வியாச தரிசனம்-2

09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ்

மகாபாரதம் போன்ற தொன்மை காவியங்களை அடையாளப்படுத்தும் கூறுகள்

வியாச மகாபாரதம் எனும் மகாகாவியத்தை புரிந்துகொள்வதற்கான வரையறையாக சிலவற்றை சொல்லலாம். பொதுவாக, காவியம் என்பது அடிப்படையில் நான்கு கருப்பொருள்களை கையாளக்கூடியதாக இருக்கும். நான் சொல்வது பிற்காலங்களில் உருவான காவியங்கள் பற்றியல்ல. நான்காம் நூற்றாண்டுக்கு பிறகு சம்ஸ்கிருதத்தில் மகாகாவிய பிரஸ்தானம் என்று ஒன்று ஆரம்பித்தது. ஒரு காவியம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான இலக்கணங்கள் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஆசார்யர் தண்டி காவியாதர்சம் எனும் நூல் வாயிலாக காவியத்திற்கான இலக்கணங்களை வகுத்தார். இதனடிப்படையில் எழுதப்பட்ட காவியங்களை நான் குறிக்கவில்லை. தொன்மையான பெருங்காவியங்களை பற்றியே பேசுகிறேன். அந்த தொன்மையான பெருங்காவியங்களுக்கு பொதுவாக நான்கு குணாதிசயங்கள் உள்ளன.

(1) குலக்கதை தன்மை (Genealogy)

காவியம் ஒருவகையான குலக்கதையாக, வம்சகதையாக இருக்கும். தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய மன்னர்கள், அவர்களுடைய சாதனைகளை சொல்லக்கூடிய, கிட்டத்தட்ட காலவரிசை பட்டியல் அமைப்புடன் இருக்கும். இத்தன்மை ஒரு காவியத்திற்கு இருக்கக்கூடிய பழைய அடையாளங்களில் ஒன்று. மகாபாரதத்தில் மன்னர்கள் மட்டுமல்லாது அசுரர்கள் வம்சவரிசையும் இருக்கும். திரும்பத்திரும்ப அத்தனைபேருடைய வம்சவரிசையும் முறையாக தொகுக்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கும்.

(2) உயர் கவித்துவம் (High Poetry)

தொல்காவியங்களில் ஒருவித உயர் கவித்துவம் இருக்கும். உயர்கவித்துவம் என்றால் என்ன? நினைக்குந்தோறும் வளர்ந்தபடி, வாழ்நாள் முழுக்க உங்களுடன் வருமென்றால் அது மகத்தான கவிதை. பெரும்பாலும் நாம் மேடைகளில் கேட்கும் கவிதை அக்கணத்தில் மட்டும் ‘ஆகா’ என்று தோன்றும். ஆனால் நீண்டகாலத்திற்கு நினைவில் நிற்காது. ஆனால் பெருங்கவித்துவம் என்பது கேட்பவனின் வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரக்கூடியது. வாழ்நாளில் அவன் அறியும் எல்லாவற்றையும் விளக்கக்கூடியதாக அது இருக்கும். ஆனால் அது அனைத்து வாசகனுக்கும் கிடைக்கக்கூடியது அல்ல. கவிதை தெரிந்த வாசகனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது.

மகாபாரதத்தில் முதன்முறையாக பீஷ்மர் அறிமுகமாகும் தருணம் ஒரு கவித்துவம். கங்கையை எவனோ ஒருவன் அணைகட்டி தடுத்திருப்பதை சந்தனு பார்க்கிறார். ஒரு இளைஞன் தனது அம்புகளால் அவ்வாறு செய்திருப்பது தெரிகிறது. அது தன் மகன் தேவவிரதன் என்பதை கண்டுகொள்கிறார். இந்த உருவகத்தை பொதுவாக மேடைகளில் சொல்லும்போது, ‘ஆம், அவர் பெரிய வில்லாளி என்பதை இது காட்டுகிறது’ என்பதாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க தனது புலன்களை அணைகட்டி தடுத்தவர், தன் உள்ளமென்னும் கங்கைக்கு அம்புகளால் அணைகட்ட ஒவ்வொரு கணமும் முயன்றவர், என்ற பொருளில் நீங்கள் பீஷ்மரை பார்த்தால் அது வேறொரு திறப்பாக அமையும்.

