ஹெலிகாப்டர்கள் கீழிறங்கும் கணம்

இந்திரா பார்த்தசாரதி

.பா.வின் கதைகள், நாவல்களில் உரையாடல்களே நிகழ்வுகளையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும்! கதை சொல்கின்ற போக்கில், உரையாடல்கள் மிகவும் யதார்த்தமாகவும், கூர்மையாகவும் இருப்பது இ.பா. வின் தனிச் சிறப்பு! உரையாடல்களே சூழ்நிலையின் உணர்வுகளைகோபம், காதல், நகைச்சுவை, பகடி, Black humour – அழகாக வெளிப்படுத்தும்!  அவரது நாடகங்களின் சிறப்புக்கும் அவரது வசனங்களே முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல

1971 ல் முதற்பதிப்பு கண்ட இ.பா. வின் நாவல்ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’. அதற்கு எழுதிய முன்னுரையில் தி.ஜா. “தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும், எழுத்து ஜெட் வேகத்தில் பாய்கிறது. இந்திரா பார்த்தசாரதிக்கே உரிய தனி வேகம் இது. அழுத்தமும், சிந்தனையாழமும் கலந்த வேகம் அபூர்வமான சேர்க்கை. சிந்தனையாழம் என்றால் படிப்பதற்கு இரும்புக் கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரளமாக வாசிப்பது, கட்டாயம் கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இந்திரா பார்த்தசாரதியைப் படிக்கும்போது இது புரியும்என்கிறார்.

இந்த நாவலில் அவரது வழக்கமான அரசியல் பகடிகள் கிடையாது. காதல் மூன்று நிலைகளில் சொல்லப்படுகின்றதுதிருமணத்திற்கு முன், திருமணமான பின், ஐம்பது வயதில்! நான்கு முக்கியமான பாத்திரங்களின் ஊடே, உளவியல் ரீதியாக ஏற்படுகின்ற முரண்பாடுகளைச் சொல்லிச் செல்கிறது நாவல்.

டெல்லியில் பெரிய ஆபீசர் அமிர்தம். அழகு, ரசனை என எந்த வகையிலும் ஒத்துப்போகாத மனைவி திலகம். திருமணத்திற்கு முன் காதலித்த நித்தியாவைப் போலவே இருக்கும் பானுவைச் சந்திக்கிறார் அமிர்தம். அவர்களிடையே ஒரு பரஸ்பர ஈர்ப்பு ஏன் ஏற்படுகிறது?  நித்தியாவைப் போலவே இருப்பதால், அமிர்தத்திற்கு இழந்த காலத்தை மீண்டும் நிகழ் காலத்தில் வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறதோ மனது? பானுவின் அம்மாவுக்கெதிராக அவள் ஏற்படுத்திக்கொள்ளும் உறவா இது? சந்தேகமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்ட திலகத்தின் கோபமும் ஆற்றாமையும்(திருமணமாகி 12 வருடங்கள் கழிந்தும் குழந்தை பாக்கியம் கிடையாது) அமிர்தத்தைப் பாடாய்ப் படுத்துகின்றன. திலகத்தை விவாகரத்து செய்துவிட்டு, பானுவைத் திருமணம் செய்துகொள்ள அமிர்தத்திற்கு தைரியம் இருக்கிறதா? மற்றவர்கள் சொல்வதைப்போல அமிர்தம் ஒரு கோழையா?  இந்தக் கேள்விகளைச் சுற்றி பின்னப்பட்டுள்ள சுவாரஸ்யமான நாவல். .பா.வின் கூர்மையான உரையாடல்களாலும், பாத்திரங்களின் நேர்த்தியாலும் இன்று வரை முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இந்த நாவல் உள்ளது.

அமிர்தம் திருமணம் செய்துகொள்ளத் தயாரென்றபோதிலும், நித்தியா தன் சொந்த சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, அவரை விட்டு விலகுகிறாள். மாமன் மகன், ஜாதி எனப் பல இடைஞ்சல்கள். இவற்றுக்குப் பிறகுதான் காதல் என்னும் மனநிலை. ஆனாலும், அவள் அமிர்தத்தைக் கோழை என்கிறாள்!

அமிர்தம், தந்தையின் வற்புறுத்தலில், உறவினளான திலகத்தை மணமுடிக்கிறார். திலகத்திற்குத் தன் குறைபாடுகளுடன் அமிர்தத்தைத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்வதில் வாழ்க்கை சவால் நிறைந்ததாக உள்ளது. நித்தியா, பானு இவர்களின் குறுக்கீடு, அமிர்தத்தின் மீது கோபமாக மாறிவிடுகிறது.

