இந்தியா என்னும் மோசடிக்களம்
ஒவ்வாமையெனும் உயர்நிலை
வணக்கம் திரு ஜெயமோகன்,
நலமா? நான் எழுதிய கடிதம் தளத்தில் வெளியானது கண்டு முதலில் துணுக்குற்றேன்.. ஆயினும் வெளியிட்டதற்கு நன்றி. கடிதத்தின் அதீத/அதிகப்பிரசங்கி மற்றும் எழுத்துப்பிழைகளோடு கூடிய மொழியால் (பொதுவாக, காற்று கொஞ்சம் பலமாக வீசினாலே மனம் புண்பட்டு விடும் கள்ளம்கபடமற்ற இளகிய மனம் கொண்டோர் தமிழர் என்பதனால்) மனம் புண்பட்ட தமிழர் அனைவரிடமும் அநேக கோடி மன்னிப்புகளை கோரிக்கொள்கின்றேன்.(மற்றபடி காலை காபி கொடுத்த அரைமணிநேர அறசீற்றத்தின் விளைவே அக்கடிதம்.)
என் கருத்துக்கள் நிச்சயம் “தந்த கோபுரத்தில் அமர்ந்து விரல் நீட்டும்” வேலையல்ல.. மாறாக “கண்ணாடி கூண்டிலிருந்து கல்லெறியும்” செயல்தான். நான் கூறிய அத்தனை ஒழுங்கீனங்களும்/அழுக்குகளும் என்னிலும் ஒரு பகுதி உண்டு.. அந்த சுயவெறுப்பின் சாராம்சம்தான் அக்கடிதம். மற்றபடி நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கூறியதைப்போல இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுதும் உள்ள மானுடர் அனைவரும் அடிப்படையில் தோழமையும், கனிவும், குழந்தைமை குணங்களும் கொண்டவர்கள்தாம். குழந்தை பருவத்தை தாண்டும் வயதில் நாம் அனைவரும் இடம், பொருள், தேவைக்கு ஏற்ப ஒரு முகமூடியை அணிந்துகொள்கின்றோம்.. அதனை அந்திமம் வரை கழற்ற இயலாது. முகமூடியை விலக்கி பார்த்தால் எல்லாருக்கும் அதே குழந்தை முகம்தான்.
நண்பர் கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பண மோசடியாளர்கள் எல்லாருமே இணைய உலகின் chotta wala scammers (கத்தியை காட்டி பணம் பறிக்கும் வகையறா). மற்றபடி முதல் தர மோசடியாளர்கள் செய்யும் மோசடிகளை பாதிக்கப்பட்டவரால்கூட ஒருநாளும் உணரவே முடியாது.. இன்னும் சொல்லப்போனால் அந்த மோசடியில் பணத்தை இழந்த பிறகு ஒரு மன நிறைவுகூட கிடைக்கும். இதில் விற்பன்னர்கள் என்றால் இந்தியாவை பொறுத்தவரை மருத்துவத்துறை , கல்வித்துறையை சொல்லலாம். மக்கள் நோன்பிருந்து இவர்களிடம் பெரும் பணத்தை கொட்டி கொடுப்பர். இந்த வகை மோசடியாளர்கள் வாழ்நாள் வரை சமூக மரியாதையுடன் வாழ்ந்து மரிப்பர்.
சமீபத்தில் நான் ரசித்த புதிய வகை மோசடி ஒன்றை உங்களிடம் பகிர நினைக்கின்றேன். ஏன் என்றால் தங்களை அதி புத்திசாலிகளாக கருதிக்கொண்டிருப்போரை குறிவைக்கும் மோசடி இது. facebook, instagram போன்ற தளங்களில் வரும் உடல்நல பரிசோதனை சலுகை விலை விளம்பரங்கள். இந்த விளம்பரங்களில் உடலில் உள்ள அனைத்து அவயங்களுக்குமான 40,50 குருதி பரிசோதனைகள் மிக குறைந்த கட்டணத்தில் செய்யப்படும் என்று வரும். (நடைமுறையில் அந்த கட்டணத்திற்கு அவர்கள் கூறியிப்பதில் ஒன்றிரெண்டு பரிசோதனையைக்கூட செய்ய முடியாது) அந்த லிங்கை க்ளிக்கி உங்கள் என்னை பதிவு செய்தால் சில நிமிடங்களில் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து அழைப்பு வரும்.. சிறந்த வாடிக்கையாளர் சேவையும் கிடைக்கும் உதாரணமாக நீங்கள் 1000 ( இது சலுகை விலை என்பதை கவனத்தில் கொள்க) உண்டான பேக்கஜ் வேண்டும் என்று அழைத்தாள் அவர்கள் உங்களிடம் மேலும் ஆசை காட்டி (1500 ருபாய்) package வாங்க வைப்பார்கள். அடுத்த நாளே ரத்தம் உறிஞ்சும் (டிராகுலா அல்ல) ஒருவர் வந்து உங்கள் ரத்தத்தையும், கட்டணத்தையும் உறிஞ்சி செல்வார். அந்த குருதி மாதிரி நகரின் ஏதோ ஒரு மூளையிலுள்ள “ஆய்வகத்தில்” கையளிக்கப்படும். அவர்கள் உறுதியளித்தது போலவே அடுத்த சில தினங்களில் உங்கள் குருதி ஆய்வக அறிக்கைகளும் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும். அதிபுத்திசாலி தலைமுறையான நாமும் அந்த ஆய்வக அறிக்கையை google உதவியுடன் இணையத்தில் cross reference செய்து எல்லாம் சரியான அளவீடுகளுடன் உள்ளது என நிம்மதி அடைவோம்.
இதில் எங்காவது பண மோசடி நடந்துள்ளது என்று உங்களால் ஊகிக்க முடியுமா? ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவர்கள் என்ன சொன்னார்களோ அதனை சரியாக செய்தார்கள் இல்லையா? ஆனால் இந்த மொத்த நடைமுறையுமே ஒரு கண்கட்டு வித்தை (உண்மையும் பொய்யும் கலந்தது). உறிஞ்சிய உங்கள் குருதி நேரடியாக அந்த போலி ஆய்வக கட்டிடத்தின் குப்பையில் வீசப்படும். ஒரு சராசரி அளவீடுகளினொடு உள்ள random அறிக்கை உங்கள் பெயரிட்டு உங்களுக்கு அனுப்பப்படும். ரத்தம் உறிஞ்சியவர் முதல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலை செய்பவர் வரை யாருக்குமே தான் ஒரு மோசடி வலைப்பின்னலில் இருக்கின்றோம் என்றே தெரியாது. (நிறுவனங்களின் பெயர்களும் ஒரு சராசரி இந்தியர் சந்தேகிக்க ஐயமற்ற பெரும் நிறுவனங்களுடன் தொடர்புள்ளது போன்ற பெயரிலும், தோற்றத்திலும்தான் வலைத்தளங்கள் வடிவமைக்க பட்டிருக்கும்) ஆயிரத்தில் ஒருவர்கூட இதில் சந்தேக பட மாட்டார்கள் அப்படியே ஒருவர் சந்தேகப்பட்டு ஆராய்ந்தாலும் இந்தியாவில் யாரும் இந்த விடயங்களுக்காக தண்டிக்கப்படவே முடியாது. ஏனென்றால் இது ஒரு foolproof method.
நன்றி
சிவா