திருதராஷ்டிரனுக்கு பார்வை இல்லை என்பது ஒரு யதார்த்தம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் அமைப்பிலேயே ஒரு கவித்துவம் உள்ளது. மகாபாரதத்தில் உண்மையில் திருதராஷ்டிரன் அளவுக்கு பெருந்தன்மையும் நிறை பண்புகளும் கொண்ட வேறொரு கதாபாத்திரம் கிடையாது. ஆனால் அவனிடத்தில் ஒரேயொரு விஷயம் இருட்டாக இருக்கிறது. அது, தனது மகனுடைய குறைகளை பார்க்கக்கூடிய கண் அவனிடத்தில் இல்லை என்பதே. அத்தகைய Blind spot வாழ்நாள் முழுக்க அவனுடைய அத்தனை நற்குணங்களையும் அழித்து நிரந்தரமான இருளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவனுடைய விழியின்மை என்று சொல்லப்படுவது அதுதான். அது அறிவார்ந்த, ஆன்மீகமான விழியின்மை. நூற்றுக்கு தொண்ணூறு தந்தையர்களும் அத்தகைய விழியின்மை கொண்டவர்களே.

இன்று எனது அண்ணா என் தந்தையின் இடத்தில் இருக்கிறார். என்னை பற்றிய எந்தவொரு குறைபாட்டையும் புகாரையும் அவரிடம் சொல்லி புரியவைக்க முடியாது என்று என் மனைவி சொல்வாள். உலகத்திலேயே மிகச்சிறந்த எழுத்தாளனும் சான்றோனுமாகிய ஒரு தம்பியின் அண்ணனாகத்தான் அவர் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். இதுதான் அந்த பார்வையின்மை என்பது.

இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வளர்த்து முழுமைநோக்கி கொண்டுசெல்லக்கூடிய சாத்தியத்தை கொண்ட ஒரு காடாக மகாபாரதம் உள்ளது. அது திறந்து திறந்து செல்லக்கூடிய கதவுகளாலான ஒரு மாளிகை. நமக்கு மேலோட்டமாக தெரிந்த மகாபாரதம் அல்ல. ஒவ்வொன்றுக்குள்ளும் இன்னொரு வாசல் திறந்துகொண்டே செல்கிறது. அதனால்தான் இத்தனை கிளிகள் மூவாயிரம் ஆண்டுகளாக பாடியும் அது தொடப்படாமல் அங்கு இருந்துகொண்டிருக்கிறது. அதுதான் பெருங்காவியத்தின் அடையாளமாக இருக்கும்  உயர் கவித்துவம்.

(3) தரிசனம் (Vision)

கவித்துவத்துக்கு அப்பால் ஒருவித முதிர்ச்சியான தரிசனம் மகாபாரதத்தில் உள்ளது. ஒருவன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரமாண்டு செய்தித்தாள்களையும் படித்திருந்தால் அத்தகைய முதிர்ச்சியை அடைந்திருப்பான். எனது ஆசிரியரும் வழிகாட்டியுமான சுந்தர ராமசாமி சொல்வார், ”வாழ்க்கையை பற்றி முற்றுமுடிவாக எதையுமே சொல்லிவிட முடியாது என்ற ஒரு வரிக்கு கீழ் மட்டுமே வியாசர் கையெழுத்து போடுவார்”. மகாபாரத காவியம் விளிம்புகளுடைய, சாம்பல் நிறங்களுடைய, முயக்க நிலைகளுடைய காவியம். ஒருவன்கூட நல்லவனும் கிடையாது, ஒருவன்கூட கெட்டவனும் கிடையாது. இத்தகைய விவேகம் அதற்குள் இருக்கிறது.

சில இடங்களில் ஒருவகையான சிலிர்ப்பு முதுகெலும்பில் வந்ததுபோன்ற தருணங்கள் மகாபாரதத்தில் வரும். இத்தனை ஆண்டுகளில் வேறு எந்த படைப்பிலும் நான் அதை அடைந்தது கிடையாது.

ஓர் உதாரணம் சொல்லலாம். பீஷ்மர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் சிறையெடுத்து வருகிறார். அம்பை சென்றுவிடுகிறாள். அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றனர். அந்த இரண்டு பெண்களும் தங்கள் மகன்கள் மன்னனாக வேண்டும் என்கிற பெருங்கனவோடு இருக்கின்றனர். அதற்காக தங்களுக்குள் பூசலிடுகின்றனர். அவர்கள் பீஷ்மரால் அங்கு கொண்டுவரப்பட்டபோது பதின்பருவ பெண்களாகத்தான் இருந்திருக்கின்றனர். அவர்களுடைய கணவனான விசித்ரவீர்யன் பரிதாபமாக இறந்துவிடுகிறான்.

அதன்பிறகு ஒரு வயதான முனிவரான வியாசர் வந்து அவர்களுக்கு குழந்தையை கொடுத்து செல்கிறார். வாழ்க்கையில் இன்பம் என்று எதுவுமே இல்லை. மீதமுள்ள வாழ்க்கையில் இறுகப்பற்றிக்கொள்ள எஞ்சியிருக்கக்கூடிய ஒன்றேயொன்று தங்கள் மகன்களே. இருவரும் அவர்களை மன்னர்களாக்க நினைக்கிறார்கள். அங்கு விதி விளையாடுகிறது. மூத்தவன் அரசனாகவேண்டும். ஆனால் அவன் பார்வையற்றவன் என்பதால் பாண்டு அரசனாகிறான். மூத்தவள் அதனால் கோபமடைகிறாள். இவ்வாறாக கதை செல்கிறது.

