வியாச தரிசனம்

09- ஜனவரி-2015 அன்று ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம். எழுதியவர் விவேக் ராஜ்

 

கிளிமொழி

கேரள மரபில் முக்கியமான இரண்டு முன்னோடி நூல்கள் உள்ளன என்பார்கள். மலையாள மொழியின் பிறப்பே அந்த நூல்களை அடிப்படையாக கொண்டதுதான். ஒன்று, துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயணம் கிளிப்பாட்டு (அத்யாத்ம ராமாயணம் கிளிப்பாட்டு), மற்றொன்று மகாபாரதம் கிளிப்பாட்டு. இநூல்கள் எளிமையான, நேரடியான, கிட்டத்தட்ட நாட்டுப்புற தன்மை கொண்ட மொழியில் எழுதப்பட்ட ஒரு காவியங்கள். கேரளத்தில் அவை  மக்கள் காவியங்களாகப் புகழ்பெற்றதை தொடர்ந்துதான் தமிழில் இருந்து பிரிந்து மலையாளம் என்றொரு மொழியே தொடங்கியது என்று சொல்வதுண்டு.

இந்த இரண்டு நூல்களையும் வாசிப்பதற்கு அங்கு ஒரு மரபு உண்டாகியிருக்கிறது. ஆடிமாதம் (மலையாள கர்கிடக மாதம்) ராமாயணத்துக்குரிய மாதமாகவும் சித்திரை மாதம் மகாபாரதத்துக்குரிய மாதமாகவும் உள்ளது. சித்திரை ஒன்றாம் தேதி முதலோ அல்லது விஷு முதலோ மகாபாரதத்தை படிக்கத்தொடங்குவது அங்கு ஒரு மரபு.

எனது அன்னை தொடர்ச்சியாக ஐந்து முறைகளுக்கும் மேல் மகாபாரதம் படிப்பதை நான் என் இளமைக்காலத்தில் கண்டிருக்கிறேன். நெடுங்காலமாக மகாபாரதத்தை படிப்பதற்கென்று ஒரு முறைமை உருவாகி வந்திருக்கிறது. அதை பாராயணம் என்று சொல்லலாம். வீட்டுக்கூடத்திலே விளக்கேற்றி, வியாசர் அல்லது கிருஷ்ணனின் படத்தை நிறுவி, முறைப்படி பூஜை செய்து, கூடி அமர்ந்து படிப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருந்து ஆட்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அதில் சில நுட்பங்கள் உண்டு. அஷ்டமங்கலம் என்று சொல்லப்படும் பொன், மலர், கனிகள் உள்ளிட்ட எட்டு மங்கலப்பொருள்களை வைப்பார்கள். மகாபாரதம் படிக்கும்போது எட்டாவதாக ஒருபிடி மண் வைப்பர். மகாபாரதத்தின் பின்னணியில் அதற்கு ஒரு பெரிய அர்த்தமுண்டு.

காலையில் எழுந்து குளித்து, கேரளபாணியிலான வெள்ளையாடை உடுத்தி ,என் அன்னை பாரதம் படிக்க உட்காருவார். அப்போது படிக்கத்தொடங்கும் முன் ஒரு கிளியின் குரல் கேட்பதற்காக காத்திருக்க வேண்டும். கிளியின் குரல் கேட்டபின்புதான் முதல் பாடல் தொடங்கும். சாரிக பைதலே சொல்லுக (கிளிப்பெண்னே சொல்லு) என்று அந்தக்காவியம் தொடங்கும்.  மலையாளத்தில் ராமாயணம், மகாபாரதம் இரண்டும் கிளிப்பாட்டு என்ற வடிவத்தில் அமைந்திருக்கின்றன.

மகாபாரதத்தை வாசிக்க தொடங்கும்போது ஒரு தென்னங்காயை நடவேண்டும். முழுமையாக வாசித்து முடிக்க மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது அந்த தென்னை ஓரளவுக்கு முளைத்திருக்கும். அதை யாரேனும் அன்பளிப்பாக வாங்கிச்செல்வர். பெரும்பாலும் கௌளிபத்திரம் என்று சொல்லப்படக்கூடிய சிவந்த தென்னை மரத்தையே நடுவர். அதை உணவுக்காக பயன்படுத்த மாட்டார்கள், கோவில் பூஜைக்கு மட்டுமே. ஞானத்தின் கனி என்று சொல்வர்.

