வியாச தரிசனம்-3

09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ்

வியானின் அழகியலும் மெய்ஞானமும்

உலகில் பெருங்காவியங்கள் என்கிற அந்தஸ்து உடையவை மிகமிக குறைவானவை. இன்று உலகில் உள்ள பெருங்காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு ஏதோவொரு வகையில் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக ஆகிவிட்டன. மகாபாரதத்தை ஏதோவொரு வகையில் ஒப்பிட வேண்டுமென்றால் அது இலியட் ஒடிசியுடன் மட்டும்தான். வேறு எந்த காவியத்தையும் மகாபாரதத்துடன் ஒப்பிட முடியாது.

இந்த தொன்மைக்காவியங்களின் தன்மை என்னவென்றால், இந்த மொத்த பண்பாடும் ஒருவேளை அழிந்துவிட்டாலும் அந்த ஒரு காவியம் மட்டும் எஞ்சிநிற்கும் என்றால் அதைக்கொண்டு மொத்த பண்பாட்டையும் திரும்ப உருவாக்கிக்கொள்ளமுடியும் என்பதே. ஒரேயொரு விதையில் இருந்து ஒரு காட்டையே உருவாக்கிவிட முடியுமென்றால் அவ்விதையே பெருங்காவியம். மகாபாரதம் அப்படிப்பட்டது. அதனால்தான் அதற்கு பாரதம் என்று பெயர். காவிய பாரதத்துக்கு நிகர் பூமி பாரதம்தான். இந்திய பண்பாடிற்கு நிகர் பாரதம். இந்திய பண்பாட்டில் இருந்து மகாபாரதத்தில் இல்லாததும், மகாபாரதத்தில் இருந்து இந்திய பண்பாட்டில் இல்லாமல் போனதும் எதுவும் கிடையாது.

இலியட் ஒடிசிக்கும் பாரதத்துக்குமான முக்கியமான ஒப்புமை என்பது வீர வழிபாடுதான். இலியட்டும் ஒடிசியும் யுலிஸஸ் (Ulysses in Odyssey) அக்கிலிஸ் (Achilles in Iliad) போன்ற மாபெரும் வீரர்களுடைய கதையை சொல்கின்றன. பாரதமும் அடிப்படையில் ஒரு வீரகதைதான். நான் வெண்முரசை எழுதும்போது விசித்ரவீரியன் கதாபாத்திரத்தை விரிவாக எழுதியிருக்கிறேன். வியாசர் அவனுக்கு மிகக்குறைவான இடத்தைத்தான் கொடுத்திருக்கிறார். ஏனெனில் அவன் வீரனல்ல. வீரர்கள், சான்றோர்கள் தவிர்த்து ஏனையோரை அவர் வெறுமனே சொல்லிச்செல்கிறார். அவருடைய பார்வையில் மாவீரர்களே முக்கியமானவர்கள். கர்ணன், பீமன், அர்ஜுனன் இம்மூவருக்கும் அவர் கொடுத்த இடத்தை வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் கொடுத்தது கிடையாது. அதுபோன்று பெண்களில் பாஞ்சாலி. கிருஷ்ணன் மற்றொரு முக்கிய கதாபாத்திரம். ஆனால் அவனை வீரன் என்றுமட்டும் சொல்லமுடியாது. அவன் அதற்கும் அப்பாலுள்ள கதாபாத்திரம்.