அவர்கள் இருவருக்கும் மேல் அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடியவள் சத்யவதி. அவள் சந்தனுவுக்கு மனைவியாக அஸ்தினாபுரம் வந்தவள். மச்சகுலமென்னும் சூத்திர குலத்தை சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்தினாலேயே போதுமான அளவுக்கு அங்கீகாரமற்றவளாக இருந்தாள். அதனால் தனது குருதியை சார்ந்த ஒருவன் இந்த மண்ணை ஆளவேண்டும், தனது வம்சம் வளரவேண்டும் என்பதற்காக எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு செல்கிறாள். கணம்கூட ஓயாமல் சதிவேலைகள் நடக்கின்றன. அதன்பொருட்டே அந்த மூன்று பெண்களையும் கடத்திவரச்செய்தாள்.

அதன்பின் சதசிருங்கத்திலேயே அம்பாலிகையின் மகன் இறந்துவிடுகிறான். அந்த செய்தி அரண்மனைக்கு வருகிறது. யோசித்துப்பார்த்தால் தனது மகனுக்கு போட்டியில்லாமல் போய்விட்டது அம்பிகைக்கு மகிழ்ச்சியாகத்தானே இருந்திருக்கவேண்டும். ஆனால் நடந்தது வேறு. அம்பிகை அம்பாலிகையிடம் ‘நாம் இங்கிருந்து போய்விடலாம்’ என்கிறாள். ஒரு கணத்தில் அவர்கள் ஆடிய நாடகத்தை அப்படியே முடித்துவிட்டு கிளம்பி வானப்பிரஸ்தம் சென்றுவிடுகின்றனர். அவர்களுடன் சத்யவதியும் சென்றுவிடுகிறாள். தனது வாழ்நாள் முழுக்க எதற்காக போராடினாளோ அவையனைத்தையும் விட்டுவிட்டு ஒரே கணத்தில் அவளும் கிளம்பிச்சென்றுவிடுகிறாள்.

இதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா ? யோசித்துப்பார்த்தால் இந்த முடிவு உங்கள் கூடவே இருக்கும். ஒரு கனி உதிர்வதற்கான கணம் போலத்தான் இது. முந்தைய கணம் வரை அந்த கனி உதிரும் என்று உங்களால் சொல்லமுடியாது. அக்கனி முன்னமே கனிந்துவிட்டது. பாண்டுவின் மரணம் என்பது ஒரு காரணம் கிடையாது. அந்த மரணம் இந்த கனியை விழச்செய்யும் காற்றோ எதுவோதான். அனைத்தையும் துறந்து அவர்கள் சென்றுவிடுகிறார்கள். அதன்பின் காட்டுத்தீயில் சிக்கி அவர்கள் மூவரும் இறந்துவிடுகின்றனர்.

இந்த கணத்தை வாசிக்கும்போது இப்படியல்லவா எழுதவேண்டும் என்று தோன்றும். இந்த விளக்கமுடியாமையை தொடுகிறவன்தான் காவியகர்த்தா. அதை நீங்கள் கற்பனையால் அடையமுடியாது, வாழ்ந்துதான் அடையவேண்டும். அதை எழுத ஒருவன் ஆயிரமாண்டுகள் வாழவேண்டும். அதனால்தான் நம் மூதாதையர் வியாசரை ஆயிரமாண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடிய சிரஞ்சீவியாக கருதினர். அதுதான் அந்த தரிசனம்.

(4) அங்கதம் (Satire)

கவித்துவமும் தரிசனமும் கொண்ட அத்தகைய உயரத்திற்கு செல்லும் அதேவேளையில் அதை சமன்செய்யும் விதமாக ஒருவித பகடி / அங்கதம் வியாசனிடம் உண்டு. இந்த அம்சம் இல்லையெனில் ஒன்று பெருங்காவியம் ஆவது கிடையாது. மகாபாரதத்திற்குள் நாம் சிரிக்கக்கூடிய இடங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். உச்சகட்ட தத்துவார்த்த, நாடகீய தருணங்களுக்கு மத்தியில் நகைச்சுவையும் உண்டு.

