் அழ ஆரம்பித்தன. எனக்கு ஏனோ அந்த ஆசாமியின் மேல் நம்பிக்கை வரவில்லை. ஏற்கனவே நிறைய ஏமாற்று பேர்வழி களை பார்த்த அனுபவத்தில் இருந்ததால் , மனைவியின் கையெழுத்து இல்லாமல் அவருடைய அக்கவுண்ட்டில் பணம் கொடுக்க முடியாது என்றேன். மேடம் , மேடம் அவளே ஆசுபத்திரில இருக்கா , அவ எப்படி வர முடியும் என்று அழுத கொண்டே பொது மக்களிடம் முறை வைத்தார். வங்கியில் இருந்து மக்களும் ஆசாமிக்கு ஆதரவாகவே குடுத்து விடுங்க , அவன் பொண்டாட்டி பணம் தானே ! உங்க பேங்கு பணமா ? என்ற போக்கில் நிறைய பேச ஆரம்பித்தனர். என்னுடைய அறைக்கு திரும்பி அக்கவுண்ட்டில் இருந்த செல்போன் நம்பருக்கு கால் செய்து பேசினேன். ஆசாமியின் மனைவி பேசினார். உடனடியாக அவரை வங்கிக்கு வரவழைத்தேன். மில் வேலைக்கு சென்ற மனைவி உள்ளே வருவதை பார்த்ததும் ஆசாமி ஓட்டம் பிடித்தார். குழந்தைகள் அம்மாவிடம் ஓடிச் சென்றன. அந்த அம்மாள் அழ ஆரம்பித்தாள். அவருடைய ஏடிஎம் கார்டு கணவனிடமே இருப்பதாகவும் அதில் சம்பள பணம் போடும் போதெல்லாம் உடனே எடுத்து செலவு செய்து விடுகிறார் என்றும் அழுதார். பக்கத்து வீட்டு பெண்ணிடம் மனைவி பிக்ஸ்ட்டு டெபாசிட் செய்ததை பற்றி பேசும் போது ஒட்டுக் கேட்டுக்கொண்டு இன்று இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார். இங்கே நான் முதலில் மனிதாபிமனத்தோடு நடந்து கொள்வதாக நினைத்திருந்தால் என்னவாகியிருக்கும் ? வங்கியில் இருக்கும் ரூல்ஸ்கள் அனைத்ததையும் முன் கூட்டியே ஊகித்து சட்ட நிபுணர்கள் குழுவால் கொண்டு வரப்பட்டது. அதை தான் நாங்கள் ஃபாலோ செய்ய வேண்டும். அதை செய்தாலும் பொது மக்களிடம் பொது நிறுவன வங்கியே இப்படித்தான் என்ற பேரே எஞ்சுகிறது.
6. தற்போது சென்னை சிட்டிக்குள் பிரான்ச்சு மேனேஜராக இருக்கிறேன். இங்கேயும் அதே போன்ற பிரச்சினைகள் தான். இன்ஜினியரிங் படிக்கும் இளைஞர் தன் அப்பாவோடு பேங்கிற்கு வந்து குரலை உயர்த்தி உயர்த்தி பேசினார். எப்படி எங்க அக்கவுண்ட்ல பணம் காணம போச்சு ? என்று. ஏற்கனவே அனுபவம் இருப்பதால் திரும்பவும் சிசிடிவி கேமரா பார்த்து தேதி நேரத்தை தேடி எடுத்து அவர்களுக்கு காண்பித்தேன். அதே இளைஞர் தான் பணத்தை ஏடிஎம்மில் எடுத்து சென்றிருக்கிறார். என்னுடன் பணியாற்றும் புதிதாக பி.ஓ வாக ட்ரெயினிங் கில் இருக்கும் இளைஞர் , கோபத்தில் என்னப்பா இது என்று கத்த , அந்த இளைஞர் சாரி ப்ரோ , என்று பி.ஓ வின் தோளில் தட்டிவிட்டு சிரித்துக் கொண்டே வங்கியை விட்டு அப்பாவை அழைத்துக் கொண்டு சென்றான். இதில் அந்த அப்பா வேறு , பையன் மறந்துட்டு வந்துட்டான் என்று கூறி செல்கிறார். பெற்றவர்களாக தவறா ? பிள்ளைகள் தவறா என்றே தெரியவில்லை. மேடம் போலீசுக்கு கூப்பிடுங்க இவங்கள மாதிரி ஆளங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது என்று பொங்கினார். அதுவெல்லாம் நேர விரயம் என்று அவருக்கு இதைப்போன்ற நிறைய சம்பவங்களை கூறி பணியை தொடர சொல்லிவிட்டு அறைக்கு வந்தேன்.
இதில் கூறியிருப்பவை எல்லாம் மிகவும் குறைவான சம்பவங்கள். ஒரு நாளைக்கு இதைப்போன்ற மூன்று நான்கு சம்பவங்கள் வங்கியில் நடந்துவிடும். இவற்றினால் நேர விரயம் மட்டுமில்லை மன உளைச்சலும் அதிகமாகிறது. ஒரு மாதம் முன்பு கூட 35 வயது வங்கி அதிகாரி ஒருவர் வேலைப் பளுவின் காரணமாகவும், மன உளைச்சலினாலும் ஹார்ட் அட்டாக் கில் இறந்து போனார். அதைப் பற்றி செய்தி கூட வெளியாகவில்லை. செய்தி வெளியானாலும் அதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதுமில்லை . வங்கியில் என்ன பெரிதாக வேலை இருக்கப் போகிறது என்ற கேலி , கிண்டல்கள் தான் அதிகம்.
