வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தரமான, ஆன்மாவைத் தொடக்கூடிய தமிழ்ச் சிறுகதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த 20 வருடங்களாக வாசிப்பது நின்றுவிட்டது.
நேற்று திருச்சி புத்தகக் கண்காட்சியில் தங்களுடைய சிறுகதைகள் தொகுப்பு ஒன்றும், மேலே கண்ட சிறுகதையையும் வாங்கும் வாய்ப்பு கிடைத்து. இரவு 10 மணிக்குப் படிக்க ஆரம்பித்து 12 மணிவரை படித்தேன். அற்புதமான சொல்லாடல். தொய்வில்லாத நகர்வு. மிக யதார்த்தமான சித்தரிப்பு.
40 ஆண்டுகள் முன் தி.ஜானகிராமன் மோகமுள் என்ற அரிய படைப்பை 3 நாட்கள் மணிக்கணக்காக படித்து முடித்தது நினைவுக்கு வந்தது. உங்கள் படைப்புகளைத் தொடரும் ஆவல் மேலோங்கியுளைளது.
தங்கள் இலக்கியப் பணி இனிதே தொடருட்டும்.
அன்புள்ள,
பா. சீனிவாசன் .
*
அன்புள்ள ஜெ
என் அம்மாவுக்கு வயது 89. கண்கள் சரியாகத்தெரியாது. அம்மாவுக்கு அறம் கதையை வாசித்துக் காட்டினேன். மிச்சகதைகளையும் உடனே கேட்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆகவே மற்றகதைகளையும் தினம் ஒன்றாக வாசித்துக் காட்டினேன். அதன்பின் அவர்களே லென்ஸ் வைத்து பெரியதாக்கி உங்களுடைய தேவி என்ற சிறுகதைத் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தார்கள். அம்மாவுக்கு வாழ்க்கையிலிருந்த வெறுமை சலிப்பு எல்லாம் போய்விட்டது. எப்போதும் வாசிப்புதான். கொஞ்சநேரம் சங்கீதம் கேட்பார்கள். உங்கள் கதைகள் இலக்கியத்தரமானவை. ஆனால் நேரடியாக அவை மனிதமனங்களுடன் பேசுகின்றன. உணர்ச்சிகரமாக மனிதர்களை ஊடுருவுகின்றன. அவற்றை அறிய இலக்கியப்பயிற்சி எல்லாம் தேவையே இல்லை. பல எழுத்தாளர்கள் தவறுமிடம் அதுதான். வாழ்க்கை இல்லை. மூளையில் கதை உதிக்கிறது. அதில் வாசகன் அறிந்துகொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ ஒன்றுமில்லை. இலக்கியம் வாசிக்க வாழ்க்கையே போதும் என்று அறிந்துகொண்டது என் பாக்கியம்.
ராஜேஸ்வர் கிருஷ்ணா