மேற்சொன்ன மூன்று வீரர்களையும் ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அடைமொழியுடன் வர்ணித்தே சொல்கிறார்.அதிலும் குறிப்பாக கர்ணன் அவருடைய மானசபுத்திரன். கர்ணனுடைய உயரம் பற்றிய வர்ணனை இல்லாமல் அவனைப்பற்றி பேசுவதே கிடையாது. அதன்பிறகு அர்ஜுனன். அர்ஜுனனுடைய பிறப்பு வியாசரால் பெரும் கொண்டாட்டமாக வர்ணிக்கப்படுகிறது. மற்றவர்கள் வெறுமனே பிறக்கிறார்கள், ஆனால் அர்ஜுனனின் பிறப்பு நிகழ்கிறது. அடுத்ததாக பீமனை அவர் ஒரு குறும்புக்கார செல்லப்பிள்ளையாக நினைப்பது தெரியும். பீமன் பலசமயங்களில் அவரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறான். இம்மூவரையும் குறித்த அவரது கனிந்த தந்தையின் பார்வை இருந்துகொண்டே இருக்கிறது.

இதை படிக்கும்போதுதான் ஏன் மொத்த மகாபாரதத்தையும் வியாசருடைய பிள்ளைகளாக உருவகித்தார்கள் என்பது தெரியும். சிலந்தியின் உள்ளேயிருந்து வலை வருவதுபோல அவருள் இருந்தே இந்த காவியம் வருகிறது. ஆகையால் இந்த எல்லா கதாபாத்திரங்களுக்கும் தந்தை அவர்தான். அதேசமயம் உயிரியல் ரீதியாகவும் அவரே தந்தை என்கின்றது தொன்மம். எனவே இந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் கதையை சொல்லும் ஒரு தாத்தாவின் புன்னகையை நம்மால் காணமுடிகிறது.

வியாசருடைய மனதை புரிந்துகொள்வதற்கான அடுத்த விஷயம் என்பது, அவர் அழகு என்று சொல்லக்கூடிய அத்தனைபேருமே கருப்பர்கள். அவரே கருப்பர்தான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு. கிருஷ்ண என்றால் கரிய நிறம். கர்ணன், பாஞ்சாலி போன்றோரும் கரிய நிறமுடையவர்களே. அவர்களைத்தான் வியாசர் திரும்பத் திரும்ப அழகர்களாக வர்ணிக்கிறார். தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை உண்டு. நாம்தான் கருப்பாக இருக்கிறோம் என்றும், மகாபாரதம் வடக்கே உள்ளது, அங்கே அத்தனைபேரும் சிவப்பாக இருப்பார்கள் என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதனால் நம் தொலைக்காட்சி தொடரில் அத்தனை கதாபாத்திரங்களும் செக்கசெவேலென்று உள்ளனர்.

ஆனால் வியாச மகாபாரதத்தில் கருமுத்து போல இருக்கிறாள் பாஞ்சாலி. இரவின் நதியின் ஒளியுடன் இருக்கிறாள். அதுதான் வியாசருடைய அழகு. பாஞ்சாலியின் மார்பில் தொய்யில் (செந்நிற ஓவியம்) எழுதப்படுகிறது. அதை வர்ணிக்கும்போது ‘நீல நதியில் இரண்டு செந்நிற சாரங்க பக்ஷிகள் போல அவள் இருந்தாள்’ என்கிறார். இவ்வாறு வர்ணித்து வர்ணித்து ஒரு கரிய பேரழகியை உலக இலக்கியம் கண்ட மாபெரும் அழகியாக மாற்றுகிறார்.  ஹோமருடைய பாரிஸ் (Paris) தேடிச்சென்ற ஹெலனைவிட (Helen), உலக இலக்கியத்தின் எந்தப் பேரழகியை விடவும் இந்த கருமுத்தை கொண்டுவந்து நிறுத்துகிறார் வியாசர். அதுவே அவரை நாம் தொடக்கூடிய தருணம்.

அதற்கும் அப்பால் விவேகத்தின், மெய்ஞானத்தின் சில தருணங்களை அவர் தொட்டுச்சென்றுகொண்டே இருக்கிறார். அதனால்தான் அதை மதநூலாகவோ சட்ட நூலாகவோ ஆன்மீக வழிகாட்டி நூலாகவோ அல்லாமல் நமது சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளைவிடவும் நம்மை அதிகமாக கண்ணீரும் நெகிழ்ச்சியும் அடையச்செய்யும் விஷயங்களை சொல்லும் நூலாக இத்தனை நூற்றாண்டுகளாக படித்துவந்திருக்கிறோம்.