நான் ஒருமுறை அம்மாவுடன் புல் பறித்துக்கொண்டிருந்தேன். அவர் ஆங்கிலம், மலையாளம், தமிழ் மூன்றிலும் வாசிக்கக்கூடியவர். ஹெம்மிங்வே, வைக்கம் முகமது பஷீர், ஜெயகாந்தன் பற்றி பேசுவோம். புல் பறிப்பது, மாட்டுக்கான வேலைகள் பார்ப்பது எங்களுடைய அந்தரங்கமான தருணம். அப்போது அவர் சொன்னார், ‘இந்த கிளிப்பெண் சுகனுடைய தங்கை’ என்று.

கிருதாசி என்ற கிளிப்பெண்ணை மணந்து வியாசர் பெற்ற மகன்தான் சுகன். சுகப்பிரம்மம் என்றாலே கிளி என்றுதான் பொருள். அந்த கிளியின் தங்கை இந்த கிளி. இந்த கிளியிடம்தான் எழுத்தச்சன் மகாபாரதத்தை சொல்கிறார். அது ஒரு அற்புதமான உவமையாக எனக்கு தோன்றியது. ஒரு கவிஞன் கிளியை, சொல்மகளை, வாக்தேவியை மணப்பது அழகான கற்பனை. ஒரு கவிஞனின் சொற்களை கிளி கற்றுக்கொள்வது என்பது நிரந்தரமாக அழியாத ஒரு மொழியாக அதை மாற்றுவதுதான்.

பின்னர் நான் வியாசவனம் என்று வெண்முரசில் எழுதும்போது பல்லாயிரம் கிளிகளால் வியாசனின் சொற்கள் ஓயாது முழங்கிக்கொண்டிருக்கும் காடு என்று எழுதினேன். ஒரு கிளிக்கு காவியம் தெரிந்திருந்தால் அதன்பின் அத்தனை கிளிகளும் அதை கற்றுக்கொள்ளும். மண் மாறினாலும், காலம் மாறினாலும் கிளிமொழி மாறாது. மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வியாசனின் சொல் இந்த மண்ணிலே நிற்கிறது. பல்லாயிரம் கிளிகள் நெடுங்காலமாக அவனது சொற்களை சொல்லிக்கொண்டிருக்கின்றன.

காளிதாசன், வில்லிபுத்தூரார், எம்.டி.வாசுதேவன் நாயர், எம்.வி.வெங்கட்ராம், எஸ். ராமகிருஷ்ணன், இப்போது நான் என அத்தனைபேரும் சொல்லிக்கொண்டிருப்பது வியாசனுடைய சொல்லைத்தான். நாங்கள் அனைவரும் ஒரு பெரும் கிளிக்கூட்டத்தின் தனித்தனி உறுப்புகள். இங்கு ஒரு எளிய கிளியாக நின்று அவன் புகழை சொல்வதில் நிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

 

வியாசர் யார் ?

 

வியாசர் யார் என்ற கேள்விக்கு நம்மிடம் தோராயமாக ஒரு பதில் இருக்கும். நான்குவிதங்களில் நாம் வியாசரை அடையாளப்படுத்துகிறோம்.

(1) வியாசர் என்ற வேதவியாசர் நான்கு வேதங்களையும் தொகுத்தவர். அவரைப்பற்றிய இந்த பொது வரையறைதான் எங்கும் சொல்லப்படும்.

(2) கிருஷ்ண துவைபாயனர் என்று மகாபாரதத்தை எழுதியவராக சொல்லப்படும் கவிஞர். மச்சகந்தி என்ற சத்யவதிக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவர்.

(3) மகாபாரதத்துக்கு உள்ளேயே ஒரு கதாபாத்திரமாக வரும் வியாசர்.

(4) புராணங்களையும் உபநிடதங்களையும் தொகுத்த வியாசர்.