சௌகந்திக மலரை தேடி துரியோதனாதிகள் நூறுபேறும் செல்கிறார்கள். அங்கு கந்தர்வர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். கந்தர்வர்கள் அவர்களை கொடியால் பிணைத்து வைத்திருக்கின்றனர். பீமன் சென்று அவர்களுடன் போரிட்டு கௌரவர்களை மீட்கிறான். அப்போது நூறுபேறும் சரியாக இருக்கிறார்களா என்று எண்ணிப்பார்க்கிறான். எண்ணிக்கை தொண்ணூற்று ஆறுதான் வருகிறது. மற்றொரு புறம் இருந்து மீண்டும் எண்ணுகிறான். அப்போது எண்ணிக்கை நூற்றிநான்கு வருகிறது. மீண்டும் இன்னொருபுறம் இருந்து எண்ணும்போது நூற்றியிரண்டு வருகிறது. மீண்டும் மீண்டும் அவ்வாறு எண்ணுகிறான். துரியோதனனுக்கு அது எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வை வாசிக்கும்போது அதை எழுதியவன் ஒரு குழந்தையின் கற்பனையுடன் அதை எழுதியிருப்பதாக தோன்றும்.

பீமன் ஒருமுறை சௌகந்திக மலரை தேடிச்செல்கிறான். பீமனுடைய வலிமையை வியாசர் மீண்டும் மீண்டும் புகழ்ந்து அவன் மலைகளையே தூக்கும் தோள்களை கொண்டவன் என்று வர்ணிக்கிறார். ஆனால் ஓரிடத்தில் ஒரு பலவீனமான குரங்கு தனது வாலைக்கூட அசைக்கமுடியாமல் படுத்திருக்கிறது. அது பீமனிடம் தனது வாலை நகர்த்திவைத்துவிட்டு செல்லுமாறு சொல்கிறது. பீமன் எவ்வளவு முயன்றும் அந்த வாலை அசைக்கக்கூட முடியவில்லை. அத்தகைய காட்சியை வர்ணித்தவர் மாபெரும் கவிஞனல்ல, ஒரு சிறு குழந்தை.

மலையாள விமர்சகராகிய வாரியர், ‘பீமனுக்கு கதாயுதமும் அனுமனுக்கு வாலும் அந்த இரண்டு மகாகாவிய கர்த்தர்களால் (வியாசராலும் வால்மீகியாலும்) உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் இவ்விரு காவியங்களும் இந்தியாவில் வாழ்ந்திருக்காது’ என்பார். மகாபாரத, ராமாயண கதையை நீங்கள் ஐந்து வயதிற்குள்ளாக கேட்டிருப்பீர்கள். அவ்வயதில் அக்கதைகளை உங்களை கேட்கச்செய்தது அனுமானுடைய வால் வலிமையும் பீமனின் தோள் வலிமையும்தான்.

நான் எனது மகன் சிறுவனாக இருந்தபோது மகாபாரத கதையை சொல்லிவந்திருக்கிறேன். அப்போது, ‘அர்ஜுனன் வில்லை எடுத்தான்’ என்று நான் சொல்லும்போது, ‘பீமன் என்ன பண்ணான்’ என்று கேட்பான். பீமன் அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்தான் என்று சொல்லிவிட்டு ‘அர்ஜுனன் விட்ட அம்பு அங்கு போய் பட்டது’ என்பேன். ‘அப்போ பீமன் என்ன பண்ணான்’ என்று கேட்பான். தொடர்ந்து குழந்தைகள் பீமனையே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் வல்லமை என்பது குழந்தைகளுடைய ஒரு பெருங்கனவு. பெரிதாகவேண்டும், வளரவேண்டும் என்கிற விழைவை இயற்கை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. பீமனை தவிர வேறு எதைப்பற்றியும் அக்குழந்தைகள் யோசிக்காது. அவனை மையப்படுத்தியே அனைத்தையும் புரிந்துகொள்ளும்.

ஒரு மகாகாவியத்தை பற்றின கடைசியான முழுமையான வர்ணனை என்பது, ஐந்து வயதில் நீங்கள் கேட்ட ஒரு கதை தொண்ணூற்றைந்து வயதிலும் உங்களுக்கு அர்த்தப்படும் என்றால், அதுவரைக்கும் உங்கள் கூடவே இருக்குமென்றால் அதுமட்டும்தான் மகாகாவியம். மகாபாரதம் இப்படிப்பட்ட காவியத்தன்மை உடையது.