எனது ஆசிரியரும் நண்பருமான லோகிதாஸ் ஒரு நிகழ்வை சொன்னார். அவருடைய எந்த திரைக்கதை வந்தாலும் அந்த கதை தன்னுடையது என்று சொல்லி யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துக்கொண்டிருப்பார்கள். அவ்வாறான ஒரு வழக்குக்காக லோகி பாலக்காடு நீதிமன்றம் சென்றார். அவரிடம் நீதிபதி, ‘இக்கதையை அவரிடமிருந்து எடுத்தீர்களா ? இது உங்களுடைய கதையா ?’ என்று கேடார். அதற்கு லோகிதாஸ், ‘இல்லை, அது வியாசருடைய கதை’ என்றார். தனது இந்த கதை வியாச மகாபாரதத்தில் எந்த இடத்திற்கு சமானமாக வருகிறது என்பதையும், தனது எல்லா கதைகளுமே வியாசனிடமிருந்து எடுக்கப்பட்டவைதான் என்பதையும் விளக்குகிறார். அதற்கு நீதிபதி, ‘அப்படியெனில் மற்றவர்களுடைய கதைகள்?’ என்று கேட்டார். மலையாளத்தில் எழுதப்படக்கூடிய எல்லா கதைகளும் வியாசனிடமிருந்துதான் எடுக்கப்படுகின்றன என்றார் லோகி.

நமது சினிமாக்களிலியே இதை காணலாம். நாம் எந்த கதையை எடுத்துக்கொண்டாலும் அதற்கு வியாச மகாபாரதத்தில் சமானமான ஒரு கதை இருக்கும். தூள் என்ற படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் புஜபல பராக்கிரமியான விக்ரம் ஒரு ஊருக்கு செல்கிறார். அங்கு ஒரு ராட்சசன் இருக்கிறான். அவனை சண்டையிட்டு ஜெயித்துவிட்டு தன் ஊருக்கு திரும்பிவிடுகிறார். அதுதானே பகாசுரனுடைய கதை ! பகாசுரனுடைய அந்த கதையைத்தான் மீண்டும் மீண்டும் நூறு எம்.ஜி.ஆர் படங்களாக எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு கதைகளையும் கண்ணீரையும் தேக்கி வைத்திருக்கும் படைப்பாக பாரதம் உள்ளது. அதன் விவேகத்தினுடைய அளவு அத்தகையது.

அதில் சில தருணங்கள் முக்கியமானவை. ஒன்று, அதில் வரக்கூடிய யக்ஷ பிரச்னம். பாண்டவர்கள் காட்டுக்கு செல்கிறார்கள். மிகுந்த தாகத்தால் தளர்ந்துபோய் ஒரு மரத்தடியில் படுத்துவிடுகிறார்கள். நெடுநாட்களாக அவர்கள் தண்ணீர் குடிக்கவில்லை. எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்த்துவரச்சொல்லி பீமனை அனுப்புகிறார்கள். பீமன் தேடிச்சென்றபோது ஓரிடத்தில் அழகான நீலநிறமான குளம் ஒன்றை காண்கிறான். அதில் தண்ணீர் எடுக்க முயன்றபோது ஓர் அசரீரி, ‘நில், இந்த தண்ணீர் எனக்கு சொந்தமானது. என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு நீ இந்த தண்ணீரை குடிக்கலாம்’ என்கிறது. பதில் சொல்வதற்கெல்லாம் நேரம் கிடையாது என்று சொல்லிவிட்டு பீமன் தண்ணீரை குடிக்கிறான், இறந்துவிடுகிறான். வெகுநேரமாகியும் பீமன் வராததை கண்ட அர்ஜுனன் அவனை தேடிச்செல்கிறான். அந்த குளத்தினருகே பீமன் இறந்துகிடப்பதை காண்கிறான். அதை கண்டபின்பும் தாங்கமுடியாத தாகத்தால் தண்ணீரை குடிக்க முயல்கிறான். அப்போது அந்த அசரீரி குரல் மீண்டும் கேட்கிறது. அவன் அதை பொருட்படுத்தாமல் தண்ணீரை குடித்து உயிரைவிடுகிறான். அதன்பிறகு நகுலனுக்கும் சகாதேவனுக்கும் அதுவே நேர்கிறது. பின்பு தர்மன் அங்கு வருகிறான். அங்கு நான்கு சகோதரர்களும் இறந்துகிடப்பதை கண்டும் தண்ணீர் குடிக்க முயல்கிறான். அப்போது அவனிடமும் அசரீரி கேட்கிறது. அவன் அதனிடம் ‘சரி கேள், பதில் சொல்கிறேன்’ என்கிறான்.