அரசு வங்கிகளில் சென்றால் பேன் கார்டு கேட்கிறார்கள், ஆதார் கேட்கிறார்கள் வேலையே நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சோசியல் மீடியாக்களில் பரவிக் கொண்டே இருக்கிறது. ஓ.ஏ.பி பணம் வாங்கும் பாட்டி , ஏரி வேலை செய்யும் நூறு நாளை வேலைத்திட்ட பயனாளிகள் , விவசாயம் சார்ந்த லோன் , வீட்டு லோன் , கார் லோன் , முத்ரா லோன் , எஸ்.எம்.ஈ லோன் , ஸ்டார்ட்டப் லோன் , தொடங்கி பெரிய இண்டஸ்டீரிஸ் லோன் வரைக்கும் மிகப் பெரிய பரந்துபட்ட வாடிக்கையாளரை கொண்ட பொது நிறுவன வங்கியை எந்த வேலையும் செய்வதில்லை என்று கூறுவதன் பிண்ணனியில் இருப்பதென்ன ? இன்னமும் கூறப் போனால் இதை திட்டமிட்டே தனியார் வங்கிகள் செய்கின்றனவோ எனத் தோன்றுகிறது. தனியார் வங்கிகளில் அக்கவுண்ட் வைப்பதற்கே மினிமம் பேலன்ஸ் மெயின்டெயின் செய்ய வேண்டும் என இருப்பதனால் தான் பொது நிறுவன வங்கிகளுக்கு மக்கள் வருகிறார்கள். உண்மையில் கூறப் போனால் அனைத்து லோன் களுக்குள்ளும் மறைமுக சார்ஜ்களை போட்டு பொது மக்களிடம் கொள்ளையடிப்பவை தனியார் வங்கிகள் தான். அரசு வங்கியில் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் வாழ்க்கையையே வாழ்ந்து விடுபவர்கள் உண்டு. தனியார் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அப்படி கட்டாமல் இருக்க முடியாது. கட்டாவிட்டால் குண்டர்களை அனுப்பி பணம் வசூலிப்பார்கள். கடன் வசூலிக்கும் பிரிவு என தனியாக ஒரு பிரிவே தனியார் வங்கிகளில் உண்டு. அதற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த எம் பி ஏ பட்டதாரி தலைமை பொறுப்பெடுத்து வேலை வாங்குபவர். கூடவே சட்டத்தை கரைத்து குடித்து எதிலிருந்தெல்லாம் தப்பலாம் என்ற ஆராய்ச்சியிலேயே இருக்கும் திறமையான சட்ட நிபுணர் குழுவும் உண்டு. வெறும் வக்கீல் பட்டம் மட்டுமே கொண்ட அடியாள் வக்கீல்களும் உண்டு. வேலை செய்பவர்கள் பவுன்சர்கள். ஆனால் பொது நிறுவன வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியும் , நீதிமன்றம் சென்றும் என ரூல்ஸை ஃபாலோ செய்து கொண்டிருப்போம்.
கோவிட் காலங்களில் மருத்துவமனைகள் , காவல்துறையினர் மட்டுமில்லை பொது நிறுவன வங்கிகளும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டே தான் இருந்தனர். ஏன் போன மாதம் சென்னையில் மழையினால் ரெட் அலர்ட் கொடுத்து அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் , தனியார் , அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை கொடுத்தார்கள். நீதிமன்றங்கள் கூட அன்று விடுமுறை தான். ஆனால் பொது நிறுவன வங்கிகள் அன்றும் வேலையே செய்தனர்.
பொது நிறுவன வங்கிகள் எப்படி இயங்குகின்றன என்ற அடிப்படை அறிவே இல்லாமல் தொலைக்காட்சியில் இரண்டு தரப்பை வைத்து பேசும் கோட்டு போட்ட ஆசாமியை அறிவாளியாக பார்க்கும் சமூகம் எப்படி இருக்கும் ? மக்களிடம் ஓட்டு வாங்கி பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை பணிந்து போகிறார்கள் மக்கள். எந்த தகுதியும் இல்லாமல் சோசியல் மீடியாவில் லோன் வாங்குவதை பற்றி அரசு வங்கிகளை பற்றி பேசுபவர்களை அப்பிடியே மக்கள் நம்புகிறார்கள். ஆனால் தன்னுடைய நேரத்தை படிப்பதில் செலவிட்டு அதன் மூலம் வந்த அறிவினால் தேர்வில் வெற்றி பெற்று சொந்த முயற்சியில் மட்டுமே அரசு பணியில் இருப்பவர்களிடம் மக்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்றே புரியவில்லை. இவ்வளவு பிரச்சினைகளையும் தாண்டி வங்கியின் அன்றாட அலுவல்கள் , லோன் போடுவது , வாராக்கடனுக்கு நீதிமன்றம் செல்வது , டார்கெட் மீட்டிங் குரூப் கால்ஸ் , ஆடிட்டிங் கணக்கு சரிபார்த்தல் என மற்ற அனைத்து வேலைகளும் இருக்கும். பொது நிறுவன வங்கியில் வேலை என்ற தார்மீகப் பொறுப்பு மட்டுமே இவை அனைத்தையும் தாங்கிக் கொள்ள செய்கிறது.
அன்புடன்
எம்