வியாச நடையும் பாரதத்தின் இடைச்செருகல்களும்

இதன் வழியாக நாம் அறியக்கூடிய வியாசர் ஒருவர் இருக்கிறார். வியாசர் ‘ஜய’ (வெற்றி) என்ற பெயரில் எழுதியதுதான் இந்த மகாபாரதம். பாரதப்போர் முடிந்ததும் இக்காவியம் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஜனமேஜயன் காலம் வரைக்கும் வியாசர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. வியாசரால் ‘ஜய’ என்ற பெயரில் எழுதப்பட்ட அந்த காவியத்தை அவருக்குப்பின் அவரது நான்கு மாணவர்களான சுமந்து, ஜைமினி, வைசம்பாயனர், சூததேவர் ஆகியோர் அதை மீண்டும் எழுதி தொகுத்திருக்கிறார்கள். பாண்டவர்கள் பிறப்பிற்கு முன்னால் உள்ள நீண்ட பகுதிகள் வைசம்பாயனராலும், பாரதப்போர் முடிந்த பிறகு உள்ள பகுதிகள் சுமந்துவாலும் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவையனைத்தையும் சேர்க்கும்போதுதான் அது மகாபாரதம் என்று இன்றைக்கு நாம் காணக்கூடிய காவியமாக ஆகிறது. இதில் காவிய ஒருமை ஒன்று உள்ளது.

வியாசனுடைய மொழி ஒரு தனித்தன்மை கொண்ட மொழி. அவனுடைய உவமைகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. பிற்கால காவியங்களில், யோசித்து எழுதப்பட்டதாக சொல்லும்படிக்கு ஒருவித அறிவார்ந்த தன்மை இருக்கும். அதாவது உண்மையில் ஒன்றைப்பார்த்து எழுதியதை விட, பார்த்து எழுதிவைக்கப்பட்ட ஒன்றை பயின்று அதன்படி எழுதப்பட்டது போன்று அவை இருக்கும். கம்பனிடம் அத்தன்மை உண்டு. கல்வியில் பெரியவன் கம்பன் என்று சொல்கிறோம். கம்பனின் உவமைகள் கற்பனைத்திறனுடன் பாய்ந்து செல்வது போன்று இருக்கும். ஆனால் வியாசரின் உவமைகள் அவ்வாறு இருக்காது. ஒரு கனிந்த முதியவர் பேச்சுவாக்கில் சொல்லக்கூடியதாக அவை இருக்கும். பல உவமைகள் நுட்பமாக இருந்தபோதிலும் அதீதமாக இருக்காது. இது வியாசருடைய ஒரு முக்கியமான அம்சம்.

போர் நடந்துகொண்டிருக்கிறது. நிற்கவைக்கப்பட்ட வில் நெளிவது தீயின் நாளங்கள் நெளிவதுபோல் உள்ளது என்றும், அதில் இருந்து கிளம்பும் அம்புகள் வெளிச்சக்கதிர்கள் போன்று உள்ளது என்றும் வர்ணிக்கிறார். பீஷ்மர் போரில் நிற்கும் காட்சியை, ஒரு மலைமீது கூரிய சரங்களாக மழைபெய்ததுபோல அவர் போரை எதிர்கொண்டார் என்று வர்ணிக்கிறார். பீஷ்மரின் உடலில் மலையில் புல் முளைத்திருப்பதுபோல அம்புகள் தைத்திருந்தன என்கிறார். தனது பிரம்மாண்டமான வெளிச்சத்தை சுருக்கிக்கொண்டு சூரியன் குந்தியின் கண்களில் இருக்கும் வெளிச்சத்தை பார்த்து தேடிவந்தான் என்கிறார். கோவேறு கழுதை கருவுண்டதுபோல தீயவன் அழிவை நோக்கி செல்கிறான் என்றொரு உவமை வருகிறது. கோவேறு கழுதை குதிரையும் கழுதையும் கலந்தது. அது கருவுற்றால் இறந்துவிடும். ஒருவனுக்குள் இருக்கும் தீமை என்பது ஒவ்வொருநாளும் வளர்ந்து அவனையே கொல்லும்.

இவையெல்லாமே வியாசனுடைய தனித்துவமான வர்ணனைகள். படிக்கும்போது அவனுடைய கையெழுத்து தனித்து தெரியும். இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் அந்த சொற்கள் இருக்கின்றன. இத்தகைய மகத்தான அனுபவம் உலக மக்களில் சிலருக்குத்தான் கிடைக்கும். ஏனெனில் அவர்கள் மொழியில் அது இல்லை. ஆனால் நமக்கு கிடைத்திருக்கிறது.