இந்த நான்குமே ஒரே வியாசர்தான் என்ற எண்ணம் நமக்கு குருமரபாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. வேதாந்த மரபிலும் இந்நான்கையும் அப்படியே எடுத்துக்கொள்வதுதான் வழக்கம். வைணவர்களும் அவ்வாறே கொள்வர். ஆனால் வரலாற்று ரீதியாக வியாசர் யார் ? வியாசர் என்பது ஒரு பெயரா அல்லது பதவியா ?

 

(1) வேதங்களை தொகுத்த வியாசர்

வியாச என்ற சொல்லுக்கு தொகுத்தல், கட்டுதல் என்று பொருள். வியாசர் என்பது Editor என்ற பொருள்கொண்ட சம்ஸ்கிருத சொல். வேதங்களை தொகுத்தவர் என்ற பொருளில் வியாசர் சொல்லப்படுகிறார். ஆனால் வேதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தொடக்கத்தில் இருந்தவை ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்றுவேதங்கள் மட்டுமே. மிக பிற்காலத்தில்தான் அதர்வவேதம் அதில் சேர்க்கப்படுகிறது. இது இரண்டாவது தொகுத்தல். அதன் பிறகு பலகாலம் கழித்துதான் பிராமணங்களும் ஆரண்யகங்களும் தொகுக்கப்பட்டன. அதற்கும் பிறகு வேதாங்கங்களும் உபவேதங்களும் அதில் சேர்க்கப்பட்டன. அதற்கும் பிறகுதான் மகாபாரத காலகட்டம் வருகிறது. இந்த காலகட்டத்தில் வரும் வியாசர் எவ்விதமாக வேதங்களை தொகுத்திருக்க முடியும் ? மகாபாரத குறிப்பின்படி வேதத்திற்கு சௌனக மரபு, தைத்திரீய மரபு என்று வேதத்தின் சில பகுதிகளுக்கு அதிகாரம் கொண்ட பல்வேறு குரு மரபுகள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. சௌனக மரபு என்பது இன்றைக்குள்ள இமாச்சல பிரதேசம்.

இவ்வாறு அந்தந்த பகுதிகளை வைத்து வேதத்திற்கு பாடபேதங்கள் இருந்திருக்கின்றன. மகாபாரதத்தை எழுதிய கிருஷ்ண துவைபாயனர் இவற்றை தொகுத்து ஒழுங்குபடுத்தியிருக்கக்கூடும். ஆகவே இவரும் ஒரு வியாசர் (தொகுத்தவர்). ஒருவகையில் வியாசர்கள் வரிசையில் இவர் கடைசி வியாசர் என்றும் கொள்ளலாம். இந்த பங்களிப்புக்காக வேதவியாசர் என்ற அடைமொழி அவருக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். மகாபாரத காலகட்டத்தில் வாழ்ந்த ரிஷிகளில் சிலரைப் பற்றிப் பேசுகையில் மகாபாரதம் அவர் வேதங்களை இயற்றியவர் என்று குறிப்பிடுவதில் இருந்து அப்போதுகூட வேதங்கள் தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டே இருந்தன என்று ஊகிக்கலாம்.

(2) கிருஷ்ண துவைபாயன வியாசர்

பராசர முனிவர் மச்சகுலத்து இளவரசியான மச்சகந்தியை ஒரு படகிலே சந்தித்து அவள்மேல் காதல் கொண்டு கடிமணம் புரிந்துகொள்கிறார். அவர்களுக்கு பிறந்த குழந்தை வியாசர். கரிய நிறமுடையவர் என்பதால் அவருக்கு கிருஷ்ணர் என்றும், யமுனை நதித்தீவில் பிறந்ததால் துவைபாயனர் என்றும் பெயர். இளமையிலேயே அவர் தனது தாயை விட்டு தந்தையிடம் சென்று அவரையே குருவாக கொண்டு வேத வேதாங்கங்களை கற்றார். அதன்பிறகு அவர் மகாபாரத காவியத்தை எழுதினார். நமக்கு இது ஒரு தொன்மமாகவே கிடைக்கிறது என்றாலும் ஒரு வரலாற்று உண்மையாக இருப்பதற்கான நியாயம் உள்ளது.