அப்போது அந்த யக்ஷனான அசரீரி அவனிடம் நூறு கேள்விகளை கேட்கிறான். அவையாவும் அற்புதமான கேள்விகள். அதில் ஒரு கேள்வியைப்பற்றி நான் அதிகமாக பேசியிருக்கிறேன். துயரங்களில் மிகப்பெரிய துயரம் எது என்ற கேள்விக்கு மகனை இழந்த தந்தையின் துயரம் என்று தர்மன் பதிலளிக்கிறான். தாய்-மகன் உறவு என்பது உயிரியல் ரீதியானது. தந்தை-மகன் உறவு என்பது ஆன்மீகமானது. தந்தை இருக்க மகன் இறப்பது என்பது தந்தை தன்னளவில் இறந்துபோவதுதான். அதனால் அதுதான் மனிதன் அடையக்கூடிய துயரங்களில் உச்சகட்டமானது என்கிறான் தர்மன். வேடிக்கையான சில பதில்களும் உள்ளன. பெரிய சுமை எது என்ற கேள்விக்கு கர்ப்பம் என்று பதிலளிக்கிறான். பெரிய புதிர் எது என்ற கேள்விக்கு, இத்தனை பேர் இறந்துபோயும்கூட தான் சாகமாட்டேன் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருப்பதுதான் பெரும்புதிர் என்கிறான்.

இவ்வாறு கேள்விகள் முடிந்ததும் அந்த யக்ஷன் தர்மனை பாராட்டி அவனிடம் ‘உனக்கு ஒரு சலுகை அளிக்கிறேன். இறந்துபோன உன் தம்பியர்களில் ஒருவனை நான் உயிர்ப்பிக்கிறேன். உனக்கு யார் வேண்டும்?’ என்று கேட்கிறான். தர்மன் தான் நகுலனை கூட்டிச்செல்ல விரும்புவதாக சொல்கிறான். அதைக்கேட்ட அந்த யக்ஷன் ஆச்சரியமடைந்து ‘அர்ஜுனன் இல்லாவிட்டால் நீ ஒருபோதும் உன் ராஜ்ஜியத்தை திரும்ப அடைய முடியாது. பீமன் இல்லையென்றால் நீ இந்த காட்டை விட்டே வெளியே செல்லமுடியாது. அப்படியிருக்க ஏன் நகுலனை கேட்கிறாய்?’ என்று கேட்கிறான். அதற்கு தர்மன், ‘எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள். குந்தியின் மகனாக நான் உயிரோடு இருக்கிறேன். அதுபோல எனது தந்தையின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கும் ஒரு மகன் உயிரோடு இருக்கவேண்டும். அதுதான் நியாயம்’ என்கிறான். அந்த யக்ஷன் கண்ணீர் விட்டு ‘நான் ஒரு காலத்தில் இவ்வாறு ஆனேன். தர்மதேவதையை நேரில் கண்டால் எனக்கு மோக்ஷம் உண்டு என்று சொன்னார்கள்’ என்று சொல்லி இறந்துபோன நால்வரையும் உயிர்ப்பித்து விடுகிறான். இது ஒரு கதை.

