என் பெயர் ரகுராமன், கடந்த இரண்டு வாரங்களாக உங்கள் அறம் சிறுகதை தொகுப்புடன் பயணித்து கொண்டிருந்தேன்,
நான் கடந்த 10 வருடங்களாக துபாயில் பணியாற்றிவிட்டிருந்தேன், கடந்த வருடம் நம் தாய் நாட்டிற்கு முற்றிலும் பெயரும் வாய்ப்பு கிடைத்தது . 10 வருடங்களில் வருடம் ஒருமுறை ஆண்டு விடுமுறையில் இந்தியா வரும்போதெல்லாம் சிறு மாற்றத்தை உணர முடிந்தது, நான்கு மணி நேர பயண இடைவெளியில், ஒழுக்கம், விதிமுறை, வாழ்க்கை நடை மாறிப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சாமானியனானேன், மனதுக்குள் என்றும் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த எண்ணம், இது ஒவ்வொரு வருடமும் தொடர்வண்டி போல் தொடர்ந்தது.
ஒருமன முடிவாய் என்னை நான் கட்டமைக்க முட்பட்டேன், என் மனத்திட்கு உயிர் கொண்டேன், அதனிடம் உரையாட ஆரம்பித்தேன்.அது ஆதரிக்கும் எதையும் செய்யலானேன், தவிர்க்கும் எதையும் செய்யேன், அதுவே அறம் என்று கண்டேன், நாடிட்கு நாடு மாறும் எண்ணம் “பச்சோந்திபோல” என்று எண்ணி என்றும் ஒரே மனநிலையுள்ள மானுடனானேன்,
சிறு காகித துண்டையும் நடைமேடையில் அபாரத்திட்கு பயந்து எரியாத எண்ணத்தை வாடிக்கை ஆக்கினேன், என்னை பயின்று கொண்டேன், துபாய் , இந்தியா என்று பிரித்துப்பார்க்காத ஆளானேன், என்னுள் இருந்த பச்சோந்தியை முற்றிலும் விரட்டினேன்.
சிஃனலில் யாசிப்பவரிடம் பணம் கொடுக்கும்போதெல்லாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற எண்ணம் மறைய ஆரம்பித்தது, ஏமாறும் போது தவறணைத்தும் ஏமாற்றப்படுபவனுடையதல்ல ஏமாற்றுபவனுடையது என்று கர்மாவை காரணம் காட்டினேன், எனது பழக்கங்களை எதற்காகவும் மாற்றிக்கொள்ள நான் தயாராயில்லை.சில சமயம் நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேலி பொருளாயும் ஆனேன், இருந்தும் நான் அதே பாதையில் பயணித்தேன்,
அவ்வப்போது “அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஏற்பது இகழ்ச்சி” என்று என்னுள் சொல்லிக்கொள்வேன்.அறத்தை முன்னிறுத்தி யாரையும், எதையும், எந்த செய்கையையும் பார்க்காத இந்த பல வருடங்களில், உங்கள் புத்தகம் என்னை புத்துணர்ச்சி அடையச்செய்தது, என் மன ஓட்டங்களுக்கு யாரோ நீர் பாய்ச்சுவது போல உணர்ந்தேன், அகம் குளிர்ந்தேன், காற்றில் பறந்தேன்,
பள்ளி பருவத்தில் உறவுக்காரர்கள் மனையிலிருந்து தங்கி படித்து பட்டம் பெற்றவன் நான், என்னை “சோற்று கணக்குடன்” இணைத்துக் கொண்டேன்.தவறுகளை சரிசெய்ய முடியாதெனினும், அதை தட்டி கேட்க செய்யும் என் மனஉறுதியயை பாராட்டி “கோட்டி / பெருவலி” கதைகளில் எட்டினின்று பார்க்கும் ஒராளானேன்,
முதல் தலைமுறை பட்டதாரி ஆகி, கை நிறைய ஊதியம் பெற்று மரியாதைக்கு ஏங்கி நிற்கும் என் குடும்ப வட்டத்தில் “வணங்கான்” ஆனேன்.ஆன்மீகத்தில் நம்பிக்கை கொள்ளும் போதெல்லாம் “ஓலை சிலுவையையும் / பெறுவலியும்” அசைபோட லானேன்,..எல்லா கதைகளும் ஒருவிதத்தில் என்னுடன் தொடர்புடையவை
உங்கள் அறத்திட்கு நன்றி !!!!
இப்படிக்கு உங்கள் முதல் புத்தகத்தை வாசித்த வாசகன்…
ரகுராமன்
அன்புள்ள ரகுராமன்
அறம் என் மற்ற நூல்களுக்குள் நுழைவதற்கான வாசல். நீங்கள் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்க பல நூல்கள் உள்ளன. குமரித்துறைவி போன்ற சிறு நாவல்கள். சிறுகதைத் தொகுதிகள்.
அறம் வாசிக்கும் ஒருவர் மானசீகமாக எனக்கு ஒரு ஹலோ சொல்கிறார்
ஜெ