தூக்கு-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய இடுகையைப் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை நான் அந்த மூவரையும் தூக்கில் போடுவது சரி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். பின்னர் பேரறிவாளனின் தாயாரின் பேட்டியைப் படித்தேன். அவரது குற்றம் குண்டுக்கு பேட்டரி வாங்கியது என்று தெரிய வந்தது. பேட்டரிக்கு எந்தக் கடையில் பில் தருகிறார்கள் என்ற அவரது தாயாரின் கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக ஒரு நிரபராதியை தண்டிப்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. பலரது எண்ணமும் அதுவாகவே இருக்கும்.

இந்த வகையில் திரு. ராம்ஜெத்மலானியின் ஒரு பேட்டியை நினைவுகூர்கிறேன் – இந்திரா கொலை வழக்கைப் பற்றி. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில் வாதாடி இரண்டு பேர் குற்றமற்றவர்கள் என நிரூபித்து விடுதலையே வாங்கித் தந்தார்.  இதனால் பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மத்தியில் அவருக்குக் கொலையாளிகளின் ஆதரவாளர் என்ற பெயரே இருந்தது/இருக்கிறது. ஆனால் அந்த பேட்டியில் அவர் அதைப் பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த இருவரைக் காப்பாற்றியதைத் தன் வாழ்நாள் சாதனை என்றே கருதுவதாக அவர் கூறினார். பின்னர் அவர் கூறியது என்னை சிந்திக்க வைத்தது; அந்த மூன்றாவது நபரைக் காப்பாற்றமுடியவில்லை அவர் தூக்கிலிடப்பட்டார்,ஆனால் அவரும் குற்றமற்றவரே என்றார். பொதுவாக இத்தனை வருடங்களுக்குப் பின் ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்காகப் பேசுவதில்லை, அவர் இறந்தபின் அதற்கு அவசியமும் இல்லை. அவர் பேசியது எனது மனசாட்சியைச் சிறிது உறுத்தியது. அவர் கூறியது உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

இதே கண்ணாடி வழியாகப் பார்க்கையில் பேரறிவாளன் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் என்னை அவரது தூக்குக்கு எதிராக ஒரு நிலையை எடுக்க வைத்தது. உங்களது இடுகையைப் படித்தபின் மற்ற இருவர் குற்றம் செய்தவர்களாகவே இருந்தாலும் மனிதாபிமானப்படி 20 வருட மன வலியின் பின் வாழ அனுமதிக்கப்படவேண்டியவர்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இது போக மக்களாட்சி மற்றும் நீதியின் ஆட்சி நிலைபெற்ற ஒரு நாட்டில் ஒரு குற்றத்துக்கு தண்டனை என்பது அந்தக் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்தே இருக்கமுடியும். கொலையில் இந்த மூவரின் பங்களிப்பு(சிபிஐ தரப்பின்படியே) சிறியது,ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் அளவு மிகப்பெரியது. இதே வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தின் முன் வந்தால் அவர்கள் தூக்கிலிருந்து தப்பிக்கக்கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் இன்று அது இந்திய சமூகத்தின் நினைவில் இருந்து பெரும்பாலும் அகன்றுவிட்ட ஒரு நிகழ்வு.  உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை என்பது முதல் படி.

அதே சமயம் இந்த வழக்கோடு அஃப்ஜல் குரு வழக்கும் பின்னிப்பிணைந்து கொண்டிருக்கிறது. இம்மூவரும் மன்னிக்கப்பட்டால்  அஃப்ஜல் குருவும் இதே காரணத்தைக் காட்டி தூக்கிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம் என்பதால் பலர் இதை எதிர்க்கின்றனர்.  என்னுடைய கேள்வி – இந்த காரணத்தால் அஃப்ஜல் குரு விடுதலை செய்யப்பட்டால்தான் என்ன என்பது தான். அஃப்ஜல் குரு தப்பிக்கக்கூடும் என்பதற்காக இந்த மூவரும் சாக வேண்டுமா?

மற்றபடி தூக்குதண்டனை என்பது மிகக் கொடிய கொலைக் குற்றங்களுக்கு எதிராக ஒரு ‘deterrent’ ஆக சட்டத்தில் இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். ஆனால் அதை செயல்படுத்துவது ‘rarest of the rare case’ களில், குற்றம் சாட்டப்பட்டவரின் பங்களிப்பைப் பொறுத்தே இருக்க வேண்டும்.

அன்புடன்,
சண்முகம்

அன்புள்ள சண்முகம்

தூக்கு தண்டனைக்கு எதிரான குரல்கள் எப்போதுமே மதம், அரசியல் சார்ந்த குழுப்பின்னணி கொண்ட குற்றவாளிகள் தூக்கிலிடும்போதே எழுந்து வருகின்றன. பிறர் மௌனமாக செத்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் இவ்வாறு மனிதாபிமானம் பேசுபவர்கள்மேல் நம்பிக்கை கொள்ளாமலிருக்க இதுவே காரணம். அரசியலற்ற அவர்களில் ஒருவர் தவறாக தண்டிக்கப்பட்டால், காவல்துறையால் கொடுமைக்குள்ளானால் , இந்த அரசியல்வாதிகள் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள் என அவர்கள் அறிவார்கள்

ஜெ

தூக்கிலிருந்து மன்னிப்பு

தூக்கு-கடிதங்கள்

முந்தைய கட்டுரைநம் அறிவியல்- கடிதம்
அடுத்த கட்டுரைஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1