அமிர்தம்பானு தொடர்பு, திலகத்தை எப்படிப் பாதிக்கிறது? ஏற்கனவே நிரடலாக இருக்கின்ற திருமண வாழ்க்கை மேலும் பாதிக்கப்படுகிறது

பானுவுடன் இருக்கும் நேரம் முழுவதும், நித்தியாவின் நினைவுகள் அமிர்ததை அலைகழிக்கின்றன. பானுவின் ஒவ்வொரு செயலும் அமிர்தத்திற்கு நித்தியாவை நினைவுபடுத்துகின்றன. தன் தாயாரை கோபப்படுத்த பானு தன்னுடன் பழகுகிறாளோ என்ற ஐயம் அமிர்தத்திற்கு வருகிறது! ‘வயது, வேலை, சமூகத்திற்கு பயப்படும் ஒரு கோழைஎன்று அவரைக் குற்றம் சாட்டி, பானுவும் அவரிடமிருந்து விலகுகிறாள்

பானுவை விட்டு வீட்டிற்கு வரும் அமிர்தத்திற்கு அதிர்ச்சிதிலகம் அவரை விட்டுப் போயிருந்தாள். ‘வெளியை விட வீட்டுசிறையே நல்லது, அமைதி தருவது என நினைக்கும் தருணம், திலகம் விட்டுப் போய்விடுகிறாள்!

இதயத்தின் ஆழத்தில் புதைந்துள்ள எந்த ஒரு உணர்ச்சியும், எந்த நேரத்திலேயும் வெளி வந்து தன் கோர முகத்தைக் காட்டும் என்பது அமிர்தத்தைப் பொறுத்த வரையில் உண்மைதான். இளமையில் இழந்த காதலை, முதுமையில் புதுப்பிக்க முடியுமா? உயரப் பறக்க நினைக்கும் அமிர்தத்தின் காதல் ஹெலிகாப்டர், மேலும் பறக்க முடியாமல், தரை இறங்கி விடுகின்றது!

மூன்று பெண் பாத்திரங்களும் அமிர்தத்தைக் கையாளும் விதம் ஒரு அலட்சிய மனோபாவத்துடன் உள்ளது. பெண்களுக்கு ஆண்களையும், ஆண்களுக்குப் பெண்களையும் வெறுக்கும் இயல்பு இயற்கையிலேயே உள்ளதோ என இ.பா. எழுப்பும் கேள்வி அர்த்தமுள்ளது. அமிர்தம் செய்த தவறு, திருமணத்திற்கு முன்பான காதலை மறக்காதது; திருமணமானவுடன் திலகத்திடம் சொல்லாதது; முதிய வயதில், இழந்த காதலை பானுவிடம் புதுப்பிக்கலாமோ எனக் கானல் நீரை நோக்கி ஓடியது!

இந்திரா பார்த்த சாரதியின் எழுத்துக்களின் கூர்மைக்கு சில வரிகள்

என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்…… கடந்து போன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கின்றான்

ஒரு ரசனையற்ற மனைவிக்குக் கணவனாக இருப்பது என்பது பெரிய தியாகம்

நம் சமூகத்தில் கணவனைக் காட்டிலும் கணவன் எனப்படும் ஸ்தானத்துக்குத்தான் மதிப்பு அதிகம்…..இன்னும் சொல்லப்போனால், ஒரு பெண் சுமங்கலியாக இருப்பதற்கு அவள் கணவன் காரணம் என்பதினால்தான் அவனுக்கு மதிப்பு

நாம இப்ப இருக்கிறது ஓர் இரண்டுங்கெட்டான் சமூகம். ஐம்பது வருஷங்களுக்கு முன்னாலே எங்க தாத்தாவுக்கு மூணு பெண்டாட்டிகள். யாரும் புருவத்தை உயர்த்தலே, நாம இப்ப இருக்கிறது பெண்களை மதிக்கிற சமூகம்ன்னு பேரு. ஒருவனுக்கு ஒருத்திங்கிற நியாயம். பெண்களும்விவாகரத்துசெய்யலாம்னு சட்டம் சொல்றது. ஆனால் எவ்வளவு பேர் செய்வாங்க? புது தர்மத்திலேயும் புகுந்துக்க முடியாம, பழசும் அநாகரீகம்னு சொல்லிக்கிட்டு அவஸ்தைப்படறோம்

“ ‘ஹாம்லெட்சொன்னதுபோல், மனசாட்சி தன்னைக் கோழையாக்கிவிட்டதா?”

பானர்ஜிசைக்காலஜிஸ்ட், அமிர்தத்தின் நண்பன் சொல்வது. “உன் பலஹீனத்தை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தீர்மானம் செய்ய முடியாத கையாலாகாத்தனத்துக்கு குணச்சித்திரம், விதி என்று ஏதேதோ சொல்லி மனச் சமாதானம் அடைகிறாய்….”

வித்தியாசமான நாவல் – 1971 ல் முதல் பதிப்பு என்பது நினைவுகூரத்தக்கது!

ஜெ.பாஸ்கரன்.

முந்தைய கட்டுரைStructuring the Dreams 
அடுத்த கட்டுரைவிஜயபாஸ்கரின் இசை, கடிதம்