இங்கு தர்மன் சொல்வது ஒரு குலநீதி. ஆனால் அதற்கு அப்பால் ஒரு மெய்ஞானமாக, ஒரு விவேகமாக அது எப்படி ஆகிறது என்பதை பார்க்கிறோம்.

கடைசியில் பாண்டவர்கள் சொர்க்கத்திற்கு செல்வதற்கான பயணம். பின்னால் திரும்பி பார்க்கக்கூடாது என்பது விதி. முதலில் பாஞ்சாலி கீழே விழுகிறாள். யாரும் திரும்பி பார்க்கவில்லை. ஆனால் அவளது நித்ய காதலனான பீமன் திரும்பி பார்க்கிறான், விழுந்து விடுகிறான். அடுத்ததாக அர்ஜுனனும்  நகுல சகாதேவர்களும் விழுகிறார்கள். கடைசியாக தர்மன் மட்டுமே மேலே செல்கிறான். புஷ்பக விமானம் அவனை ஏற்றிச்செல்ல வருகிறது.

அப்போது தர்மனுடன் ஒரு நாயும் இருந்தது. அந்த நாய் தன்னை தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்தது என்பதால் அதையும் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று கேட்கிறான். அவர்கள் நாயை விமானத்தில் ஏற்றிக்கொள்ள மறுத்துவிடுகிறார்கள். அப்படியெனில் தனக்கு சொர்க்கமே வேண்டாம், வந்தால் நாயோடுதான் வருவேன் என்கிறான் தர்மன். அதைக்கேட்ட அந்த நாய் தர்மதேவதையாகி அவனை ஆசீர்வதித்து அவனுடன் வந்த அனைவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்கிறான். இது இன்னொரு வகையான உச்சம்.

இவ்விரு கதைகளும் ஒருவகையான காவிய உச்சங்கள். இதை மேடையில் சொன்னால் ஒருவித சிலிர்ப்பு ஏற்பாடும். ஆனால் அவ்வாறு சிலிர்க்காத சில விஷயங்களும் உண்டு. குறிப்பாக என்னைப்போன்று ஐம்பதை கடந்தவர்கள் யோசித்துப்பார்த்தால் சரிதானே என்று தோன்றக்கூடிய சில தருணங்கள்.

திருதராஷ்டிரன் உயிருடன் இருக்க கௌரவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அப்போது ஆட்சியமைத்திருந்த பாண்டவர்கள் உட்பட அனைவரும் சிராத்தத்திற்காக காடு செல்கிறார்கள். திருதராஷ்டிரன் மிகுந்த பசியுடன் இருக்கிறான். அப்போது பீமன் ஊனுணவை அள்ளி திருதராஷ்டிரனுக்கு ஊட்டுகிறான். நூறு குழந்தைகளை கொன்றவனே ஆனாலும் பசி பெரிது, உயிர்வாழும் ஆசை பெரிது என்கிறான் திருதராஷ்டிரன். இது ஒரு யதார்த்தம். இத்தகைய யதார்த்த உணர்வோடு யதார்த்த உச்சத்தை நோக்கி மகாபாரதம் செல்கிறது. சில நூல்கள் உங்கள் கூடவே இருக்கும். பெரும்பாலான நூல்களை கடந்து சென்றுவிட்டாலும் மிக அபூர்வமாக சில நூல்களுக்குள்ளே நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள். காவியம் என்பது அத்தகையது.

எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது எனது அன்னை பாரதம் படிப்பதை கேட்டிருக்கிறேன். எத்தனையோ இடங்களில் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். குறிப்பாக கர்ணன் அவமதிக்கப்படக்கூடிய இடத்தில். அவன் ஆயுதமேந்தி வந்து களம் புகுகிறான். அர்ஜுனனுக்கு நிகராக தானும் அம்புவிடமுடியும் என்று நிரூபிக்கிறான். அப்போது, அவன் சூதன் என்பதால் வில்லேந்தக்கூடாது என்று சொல்லி சபை அவனை வெளியேற சொல்கிறது. அப்போது துரியோதனன் எழுந்து ‘ஒரு மாவீரனுக்கு ஏது குலம் ? இவன் அரசனில்லை என்றா சொல்கிறீர்கள். இதோ இப்போதே இவனை அங்கதேசத்தின் அரசனாக்குகிறேன்’ என்று சொல்லி அப்போதே கர்ணனுக்கு மணிமுடியை சூட்டுகிறான். அப்போது உடலெல்லாம் குதிரைச்சாணி படிந்து கையில் சம்மட்டியோடு அவனுடைய தந்தை அதிரதன் உள்ளே வருகிறார். வீட்டுக்கு வா போய்விடலாம் என்று கர்ணனை அழைக்கிறார். அத்தனைபேரும் சபையில் சிரிக்கிறார்கள். அப்போது கர்ணன் அவருடைய தோளில் கைவைத்து ‘இது என் தந்தை அதிரதன்’ என்கிறான்.

இந்த இடம் என்னை அழவைத்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும்கூட அந்த உயரம் என்று வியாசன் எதை சொன்னான் என்பது தெரிகிறது. கர்ணன் அந்த உயரத்தில் இருப்பவன். அனைவருக்கும் அளிக்கக்கூடிய அவன் முன் அனைவரும் சிறியவர்களே. சிறிய மனிதர்களுக்கு மத்தியில் பெரிய கால்களுடன் நிமிர்ந்து சென்ற அவனைப்பார்த்து என் ஐந்து வயதில் நான் அழுதிருக்கிறேன். இவ்வாறு கண்ணீர் வரவைக்கக்கூடிய தருணங்களை இக்காவியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க வியாசனுடைய சொற்கள் என்னுடன் இருக்கும்.

எனது அன்னையில் தொடங்கிய இந்த உரையை எனது ஆசிரியரை சொல்லி முடிக்க விரும்புகிறேன். எனது ஆசிரியர் நித்ய சைதன்ய யதி ஊட்டியில் இருந்தார். அவர் நாராயணகுரு மரபில் வந்த ஞானி. அவருடைய ஒரு உரையை இப்படி முடிக்கிறார்: ”வியாச உச்சிஷ்டம் ஜகத் சர்வம்”. இந்த உலகிலுள்ள அத்தனை சொற்களுமே வியாசனுடைய எச்சில்தான் என்கிறார். வியாசன் சொல்லாத ஒன்றை புதிதாக யாரும் சொல்லிவிட முடியாது. நாம் இன்று அவனுடைய சொற்களை மீட்டி மறுபடியும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

எனது தந்தையின் பெரியப்பா என் சிறுவயதில் வீட்டுக்கு வந்து இலைபோட்டு சாப்பிடுவார். அப்போது சோற்றை பிசைந்து கவளமாக உருட்டி எங்கள் அனைவருக்கும் கையில் கொஞ்சம் தருவார். நாங்கள் வழக்கமாக  சாப்பிடுவதுதான் என்றாலும் அவர் அளிப்பதனுடைய ருசியை இன்றும் நினைவுகூருகிறேன். வள்ளுவர் ‘சிறுகை அளாவிய கூழ்’ என்கிறார். அது தந்தைக்கு. ஆனால் அதைவிடவும் ருசியானது ‘தந்தை அளாவிய கூழ்’. மகாபாரதம் நமது தந்தை அளாவி நமக்களித்த கூழ்.

நன்றி.

முந்தைய கட்டுரை‘மறவோம்’ எனும் சொல்- செல்வேந்திரன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்