ஒரு புராணம் அல்லது தொன்மம் வரலாற்று உண்மையா இல்லையா என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, வேறு குரு மரபுகளில் அதே கதை சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இது ஒரு முக்கியமான அளவுகோல். வியாசரை பற்றிய இக்கதை பௌத்த தொன்மக்கதைகளிலும் சமணர்களுடைய தொன்மத்திலும் வருகிறது. சிற்சில மாற்றங்களுடன் ஏறத்தாழ இந்தியாவின் அநேக மரபுகளில் இந்த தொன்மக்கதை வருவதை காணலாம். அதனால் இவர் உண்மையிலேயே வாழ்ந்த ஒரு முனிவர்தான் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்கிறோம்.

(3) மகாபாரத கதாபாத்திர வியாசர்

மகாபாரதத்துக்குள்ளேயே வியாசர் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். இன்று இவ்வகையான எழுத்து முறையை meta fiction என்று சொல்வார்கள். ஒரு கதையை எழுதக்கூடியவரே அக்கதைக்குள் கதாபாத்திரமாக வருவார்.  அவருடன் சேர்ந்தே அக்கதை உருவாக்கப்பட்டிருக்கும். நான் விஷ்ணுபுரம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதில் என்னை ஒரு கதாபாத்திரமாக எழுதிச்சேர்த்து ஆங்காங்கு வந்து பேசுவதுபோல அமைத்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ அவ்வாறே மகாபாரதத்தில் வியாசரின் இடம் உள்ளது.

அவ்வகையில் மகாபாரதத்திலுள்ள வியாசர் ஒரு முக்கியமான கதை. மகாபாரதத்தின் தொடக்கத்திலேயே வியாசர் வந்துவிடுகிறார். ஜனமேஜயனின் வேள்வி நடக்கிறது. அங்கு பாம்புகள் அக்னியில் எரியவிருக்கின்றன. அதை தடுக்கும்பொருட்டு ஆஸ்திகன் எனும் இளம் ரிஷி அங்கு வருகிறார். அங்கு வியாசர் வந்து முன்னால் நடந்த விஷயங்களையெல்லாம் முழுக்க சொல்வதாக கதை ஆரம்பிக்கிறது. அதன்பிறகு அவருடைய கதை மகாபாரதத்துக்குள்ளே தொடர்ந்து வருகிறது. அவர் பராசரரின் மரபில் ஆசிரியராக இருக்கிறார்.

அப்போது அஸ்தினாபுரியின் அரசியாக சத்யவதி இருக்கிறாள். அவளுடைய மூத்த மகன் சித்திராங்கதன் இறந்துபோகிறான். இரண்டாவது மகன் விசித்திரவீரியனுக்காக பீஷ்மர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை எனும் மூன்று பெண்களையும் சிறையெடுத்து வருகிறார். அம்பை சென்றுவிடுகிறாள். மற்ற இரண்டு பெண்களும் கருவுற்று குழந்தைகள் பெற்றால் மட்டுமே சத்யவதியின் குருதி அஸ்தினாபுரியில் ஆட்சியமைத்து, அவளுடைய வம்சம் தொடரமுடியும். அதன்பொருட்டு அவள் வியாசரை சென்று சந்திக்கிறாள். வியாசர் தனது தாயின் கட்டளைப்படி அம்பிகையிடமும் அம்பாலிகையிடமும் உறவுகொண்டு திருதராஷ்டிரனையும் பாண்டுவையும் பிறப்பிக்கிறார். இன்னொரு சூதப்பெண்ணிடம் உறவுகொண்டு விதுரரை பிறப்பிக்கிறார்.