வியாச மகாபாரதம் பல்வேறு இடைச்செருகல்களுடன் சேர்ந்துதான் நமக்கு கிடைக்கிறது. இதை நான் இங்கு மீண்டும் சொல்வதற்கு காரணமுண்டு. ஒரு பெரிய புராணமரபு, நம்பிக்கை சார்ந்த மரபு நமக்கு உள்ளது. இங்கு பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களே. ஆனால் நான் அவ்வாறு நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு செயல்படுபவன் அல்ல. நான் ஒரு நவீன எழுத்தாளன். நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு மகாபாரதமாகக் கிடைக்கக்கூடிய அனைத்துமே மகாபாரதம்தான். அவர்களை பொறுத்தவரை அவையெல்லாமே வியாசருடைய சொற்கள்தான், எல்லாமே இணையான முக்கியத்துவம் உடையவைதான். ஆனால் நான் மகாபாரதத்தில் வியாசனை கண்டுபிடிக்க முயல்பவன். அதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவன். வெவ்வேறு வகைகளில் அது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மகாபாரதம் நாம் இன்றைக்கு பார்க்கக்கூடிய நூலாக உருவாகி வந்தது பதினெட்டாம் நூற்றாண்டில்தான். அதற்கு முன்புவரை வெவ்வேறு பிரதிகள் வெவ்வேறு இடங்களில் இருந்திருக்கின்றன. பெரும்பாலும் கேரளத்தில் கொடுங்கலூரை மையமாக்கி கிடைத்த பிரதிதான் தென்னிந்தியாவில் தக்ஷிணாத்ய பாடம் என்று அறியப்படுகிறது. இன்று இராமானுஜாசாரியரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது அதுதான். வங்காள பாடம் ஒன்றுண்டு. அதை ப்ரிஜ பாடம் என்று சொல்வர். அதுபோல காஷ்மீரி பாடம், மைதிலி பாடங்கள் உள்ளன. இவையனைத்தையும் தொகுத்து அதை ஒரு மகாபாரதமாக ஆக்கியவர்கள் இந்தியாவை கண்டடைந்த வெள்ளையர்கள்.

இந்த மகாபாரதத்திலே பல்வேறு கலப்புகள் உள்ளன. ஒரு நதியில் நாம் எதையெதையோ சேர்த்துவிடுவதுபோல இந்த கங்கை போன்ற காவியத்தில், எவையெல்லாம் நெடுங்காலம் இருக்கவேண்டும் என்று நினைக்கப்பட்டதோ அவையெல்லாம் எழுதி சேர்க்கப்பட்டன. அந்த நதி அவையெல்லாவற்றையும் கொண்டு சென்றுகொண்டிருக்கும். நாம் இன்றும் பேசிக்கொண்டிருக்கும் உபகதைகள், குட்டிக்கதைகள், நீதிக்கதைகள் அனைத்துமே மகாபாரதத்துக்குள் உள்ளன.

பல கதைகளில் வியாசருடைய அடையாளமே இருக்காது. அவ்வாறு வியாசனால் எழுதப்படாத பகுதிகளுக்கு சில அடையாளங்கள் உள்ளன.

(1) முற்பிறவி கதைகள்

முற்பிறவிக் கதைகள் அனைத்துமே வியாசருக்குப் பிறகு எழுதப்பட்டவை. ஐராவதி கார்வே (Irawati Karve) என்ற புகழ்பெற்ற மகாபாரத ஆய்வாளர் பண்டார்கர் ஆய்வு நிறுவனத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலையிலும் பணியாற்றியவர். அவர் ‘ஒரு யுகத்தின் முடிவு’ என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மகாபாரத நூலை இங்கிருந்த பாகவத மரபு கையில் வைத்திருந்தது. அவர்கள் ஊர் ஊராக சென்று மகாபாரத கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒவ்வொரு கதைக்கும் ஒரு முற்பிறவி கதையை சொல்லிவந்தனர். பல சமயங்களில் அவை அந்தந்த வட்டாரத்திற்குரிய கதைகளாகவும் பிராமணர்களின் உயர்வை சொல்லக்கூடிய கதைகளாகவும் இருக்கும். சில சங்கடமான விஷயங்களை விளக்க அதற்கு ஒரு முற்பிறவி கதை சேர்க்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக, பாஞ்சாலி ஐந்து கணவர்களை மணந்துகொள்கிறாள். பாஞ்சாலம் என்பது இன்றைய இமாச்சல பிரதேசம். காம்பில்யம், சத்ராவதி இரண்டும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவை. அப்பகுதியில் இன்றும்கூட ஒரு பெண் ஐந்து கணவர்களை மணப்பதென்பது வழக்கமாக உள்ளது. இப்போதும் அப்படி வாழக்கூடிய தம்பதிகளை பற்றிய குறிப்பு ஒன்றை எனது இணையதளத்தில் பிரசுரித்திருக்கிறேன். அது இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு வழக்கம். அத்தகைய வழக்கத்தின்படிதான் பாஞ்சாலி ஐவரை மணக்கிறாள். அவ்வாறு மணப்பது அவளது அடிமைத்தனத்தை குறிக்கவில்லை, அவள் சக்கரவர்த்தினி என்பதையே குறிக்கிறது. அது சாதாரண பெண்களுக்குரிய தன்மை அல்ல. நிறைய நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதை செய்யமுடியும். அவள் சக்கரவர்த்தினியாக நாட்டை ஆளவேண்டும் என்றால் அவளுக்கு ஐந்து முகங்கள் கொண்ட கணவர்கள் தேவை. அதற்கான தேவை மகாபாரதத்தில் இருந்தது. போட்டியில் வென்று அவளை அடைய யுதிஷ்டிரனால் இயலாது. அவளை வென்றடைந்தவன் அர்ஜுனன். அவனை மணந்தால் அவள் அரசியாக முடியாது. அவள் அரசியாக ஆகியே தீரவேண்டும். அது துருபதனின் கட்டாயம், பாண்டவர்களின் தேவை.  அதனால் அவ்வாறு மணம் செய்துகொள்கிறாள்.

