«

»


Print this Post

ரசனை கிடைக்கப்பெறுவதா ?


ஆசிரியருக்கு,
நீங்கள் எனக்கு சிற்பக்கலையை அறிமுகப்படுத்திய அந்த அம்பை கோயில் கணங்கள் மறக்க முடியாதவை , பின் முண்டந்துறை செல்லும்போது ஓவியத்தையும், பின் ஓரிரு ஆண்டுகளில் சிதம்பரத்தில்  நடனத்தையும், கடுமையான எதிர்விசை இருந்தும் மெல்ல மெல்லக்  கர்நாடக இசையையும் என சம வீச்சுடன் இவைகள்  அறிமுகமானது , பின் நமது திருவையாறு பயணமும் என இப்போது திரும்பிப் பார்க்கையில் எனக்குக் கிட்டத்தட்ட எல்லாக் கலைகளையும், அதன் அடிப்படைகளையும் நீங்கள்தான் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.  இன்று அந்த சூடு தணிந்த நிலையில்  நான் மெல்ல இவைகளையும் என்னையும்  மதிப்பீடு செய்கிறேன்.

எனக்கு அறிமுகமான எல்லா முதற் கணங்களும் அபாரமானவை, கோட்டை  மதில் சுவர் அகல வீசித் திறப்பது போல, அதிகாலை கோயில் நடை திறப்பது  போல மிக விசாலமானது, அவ்வறிமுகக் கணங்களில் அவ்விடத்தில் யார் இருந்திருந்தாலும் கிட்டத்தட்ட இதே துவக்கமும் பின் தொடர்பும் நிகழ்ந்திருக்கும்.

இலக்கியத்தில் சிறப்புத் தேர்ச்சியும், பிற கலைகளில் உபரி ஞானமும் உள்ள பெரும் கலைஞன்  ஒருவரின் அறிமுகம் இலக்கியத்தின் மீது முதன்மையான அழுத்தமும் பிற கலைகள் மீது ஆர்வமும் நாட்டமும் என என்னை நடத்துகிறது. பிற கலைப்படைப்புகள் கிடைக்கப் பெறுவதைவிட விட (இசை விதிவிலக்கு ) இலக்கியப் படைப்புகள் எளிதில் அகப்படுகிறது, ஊருக்கொரு நூலகம், புத்தகக் கடைகள்,  கண்காட்சிகள் , வாசிக்கும் நபரொருவரை சந்தித்து உரையாடுவதும் ஒப்பீட்டளவில் எளிது, எனவே முதலில் நான் புத்தகம், பிறகு ஜெ மூலமாகத் தீவிர இலக்கியம் என இயல்பில் வந்து சேர்ந்தேன்.

இதே சாத்தியத்தில் , உதாரணமாக ஓவியமோ, சிற்பமோ சமூகத்தில் எளிதில் அகப்படுகிறது,  அதன் பெரும்  கலைஞர்களை , ரசிகர்களை சந்தித்து உரையாடுவதும் எளிது என்ற நிலை இருந்தால் எனக்கு முதலில் எளிதில் அறிமுகமாகும் கலையுடன் பிரதான தொடர்பும் பிற கலைகளுடன்  உபரித் தொடர்பும் இருந்திருக்குமா?  மனிதன் எளிதில் ஆழமாக  ஆட்படக் கூடியவனா ?  நான் உட்பட உங்களின் எத்தனை வாசகர்கள் இலக்கியத்தில்  மிஞ்சுவோம் ? மனிதனின் மானசிகமான உறவென்பது திருமண உறவு போலப் பெரிதும் கிடைக்கப் பெறுவதும் , அணுக சாத்தியமானதும் (availability and accessibility)  என்ற எளிமையான விதி  சார்ந்ததா ?

நமது மதுரை  சந்திப்பில்  கேட்க நினைத்த கேள்வி இது.

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன்,

சாதாரணமாகப் பார்த்தால் அப்படித்தெரியும். ஆனால் பெறுவது-  அடைவது என்ற இரு தரப்பிலும் நின்று பார்த்தால் அப்படி அல்ல என்பதைக் காணலாம்.
நல்ல கலையும் இலக்கியமும் மக்களுக்குக் கிடைத்தாகவேண்டியிருக்கிறது. அதுவும் உரிய வயதில். அப்போது கணிசமானவர்கள் இயல்பாகவே அவற்றுக்குள் வருவார்கள். மேலைநாடுகளில் சிறுவயதில் மேலை இசையுடன் ஒரு தொடர்பு குடும்பத்திலேயே அளிக்கப்பட்டுவிடுகிறது.  படுக்கைநேரவாசிப்பு மூலம் இலக்கியமும் அறிமுகமாகிறது. எங்கும் இலக்கியமும் கலைகளும் கிடைக்கின்றன. ஆகவே அங்கே ஓரளவுக்கு அடிப்படை ரசனை உடையவர்கள்கூட இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் வந்து சேர்கிறார்கள்

நம் நாட்டில் நல்ல ரசனை உடையவர்கள் அறிவுத்திறன் உடையவர்கள் நல்ல கலையையும் இலக்கியத்தையும் கடைசிவரை அறிமுகம் செய்துகொள்ளாமலேயே போகும் வாய்ப்பே அதிகம். நல்ல ஒரு வாசகரிடம் எப்படி வாசிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால் ஒரு தற்செயலை, ஒரு மனிதரை சுட்டிக்காட்டுவார். இயல்பான அறிமுகம் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை, தற்செயலே ஒரே திறப்பு.ஆகவேதான் இலக்கியமும் கலைகளும் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று வாதிடுகிறோம்.

ஆனால் அதே ஐரோப்பியநாடுகளில்கூட எல்லாரும் கலையிலக்கியம் பக்கம் வந்துவிடுவதில்லை. அவர்கள் அங்கும் மிகச்சிறுபான்மையினரே. பிறர் அன்றாடவாழ்க்கையில் மூழ்கி மறையவே வாய்ப்பு. எப்போதுமே மானுட விதி அதுதான். அவனுடைய மூளைக்குள் ரசனையும் அறிவுத்தேடலும் பிறப்பிலேயே இருக்கவில்லை என்றால் புற அறிமுகத்தால் என்ன பயன்?

நாயைப் புலால்மணமே இல்லாமல் வளர்ப்பவர்கள் உண்டு. ஆனால் பிறந்து வெளிவந்த குட்டியானாலும் சரி பத்து வருடம் அசைவ வாசனையே இல்லாமலிருக்கும் நாயானாலும் சரி மாமிசத்தை மணம் காட்டினால் வந்து கவ்விக்கொள்ளும். அதன் உணவு அது என அதன் மூளைக்குத்தெரியும். பலசமயம் ரசனை என்பது இப்படித்தான்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/20746