அதன்பின் மகாபாரதத்தின் நெடுங்கதைத் தொடர்ச்சியில் முக்கியமான, முக்கியமற்ற என பல கட்டங்களில் வியாசர் வருவதை காணலாம். பெரும்பாலான தருணங்களில் அக்கதைக்கு தேவையற்ற, ஓர் இடைச்செருகல் போலத்தான் வியாசரின் உள்நுழைவு அமைந்திருக்கும். உதாரணமாக ஏகச்சக்கரி நகரத்தில் பாண்டவர்கள் தங்கியிருக்கிறார்கள். அங்கு பகன் என்ற ஒருவன் இருக்கிறான். பீமன் அவனை கொன்றுவிடுகிறான். அதன்பின் அவர்கள் எங்கு செல்லலாம் என்று தெரியாமல் இருக்கும்போது அங்கு வியாசர் வருகிறார். பாஞ்சாலன் தனது மகளுக்கு சுயம்வரம் நடத்தும் தகவலை அவர்களிடம் சொல்லி, அர்ஜுனனிடம் அவளை திருமணம் செய்துகொள்ளும்படி சொல்கிறார்.

அதன்பின் சுயம்வரத்தில் வென்று அர்ஜுனன் பாஞ்சாலியை திருமணம் செய்துகொள்கிறான்.  பாஞ்சாலியை அழைத்துவந்து குந்தியிடம் தனக்கு பிச்சை கிடைத்திருப்பதாக சொல்கிறான். குந்தி அது பாஞ்சாலி என்பதை அறியாமல், அந்த பிச்சையை ஐவரும் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்கிறாள். அதனால் ஐவரும் பாஞ்சாலியை மணம் செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.  அப்போது மீண்டும் வியாசர் அங்கு வருகிறார். இத்தகைய நிலை இவளுடைய பூர்வஜன்ம பாவத்தால் வந்தது. இவள் ஐந்து கணவர்களை கொண்டவளாகத்தான் இப்பிறவியில் இருக்கவேண்டும் என்பது விதி. அதனால் நீங்கள் கலங்கவேண்டாம் என்கிறார்.

இவ்வாறு மிக பிற்காலத்தில் எழுதி சேர்க்கப்பட்டது என்று தோன்றக்கூடிய பகுதிகளாக வியாசரின் வருகை உள்ளது. இதில் எந்த இடத்திலிருந்தும் வியாசரை எடுத்துவிட்டால்கூட கதையின் போக்கில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. (திரௌபதி திருமணத்திற்கு சொல்லப்படும் இக்காரணங்களுமேகூட பிற்கால எளிய புனைவுகளே) ஆகையால் மகாபாரதத்துக்குள் வியாசரின் இடம் என்பது திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரையும் பிறப்பித்தது மட்டுமே. ஆங்காங்கு சில கதைகளை சொல்ல வியாசர் வந்துசெல்கிறார். ஆகவே, இவ்வாறு ஒரு கதாபாத்திரமாக வரும் கிருஷ்ண துவைபாயன வியாசர் மிகக்குறைவாக பொருட்படுத்தத்தக்கவராகவே இருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் பண்டார்கர் ஆய்வு மையம் (Bhandarkar Oriental Research Institute, Pune) உள்ளது. அவர்கள் பல்வேறு மகாபாரத பிரதிகளை ஆராய்ந்து எவையெவை இடைச்செருகல்களாக இருக்கும் என்று அனுமானித்து அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒரு பிரதியை (Critical Edition) உருவாக்கியிருக்கிறார்கள். அந்த பிரதியில் தவிர்க்கப்பட்ட கதைகள் பெரும்பாலும் வியாசரை பற்றிய கதைகளே. ஏனென்றால் வியாசரை பற்றிய பல்வேறு கதைகள் உள்ளே சேர்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன.

உதாரணமாக, மச்சகந்தி தன் மகனான இளம் வியாசரை சந்திக்க செல்கிறார். வியாசர் அவளிடம், ‘நீ என்னை நதியில் கைவிட்டுவிட்டு சென்றவள்தானே, நீ இழிந்தவள், நான் துறவி என்னை தொடாதே’ என்று பேசுவதாக ஓர் இடம் உள்ளது. இது வியாச மகாபாரதத்தின் தென்னிந்தியப் பிரதிகளில் மட்டுமே உள்ளது. வட இந்தியப் பிரதிகளில் கிடையாது என்கிறார்கள். இவ்வாறு பல்வேறு பதிப்புகளில் ஒன்றில் மட்டுமே ஒரு கதை இருந்தால் அதை பிரக்ஷிப்தம் என்று சொல்வர். தென்னிந்திய பிரதியை பதிப்பித்த இராமானுஜாசாரியர் அக்கதையை பிரக்க்ஷிப்தம் என்று சொல்லி வெளியே எடுத்து வைத்திருக்கிறார். இதுபோன்ற வியாசருடைய கதைகளை வைத்துக்கொண்டு நாம் அவருடைய குணச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது.