ஆனால் இக்கதையை கும்பகோணத்தில் வந்து சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகையால் அவளுக்கு முற்பிறவியில் ஏற்பட்ட சாபத்தால் இவ்வாறு ஏற்பட்டது என்பதாக ஒரு கதை உருவாக்கப்பட்டது. ஆனால் இது சாபம் அல்ல, ஒரு வரம் என்றுதான் மகாபாரதம் சொல்கிறது. இதுபோன்று நிறைய உபகதைகள் தொகுக்கப்பட்டு உள்ளே சேர்க்கப்பட்டிருக்கின்றன. அக்கதைகளை பார்த்தாலே அதன் தரம் சற்று குறைவாக இருப்பதை காணலாம். இவ்வளவு எளிமையான ஒரு தர்க்கநியாயத்தை ஒரு பெருங்கவிஞன் எழுதியிருக்கமாட்டான் என்பது தெரியும்.

மகாபாரத தொடக்கத்திலேயே உதங்கருடைய கதை வருகிறது. அவருடைய குரு ஒருபுறம் வெள்ளிக்கொம்பும் ஒருபுறம் பொற்கொம்பும் உடைய ஆயிரம் பசுக்களை தானமாக தரும்படி கேட்கிறார். இவர் அத்தகைய பசுக்களை தேடிச்செல்கிறார். அப்போது ஒரு குதிரையை காண்கிறார். அதன் மூக்கில் வாய்வைத்து ஊதுகிறார், அதன் சாணத்தை உண்கிறார் என்பதாக அக்கதை செல்கிறது. அதை வாசிக்கும்போதே அழகியல் தன்மையுடன் இல்லை என்று தோன்றும். இதுபோன்ற கதைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. அதை ராமானுஜாச்சாரியாரே சொல்கிறார்

(2) உதாரணக் கதைகள்

சிறு சிறு உதாரணக் கதைகள் பாரதத்தில் நிறைய உள்ளன. அதில் சில கதைகள் நன்றாக இருக்கும். பொன்மயமான கீரியின் கதையை உதாரணமாக சொல்லலாம். தர்மன் யாகம் செய்து முடித்து, உண்ட எச்சில் இலையை வெளியே போடுகிறான். அந்த இலையில் ஒரு கீரி வந்து புரள்கிறது. அந்த கீரியின் உடல் சரிபாதி பொன்னிறமாகவும் மீதி சாதாரண நிறமாகவும் உள்ளது. அது ஏன் என்று தர்மன் அதனிடம் கேட்கிறான். அப்போது அந்த கீரி, ”ஒரு ஏழை தனக்கு வைத்திருந்த ஒருவேளை உணவை ஒரு துறவிக்கு அளித்தான். அவன் சாப்பிட்ட எச்சிலில் புரண்டதால் என் பாதி உடல் பொன்னிறமானது. நீ பெரிய தர்மிஷ்டன் என்று சொன்னார்கள். அதனால் நீ உண்ட எச்சிலில் புரண்டால் மீதியும் பொன்னிறமாகும் என்பதால் இங்கு வந்தேன். ஆனால் ஆகவில்லை” என்று சொன்னது. இந்த கதை, தியாகமென்பது அளவால் அல்ல, குணாதிசயத்தால் மதிப்பிடக்கூடியது என்பதை சொல்லக்கூடிய ஒரு அற்புதமான கதை. ஆனால் இக்கதை பிற்கால இடைச்செருகலே.

(3) நீதிக்கதைகள்

மகாபாரதத்தில் கணிகர் என்பவர் வந்து நீதி சொல்கிறார். அதில் ஒரு நரி எவ்வாறு சிங்கத்தை ஏமாற்றி ஒரு கழுதைப்புலியை உண்டது என்ற கதை வருகிறது. தெளிவாகவே இது ஒரு பிற்கால கதை. அதுபோல மகாபாரதத்தின் பெரும்பாலான நீதிக்கதைகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே. இன்று பாரதத்தை பேசக்கூடியவர்கள் அந்த நீதிக்கதைகளையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவை பாரதத்தின் ஒட்டுமொத்த கதைத்தன்மைக்கு, அதன் கதை வல்லமைக்கு பொருந்தக்கூடியவை அல்ல. ஆனால் அந்த காவியம் அவற்றையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

