விதி-கடிதம்

ஜெ,

விதி சமைப்பவர்கள் கட்டுரை மற்றும் அதன் எதிர்வினைகள் மூலம் நான் அடைந்த கருத்துக்களை என்னால் வார்த்தைப் படுத்த முடிந்த அளவிற்கு எழுதி இருக்கிறேன். இதைச்சார்ந்து உங்கள் கருத்துகள், என் மன விரிவிற்கு உதவலாம்.

நாம் அனைவரும் இயலாமை என்னும் பெரும் கட்டுக்குள் கட்டுண்டு இருக்கிறோம் – இங்கு இயலாமை என்பது தனிமனித அளவில் கூறப்படவில்லை, உலகம் முழுவதையும் ஒரே இருப்பாகக் காணும்போது அதில் மனிதன் என்னும் சிறு துகளின் இயலாமை!

உலகின் இயக்கம் ஒரு மாபெரும் கூட்டு நியதிக்குள் கட்டுப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டு விதி அல்லது நியதிகளின் தொகுப்பு மகாதர்மம் என சில புத்த கலாச்சாரங்களில் கூறப்படுகிறது. இந்த விதிகளின் தொகுப்பிலிருந்து உலகத்தின் எந்த இயக்கமும் விலக முடியாது. இதே இயக்க விதிகள், உலகில் உள்ள ஒவ்வொருபொருளிலும், ஒவ்வொரு உயிரினத்திலும் அந்தப் பொருளுக்கு அல்லது உயிரினத்துக்கான தனித்தன்மையுடன் இயங்கிக் கொண்டிருக்கும். எந்தப் பொருளும் அல்லது உயிரினமும் அதற்கான இயக்க விதிகளிலிருந்து எவ்வகையிலும் தப்பிச் செல்ல முடியாது. ஆம், நாம் அனைவரும் நமக்கேயான இயக்க நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கேயான அந்த நியதிகளிலிருந்து விடுதலை என்பது நம்மில் எவராலும் இயலாததாகவே இருக்கக் கூடும். அந்த நியதிக்குட்பட்டு இயங்குவதே நமது பிறப்பின் குறிக்கோளாகவும் இருக்கக் கூடும்.

ஜடப் பொருட்களுக்கு, உலகத்தின் ஒருமையிலிருந்து தனிமைப் படுத்திப் பார்த்தாலும், அவற்றின் இயக்க நியதிகள் மட்டுமே இயல்பாக இருக்க முடியும். உயிரினங்கள் ஜடப்பொருள்களிலிருந்து வேறுபடுவது,அவற்றின் தம்மைத்தாமே உருவாக்கும் அல்லது படைக்கும் இயல்பாகும்.அதாவது, உயிரினங்கள் அவற்றின் சூழலில் இருந்து சக்தியைப் பெற்று, அவற்றின் அடிப்படை இயல்புக்கு ஏற்ப அந்த சக்தியை தமது இச்சைகளை செயல்படுத்த உபயோகப்படுத்துகின்றன. அதன் இச்சைகளில் மிக அடிப்படையானது இனப்பெருக்கமாகும். இங்கு கவனிக்கப்படவேண்டியது, தனிப்பட்ட முறையில் உயிரினங்களின் இச்சைகள் அவற்றுக்கே உரியதாகவும் அவற்றால் செயல்படுத்தப்படுவதாக இருந்தாலும், அந்த உயிரினத்தின் இச்சைகள், அவை அவற்றினுள் கொண்டுள்ள வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும்அவற்றின் மூளையின் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பு. இந்த வேதிக்கூட்டமைப்போ, உலகின் மகாநியதிக்கு உட்பட்டது.

மனிதனும் இந்த நியதிக்கு விலக்கல்ல. நமது உளவியல் இயல்புகளும் செயல்பாடுகளும் கூட நம் மூளையில் வேதிப்பொருட்களின் கூட்டமைப்பைப் பொறுத்தே அமையும். நம் மூளையின் கட்டமைப்பு, நாம் கருவாக உருவாகும்போதே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது – நாம் பெறும் மரபணுக்கள் மூலம்! அதாவது இந்த உலகத்தில் நாம் அடையப்போகும் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான அடிப்படை இயக்க நியதிகள் நாம் கருவாக உருவெடுக்கும்போதே முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மூளையின் வேதிக்கூட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த நியதிகள், நமது சுற்றுச்சூழலின் இயக்கத்துடன் சேர்ந்து இயங்கும்போது, நாம் உணரும் மகிழ்ச்சிகளாகவும் துன்பங்களாகவும் வெளிப்படுகின்றன. இங்கு நமது மகிழ்ச்சிகளுக்காகவும், துயரங்களுக்காகவும் நாம் செய்யக்கூடியது என எதுவும் இல்லை. நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பும், நமது சுற்றுச்சூழலும் அவற்றை முடிவு செய்கின்றன – நாம் வாழத் தேர்ந்தெடுக்கும் சுற்றுச்சூழலையும் கூட நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பே முடிவு செய்கிறது.ஆக நம் மூளையின் வேதிக்கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள நியதிக்கேற்ப செயல்படுவதைத் தவிர வேறு சாத்தியங்களே நமக்கு இல்லை – மனிதனின் இயலாமையின் உச்சம்!

ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு உயிருக்கும், விடுதலை என்பதும் அதனதன் அடிப்படை இயக்க நியதியிலேயே உள்ளது எனத் தோன்றுகிறது. உதாரணமாக சூரியன் அதன் ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்வரைதான், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும். இன்னும் சில நூறு கோடி வருடங்களில் சூரியன் அதன் ஈர்ப்பு விசையை இழக்கும்போது, பூமியும் மற்ற கோள்களும் சூரியனிலிருந்து விடுபட்டு, அவற்றுக்கேயான வழிகளில் பயணிக்கத் தொடங்கலாம். இந்த விடுதலையின் நியதி, ஒவ்வொரு அணுவின் சிறு துகளுக்கும், அணுவுக்கும், பொருள்களுக்கும், உயிரினங்களுக்கும் கூட இருக்கக் கூடும். நமது சுற்றுப்புற இயக்கங்களை நம்மால் சற்று உற்று நோக்க இயலுமானால், ஒருவேளை நம்மால் இந்த அடிப்படை விடுதலைக்கான போராட்டத்தை உணர்ந்து கொள்ள இயலும்.

எந்த ஒரு பொருளும் அல்லது உயிரினமும், அதன் அடிப்படை இயக்கத்தையே அல்லது அடிப்படை இயல்பையே உணர்வாக (அவற்றுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால்) கொண்டிருக்குமானால், அவை மகிழ்ச்சி அல்லது துயரம் என்னும் பொறிகளில் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை. எந்த உயிரினமும் அதன் அடிப்படை இயல்புகளையே அல்லது நியதிகளையே உணர்வாகப் பெற்றிருக்கும்போது, அவற்றின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளற்ற உணர்வு நிலையே ஆனந்த நிலையாக இருக்கக் கூடும் – அந்த உணர்வுகளின் எல்லைகளைப் பொறுத்து! மற்ற உயிரினங்களுக்கு உணர்வு என்ற ஒன்று இருக்குமானால், அவை அவற்றின் இயல்பையே உணர்ந்து கொண்டிருக்கக் கூடும் – அவற்றின் உணர்வுக்கான எல்லைவரை. அவ்வாறெனில், அவற்றின் வாழ்வில், முரண்பாடுகள் இருக்க இயலாது.

மனிதனுக்கு விடுதலையின் தேவை மிக மிக அதிகமாகவே, மனிதனுக்கான நியதிகள் மூலம், நிலைநிறுத்தப் பட்டிருக்கலாம்எனத் தோன்றுகிறது. இந்த விடுதலைக்கான தேவையே, மனிதனின் அடிப்படை இருப்பின் கட்டுப்பாடுகளுடன் முரண்பட்டு, நமது மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் உருவாக்குகிறது. ஆனால், நம்மால் இருப்பின் நியதிகளிலிருந்து ஒருபோதும் விலக இயலாது. எனில் விடுதலையின் குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை, நமது இருப்பின் இயல்பை உணர்ந்து, அதன் நியதிகளை உணர்ந்து, அந்த இயல்பிற்கேற்ப, நியதிக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்து, செயல்களின் முரண்பாடுகளிலிருந்து விடுதலை பெறுவதுதான் அதன் குறிக்கோளாக இருக்கலாம். அல்லது இந்த முரண்பாடுகளைக் கிரியா ஊக்கிகளாகக் கொண்டு, நமது இருப்பை, அதன் மூலம் உலகத்தின் இருப்பை உணர்வதுதான் விடுதலைக்கான தேவையின் குறிக்கோளாக இருக்கலாம்.

மனித மனம் எல்லையற்ற சாத்தியங்களை உடையது – மனம், அதன் செயல்பாட்டின் எல்லைக்குள், அதற்குத் தேவையான மூளையின் கூட்டமைப்பை உருவாக்க கூடியதாகக்கூட இருக்கலாம். அவ்வாறு கூடுமெனில், அதற்கான கிரியா ஊக்கிகள், நமது சுற்றுச்சூழலிலுருந்து மட்டுமே பெற முடியும். ஆனால் அந்த கிரியா ஊக்கிகள் மூளையின் வேதிக்கட்டுமானத்துடன் வினை புரிய வேண்டுமெனிலும், மூளையின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இதிலும் நம்மால் செய்ய இயலுவதென எதுவும் இல்லை. நாம், நம் உடல் மற்றும் மூளையின் வேதிக்கூட்டமைப்பிற்கேற்ப, அந்த வேதிக்கூட்டமைப்பினால் நிலைநிறுத்தப்பட்ட நியதிகளுக்கேற்ப செயல் புரிந்து கொண்டிருக்கிறோம். அது மட்டுமே நம்மால் இயன்றது!

இந்த மகத்தான இயலாமையை நம்மால் உணர முடிந்தால், அந்த உணர்வே கிரியா ஊக்கியாக செயல்பட்டு, மூளையின் செயல்பாட்டின் ஒழுங்கு முறையையே மாற்றி அமைக்கக் கூடும். ஒருவேளை நம்மால் மனிதனின் இயலாமையை உணர நேர்ந்தால், மனித இனத்தின் மீது பெருங்கருணையைத் தவிர வேறு எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அப்பெருங்கருணையினால், எதிரிகளையும், துன்பம் இழைப்பவர்களையும் கூட நம்மால் வெறுக்க இயலாமல் போகலாம். ஏனெனில் அவர்கள் துன்பம் இழைப்பது கூட அவர்களின் இயலாமையினால் மட்டுமே! அவர்கள் மூளையின் வேதிக்கட்டமைப்பே அதற்கு காரணம்! அவர்களோ அல்லது வேறு எவருமோ, அந்த இயல்புகளை எவ்வகையிலும் மாற்ற முடியாது.
அகிலன்

விதிசமைப்பவர்கள் கடிதங்கள்

சராசரி

கடிதங்கள் விதி

விதிசமைப்பவர்கள்

தேர்வுசெய்யப்பட்டவர்கள்

முந்தைய கட்டுரைஆழிசூழ் உலகு- நவீன்
அடுத்த கட்டுரைகனிமொழி