இதை நான் இங்கு வலியுறுத்தி சொல்லக்காரணம், பொதுவாக ஆஸ்திக சபைகளில் வரலாற்றுப்பார்வை என்பது மிக குறைவாகத்தான் இருக்கும். அவர்களிடம் பக்திநோக்கு மட்டுமே உள்ளது. அத்தனை கதைகளையும் புராணிகர்கள் ஒரேவிதமாகத்தான் சொல்வார்கள். வரலாற்றுரீதியாக பார்த்தால் மகாபாரதத்துக்குள்ளே வரும் வியாசரின் சித்திரம் அவரது உண்மையான குணச்சித்திரத்தை காட்டக்கூடியது அல்ல. பெரும் ஞானியாகவோ பெரும் ரிஷியாகவோ அவரை அது காட்டவில்லை.

 

(4) பிற்கால தொகுப்பாளர் வியாசர்

 

மகாபாரதத்துக்கு வெகு பின்னாட்களில் வந்த படைப்புகள் பல வியாசரால் தொகுக்கப்பட்டவையாக சொல்லப்படுவதுண்டு. அது அந்த நூல்களுக்கு ஒருவித அதிகாரத்தன்மையை அளித்துவிடுகிறது. வியாசரே சொன்னது என்று சொல்லும்போது மக்களுக்கு அதன்மீது ஒரு நம்பிக்கை வருகிறது. மகாபாரதக் காலகட்டத்துக்கு பிறகு நீண்டகாலம் வியாசரின் குருமரபு ஒருவேளை இருந்திருக்கலாம். அவருடைய மாணவர்களும் தங்களை வியாசர் என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். அல்லது பிற்கால அறிஞர்கள் எழுதிய நூல்களை வியாசர் பெயரில் சேர்த்துவிட்டிருக்கலாம். அனால் பிற்கால நூல்கள் எதிலுமே வியாசர் எழுதியதற்கான எந்த அடையாளமும் இல்லை. ஏனெனில் வியாசரின் மொழி பிற்கால ஆசிரியர்களுடைய மொழி போன்றதல்ல. அதற்கென்று ஒரு தனிநடையும் கம்பீரமும் அழகும் உண்டு. வியாசரை நாம் மகாபாரதம் எனும் மகாகாவியத்தில் இருந்து மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும்.

ஒரு காட்டிற்கு நீங்கள் சென்றால் பூனைப்பாதம் வேறு, புலிப்பாதம் வேறு என்று கண்டுபிடிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெருங்கவிஞனுடைய அடையாளம் அவனுடைய மொழிநடையில் இருக்கும். நல்ல ரசிகனுக்கு அந்த மொழிநடையை பார்த்தாலே அது வியாசரா இல்லையா என்று சொல்லிவிட முடியும். வியாசனுடைய காவியம் அவன் விட்டுச்சென்ற பெரிய தடம். கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நம் பண்பாட்டின் ஒரு பொற்கோபுரமாக, வெல்லமுடியாத சிகரமாக அது நின்றுகொண்டிருக்கிறது. ஒருபோதும் வற்றாத ஆறாக அது ஓடிக்கொண்டிருக்கிறது. அதைவிட குறைவான எதையுமே அதனுடன் ஒப்பிடக்கூடாது என்பது ஒரு இந்துவுக்கு இருக்கவேண்டிய விவேகம் என்றே நான் நினைக்கிறேன்.

 

(மேலும்)

முந்தைய கட்டுரைதிருமலை முத்துசுவாமி
அடுத்த கட்டுரைThe disease called slugging