(4) துதிகள்

பாரதத்தில் பல்வேறு துதிகள் உள்ளன. கிருஷ்ணனை பற்றின துதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே. வியாசருடைய சிருஷ்டியான கிருஷ்ணன் ஒரு பெரும் ஞானியான மாமனிதன் மட்டுமே, பரம்பொருள் கிடையாது. பிற்காலத்தில் அவன்மீது அத்தகைய பரம்பொருள் தன்மை ஏற்றப்பட்டிருக்கிறது. பாரதத்தில் நாம் பார்க்கக்கூடிய கிருஷ்ணன் மகதத்தால் மதுரை அழிக்கப்பட்டு அடைக்கலமின்றி தப்பியோடி கூர்ஜரத்திற்கு சென்று அங்கு துவாரகை எனும் நகரத்தை உருவாக்கிய யாதவ மன்னன். அனால் விவேகி, ஞானி உள்ளிட்ட பல தன்மைகள் அவனுக்கு உண்டு. இன்றுவரைக்கும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒருவித மர்மக் கதாபாத்திரமாகவே கிருஷ்ணன் அமைந்திருக்கிறான்.

உண்மையில் பாரதத்தை புரிந்துகொள்வதற்கு பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் கிருஷ்ணன் தான். நான் வெண்முரசில் கிருஷ்ணனை பற்றி எழுதும்போது, ‘கிருஷ்ணன் இப்படி செய்திருக்க மாட்டான்’, ‘கிருஷ்ணன் இப்படித்தான் செய்திருப்பான்’ என்பதாக கடிதங்கள் வரும். அப்போது நான் அவர்களிடம் ‘நிம்பார்க்கருக்கும் வல்லபருக்கும் இராமானுஜருக்கும் பிடிகிடைக்காத கிருஷ்ணன் உங்களுக்கு இவ்வளவு எளிதில் பிடிகிடைத்ததை காணும்போது ஆச்சர்யமாக உள்ளது’ என்றேன். இந்தியவியலை ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர்கள் கிருஷ்ணனை ‘The Greatest Enigma of India’ என்கின்றனர். நடராஜகுரு அதை அடிக்கடி மேற்கோள்காட்டுவதுண்டு.

இவ்வளவு அதர்மங்களை ஒருவன் ஏன் செய்கிறான் ? வெற்றிக்காக ஒருவன் என்னவேண்டுமானாலும் செய்வானா ? ஆனாலும் சில விஷயங்களை அவன் செய்தது கிடையாது. மொத்த பாரதத்திலும் பெண்கள்மீதான எந்தவொரு வன்முறையையும் அவன் நியாயப்படுத்தவில்லை. சாமானியர்கள் மீதான வன்முறையையும் அவன் நியாயப்படுத்தவில்லை. ஆனால் க்ஷத்திரியர்களை கொன்று அழிப்பதை அவன் நியாயப்படுத்துகிறான். சிரித்துக்கொண்டே அனைவரையும் கொல்கிறான்.

இத்தகைய மர்ம கதாபாத்திரத்தை புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதை கடவுளாக மாற்றாமல் இருக்கவேண்டும். ‘அவன் அப்படித்தான், ஏனென்றால் அவன் கடவுள்’ என்று சொல்லிவிட்டால் அதன்பின் அவனை புரிந்துகொள்ளவேண்டிய தேவையே இல்லாமல் ஆகிறது. அதனால் அவனை கடவுளாக மாற்றக்கூடிய வரிகளை தவிர்த்துவிட்டே படிக்கவேண்டும். அவ்வாறு வாசிப்பது ஒரு பெரும் தரிசனத்தை அளிக்கும்.எல்லா கல்வியையும் கறபித்து முடித்தவுடன் துரோணர் அர்ஜுனனிடம் ‘நீ கிருஷ்ணனை சென்று சந்திக்கவேண்டும். அவர் பரம்பொருள்’ என்பதாக ஒரு பேருரை நிகழ்த்துவார். அடுத்த தருணத்தில் அத்தகைய பேருரைக்கு சம்பந்தமே இல்லாதவனாக சாதாரண கதாபாத்திரமாக கிருஷ்ணன் வருவான்.

ஆகையால் இத்தகைய இடைச்செருகல்களுக்கு அப்பால் வியாசனுடைய இரத்தமும் கண்ணீரும் கனவும் நிறைந்த ‘ஜய’ என்றொரு காவியம் இருக்கிறது. அது காட்டும் வியாசன் யார் என்று.

(மேலும்)

முந்தைய கட்டுரைமுஞ்சிறை ஆலயம்
அடுத்த கட்டுரைவாழ்வைக்கொண்டாடுதல்